சமீபத்தில் யாரையாவது உற்சாகப்படுத்தினீர்களா?
எலனாவுக்கு கருப்பையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தபோது அவளுக்கு வயது 17. அவளுடைய அம்மா மேரி, எலனா வலியினால் துடிப்பதைக் காணும் மனவேதனையை சமாளிக்கவேண்டியதாக இருந்தது.
கடைசியாக, எலனா கேனரி தீவிலுள்ள அவளுடைய வீட்டிலிருந்து 1,900 கிலோமீட்டர் தொலைவில் ஸ்பெய்ன், மாட்ரிட்டிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். மாட்ரிட்டில் மருத்துவர்களின் ஒரு குழு இரத்தமின்றி அறுவைசிகிச்சை செய்ய முன்வந்தது. (அப்போஸ்தலர் 15:28, 29) ஆனால் அறுவைசிகிச்சை ஆரம்பித்த உடனேயே, எலனாவின் நிலைமை மரணத்துக்கு ஏதுவாக இருப்பது தெரியவந்தது. புற்றுநோய் உடல் முழுவதும் பரவிவிட்டிருந்தது, அறுவை மருத்துவர்களால் பிரச்சினையை சரிசெய்ய முடியவில்லை. எலனா மாட்ரிட்டுக்கு வந்துசேர்ந்து எட்டு நாட்களுக்குப்பின் மரித்துப்போனாள்.
மேரி அந்தப் பயங்கரமான கடும்சோதனையைத் தனிமையில் எதிர்ப்பட வேண்டியவளாக இல்லை. மாட்ரிட்டுக்கு அவளோடும் அவளுடைய மூத்த மகனோடும் இரண்டு கிறிஸ்தவ மூப்பர்கள் தங்களுடைய சொந்த செலவில் வந்து எலனாவின் மரணம் வரையாக அங்கு தங்கியிருந்தனர். “நான் உள்ளுக்குள் உணர்ந்த மனமுறிந்த வெறுமையை சமாளிக்க அவர்கள் எனக்கு உதவினார்கள்,” என்பதாக மேரி விளக்குகிறாள். “அவர்கள் எனக்கு அளித்த உற்சாகத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர்களுடைய ஆவிக்குரிய ஆதரவும் நடைமுறையான உதவியும் விலைமதிப்பிட முடியாதவை. அவர்கள் உண்மையில் ‘காற்றுக்கு ஒதுக்காக’ இருந்தார்கள்.”—ஏசாயா 32:1, 2.
இவர்களைப் போன்ற அன்பான மேய்ப்பர்கள் அவருடைய ஆடுகளை அத்தனை கனிவாக கவனித்துக்கொள்வதைக் குறித்து யெகோவா மகிழ்ச்சியடைகிறார். (நீதிமொழிகள் 19:17; 1 பேதுரு 5:2-4) என்றபோதிலும், உற்சாகம் கொடுப்பது மூப்பர்களின் சிலாக்கியமாக மாத்திரம் இல்லை. எல்லா கிறிஸ்தவர்களும் ஆவிக்குரிய போதனையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் ‘ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்காகவும்’ ஒன்றாகக் கூடிவருகிறார்கள். (எபிரெயர் 10:24, 25) உற்சாகமளிப்பது கிறிஸ்தவ கூட்டுறவின் ஒரு இன்றியமையாத பாகமாகும்.
உற்சாகமளிப்பது எதை உட்படுத்துகிறது?
அழகான ஒரு மலர் தண்ணீரில்லாதபோது துவண்டுவிடுவது போலவே தனிநபர்கள்—குடும்பத்திலும் சபையிலும் உற்சாகக் குறைவினால் வாடிவிடலாம். மறுபட்சத்தில், சமயத்திற்கேற்ற உற்சாகம் சோதனையை எதிர்ப்படுபவரை பலப்படுத்தி, மனச்சோர்வுற்றவரை உற்சாகமுள்ளவராக்கி, கடவுளை உண்மையுடன் சேவிப்பவரைத் திடப்படுத்தமுடியும்.
“உற்சாகம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை அநுதாபம், அறிவுரை மற்றும் ஆறுதல் ஆகிய எண்ணங்களை உள்ளடக்குகிறது. ஆகவே, உற்சாகம் என்பது ஒருவர் நன்றாகச் செய்கிறார் என்று ஒருவரிடம் சொல்வதோடு நின்றுவிடுவதில்லை. அது நடைமுறையான ஆதரவையும் ஆவிக்குரிய உதவியையும் அளிப்பதையும்கூட உட்படுத்தலாம்.
உண்மையில், “உற்சாகம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையின் நேர்பொருள் “ஒருவருடைய சமுகத்தில் இருப்பதற்கான அழைப்பு,” என்பதாகும். நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு ஒருவருக்கொருவர் உதவியாக நடப்பது, அவர்களில் ஒருவர் களைத்துப்போனால் அல்லது இடறிவிழுந்தால் உடனடியாக கைகொடுப்பதற்கு உதவியாக இருக்கிறது. (பிரசங்கி 4:9, 10) அக்கறையூட்டும்விதமாக, யெகோவாவின் மக்கள் ‘தோளோடு தோள் நின்று அவரைச் சேவிக்கிறார்கள்.’ (செப்பனியா 3:9) அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட ஒரு கிறிஸ்தவனை “உத்தம கூட்டாளி” என்று அழைத்தார். (பிலிப்பியர் 4:3) ஒரே நுகத்தின் கீழே சேர்ந்து தோளோடு தோள் கொடுத்து சேவிப்பது, விசேஷமாக ஆவிக்குரிய பிரகாரமாக பலமுள்ளவர்களாக இல்லாதவர்களுக்குச் சுமையை இலகுவாக்குகிறது.—மத்தேயு 11:29-ஐ ஒப்பிடவும்.
அவர்கள் உற்சாகமளித்தார்கள்
உற்சாகம் அவ்வளவு முக்கியமாக இருப்பதன் காரணமாக, அதற்கு வேதப்பூர்வமான சில உதாரணங்களை நாம் சிந்திக்கலாம். கடவுளுடைய தீர்க்கதரிசி மோசே தன்னுடைய வாழ்வின் முடிவை நெருங்கியபோது, இஸ்ரவேலருக்குத் தலைவராக இருக்கும்படியாக யெகோவா யோசுவாவை நியமித்தார். மோசே தானேயும் அறிந்திருந்தபடி இது ஒரு சுலபமான வேலையாக இருக்கவில்லை. (எண்ணாகமம் 11:14, 15) ஆகவே, யெகோவா மோசேயிடம் “நீ யோசுவாவுக்குக் கட்டளைகொடுத்து, அவனைத் திடப்படுத்திப் [உற்சாகப்படுத்தி, NW] பலப்படுத்து,” என்று சொன்னார்.—உபாகமம் 3:28.
இஸ்ரவேலருடைய நியாயாதிபதிகளின் காலத்தில், யெப்தாவின் மகள் யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தில் சேவிக்கும்பொருட்டு குடும்பத்தைக் கொண்டிருக்கும் ஒரு சாத்தியத்தை விட்டுக்கொடுப்பதன் மூலம் தன்னுடைய தகப்பனின் பொருத்தனைக்கு மனமுவந்து உடன்பட்டாள். அவளுடைய தியாகம் கவனிக்கப்படாமல் இருந்ததா? இல்லை, ஏனென்றால் நியாயாதிபதிகள் 11:40 (NW) சொல்கிறது: ‘வருஷந்தோறும் நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைப் பாராட்டுவதற்கு இஸ்ரவேலின் குமாரத்திகள் செல்வது வழக்கமாயிற்று.’ இப்படிப்பட்ட சந்திப்புகள் யெப்தாவின் தன்னலம் துறந்த மகளுக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்திருக்கவேண்டும்.
உற்சாகமளிப்பது சிலசமயங்களில் தைரியத்தைத் தேவைப்படுத்துகிறது. அப்போஸ்தலன் பவுலின் முதல் மிஷனரி பிரயாணத்தின்போது, சிறிய ஆசியாவின் பல நகரங்களில் கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார். அவர் அந்தியோகியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, இக்கோனியாவில் மரண தண்டனையிலிருந்து மயிரிழையில் தப்பி, லீஸ்திராவில் கல்லெறியப்பட்டு மரித்துப்போனாரென்று எண்ணிவிடப்பட்டார். என்றபோதிலும் அதற்குப் பின் விரைவில், பவுலும் அவருடைய தோழர்களும் இந்தப் பட்டணங்களுக்குத் திரும்பிவந்து, “சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.” (அப்போஸ்தலர் 14:21, 22) பவுல் இந்தப் புதிய சீஷர்களை உற்சாகப்படுத்த தன்னுடைய உயிரைப் பணயம் வைக்கத் தயாராயிருந்தார்.
என்றபோதிலும், புதிய சீஷர்கள் மாத்திரமே உற்சாகம் தேவைப்படுகிற கிறிஸ்தவர்களாக இல்லை. பல வருடங்களுக்குப் பின்பு பவுல் தான் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருந்த இடமாகிய ரோமாபுரிக்குக் கடினமான ஒரு பிரயாணத்தை மேற்கொண்டார். சென்றுசேர வேண்டிய இடத்தை நெருங்கியபோது, அவர் ஓரளவு சோர்வடைந்துவிட்டிருக்கக்கூடும். ஆனால் ரோமாபுரிக்குத் தென் கிழக்கே 74 கிலோமீட்டர் தொலைவுக்கு வந்தபோது அவர் ஊக்கமடைந்தார். ஏன்? ஏனென்றால் ரோமாபுரியிலிருந்து சகோதரர்கள் அப்பியுபுரம் மற்றும் மூன்று சத்திரம் வரைக்கும் அவரைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்கள். “அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான்.” (அப்போஸ்தலர் 28:15) அதே போன்ற சமயங்களில், வெறுமனே அங்கிருப்பதுதானே உடன் விசுவாசிகளுக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக இருக்கக்கூடும்.
உற்சாகமளிப்பதற்கு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
உற்சாகமளிப்பதற்கு வாய்ப்புகள் ஏராளம். தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் ஒரு சகோதரர் அல்லது ஒரு சகோதரி கொடுத்த ஒரு நல்ல மாணாக்கர் பேச்சினால் உங்கள் இருதயம் தூண்டப்பட்டதா? உங்கள் சபையில் ஆவிக்குரிய விதத்தில் பலமாக இருக்கும் பருவ வயதினர் இருப்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா? வயதானவர்களின் சகிப்புத்தன்மை உங்கள் மனதைக் கவர்ந்திருக்கிறதா? வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயனியர் ஒருவர் பைபிளைப் பயன்படுத்திய விதத்தை நீங்கள் பார்த்து வியந்தீர்களா? அப்படியென்றால் பாராட்டி உற்சாகமளிக்கும் எதையாவது சொல்லுங்கள்.
உற்சாகம் குடும்பத்திலும் சபையிலும் இன்றியமையாத ஒரு பாகத்தை வகிக்கிறது. தங்களுடைய பிள்ளைகளை ‘யெகோவாவின் சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்’ வளர்ப்பதற்கு அது பெற்றோருக்கு உதவிசெய்யலாம். (எபேசியர் 6:4, NW) ஒரு பிள்ளை நன்றாகச் செய்திருக்கிறான் என்று சொல்லி ஏன் என்பதை விளக்குவது அவ்வளவு உற்சாகமளிப்பதாக இருக்கமுடியும்! பருவ வருடங்களின்போது, இளைஞர்கள் அநேக சோதனைகளையும் அழுத்தங்களையும் எதிர்ப்படும்போது, இடைவிடாமல் உற்சாகமளிப்பது இன்றியமையாதது.
பிள்ளைப் பருவத்தின்போது உற்சாகக் குறைவு மிகவும் தீங்குசெய்யக்கூடியதாக இருக்கலாம். கிறிஸ்தவ மூப்பர் மைக்கல் இன்று தாராளமாக அனைவருடனும் பழகுகிறார், ஆனால் அவர் இவ்வாறு சொல்லுகிறார்: “நான் எதையும் நன்றாகச் செய்ததாக என் அப்பா ஒருபோதும் என்னிடம் சொன்னதில்லை. ஆகவே சுய மதிப்பு குறைவுடன் வளர்ந்தேன். . . . இப்பொழுது எனக்கு 50 வயதானபோதிலும், ஒரு மூப்பராக நான் ஒரு நல்ல வேலையைச் செய்கிறேன் என்று என் நண்பர்கள் எனக்கு நம்பிக்கையூட்டுவதை இன்னும் போற்றுகிறேன். . . . மற்றவர்களுக்கு உற்சாகமளிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை என்னுடைய சொந்த அனுபவம் எனக்குக் கற்பித்திருக்கிறது, அதைக் கொடுப்பதற்கு மும்முரமாக பிரயாசப்படுகிறேன்.”
உற்சாகம் யாருக்குத் தேவை?
கடினமாக உழைக்கும் மூப்பர்கள் உற்சாகத்துக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர். பவுல் இவ்வாறு எழுதினார்: “அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:12, 13) நன்றியை வெளிப்படுத்தாமலே மூப்பர்களின் கடினமான உழைப்பிலிருந்து நன்மையை அனுபவிப்பது சுலபமாக இருக்கிறது. ஆனால் உண்மையான போற்றுதலான வார்த்தைகளும் உற்சாகமும் அவர்களுடைய சுமையை இலகுவாக தோன்றும்படிச் செய்யக்கூடும்.
நம்மில் கடினமான சூழ்நிலைமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்கூட உற்சாகம் தேவையாக இருக்கிறது. “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்,” என்று பைபிள் புத்திமதி சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) ஒற்றைப் பெற்றோர், விதவைகள், பருவ வயதினர், வயதுசென்றவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஆகியோர் அவ்வப்போது மனச்சோர்வுற்றவர்களாக அல்லது ஆவிக்குரிய விதமாக பலவீனராக உணரக்கூடியவர்களில் அடங்குவர்.
மரியா தன்னுடைய கணவனால் திடீரென்று கைவிடப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண். அவள் சொன்னாள்: “யோபுவைப் போலவே, நான் சில சமயங்களில் சாக விரும்பியதுண்டு. [யோபு 14:13] என்றபோதிலும், நான் பெற்றுக்கொண்ட உற்சாகத்தின் காரணமாக சோர்ந்துவிடவில்லை. எனக்கு நன்கு பழக்கமாயிருந்த இரண்டு மூப்பர்கள், முழு நேர சேவையில் தொடர்ந்து இருப்பதன் மதிப்பைக் காண்பதற்கு உதவிசெய்வதில் பல மணிநேரங்களைச் செலவிட்டனர். புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொண்ட இரண்டு சகோதரிகளும்கூட என்னுடைய இருதயத்தை ஊற்றியபோது பொறுமையாக செவிகொடுத்து என்னைத் தேற்றினார்கள். பைபிளைப் பயன்படுத்தி யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காரியங்களைக் காண்பதற்கு எனக்கு உதவிசெய்தனர். நாம் எத்தனைதரம் சங்கீதம் 55:22-ஐ வாசிக்கிறோம் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இந்த வேதவசனத்தைப் பொருத்திப் பின்பற்றுவதன் மூலம், என்னுடைய ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி சம்பந்தமான சமநிலையை படிப்படியாக மீண்டும் பெற்றுக்கொண்டது தெரியும். இவை எல்லாம் 12 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்தன, இப்பொழுது வரையாக நான் முழு நேர சேவையில் தொடர்ந்து இருப்பதை சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எப்போதாவது வரும் உணர்ச்சி சம்பந்தமான வேதனையின் மத்தியிலும் என்னுடைய வாழ்க்கை பலனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அது போன்ற ஒரு சமயத்தில் கொடுக்கப்படும் உற்சாகம், ஒரு நபரின் வாழ்க்கையில் அதிகளவான வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”
தவறு செய்துவிட்டு இப்பொழுது அவற்றை சரிசெய்ய போராடிக்கொண்டிருப்பதன் காரணமாக சிலருக்கு உற்சாகம் தேவைப்படுகிறது. ஒருவேளை அவர்கள் அன்பாக கடிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். (நீதிமொழிகள் 27:6) வேதப்பூர்வமான புத்திமதி பொருத்தப்பட்டுவருவதைக் காண்கையில் கடிந்துகொண்ட மூப்பர்கள் பாராட்டைக் கொடுக்க விழிப்புள்ளவர்களாக இருக்கலாம். உற்சாகமான அவர்களுடைய வார்த்தைகள் இரட்டிப்பான நன்மையைக் கொடுக்கும்—தவறுசெய்தவர் “அதிக துக்கத்தில்” அமிழ்ந்துபோகாதபடிக்கு தங்களுடைய அன்பை உறுதிசெய்வதற்கும் புத்திமதியைப் பின்பற்றுவதனால் வரும் நன்மையை அவருக்கு நினைப்பூட்டுவதற்கும் உதவியாக இருக்கிறது.—2 கொரிந்தியர் 2:7, 8.
குறிப்பிட்ட ஒரு மூப்பர் வினைமையான ஒரு தவறைச் செய்துவிட்டு சபையில் கண்காணிப்பு செய்யும் சிலாக்கியத்தை இழந்துபோனார். “மூப்பரிலிருந்து நான் நீக்கப்பட்டது பற்றிய அறிவிப்பு செய்யப்பட்டபோது, சகோதரர்கள் என்னுடன் இருக்கையில் அசெளகரியமாக உணருவார்கள் என்று நினைத்தேன்,” என்று அவர் சொல்கிறார். “என்றாலும், மூப்பர்கள் காரணத்தை முழு இரகசியத்திற்குரியதாக வைத்து என்னை உற்சாகப்படுத்துவதற்கு விசேஷமான முயற்சி எடுத்தனர். சபையிலுள்ள மற்றவர்களும் அதேவிதமாகவே அன்பையும் தோழமையையும் நீட்ட, இது என்னுடைய ஆவிக்குரிய குணமடைதலை நிச்சயமாகவே ஊக்குவித்தது.”
உற்சாகமளிப்பவராய் இருங்கள்
அதிக வேலைகள் எப்பொழுதும் இருக்கும் நம்முடைய வாழ்க்கையில், உற்சாகமளிக்க தவறுவது எளிதாக இருக்கிறது. ஆனால் உற்சாகமளிப்பதுதானே எத்தனை பிரயோஜனமாயிருக்கிறது! திறம்பட்டமுறையில் உற்சாகமளிப்பதற்கு நீங்கள் இரண்டு காரியங்களை மனதில் வைக்கவேண்டும். முதலாவது, உங்களுடைய உற்சாகம் திட்டவட்டமானதொன்றாக இருப்பதற்கு என்ன சொல்வது என்பதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இரண்டாவது, பாராட்டுக்குத் தகுதியுள்ள அல்லது கட்டியெழுப்பப்பட வேண்டிய நபரை அணுகுவதற்கு சந்தர்ப்பத்துக்காக காத்திருங்கள்.
எத்தனை அடிக்கடி இதை நீங்கள் செய்கிறீர்களோ அத்தனை சந்தோஷமாக நீங்கள் இருப்பீர்கள். என்ன இருந்தாலும், இயேசு நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதிலே அதிக சந்தோஷம் இருக்கிறது.” (அப்போஸ்தலர் 20:35, NW) மற்றவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம், நீங்கள் உங்களையே உற்சாகப்படுத்திக் கொள்வீர்கள். ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவரை உற்சாகப்படுத்துவதை ஏன் உங்களுடைய இலக்காக்கிக் கொள்ளக்கூடாது?