முதிர்ச்சியை நோக்கி முன்னேற என் தீர்மானம்
கார்ல் டாக்காவ் சொன்னபடி
“முதிர்ச்சியை நோக்கி முன்னேறுதல் அல்லது பாவத்தினிடம் மீண்டும் திரும்புதல், எது?” ஜூன் 15, 1948 ஆங்கில காவற்கோபுர இதழில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பாக அது இருந்தது. அந்தக் கட்டுரை ஐக்கிய மாகாணங்களின் விவசாயப் பண்ணை பகுதிகளில் ஆவிக்குரிய ஆபத்திலிருந்து, தென் அமெரிக்காவில், 43 வருடங்களுக்கும் அதிகமான காலத்தை உள்ளடக்கிய மிஷனரி வாழ்க்கைக்கு மாறும்படி என்னை உந்துவித்தது.
நான் மார்ச் 31, 1914-ல் மினிசோடாவிலுள்ள வர்கஸ்ஸில், நான்கு பையன்களில் மூன்றாவது பையனாக ஒரு மரவீட்டில் பிறந்தேன். என் இளம் பிராய காலங்கள் குதூகலமானவை. அப்பாவுடன் மீன்பிடிக்கச்சென்றது எனக்கு நினைவிருக்கிறது. ஆயினும், அம்மா அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். வீட்டில் அவருக்கு உதவுவதற்காக நான் ஐந்தாம் கிரேடில் பள்ளிக்கூடத்தைவிட்டு நிற்கவேண்டியதாயிற்று. எனக்கு 13 வயதான போது, அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அம்மா தான் அதிக நாட்கள் வாழமாட்டார் என்பதை அறிந்திருந்தார், ஆகவே அவருடைய இடத்தை நிரப்புவதற்காக என்னைத் தயார்படுத்தத் தொடங்கினார். அவர் சமையல் அறையில் அமர்ந்து கொண்டு எவ்வாறு சமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். கூடவே துணி துவைப்பதற்கும் தோட்டத்தைப் பராமரிப்பதற்கும் நூறு கோழிகளைக் கவனிப்பதற்கும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் ஒவ்வொரு நாளும் பைபிளின் ஒரு அதிகாரத்தை வாசிப்பதற்கும்கூட என்னை உற்சாகப்படுத்தினார், என் படிக்கும் திறமை குறைவாக இருந்தபோதிலும் நான் அதை செய்தேன். என்னை பத்து மாதங்கள் பயிற்றுவித்தப் பின்னர், ஜனவரி 27, 1928-ல் அம்மா இறந்துவிட்டார்.
போர் எங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது
இரண்டாம் உலகப்போர் செப்டம்பர் 1939-ல் தொடங்கியப் பின்னர், எங்களுடைய லூத்தரன் சர்ச்சில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் படைகளின் சார்பில் ஜெபங்கள் செய்யப்பட்டன. என்னுடைய அண்ணன் ஃப்ராங்க் கொல்லக்கூடாது என்று திடதீர்மானத்தோடு இருந்தார், ஆகவே ராணுவத்தின் பாகமாக இருந்து சண்டையிட அவர் மறுத்தபோதோ, கைதுசெய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் கூறினார்: “அப்பாவி மக்களை நான் கொல்லும் முன், நீங்கள் என்னைச் சுடலாமே!” வாஷிங்டன் கடற்கரையிலிருந்து தூரத்தில் உள்ள மிக்நேல் தீவில், ஓராண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
போரின் போது விடாப்பிடியாக நடுநிலை வகித்ததன் காரணமாகச் சிறைப்பட்டிருந்த 300-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளை ஃப்ராங்க் அங்கே கண்டார். (ஏசாயா 2:4; யோவான் 17:16) விரைவிலேயே அவர்களோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்து, சிறைச்சாலையிலேயே முழுக்காட்டப்பட்டார். அவருடைய நன்னடத்தையின் காரணமாகத் தண்டனைக்காலம் ஒன்பது மாதங்களாகக் குறைக்கப்பட்டது. நவம்பர் 1942-ல் ஃப்ராங்க் விடுதலையடைந்துவிட்டார் என்ற செய்தியை நாங்கள் கேட்டோம், அதற்கு பிறகு விரைவிலேயே கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை எங்களுக்கு அவர் கூறினார். அந்தச் செய்தியை எங்கள் பைபிளோடு கவனமாக ஆராய்ந்து பார்த்தப் பின்னர், ஃப்ராங்க் எதைப் போதித்தாரோ அதுதான் சத்தியம் என்பதை எங்கள் அனைவராலும் காண முடிந்தது.
ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு இடையூறுகள்
நான் 1944-ல் என் சித்தப்பாவுடன் வசிப்பதற்காக மொன்டானாவிலுள்ள மால்டா பகுதிக்குக் குடியேறினேன். நாங்கள் பொதுவில் ஒன்றைக் கொண்டிருந்தோம்—திருமணமாகி ஆறுமாதங்களுக்குப் பின் மனைவிமார்கள் எங்களைவிட்டுப் பிரிந்து சென்றதாகும். விவசாயத்திலும் சமைப்பதிலும் அவருக்கு உதவுவதற்கு என்னை வைத்துக்கொள்ள அவர் மகிழ்ச்சியடைந்தார். வரும் இலாபத்தை இருவரும் சமமாக பங்கிட்டுக்கொண்டோம். என் சித்தப்பாவோடு இருந்துவிட்டால், அவருடைய 640 ஏக்கர் (260 ஹெக்டேர்) பண்ணைக்கு நான் தான் வாரிசாவேன் என்று அவர் கூறினார். அந்த வருடங்கள் வேளாண்மைக்குச் செழிப்பானவையாக இருந்தன. நான் எவ்வளவாய் அதை விரும்பினேன்! ஒவ்வொரு வருடமும் அமோக மகசூலை நாங்கள் பெற்றோம். ஒரு மரக்கால் கோதுமை $3.16-க்கும்கூட விற்பனைசெய்யப்பட்டது.
என்றபோதிலும், மால்டாவிலுள்ள சாட்சிகளின் சிறிய சபை ஒன்றின் கூட்டங்களுக்கு நான் செல்லும் காரியத்தை என் சித்தப்பா விரும்பவில்லை. ஜூன் 7, 1947-ல் என் சித்தப்பாவிற்குத் தெரியாமல், உல்ஃப் பாயின்ட்டில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டில் நான் முழுக்காட்டப்பட்டேன். அங்கு ஒரு கிறிஸ்தவ சகோதரன் என்னை ஒரு பயனியராகவோ முழுநேர ஊழியராகவோ ஆகும்படிக்கு அழைப்பு விடுத்தார். அவ்விதமாகவே எந்தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பது என் இதயத்தின் ஆவலாக இருந்தாலும் ஊழியத்திற்காக நான் அவ்வளவு நேரம் செலவிடுவதை என் சித்தப்பா ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார் என்பதை விளக்கினேன்.
அதற்கு பிறகு விரைவிலேயே, ஒரு நண்பனிடமிருந்து வந்த, எனக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தை என் சித்தப்பா பிரித்துப் படித்தார். அதில் அவர் என்னை முழுநேர ஊழியராகும்படிக்குத் துரிதப்படுத்தியிருந்தார். மலைக்குளவியைவிட மிதமிஞ்சி கோபம் கொண்டு, என் சித்தப்பா எனக்கு இறுதி எச்சரிக்கையாக—பிரசங்கிப்பதை விட்டுவிடு அல்லது பண்ணையைவிட்டு வெளியேறு என்றார். அந்த இறுதி எச்சரிக்கையானது நல்லதற்கே, ஏனென்றால் நான் விவசாயத்தை அவ்வளவதிகமாக விரும்பியதால், சுயமாகத் தீர்மானம் எடுப்பதற்கு என்னை விட்டுவிட்டிருந்தால் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை. ஆகவே நான் மினிசோடாவிலுள்ள என் குடும்பத்திடம் திரும்பிவந்தேன். அவர்கள் எல்லாரும் முழுக்காட்டப்பட்டு டெட்ராய்ட் லேக் சபையுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் என்னை பயனியர் செய்ய ஊக்கப்படுத்தினார்கள், ஆனால் 1948-ல் ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் பின்தங்க ஆரம்பித்தார்கள். அந்தத் தருணத்தில் தான் “முதிர்ச்சியை நோக்கி முன்னேறுதல் அல்லது பாவத்தினிடம் மீண்டும் திரும்புதல், எது?” என்ற கட்டுரை எனக்குத் தேவையான ஆவிக்குரிய உந்துவித்தலைக் கொடுத்தது. “முன்னேற்றமடைகின்ற அறிவுக்குத் தக்கவாறு ஈடுகொடுக்க, வேண்டுமென்றே மறுத்துவிட்டால், மிகவும் வருந்தத்தக்க விளைவுகள் நம்மை பின்தொடருவது நிச்சயம்,” என்று அது எச்சரித்தது. “நாம் ஒரே இடத்தில் நின்று கொண்டும் பின்னோக்கியும் செல்ல இயலாதே, ஆனால் நீதியில் முன்னேற வேண்டும். நிற்பதல்ல ஆனால் விட்டுவிடாமல் முன்னேறுவதுதான் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்கும் மிகப் பெரிய எதிராற்றலாகும்,” என்று அந்தக் கட்டுரை கூறியது.
என் குடும்பத்தினர் மற்ற சாக்குப்போக்குகளைக் கூறிய போதிலும், உண்மையான பிரச்சினையானது, செல்வந்தராக வேண்டும் என்னும் அவர்களின் ஆசையே என நம்புகிறேன். அதிக நேரத்தை விவசாயத்திலும் கொஞ்ச நேரத்தைப் பிரசங்கிப்பதிலும் செலவிடுவதால் வரக்கூடிய பொருளாதார நன்மைகளை அவர்களால் காணமுடிந்தது. செல்வத்தின் ஆசையில் சிக்கிக்கொள்வதைக் காட்டிலும் பயனியராக மாறுவதற்கானத் திட்டங்களை வகுத்தேன். அது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும், என்னால் செய்ய முடியாது என்றும்கூட நான் நினைத்தேன். ஆகவே 1948-ல், வருடத்தின் மிகவும் கடுமையான காலமாகிய டிசம்பரில் வேண்டுமென்றே பயனியர் ஊழியஞ்செய்ய விண்ணப்பித்ததன் மூலம் என்னை நானே பரீட்சித்துப் பார்த்தேன்.
பயனியர் சேவையை ஏற்றுக்கொள்ளுதல்
யெகோவா என் முயற்சிகளை ஆசீர்வதித்தார். உதாரணமாக, ஒரு நாள் குளிர்காற்றை கணக்கில் சேர்க்காமல் சீதோஷ்ணநிலை பூஜ்ஜியத்திற்கும்கீழ் 27 டிகிரி செல்சியஸ் இருந்தது. நான் என்னுடைய வழக்கமான தெரு ஊழியத்தை செய்துகொண்டிருந்தேன். கைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தேன்—குளிர்ந்த கையைப் பாக்கெட்டில் நுழைத்து, மற்றொரு கையால் பத்திரிகைகளைப் பிடித்துக்கொண்டிருப்பேன், இந்தக் கை உறைந்து போய் பாக்கெட்டுக்குள் போடவேண்டிய நிர்ப்பந்தம் வரும்வரை வெளியே இருக்கும். ஒரு மனிதர் அணுகினார். என்னுடைய செயலை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்ததாக அவர் கூறி, கேட்டதாவது: “அந்தப் பத்திரிகைகளில் அவ்வளவு முக்கியமா என்னதான் இருக்கிறது? அவை இரண்டையும் எனக்குக் கொடுங்கள், அப்பொழுது நானும் அவற்றை வாசிக்கமுடியும்.”
இதற்கிடையே, என் குடும்பத்தினருடன் இணைந்திருப்பது, என் சொந்த ஆவிக்குரிய நிலையை ஆபத்துக்குள்ளாக்குவதை என்னால் காணமுடிந்தது. ஆகவே உவாட்ச் டவர் சொஸைட்டியினிடம் கேட்டுக்கொண்டதன் பேரில், மொன்டானாவிலுள்ள மைல்ஸ் நகரத்துக்கு எனக்குப் புதிய நியமிப்புக் கொடுக்கப்பட்டது. தற்போது நடத்தும் கண்காணி என்று அறியப்படும் கம்பெனி சர்வன்ட்டாக அங்கு சேவித்தேன். இரண்டுக்கு மூன்று மீட்டர் அளவான இழுத்துச்செல்லப்படும் ஊர்திமனையிலே குடியிருந்து, உலர்சலவைத் தொழிலை பகுதி-நேர வேலையாகச் செய்வதன் மூலம் நான் பிழைப்புக்கு வழிவகுத்தேன். அவ்வப்போது எதை நான் மிகவும் விரும்பினேனோ அதை—அறுவடை செய்தலைச் செய்ய கூலிக்காக அமர்த்தப்பட்டேன்.
இந்தச் சமயத்தில், என் குடும்பத்தினருடைய மோசமாகிக் கொண்டிருந்த ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன். கடைசியாக, அவர்களும் டெட்ராய்ட் லேக் சபையில் இருந்த மற்றவர்களும் யெகோவாவின் அமைப்புக்கு எதிராகத் திரும்பினார்கள். சபையிலிருந்த ராஜ்ய பிரஸ்தாபிகள் 17 பேரில், 7 பேர் மாத்திரம் உண்மையோடு நிலைத்திருந்தார்கள். என் குடும்பத்தினர் என்னையும்கூட யெகோவாவின் அமைப்பிலிருந்து வெளியே கொண்டுவர தீர்மானமாக இருந்தனர். ஆகவே இருந்த ஒரே ஒரு தீர்வு, மேற்கொண்டு முன்னேறுவதுதான் என்பதை உணர்ந்தேன். ஆனால் எப்படி?
மிஷனரி சேவையை நாடுதல்
நியூ யார்க் நகரில், 1950-ல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின்போது, உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 15-வது வகுப்பு பட்டமளிப்பைப் பார்த்தேன். ‘ஆ, அயல்நாடுகளுக்குச் சென்று ஊழியம் செய்ய நியமிப்பைப் பெற்ற அவர்கள் மத்தியில் நான் மட்டும் இருக்க நேர்ந்தால்,’ என நினைத்தேன்.
நான் என்னுடைய விண்ணப்பத்தாளை அனுப்பினேன், கிலியடின் 17-வது வகுப்பின் ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டேன், அது பிப்ரவரி 1951-ல் துவங்கியது. நியூ யார்க்கின் வடக்கே உள்ள பண்ணையில் அமைந்துள்ள பள்ளியின் அமைவிடம் அழகாக இருந்தது. வகுப்பு முடிந்த பின்னர், பண்ணையில் ஒருவேளை மாடுகளோடு கொட்டிலிலோ வெளியே வயலிலோ வேலை செய்ய எவ்வளவாய் விரும்பினேன்! ஆனால், அப்போது ராஜ்ய பண்ணையின் கண்காணியாக இருந்த ஜான் பூத், நான் மட்டும் தான் உலர்சலவையில் அனுபவம் பெற்றிருந்தேன் என்பதை விளக்கினார். ஆகவே நான் அந்த வேலைக்காக நியமிக்கப்பட்டேன்.
ஐந்தாம் கிரேடு மட்டுமே படித்த ஒருவருக்குக் கிலியட் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இரவு 10:30-க்கெல்லாம் விளக்கை அணைக்க வேண்டியிருந்தும், நான் நள்ளிரவு வரை அடிக்கடி படித்தேன். ஒரு நாள் பயிற்றுநர்களுள் ஒருவர், என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்தார். “கார்ல், உங்களுடைய மதிப்பெண் அவ்வளவு நன்றாக இல்லை என காண்கிறேன்,” என்றார் அவர்.
‘ஆ, கூடாது, அவர்கள் என்னை வெளியேறும்படி சொல்லப் போகிறார்கள்,’ என்று நானாக நினைத்துக் கொண்டேன்.
என்றபோதிலும், பயிற்றுநர், நான் எவ்வாறு என் நேரத்தை, இரவில் வெகு நேரம் படிக்காமல், நல்ல முறையில் உபயோகப்படுத்தலாம் என்று அன்பாக ஒருசில ஆலோசனைகளை வழங்கினார். நான் பயந்துகொண்டே கேட்டேன்: “நான் இங்குக் கிலியடில் இருக்க போதுமானத்தகுதி உடையவனா?”
“ஓ, நிச்சயமாக,” அவர் பதிலளித்தார். “ஆனால், பட்டம் பெற நீங்கள் தகுதி பெறுவீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.”
பள்ளி முதல்வர் நேத்தன் எச். நார் அவர்களின் வார்த்தைகளிலிருந்து ஆறுதல் அடைந்தேன். மிஷனரிகள் தங்களுடைய நியமிப்பை உறுதியோடு பற்றிக்கொண்டு இருந்தது கவர்ந்த அளவுக்கு அதிக மதிப்பெண்கள் அவரைக் கவரவில்லை என்று முன்பு மாணவர்களிடம் அவர் சொல்லியிருந்தார்.
எனக்கு ஸ்பானிய மொழிபாடம் மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் எனக்குப் பழகிப்போன குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவும் அலாஸ்காவுக்கு நியமிப்பு கிடைக்கலாம் என எதிர்பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் என்னால் ஆங்கிலத்திலும் பிரசங்கிக்க முடியும். பயிற்சி காலத்தின் மத்தியில், தென் அமெரிக்காவிலுள்ள ஈக்வடாருக்கு நியமிப்பு கிடைத்தபோது என்னுடைய அதிர்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஆம், நான் ஸ்பானிய மொழியைப் பேச வேண்டும், அதோடுகூட கடும் வெப்பம் நிலவும் பூமத்தியரேகை செல்லும் இடத்தில்!
ஒரு நாள் FBI ஏஜென்ட் ஒருவர் கிலியட் பள்ளிக்கு வந்து என்னைச் சந்தித்தார். டெட்ராய்ட் லேக்கில் நம்முடைய அமைப்பை விட்டுவெளியேறிய கம்பெனி சர்வன்ட் மகனைப்பற்றி கேட்டார். கொரியப் போர் நடந்துகொண்டிருந்தது, அந்த இளம் மனிதர் தன்னை யெகோவாவின் சாட்சிகளின் ஊழியன் ஒருவன் என்று உரிமைபாராட்டி, ஆதலால் இராணுவ சேவையிலிருந்து தன்னை விலக்கிவிடுமாறு கோரினார். அவர் இன்னமும் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லை என்பதை விளக்கினேன். அந்த ஏஜென்ட் விடைபெற்றுச் செல்லும்போது: “உங்களுடைய கடவுள் உங்கள் வேலையை ஆசீர்வதிப்பாராக,” என்றார்.
அந்த இளைஞன் கொரியாவில் ஆரம்பத்தில் தான் பங்கு கொண்ட போர்களுள் ஒன்றில் கொல்லப்பட்டார் என்பதை பிறகு நான் அறிந்து கொண்டேன். கடவுளுடைய அமைப்பில் முதிர்ச்சியை நோக்கி முன்னேறி இருந்திருக்கக்கூடிய ஒருவருக்கு எத்தகைய ஒரு பரிதாபமான முடிவு.
இறுதியாக, ஜூலை 22, 1951-ல் எங்களுடைய மகிழ்ச்சியான பட்டமளிப்பு நாள் வந்தது. தெரிந்தவிதமாகவே, என் குடும்பத்திலிருந்து எவரும் அங்கில்லை, ஆனாலும் நான் செய்திருந்த முன்னேற்றத்தின் காரணமாக, பட்டம் பெற்றுக் கொண்டபோதோ, என் மகிழ்ச்சி பூரணம் அடைந்தது.
அயல்நாட்டு பிராந்தியத்திற்குத் தக்கவாறு அமைத்துக்கொள்ளல்
என் நியமிப்பை ஆரம்பித்ததும், அம்மாவின் பயிற்றுவிப்பு உண்மையிலேயே கைகொடுத்ததை கண்டேன். சமைப்பதும் கையினால் துணி துவைப்பதும் தண்ணீர் பற்றாக்குறையும் எனக்கு புதியதல்ல. ஆனால், ஸ்பானிய மொழியில் பிரசங்கிப்பதல்லதோ புதிது! நான் எழுதி வைத்திருந்த ஸ்பானிய பிரசங்கத்தையே சிறிது காலத்திற்குப் பயன்படுத்தினேன். ஸ்பானிய மொழியில் பொதுப் பேச்சு கொடுக்க எனக்கு மூன்றாண்டு காலம் ஆனது, அதற்கு விரிவான குறிப்புத்தாள்களைப் பயன்படுத்தினேன்.
நான் 1951-ல் ஈக்வடார் வந்தபோது, 200-க்கும் குறைவான ராஜ்ய பிரஸ்தாபிகள் அங்கு இருந்தனர். முதல் 25 அல்லது அதற்கும் அதிகமான வருடங்களுக்குச் சீஷர்களை-உண்டுபண்ணுதல் பின்தங்கியதைப் போல் தோன்றியது. நம்முடைய பைபிள் போதனைகள், வேதப்பூர்வமற்ற கத்தோலிக்க பாரம்பரியங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. விசேஷமாக, ஒரு விவாகத்துணைவருக்கு உண்மையோடு இருக்கவேண்டும் என்பதன் பேரிலுள்ள பைபிள் போதனைகளைக் கடைப்பிடிப்பது அரிதாகவே இருந்தது.—எபிரெயர் 13:4.
என்றபோதிலும், எங்களால் ஏராளமான பைபிள் பிரசுரங்களை அளிக்க முடிந்தது. இதை விவரிக்க வாழை விளையும் பண்ணைநிலங்களின் மத்தியில் அமைந்திருந்த மாச்சால்லா என்னும் இடத்தில் செய்யப்பட்ட எங்களுடைய ஊழியம் உதவும். 1956-ல் நாங்கள் வந்தபோது, நிக்கோலஸ் வெஸ்லியும் நானும் மட்டுமே அங்கிருந்த சாட்சிகள். அந்நாட்களில் நெடுஞ்சாலைகளைப் போடுவதற்காக பொருட்களை ஏற்றிசெல்லப் பயன்படுத்தப்பட்ட ட்ரக்கில் விடியற்காலையிலேயே கிளம்பிவிடுவோம். போதுமான தூரம் சென்ற பின்னர் இறங்கிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த இடம் வரைக்கும் திரும்பும் வழிநெடுக உள்ள ஆட்களிடம் பிரசங்கிப்போம்.
ஒரு குறிப்பிட்ட நாளில், எங்களில் யார் அதிகமான பத்திரிகைகளை அளிப்பது என்பதைப் பார்ப்பதற்காக நிக்கும் நானும் ஒரு பதிவை வைத்துக்கொண்டோம். எனக்கு நினைவிருக்கிறது மதியம்வரைக்கும் நிக்கைவிட நான் முன்னணியில் இருந்தேன், ஆனால் மாலையில் இருவரும் ஒன்றுபோல 114 பத்திரிகைகளை அளித்திருந்தோம். ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை, பத்திரிகை மார்க்கத்தில் மக்களிடம் நாங்கள் விட்டுச் சென்றோம். ஆறு தடவை ஒரே மாதத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரிகைகளை அளித்துள்ளேன். அந்தப் பத்திரிகைகளிலிருந்து எத்தனை பேர் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை நினைத்துப் பாருங்களேன்!
ஈக்வடாரிலேயே, சபைக்குச் சொந்தமான முதல் ராஜ்ய மன்றத்தை மாச்சால்லாவில் கட்டும் சிலாக்கியத்தையும்கூட நாங்கள் பெற்றோம். 35 வருடங்களுக்கு முன், 1960-ல் அது சம்பவித்தது. அந்த ஆரம்ப நாட்களில் சுமார் 15 பேர் மட்டுமே கூட்டங்களுக்கு ஆஜராகியிருப்பர். இன்றோ மாச்சால்லா விரிவாகிக்கொண்டிருக்கும் 11 சபைகளைக் கொண்டிருக்கிறது!
மாகாணங்களுக்கு ஒரு விஜயம்
1970-களின் பிற்பகுதியில் விடுமுறையில், ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பினேன், என் அண்ணன் ஃப்ராங்க்குடன் சில மணிநேரங்களைக் கழித்தேன். அவர் தன்னுடைய காரில் என்னை மலை உச்சிக்குக் கொண்டு சென்றார், அங்கிருந்து நெடுந்தூரத்திற்கு ரெட் ரிவர் வாலியை எங்களால் பார்க்க முடிந்தது. முற்றிக்கொண்டிருந்த கதிர்கள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன, முதிரும் கதிர்களோடு தலைசாய்த்துக் கொண்டிருந்த கோதுமை கடல்போல் காட்சியளித்தது அழகாக இருந்தது. கரைநெடுக மரங்களை உடைய ஷயன் ஆறு தூரத்தில் தெரிந்தது. அந்த அமைதிநிறைந்த அழகைக் கண்டுகளிப்பதை அண்ணனுடைய வழக்கமானப் பேச்சு கலைத்தது.
“நீ மட்டும் அத்தகைய ஒரு முட்டாளாக, தென் அமெரிக்காவில் ஓடித்திரிந்து கொண்டிருக்காவிட்டால், இது உன்னுடையதாகவும்கூட ஆகியிருக்கலாம்!”
நான் உடனடியாக, “ஃப்ராங்க் போதும், அத்துடன் நிறுத்துங்கள்,” என்று இடைமறித்தேன்.
மறுவார்த்தை ஏதும் அவர் கூறவில்லை. சில வருடங்கள் கழித்து, அவர் பக்கவாதத்தால் திடீரென மரணமடைந்தார். நார்த் டாக்கோட்டாவில் மொத்தத்தில் ஆயிரம் ஏக்கருக்கும் (400 ஹெக்டேர்) அதிகமான நிலப்பரப்புள்ள மூன்று அழகிய கால்நடைப் பண்ணைகளையும், அதோடுகூட தான் வாரிசாக ஆன என் சித்தப்பாவின் 640 ஏக்கர் (260 ஹெக்டேர்) பண்ணையை மொன்டானாவிலும் விட்டுச்சென்றார்.
இப்பொழுது என் குடும்பத்தில் அனைவரும் மரித்துவிட்டனர். ஆனால், பல வருடங்களுக்கு முன் நாங்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளாக துவங்கிய டெட்ராய்ட் லேக்கில், 90-க்கும் மேற்பட்ட சகோதரர்களையும் சகோதரிகளையும் கொண்ட ஆவிக்குரிய குடும்பத்தைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தொடர்ந்து ஆவிக்குரியபிரகாரம் முன்னேறுதல்
ஈக்வடாரில் இந்தக் கடைசி 15 வருடங்கள் ஆவிக்குரிய அமோக விளைச்சல்களைக் கொடுத்தன. 1980-ல் 5,000 ராஜ்ய பிரஸ்தாபிகளிலிருந்து, தற்போது 26,000-க்கும் அதிகமானவர்களைக் கொண்டுள்ளோம். அவர்களுள் நூற்றுக்கும் அதிகமானோர் முழுக்காட்டப்பட உதவி செய்யும் ஆசீர்வாதத்தைப் பெற்றேன்.
1951-ல், நான் செய்யவேண்டிய 150 மணிநேரத்தை அடைவதற்காக உழைத்ததைக் காட்டிலும் இப்பொழுது, என்னுடைய 80-வது வயதில் மாதத்திற்கு 30 மணிநேரத்தை ஊழியத்தில் அடைய அதிக கடினமாக உழைக்கிறேன். 1989-ல் எனக்கு ப்ராஸ்டேட் புற்றுநோய் இருந்ததைத் தெரிந்து கொண்டதிலிருந்து நான் குணமாகும் காலப்பகுதியைப் படிப்பதற்காக ஆதாயப்படுத்திக் கொள்கிறேன். அந்த வருடத்திலிருந்து பைபிளை முழுமையாக 19 தடவையும் யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை ஆறு தடவையும் வாசித்திருக்கிறேன். இவ்விதமாக ஆவிக்குரிய பிரகாரம் முன்னேறிக்கொண்டே இருக்கிறேன்.
ஆம், ஐக்கிய மாகாணங்களின் பண்ணைநிலங்களிலிருந்து பொருள் சம்பந்தமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை உடையவனாய் இருந்தேன். ஆனால், நான் ஆவிக்குரிய அறுவடையில் அனுபவித்த சந்தோஷத்துடன் பொருள் செல்வங்களின் பயனை ஒப்பிட்டால் அவை ஒன்றுமில்லை. இங்கு ஈக்வடார் கிளையலுவலகம், 1,47,000-க்கும் அதிகமான பத்திரிகைகளையும் 18,000-க்கும் அதிகமான புத்தகங்களையும், என் மிஷனரி ஊழியத்தின்போது அளித்ததாக என்னிடம் தெரிவிக்கிறது. இவற்றை நான் ஆவிக்குரிய விதைகளாகக் கருதுகிறேன். அவற்றில் பல ஏற்கெனவே முளைத்துவிட்டன; மற்றவையும் ஒருவேளை, மக்கள் இந்த ராஜ்ய சத்தியங்களைப் படிக்கும்போது, அவர்கள் இருதயங்களில் இனி முளைவிடலாம்.
என்னுடைய எல்லா ஆவிக்குரிய குழந்தைகளோடும், நம்முடைய கடவுளாகிய யெகோவாவை சேவிப்பதைத் தெரிவுசெய்துகொண்ட மற்ற இலட்சக்கணக்கானோரோடும், சேர்ந்து கடவுளுடைய புதிய உலகத்திற்குள் செல்ல முன்னேறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறொன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பணம் ஒருவரை இந்தப் பொல்லாத உலகின் முடிவிலிருந்து காப்பாற்றப் போவதில்லை. (நீதிமொழிகள் 11:4; எசேக்கியேல் 7:19) எவ்வாறு இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி செல்வோமாகில், நம்முடைய ஆவிக்குரிய வேலையின் பலன்கள் தொடரும்.
[பக்கம் 24-ன் படம்]
1949-ல் மொன்டானாவின் மைல்ஸ் நகரில் பயனியர் செய்யத் தயாராயிருத்தல்
[பக்கம் 24-ன் படம்]
1952-ல் மிஷனரி இல்லத்திற்குத் தண்ணீர் வாங்குதல்
[பக்கம் 25-ன் படம்]
1957-ல் மாச்சால்லாவில் பிரசங்கித்தல்
[பக்கம் 25-ன் படம்]
1989-ல் நான் நோய்வாய்ப்பட்டதிலிருந்து, 19 தடவை பைபிளை முழுமையாக வாசித்தேன்