மத சத்தியம் அடையத்தக்கதா?
ஸ்வீடனில், உப்ஸலாவைச் சேர்ந்த பல்கலைக்கழக டவுனில் வசித்துவரும் ஆவிக்குரிய அவாகொண்ட மனிதன் ஒருவர், தன் டவுனிலிருக்கும் வெவ்வேறான மதங்களின் நம்பிக்கைகளை, அவர்களுடைய வணக்க இடங்களுக்கு விஜயம் செய்துங்கூட ஆராய்ச்சி செய்து பார்க்கத் தீர்மானித்தார். அவர்களுடைய மதகுருமார் பிரசங்கிக்கையில் அவர் செவிசாய்த்துக் கேட்டார், சில அங்கத்தினர்களைப் பேட்டி காணவுஞ்செய்தார். “சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதைக்” குறித்து யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் நம்புவதாகத் தோன்றுவதை அவர் கவனித்தார். நிலவிவரும் வித்தியாசப்பட்ட மதக் கருத்துக்களை யோசிக்கையில், சாட்சிகள் அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும் என்று ஆச்சரியப்பட்டார்.
மதத்தைப் பற்றிய சத்தியம் அடையத்தக்கது என்று நீங்கள் தனிப்பட்ட விதமாக நினைக்கிறீர்களா? அடிப்படையான சத்தியம் என்று அழைக்கப்படக்கூடியதைத் தீர்மானிப்பதுங்கூட சாத்தியமா?
தத்துவமும் சத்தியமும்
அடிப்படையான சத்தியத்தை மனிதவர்க்கம் அடைய முடியாது என்ற கருத்தைத் தத்துவம் கற்ற ஆட்கள் உருவாக்கியிருக்கின்றனர். “வாழ்க்கையின் ஆரம்பத்தையும் உ.யிரின் ஆரம்பத்தையும் பற்றி விளக்க முயற்சிக்கும் விஞ்ஞானம்” என்று தத்துவம் வரையறுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். என்றாலும், உண்மையில் பார்த்தால் அது அந்தளவுக்குச் செல்வது அரிது. ஃபிலோசோஃபின்ஸ் ஹிஸ்டோரீயா (தத்துவ சரித்திரம்) என்பதில் ஆல்ஃப் ஆல்பெர்க் என்ற ஸ்வீடன் நாட்டு நூலாசிரியர் எழுதினார்: “அநேக தத்துவஞான கேள்விகள் திட்டவட்டமான பதிலளிக்க முடியாத இயல்பு உள்ளவையாக இருக்கின்றன. . . . [காரியங்களைப் பற்றிய அடிப்படையான, தானே விளங்குகிற நியமங்கள் சம்பந்தப்பட்ட] எல்லா தத்துவயியல் சார்ந்த பிரச்சினைகளும் இந்த . . . தொகுதியைச் சேர்ந்தவையாக இருக்கின்றன என்ற அபிப்பிராயத்தை அநேக மக்கள் கொண்டிருக்கின்றனர்.”
இதன் விளைவாக, வாழ்க்கைப் பற்றிய முக்கியமான வினாக்களுக்குத் தத்துவஞானத்தின் மூலம் பதில் காண முயன்றவர்கள் பெரும்பாலும் திருப்தியில்லாமையையும் மனவேதனையையும் அடைந்திருக்கின்றனர். டாங்கலின்யர் ஓக் டுருஸ்போர்மர் (சிந்தனா ஓட்டமும் மத நம்பிக்கையும்) என்ற தன் புத்தகத்தில் ஸ்வீடன் நாட்டு நூலாசிரியராகிய கண்ணர் ஆஸ்பலின் சொன்னார்: “நாம் பார்க்கிற ஒரு காரியமானது, பட்டாம்பூச்சியிலும் கொசுவிலும் இயற்கை அக்கறை கொண்டிருக்கும் அளவுக்குக்கூட மனிதன்மீது எந்த அக்கறையும் இனி கொண்டில்லை. இந்தப் பிரபஞ்சத்திலும் நம் அகவுலகிலும் எதிர்ச் செயல்புரிகிற அந்த விசைகளுக்கெதிராக நாம் சக்தியற்றவர்களாக, அறவே பலமற்றவர்களாக இருக்கிறோம். மனிதன் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை வைத்து சிறப்பான ஒரு பிற்காலத்தைக் குறித்து கனவு காண்கிற ஒரு நூற்றாண்டின் முடிவை எட்டுகையில், இலக்கியத்தில் பெரும்பாலும் தோன்றியிருக்கிற வாழ்க்கைப் பற்றிய நோக்குநிலை இதுவாகவே இருக்கிறது.”
சத்தியத்தின் வெளிப்பாடு தேவையா?
வாழ்க்கைப் பற்றிய சத்தியத்தைக் கண்டடைவதில் மனித முயற்சிகள் மாத்திரம் வெற்றிபெறவில்லை என்பது தெளிவாக இருக்கிறது, மேலும் அவர்களால் ஒருபோதும் முடியாது எனத் தோன்றுகிறது. அப்படியானால், ஏதோவொரு விதமான தெய்வ வெளிப்பாடு தேவை என்ற முடிவுக்கு வருவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. இயற்கை புத்தகம் என்று அநேகர் அழைப்பதுதானே சில வெளிப்படுத்துதலை அளிக்கிறது. வாழ்க்கையின் ஆரம்பத்தைக் குறித்து நம்ப வைக்கும் விவரங்களைத் தராவிட்டாலும், வாழ்க்கைப் பற்றிய வெறும் இயற்பொருள் விளக்கத்தை அளிப்பதைவிட வெகு அதிக நிறைவு தரும் ஏதோவொன்றிருப்பதாக அது காட்டுகிறது. மேலோங்கி வளரும் புல்லின் இதழானது, பொடிந்துபோகும் ஒரு துவாரத்தில் உள்ள பாறைக் குவியலைக் கட்டுப்படுத்தும் சட்டங்களிலிருந்து வேறுபட்ட சட்டங்களைப் பின்பற்றுகிறது. இயற்கையிலுள்ள ஜீவராசிகள், உயிரற்றவை செய்யாத விதத்தில் தங்களைத் தாங்களே கட்டுவித்து, ஒழுங்கமைத்துக் கொள்கின்றன. எனவே, சட்டத்திலும் மதத்திலும் சிறந்துவிளங்கும் ஒரு மாணாக்கன் இவ்விதமான முடிவுக்கு வருவதற்கு ஆதாரமிருந்தது: ‘காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] [“குணங்கள்,” NW] உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.’—ரோமர் 1:20.
ஆனால் இவ்வெல்லா கட்டமைப்புக்கும் ஒழுங்கமைப்புக்கும் பொறுப்புள்ளவர் யார் என்று கண்டுபிடிப்பதற்கு நமக்கு மேலுமான வெளிப்படுத்துதல் தேவைப்படுகிறது. அத்தகைய வெளிப்படுத்துதல் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டாமா? பூமியிலுள்ள ஜீவனுக்குப் பொறுப்பாளியாக இருப்பவர், தம்முடைய படைப்புகளுக்குத் தம்மையே வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது நியாயமல்லவா?
அத்தகைய வெளிப்படுத்துதலாக இருப்பதாக பைபிள் உறுதியாகச் சொல்கிறது. இந்தப் பத்திரிகையில், இப்படி அது சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கான நல்ல காரணங்களை நாங்கள் அநேகந்தரம் அளித்திருக்கிறோம், யோசனையுள்ள ஆட்கள் பலரும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பைபிளை எழுதியவர்கள், அதில் எழுதிய காரியங்கள் தாங்களாகவே எழுதியதல்ல என்பதைத் தெளிவாக்குவதற்கு மிகவும் வாஞ்சையாக இருந்ததுதாமே மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட முறைகள் பைபிள் தீர்க்கதரிசிகள், “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். (ஏசாயா 37:33; எரேமியா 2:2; நாகூம் 1:12) புத்தகங்களை அல்லது கட்டுரைகளை எழுதும் ஆண்களும் பெண்களும் வழக்கமாகத் தங்கள் இலக்கியப் படைப்புகளுக்குத் தாங்களே ஆசிரியர்களென காட்ட ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். என்றாலும், பைபிளை எழுதியவர்கள் தங்களைப் பின்னணியில் வைத்துக் கொண்டனர்; சிலருடைய விஷயத்தில், குறிப்பிட்ட சில பைபிள் பகுதிகளை எழுதியவர் யார் என்பதை நிர்மாணிப்பதே கடினமாக இருக்கிறது.
பைபிளின் உள்ளான ஒத்திசைவுங்கூட, அதில் நீங்கள் விசேஷமாகக் காணும் இன்னொரு அம்சமாகும். பைபிளின் 66 புத்தகங்களும் எழுதப்பட்ட 1,600 வருட காலப்பகுதியைக் கருத்தில் கொள்கையில் இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. நீங்கள் ஒரு பொது நூலகத்திற்குச் சென்று அங்கே 16 நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் எழுதப்பட்ட 66 மதப் புத்தகங்களைத் தெரிந்தெடுத்ததாக வைத்துக்கொள்வோம். அடுத்து அந்தத் தனி புத்தகங்களை ஒரே தொகுதியாகப் பைண்டு செய்தீர்கள். ஒரு பொதுத் தலைப்புப்பொருளும் ஒத்திசைவான செய்தியும் அந்தத் தொகுதியில் அடங்கியிருக்கும் என்று எதிர்பார்ப்பீர்களா? நிச்சயமாகவே இல்லை. ஓர் அற்புதத்தை அது தேவைப்படுத்தும். இதைக் குறித்துச் சிந்தியுங்கள்: பைபிள் புத்தகங்கள் அதுபோன்ற ஒரு பொது தலைப்புப்பொருளைக் கொண்டிருக்கவே செய்கின்றன, அவை ஒன்றோடொன்று சான்றாதாரம் கொண்டு உறுதிப்படுத்தப்படுகின்றன. இது எதைக் காட்டுகிறதென்றால், பைபிள் எழுத்தாளர்கள் பதிவு செய்த காரியங்களை ஓர் இலக்கியப் படைப்பாளரே அல்லது ஆசிரியரே வழிநடத்தி இருக்கவேண்டும்.
என்றபோதிலும், மற்றெதைக் காட்டிலும் அதிகமாக பைபிளின் தெய்வீக மூலத்தை நிரூபிக்கும் ஓர் அம்சத்தை நீங்கள் காண்பீர்கள். தீர்க்கதரிசனங்கள்—எதிர்காலத்தில் கட்டாயமாக என்ன நடக்கும் என்பதைப் பற்றி முன்னதாகவே எழுதப்பட்ட தகவல்கள். ‘அக்காலத்திலே அது சம்பவிக்க வேண்டும்,’ ‘கடைசிநாட்களில் அது சம்பவிக்க வேண்டும்,’ போன்ற சொற்றொடர்கள் பைபிளில் விசேஷித்தவையாக இருக்கின்றன. (ஏசாயா 2:2, NW; 11:10, 11, NW; 23:15, NW; எசேக்கியேல் 38:18, NW; ஓசியா 2:21-23, NW; சகரியா 13:2-4, NW) இயேசு கிறிஸ்து பூமியில் தோன்றுவதற்கு அநேக நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலேயே, எபிரெய வேதாகமங்களிலுள்ள தீர்க்கதரிசனங்கள் அவருடைய வாழ்க்கைப் பற்றிய விவரங்களை—அவருடைய பிறப்பிலிருந்து இறப்பு வரையாக—அளித்தன. வாழ்க்கைப் பற்றிய சத்திய மூலம் பைபிள்தான் என்பதைத் தவிர வேறெந்த நியாயமான முடிவுக்கும் வர முடியாது. இயேசுதாமே இதை இவ்வார்த்தைகளில் உறுதிசெய்கிறார்: “உம்முடைய வசனமே சத்தியம்.”—யோவான் 17:17.
மதமும் சத்தியமும்
பைபிளில் விசுவாசம் வைப்பதாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய அநேகருங்கூட, முழுமையான சத்தியத்தை அடைய முடியாது என்றே நம்புகின்றனர். ஜான் எஸ். ஸ்பாங் என்ற ஐ.மா. மதகுரு குறிப்பிட்டார்: “நம்மிடமே சத்தியம் இருக்கிறது, மற்றவர்கள் நம்முடைய நோக்குநிலைக்கே, அடிப்படையான சத்தியம் நம்மெல்லாருடைய கிரகிப்புக்கும் அப்பாற்பட்டது என்ற மெய்ம்மைக்கே வரவேண்டும் என யோசிப்பதிலிருந்து . . . நாம் மாறவேண்டும்.” ரோமன் கத்தோலிக்க ஆசிரியராகிய கிறிஸ்டஃபர் டெரிக் என்பவர் சத்தியத்தைக் கண்டுபிடிப்பதன் சம்பந்தமாக உள்ள அத்தகைய எதிர்மறையான கருத்துக்களுக்கு ஒரு காரணத்தைக் கொடுக்கிறார்: “மத ‘சத்தியத்தைப்’ பற்றி ஏதாகிலும் குறிப்பிடுவதானது, ஏதோவொரு விதமாகத் தெரிந்திருப்பதன் உரிமைபாராட்டுதலை மறைமுகமாக குறிப்பிடுகிறது . . . இன்னொருவர் யாராவது தவறாயிருப்பதற்குச் சாத்தியமிருப்பதாக நீங்கள் மறைமுகமாகத் தெரிவிக்கலாம்; அது எவ்விதத்திலும் ஒத்துக்கொள்ளப்பட முடியாததாயிருக்கும்.”
என்றபோதிலும், ஒரு சிந்திக்கும் நபராக, பொருத்தமான சில கேள்விகளை நீங்கள் சிந்திப்பது சாலச் சிறந்தது. சத்தியத்தை அடைய முடியாதென்றால், “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு கிறிஸ்து ஏன் சொல்வார்? மேலும் “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” கடவுள் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்று இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவர் ஏன் சொல்வார்? விசுவாசம் சம்பந்தமாகக் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் “சத்தியம்” என்ற வார்த்தை ஏன் நூற்றுக்கும் மேலான முறைகள் வருகிறது? ஆம், சத்தியத்தை அடைய முடியாதென்றால், ஏன் வருகிறது?—யோவான் 8:32; 1 தீமோத்தேயு 2:3, 4.
உண்மையில், இயேசு சத்தியம் அடையத்தக்கது என்று மாத்திரம் குறிப்பிடாமல், நம்முடைய வணக்கம் கடவுளால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால், அதைக் கண்டுபிடிப்பதும் அவசியம் என்று காட்டினார். எருசலேமில் யூதர்களால் செய்யப்பட்டு வந்த வணக்கமா கெரிசீம் மலையில் சமாரியர்களால் செய்யப்பட்டு வந்த வணக்கமா, எது உண்மையானது என்று ஒரு சமாரிய பெண் சந்தேகிக்கையில், சத்தியத்தை அடைய முடியாது என்று சொல்லி இயேசு பதிலளிக்கவில்லை. மாறாக, அவர் சொன்னார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்[ளுவார்கள்]; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.”—யோவான் 4:23, 24.
அநேகர் என்ன வாதிடுகிறார்களென்றால், ‘பைபிளைப் பல்வேறு விதங்களில் விளக்கலாம், ஆகவே சத்தியம் என்ன என்பதன்பேரில் ஒருவர் நிச்சயமாயிருக்க முடியாது.’ ஆனால் எவ்வாறு விளங்கிக்கொள்வது என்பதன்பேரில் நீங்கள் நிச்சயமாயில்லாத அளவுக்கு பைபிள் உண்மையில் தெளிவற்ற விதத்தில் எழுதப்பட்டிருக்கிறதா? சில தீர்க்கதரிசன, அடையாளப்பூர்வமான மொழிநடை கிரகிப்பதற்குக் கடினமாயிருக்கலாம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். உதாரணமாக, தானியேல் தீர்க்கதரிசியிடம், அதிக தீர்க்கதரிசன மொழிநடையைக் கொண்ட அவருடைய புத்தகம் “முடிவுகால”மட்டும் முழுமையாக விளங்காது என்று கடவுள் சொன்னார். (தானியேல் 12:9) மேலும் சில உவமைகளும் அடையாளங்களும் விளக்கப்பட வேண்டியதாயிருப்பது தெளிவாயிருக்கிறது.
என்றாலும், கடவுளை உண்மையோடு வணங்குவதற்கு அத்தியாவசியமாயிருக்கும் அடிப்படையான கிறிஸ்தவ போதகங்களையும் ஒழுக்க மதிப்பீடுகளையும் பொருத்தமட்டில், பைபிள் மிகவும் ஒளிவுமறைவில்லாமல் இருப்பது தெளிவாயிருக்கிறது. முரண்படும் விளக்கங்களுக்கு அது இடங்கொடுப்பதில்லை. எபேசியருக்கான நிருபத்தில், “ஒரே” கிறிஸ்தவ விசுவாசம் இருப்பதாகப் பேசப்பட்டிருக்கிறது, பல்வேறு விசுவாசங்கள் இருக்கக்கூடாது என்பதை எடுத்துக்காட்டுகிறது. (எபேசியர் 4:4-6) ‘பைபிளை பல்வேறு விதங்களில் சரியாக விளக்க முடியாவிட்டால், ஏன் இத்தனை அநேக “கிறிஸ்தவ” பிரிவுகள் இருக்கின்றன?’ என்று நீங்கள் யோசிக்கலாம். இயேசுவின் அப்போஸ்தலர் மரித்து சிறிது நாட்களுக்குப் பின்பு, உண்மை கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து விசுவாசதுரோகம் உருவான காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தோமானால் இதற்கான பதிலைக் காணலாம்.
‘கோதுமையும் களைகளும்’
கோதுமையும் களைகளும் பற்றிய உவமையில் இயேசு இந்த விசுவாசதுரோகத்தை முன்னுரைத்தார். “கோதுமை” உண்மை கிறிஸ்தவர்களைக் குறிப்பதாக இயேசுதாமே விளக்கினார்; “களைகள்” பொய் அல்லது விசுவாசதுரோக கிறிஸ்தவர்களைக் குறிப்பிடுகின்றன. “மனுஷர் நித்திரைபண்ணுகையில்” ஒரு “சத்துரு” கோதுமை நிலத்தில் களைகளை விதைப்பான் என்று இயேசு சொன்னார். அப்போஸ்தலர் மரணத்தில் நித்திரை அடைந்துவிட்ட பிறகு இந்த விதைக்கும் வேலை தொடங்கியது. மெய்க் கிறிஸ்தவர்கள் பொய்க் கிறிஸ்தவர்களோடிருக்கும் இந்தக் கலப்பு, “உலகத்தின் முடிவு” வரையாகத் தொடரும் என்று அந்த உவமை காட்டுகிறது. இவ்வாறு, நூற்றாண்டுகளினூடே மெய்க் கிறிஸ்தவர்களின் அடையாளம் தெளிவற்றதாக்கப்பட்டிருக்கிறது, இதேனெனில் மத வட்டாரமானது வெறும் பெயர்க் கிறிஸ்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. என்றபோதிலும், “உலகத்தின் முடி”வில் ஒரு மாற்றம் ஏற்படும். “மனுஷகுமாரன்” மெய்க் கிறிஸ்தவர்களிலிருந்து பொய்க் கிறிஸ்தவர்களைப் பிரிக்க “தம்முடைய தூதர்களை அனுப்புவார்.” அப்போஸ்தலரின் காலத்திலிருந்த அந்த நிலையை அடைந்ததாக, கிறிஸ்தவ சபையை அப்போது எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பதை இது அர்த்தப்படுத்தியது.—மத்தேயு 13:24-30, 36-43.
“கடைசிநாட்களில்” நடக்கும் அத்தகைய மெய் வணக்கத்தாரின் கூட்டிச்சேர்ப்பைக் குறித்து ஏசாயாவின் தீர்க்கதரிசனமும் மீகாவின் தீர்க்கதரிசனமும் முன்னுரைக்கின்றன. ஏசாயா சொல்கிறார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” மெய்ம்மைகளைத் தெளிவாக கண்ணோட்டமிடுவது நம் காலத்தில் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதை எடுத்துக்காட்டுகிறது.—ஏசாயா 2:2, 3; மீகா 4:1-3.
என்றபோதிலும், ஏதோ மனித முயற்சியால் கிறிஸ்தவ சபை விருத்தியாவதில்லை. ஒரு கூட்டிச்சேர்ப்பு வேலையைச் செய்யத் “தம்முடைய தூதர்களை அனுப்புவ”தாக இயேசு முன்னுரைத்தார். அதற்கான ஒரு அதிவிசேஷ நோக்கத்தையும் அவர் குறித்துக் காட்டினார்: “அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்.” (மத்தேயு 13:43) கிறிஸ்தவ சபையால் உலகெங்கும் அறிவொளியூட்டும் அல்லது கல்வி புகட்டும் வேலை நடக்கும் என்று இது காட்டுகிறது.
யெகோவாவின் சாட்சிகள் இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை, இன்று 232 நாடுகளில் செய்துவரும் கல்வி புகட்டும் வேலையில் காண்கிறார்கள். சாட்சிகளின் நம்பிக்கைகளையும் நடத்தை தராதரங்களையும் அமைப்பையும் பைபிளோடு ஒத்துப் பார்க்கையில், இவை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையோடு ஒத்திசைவாயிருப்பதைத் தப்பபிப்பிராயமற்ற மக்களால் தெளிவாகக் காண முடியும். அவர்களுடைய விசுவாசத்தை “சத்தியம்” என்பதாகச் சாட்சிகள் சொல்கிறார்கள், ஆனால் தனிப்பட்ட மேன்மையென்னும் ஏதோ ஊகத்தினால் அல்ல. மாறாக, அவர்கள் விரிவாகக் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படித்திருப்பதால் அவ்வாறு சொல்கிறார்கள்; மதத்தைச் சரியாக அளவிடுவதற்கு இருக்கும் ஒரே தராதரமாக அதைப் பின்பற்றுகிறார்கள்.
தங்களுடைய விசுவாசத்தை ஆதி கிறிஸ்தவர்கள் ‘சத்தியமென’ குறிப்பிட்டார்கள். (1 தீமோத்தேயு 3:15; 2 பேதுரு 2:2; 2 யோவான் 1) அவர்களுக்குச் சத்தியமாக இருந்ததுதானே நமக்கும் இன்று சத்தியமாக இருக்கவேண்டும். பைபிளைப் படிப்பதன் மூலம், தங்களுக்கென்று அதை நிச்சயப்படுத்திக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லாரையும் அழைக்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், பிற மதங்களைவிட மேலோங்கும் ஒரு மதத்தைக் கண்டுபிடித்ததினால் வரும் சந்தோஷத்தை மாத்திரம் அனுபவியாமல் சத்தியத்தைக் கண்டடைந்ததினிமித்தமும் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்!
[பக்கம் 5-ன் பெட்டி]
சில தத்துவங்களுக்கு எதிராக சத்தியம்
நேர்காட்சிவாதம்: மதவியல்புள்ள எல்லா கருத்துக்களும் நிரூபிக்கமுடியாத மடமை என்ற கருத்தும் தத்துவத்தின் குறிக்கோளானது மெய் அறிவியல்களை முழுமையானதாக உருவாக்க ஒன்றிணைப்பதுமாகும்.
வாழ்வியல் கொள்கை: அதை ஆதரிக்கிறவர்கள் இரண்டாம் உலகப் போரின் பயங்கரங்களால் மிகவும் செல்வாக்குச் செலுத்தப்பட்டதால் வாழ்க்கையைக் குறித்து மிகவும் கவலை காணும் போக்கை உடையவர்களானார்கள். மரணத்தை எதிர்ப்படுகையில் உண்டாகும் மனிதத் தத்தளிப்பையும் வாழ்க்கையின் வெறுமையையும் ஆய்வு செய்வதை அது வலியுறுத்துகிறது. வாழ்வியல் கொள்கையாளரான ஆசிரியர் ஷாண் பால் சார்டிர் சொல்வது என்னவென்றால், கடவுள் இல்லாததால் மனிதன் கைவிடப்பட்டவனாக, முற்றிலும் அக்கறையற்ற ஓர் அண்டத்தில் வாழ்கிறான்.
ஐயுறவாதக் கொள்கை: ஆராய்ச்சியின் மூலமும் நியாயத்தின் மூலமும் வாழ்க்கையைப் பற்றிய எந்த நோக்கத்தையும் முழு அறிவையும், அதாவது எந்தச் சத்தியத்தையும் அடைய முடியாது என்று வலியுறுத்துகிறது.
பயன்வழிக் கொள்கை: கல்வி, ஒழுக்கம், அரசியல் ஆகியவற்றை மறுவடிவமைப்பது போன்ற மனித அக்கறைகளோடு நம் நம்பிக்கைகள் கொண்டிருக்கும் சம்பந்தத்தினால் அவற்றின் உண்மையான மதிப்பை அளவிடுகிறது. சத்தியம் தன்னில்தானே எந்த மதிப்பையும் கொண்டிருக்கிறது என்பதை அது கருத்தில் கொள்வதில்லை.