மிகவும் முன்னேறிச்செல்லும் அமைப்புடன் சேவிப்பது
ராபர்ட் ஹாட்ஸ்ஃபெல்ட் சொன்னபடி
அநேகர் இன்று சாயங்கால செய்தியை இயல்பான கலரில் பார்க்க ரிமோட் கன்ட்ரோல் ஸ்விட்சை அழுத்தி டிவியைப் போடுகின்றனர். அது அவர்களுக்குப் புதுமையானதாக இல்லை. இருந்தாலும், நான் 12 வயது சிறுவனாயிருக்கையில் சினிமா திரையில் ஓர் அசாதாரண உயரத்தையுடைய மனித உருவத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது நேற்றுதான் நடந்ததுபோலத் தெரிகிறது. அவர் பேசிக்கொண்டிருந்தார்!
பெரிய ஒரு விஷயமல்ல என்று நீங்கள் யோசிக்கக்கூடும். 1915-ல், கருப்பு வெள்ளையில் காட்டப்பட்டுவந்த ஊமைப்படம் அந்த ஆரம்ப காலப்பகுதியில் அது எனக்கு ஒரு நவீன நாளைய விந்தையாக தோன்றியது. கம்பீர தோற்றத்துடன் தாடியுள்ள ஒரு மனிதன் திரையில் தோன்றி சொன்னார்: “படைப்பைப் பற்றிய நிழற்பட நாடகம் (Photo-Drama of Creation) I.B.S.A. (International Bible Students Association), சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கத்தால் காட்டப்படுகிறது.” அடுத்த இரண்டு மணிநேரங்கள், பைபிளைப் பற்றிய கதை எங்களுக்குக் காட்டப்பட்டது. அதன் பைபிள் சார்ந்த செய்தி தெளிவாகவும் புத்துணர்ச்சியளிப்பதாகவும் இருந்தது. என்றாலும், இடையிடையே கலர் ஸ்லைடுகளுடன் காட்டப்பட்ட இயங்கு திரைப்படமும் தோற்றங்களுடன் இசைந்திருந்த ஒலியும் தானே என்னுடைய கவனத்தை உண்மையில் ஈர்த்தது.
அப்போது நான் அதை உணரவில்லை, ஆனால் திருப்புக்கட்டமாக அமைந்த அந்தத் தொழில்நுட்பத்தை அறிவதற்கு எனக்கிருந்த வாலவயது ஆர்வமானது, பூமியிலேயே மிகவும் முன்னேறிச்செல்லும் அமைப்பில் ஒரு வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்வதற்கு ஓர் அறிமுகமாக சேவித்தது.
ஆரம்ப நாட்கள்
1891-ல் என்னுடைய தந்தை ஜெர்மனியிலுள்ள டிலன்புர்க் என்ற நகரத்திலிருந்து அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவிலுள்ள அலகேனியிலிருந்த ஜெர்மன் சமூகத்தினர் வாழுமிடத்திற்கு இடம் பெயர்ந்து வந்தார். பிற்பாடு அங்குள்ள ஜெர்மன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் சந்தித்தார், அவர்களுக்கு திருமணம் நடந்தது. நான் 1903, ஜூலை 7 அன்று பிறந்தேன். எனக்கு ஜெர்மன் மொழியையும் ஆங்கில மொழியையும் கற்றுக்கொடுத்து வளர்த்தனர். 1914-ல் முதல் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு என் பெற்றோர் இருவரும் டிபி நோய் வந்து இறந்தனர்; நான் ஒரு அநாதையாக ஆனேன். கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் என்னுடைய தாத்தாவும் பாரிச வாயுவினால் இறந்து போனார்.
என்னுடைய அத்தையாகிய மின்னா போமர் தயவுகூர்ந்து என்னை தன் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டார். “எனக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர், இன்னொரு பிள்ளையையும் வளர்க்கப் போகிறேன்,” என்று சொன்னார். என்னுடைய பெற்றோரை நான் இழந்தபோதிலும் மின்னா அத்தை என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.
என்னுடைய அத்தை பைபிள் மாணாக்கரடங்கிய (அப்போது யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு அழைக்கப்பட்டனர்) அலகேனி சபையில் நீண்டகால உறுப்பினராயிருந்தார். 1909-ற்கு முன்பு, உவாட்ச் டவர் சங்கத்தின் தலைவராயிருந்த சகோதரர் C. T. ரஸலும் அந்தச் சபையை சேர்ந்தவராயிருந்தார். மின்னா அத்தை என்னைக் கூட்டங்களுக்கு கூட்டிக்கொண்டு சென்றார். அப்போது படிக்கவோ பிரசங்க வேலையில் ஈடுபடவோ எங்களுடைய குடும்பத்திலுள்ள எல்லாருமே பிரயாசப்படாவிட்டாலும், கூட்டங்களில் கேட்டதை எங்களுக்குத் தெரிந்த ஆட்களிடம் நாங்கள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பேசினோம்.
இந்தக் காலப்பகுதியில்தானே அந்த “நிழற்படம்” என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் இயந்திரபொறி நுட்பத்தில் விருப்பமுள்ளவனாயிருந்ததால், புதிய நிழற்படக்காட்சி உத்திகளும் ஒலி/பட ஒத்திசைவுகளும் என் கவனத்தை ஈர்த்தன; அவ்வாறே வேகமாக இயங்குவதுபோல் தோன்றும் நிழற்படக்காட்சியும் (time-lapse photography) என் கவனத்தை ஈர்த்தது. வேகமாக இயங்குவதுபோல் தோன்றும் நிழற்படக்காட்சியின் மூலம் பூக்கள் மலருவதைப் பார்ப்பது மயிர்க் கூச்செறிவதாயிருந்தது!
1916-ல் சகோதரர் ரஸல் இறந்தது எங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அலகேனியிலேயே வாழ்ந்ததால், கார்நேகி மன்றத்தில் நடந்த அவருடைய சவ அடக்கத்திற்கு நாங்கள் சென்றிருந்தோம். இந்த மன்றத்தில்தான் 1903-ல் சகோதரர் ரஸல் E. L. ஈட்டினோடு சொற்போர் நடத்தினார். இந்த மெத்தடிஸ்ட் இப்பிஸ்கபல் சர்ச்சைச் சேர்ந்த ஊழியரைப் பற்றிய கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் சகோதரர் ரஸலின் பைபிள் புலமையை நிந்திப்பதற்காக C. T. ரஸலை சவால்விட்டு ஆறு நாள் சொற்போர் நடத்தினார். எதிர்மறையாக, ரஸல் ‘நரகத்தின்மீது நீர்பாய்ச்சினார்’ என்பதாக சொல்லப்பட்டது. பிட்ஸ்பர்கிலிருந்த பிரபலமான கால்போர்ட்டராகிய சாரா கேலின், ரஸலையும் அவருடைய மனைவியையும் தனிப்பட்ட விதமாக அறிந்திருந்தார். சவ அடக்கத்தின்போது மரியா ரஸல் சவப்பெட்டியில் சில பூக்களோடு “என்னுடைய அருமை கணவருக்கு” என்று எழுதிவைத்ததைக் கண்டாள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்துவந்தபோதிலும், மரியா அவரை இன்னும் தன் கணவராக கருதினாள்.
ஆண்டுகள் கடந்துசெல்ல, என்னுடைய பிற்கால வாழ்க்கைத்தொழிலுக்கு உபயோகமான தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுக்கொள்ள எனக்கு அநேக வாய்ப்புகள் கிடைத்தன. என்னுடைய காப்பாளராகிய தாய்மாமன் ஒரு கட்டிட கான்ட்ராக்டராக இருந்தார். என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அவர் என்னை எலக்டிரிக் வேலை செய்பவர்களோடு வேலைசெய்ய விட்டார். பழைய மாளிகைகளில் கேஸ் விளக்குகளை மின்சார விளக்குகளாக மாற்றும் வேலையாக அது இருந்தது. 1918-ல் எங்கள் பள்ளியிலிருந்த மாணாக்கர் பொழுதுபோக்கிற்கான ரேடியோ-தந்தி சாதனத்தை உண்டுபண்ணினர். மின்சாரத்தையும் காந்தவிசையையும் பற்றி படித்து சாயங்காலங்களில் பரிசோதனைகளைச் செய்துபார்த்தோம். 1926-ல் நானும் ஒரு நண்பனும் சிறுபிராய கனவை பணியாக மேற்கொள்ள தீர்மானித்தோம். கப்பல்களில் வேலைசெய்து உலகப் பயணத்தை மேற்கொள்வதாக அது இருந்தது. ரேடியோ-தந்தி இயக்குபவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க ரேடியோ மன்ற பள்ளியில் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.
பெத்தேலில் புதிய வாழ்க்கை
நாங்கள் சென்ற ரேடியோ பள்ளி நியூ யார்க் நகரில் அமைந்திருந்தது. ஆகையால், பழைய மேசோனிய கோயிலில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்ற பைபிள் மாணாக்கர் கூட்டங்களுக்கு நான் ஆற்றை கடந்து புரூக்லினுக்கு பயணம் செய்தேன். நியூ யார்க் தலைநகர் முழுவதற்கும் ஒரேவொரு சபைதான் அப்பொழுது இருந்தது. நான் வணிகத்துறையில் ரேடியோ உரிமத்தைப் பெற படித்துவந்ததைப் பெத்தேல் (பைபிள் மாணாக்கரடங்கிய தலைமைக் காரியாலய குடும்பத்திலுள்ளவர்களின் வீடு) சகோதரர்கள் அறிந்தவுடன், அவர்கள், “ஏன் கடலுக்கு நீங்கள் செல்லவேண்டும்? இங்கேயே ஒரு ரேடியோ நிலையம் இருக்கிறது. இதை இயக்க ஒருவர் வேண்டும்,” என்று சொன்னார்கள். பேட்டிக் காண என்னை அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தனர். பெத்தேலானது பைபிள் மாணாக்கரின் தலைமைக் காரியாலயம் என்று எனக்கு தெரியுமே தவிர வேறொன்றும் எனக்கு அதைப் பற்றி தெரியாது.
சகோதரர்கள் என்னைப் பேட்டிக் கண்டனர். நான் ரேடியோ படிப்பை முடித்து, உரிமம் பெற்று பெத்தேலுக்கு வரும்படி அவர்கள் பரிந்துரை செய்தனர். என்னுடைய பட்டப்படிப்பை முடித்து, வெளிநாட்டுக் கடற்பகுதிக்கு செல்லக்கூடிய கப்பலில் பயணம் செய்வதற்கு பதிலாக, என்னுடைய சில துணிமணிகளோடு பெத்தேலுக்கு செல்லும் நிலத்தடி ரயில் ஒன்றில் பயணம் செய்து பெத்தேல் வந்துசேர்ந்தேன். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து பல ஆண்டுகளாக பிரசங்க வேலையில் ஈடுபட்டிருந்தபோதிலும், பெத்தேல் வந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டிசம்பர் 1926-ல் தான் முழுக்காட்டுதல் எடுத்தேன். அப்பொழுது அவ்வாறு முழுக்காட்டுதல் பெறுவது அபூர்வமல்ல.
பெத்தேலில் 150 உறுப்பினர்கள் இருந்ததன் காரணமாக அப்பொழுது ஜனநெருக்கடி அதிகமாயிருந்தது. ஒவ்வொரு அறையிலும் நான்கு ஆண்கள் தங்கியிருந்தனர். அவர்களில் அநேகரோடு நான் சீக்கிரத்தில் நன்கு பழக ஆரம்பித்தேன், ஏனென்றால் நாங்கள் எல்லாரும் ஒரே வளாகத்தில் சாப்பிட்டு, வேலைசெய்து, படுத்துறங்குவது மட்டுமல்லாமல் நியூ யார்க் நகரில் இருந்த அந்த ஒரே சபைக்குத்தான் எல்லாரும் சென்று வந்தோம். 1927-ல் புதிய பெத்தேல் வீடு 124 கொலம்பியா ஹைட்ஸில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு அறைக்கு இரண்டு பேராக நாங்கள் தங்கினோம்.
அடுத்து 1927-ல் 117 ஆடம்ஸ் தெருவில் ஒரு புதிய தொழிற்கூடம் திறக்கப்பட்டது. நான் 55 காங்கார்டு தெருவிலிருந்த பழைய தொழிற்கூடத்திலிருக்கிற சாதனங்களை மாற்ற உதவி செய்தேன். ரேடியோ சாதனங்களோடுகூட லிஃப்டுகளும் அச்சு இயந்திரங்களும் சலவை இயந்திரங்களும் எண்ணெய் உலைகளும் அந்தத் தொழிற்கூடத்தில் இருந்தன. மின் கம்பியுள்ள விளக்காக இருக்குமானால், அது சம்பந்தப்பட்ட பணியை நான் பார்த்து வந்தேன்.
ஆனால், பெத்தேல் ஒரு தொழிற்கூடமாக மட்டும் இருக்கவில்லை. எல்லா புத்தகங்களையும் எல்லா துண்டுப்பிரதிகளையும் எல்லா பத்திரிகைகளையும், மனத்தாழ்மையான, கடினமாக வேலைசெய்யும் ஊழியர்கள் உற்பத்தி செய்தனர். உலகில் பிரசித்தியடைவது அவர்களுடைய நோக்கமல்ல. மாறாக, கர்த்தருடைய வேலையை அவர்கள் செய்ய விரும்பினர், செய்வதற்கு அதிக வேலையும் இருந்தது!
சகோதரர் ரதர்ஃபோர்டின் கூட்டுறவு
சங்கத்தின் இரண்டாம் தலைவராகிய ஜோசஃப் F. ரதர்ஃபோர்டுடன் வேலைசெய்வதற்கு பெற்ற சிலாக்கியத்தினால் நான் அதிக பயனடைந்தேன். அவர் ஒரு பெரிய ஆளாக இருந்தார், ஆறு அடி உயரமும் பலமான உடற்கட்டுமுடையவராக இருந்தபோதிலும், பருமனாக அவர் இருக்கவில்லை. பெத்தேலிலுள்ள இளம் சகோதரர்கள் அவரை அறிந்துகொள்ளும் வரை அவரைக் கண்டதும் ஓரளவு பயப்பட்டனர். அவர் எப்போதும் படித்துக்கொண்டும் கட்டுரைத் தயாரிப்பு வேலையை செய்துகொண்டும் இருந்தார்.
சகோதரர் ரதர்ஃபோர்டு மிகவும் நகைச்சுவையான ஒரு மனிதர். பெத்தேல் குடும்பத்தில் சகோதரர் ரஸல் காலத்திலிருந்தே இரண்டு வயதான சகோதரிகள் இருந்துவந்தனர். அவர்கள் முகத்தில் சிரிப்பையே காணமுடியாது. ஏதாவது தமாஷ்பண்ணினாலுங்கூட, கத்தி சிரிப்பது தவறு என்று அவர்கள் நினைத்தார்கள். சில நேரத்தில் சாப்பிடும்போது சகோதரர் ரதர்ஃபோர்டு எல்லாரையும் சிரிக்க வைக்கக்கூடிய காரியத்தைச் சொல்வார்; அவர் சொல்வது இந்த இரண்டு சகோதரிகளுக்கு ஒரே எரிச்சலாக இருக்கும். என்றாலுங்கூட, சாப்பிடுகையில் அவர் கருத்தாழமிகுந்த பைபிள் காரியங்களையும் கலந்துரையாடினார்.
சகோதரர் ரதர்ஃபோர்டுக்கு நன்கு சமைக்கத் தெரியும். நண்பர்களுக்கு உணவு தயாரிப்பதென்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சமயம் பெத்தேலில் சமைப்பவர்கள் கோழிகளை வெட்டும்போது சில கோழி எலும்புகளை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிவிட்டனர். உடனே அவர் உள்ளே வந்து கோழியை சரியாக வெட்டுவது எப்படி என்று அவர்களுக்கு செய்து காட்டினார். தன்னுடைய சாப்பாட்டில் சிறு சிறு எலும்புகள் இருந்தால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது!
நான் சகோதரர் ரதர்ஃபோர்டுடன் சாதாரணமாக எப்போதும் கூடவே இருந்தேன், அதாவது, நம்முடைய ரேடியோ நிலையமாகிய WBBR-லோ ஸ்டேட்டன் தீவிலிருந்த அவருடைய படிப்பறையிலோ அவருடன் இருந்தேன். அவர் மிகவும் இரக்கமுள்ள நபராக, போதித்ததை வாழ்க்கையில் அப்பியாசித்தார். தன்னால் செய்ய முடியாத எதையும் அவர் பிறர் செய்யும்படி எதிர்பார்க்கவில்லை. பற்பல மத அமைப்புகளில் உள்ள பொறுப்புவாய்ந்த நபர்களைப் போலில்லாமல், சகோதரர் ரதர்ஃபோர்டு மிக உயர்ந்த ஆவிக்குரிய தன்மையையும் ஒழுக்கத் தன்மையையும் உடையவராக இருந்தார். யெகோவாவின் ராஜ்யம் சார்பாக இருப்பதை அவர் உண்மையில் வாழ்ந்து காட்டினார்.
பணநெருக்கடியான காலங்கள்
நான் பெத்தேலுக்கு வந்து ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் மிகுந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நிதிசார்ந்த அங்காடிகள் வீழ்ச்சியடைந்தன, பண்டங்களின் விலைகளும் அவ்வாறாயின. வேலை கிடைப்பது அரிதாயிருந்தது. நிதிவசதியும் மட்டுப்படுத்தப்பட்டது. பெத்தேல், நன்கொடையைக் கொண்டு இயங்கி வந்தது. வேலையைக் கவனித்துக்கொள்வதற்கு வேண்டிய நிதி இருக்கும்படியாக யெகோவா எப்போதும் பார்த்துக்கொண்டார். எங்களுக்குப் பிடித்தமான உணவு கிடைக்கவில்லையே தவிர நாங்கள் உணவில்லாமல் இருந்ததே கிடையாது. முடிந்தவரை நாங்கள் சிக்கனமாக வாழ்ந்தோம். பெத்தேலில் இல்லாத சகோதரர்கள் தங்களால் முடிந்தவரை எங்களுக்கு உதவினார்கள்.
1932-ல், எங்களுடைய உண்மையுள்ள தொழிற்கூட கண்காணியாகிய ராபர்ட் மார்ட்டின் இறந்துபோனார். அவருடைய இடத்தில் இருபத்தேழு வயதான நேதன் நார் நியமிக்கப்பட்டார். இவர் திறமைசாலியான இளம் மனிதனாவார். அவரைத் தொழிற்கூட கண்காணியாக வரவேற்பதில் யாருக்கும் கஷ்டம் இருந்ததாக எனக்கு ஞாபகமில்லை. மற்ற உண்மையுள்ள சகோதரர்களாயிருந்த ஜான் கர்ஸன், ஜார்ஜ் கெல்லி, டக் கால்பிரெய்த், ரால்ஃப் லெஃப்லர் மேலும் எட் பெக்கர் போன்றவர்கள் தங்களுடைய தொழிற்திறமைகளையும் அறிவுத் திறமைகளையும் ராஜ்ய சேவைக்கென மனமுவந்து அர்ப்பணித்தனர்; யாவருமே எனக்குப் பிடித்தமான உடன் வேலையாட்கள் ஆவர்.—யாத்திராகமம் 35:34, 35-ஐ ஒத்துப்பாருங்கள்.
ரேடியோவில் பணிபுரிவது
நம்முடைய அமைப்பு கிடைக்கிற எந்தக் கருவியையும் பயன்படுத்தி, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முழுமையாக அர்ப்பணித்திருந்தது. முழு உலகமும் அந்த ராஜ்யத்தைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாயிருந்தது. நாங்களோ ஒருசில ஆயிரம் ஆட்களாகவே இருந்தோம். முதல் உலகப் போரைத் தொடர்ந்து ரேடியோ தொழில்நுட்பம் அதன் ஆரம்பநிலையில் இருந்தது. என்றாலும், அப்பொழுது தொடர்புகொள்வதற்கு யெகோவா அளித்திருக்கும் முறையானது இதுவாகவே இருந்தது என்று சகோதரர்கள் பகுத்துணர்ந்தனர். ஆகவே 1923-ல் WBBR என்ற ரேடியோ நிலையத்தை ஸ்டேட்டன் தீவில் கட்டத் தொடங்கினர். இந்தத் தீவு நியூ யார்க் நகரில் தன்னாட்சியுரிமையுள்ள ஐந்து நகரங்களில் ஒன்றாயிருந்தது.
சில சமயத்தில் நான் மட்டுமே எங்களுடைய நிலையத்தில் இயக்குபவராக இருந்தேன். நான் ஸ்டேட்டன் தீவில் வசித்துவந்தபோதிலும் புரூக்லினிலுள்ள தொழிற்கூடத்திற்கு சென்று மின்சார அல்லது இயந்திர வேலையைப் பார்ப்பதற்கு படகிலும் நிலத்தடி ரயிலிலும் மூன்று மணிநேரம் பயணம் செய்தேன். எங்களுடைய ரேடியோ நிலையத்தை அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் ஒன்றாகச் செய்வதற்கு நாங்கள் டீசல் மின் ஆக்கியை நிறுவினோம். ஸ்டேட்டன் தீவில் எங்களுக்கு சொந்த தண்ணீர் கிணறுகளும், அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையான பணியாட்களுக்கும் புரூக்லினிலிருந்த பெத்தேல் குடும்பத்துக்கும் உணவுதரும் தோட்டமும் இருந்தன.
காலத்தினூடே கூடுதலான உதவி கிடைக்கும் வரை ரேடியோ பணி சார்ந்த உத்தரவாதங்கள் நான் கூட்டங்களுக்கு செல்வதையும் வெளி ஊழியத்துக்கு செல்வதையும் மிகவும் மட்டுப்படுத்தின. எங்களுக்கிருந்த வருடாந்தர விடுமுறையைத் தவிர சமூக கூட்டுறவுகளுக்கோ வார இறுதி உல்லாச பயணங்களுக்கோ நேரமே இல்லை. ஒருமுறை ஒருவர் என்னைப் பார்த்து, “இப்படி அதிக வேலையை உட்படுத்தும் அட்டவணை இருப்பதால், பெத்தேலை விட்டுவருவதைக் குறித்து நீங்கள் யோசிக்கவே இல்லையா?” என்று கேட்டார். நான் நேர்மையாக அவரிடம், “இல்லை” என்று சொன்னேன். அர்ப்பணிக்கப்பட்ட அத்தனை சகோதர சகோதரிகளோடு சேர்ந்திருந்து, வேலைசெய்வது சிலாக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கிறது. மேலும் செய்வதற்கு எப்போதும் வேலை இருந்தது, ஏதாவது புதிய ப்ராஜெக்ட் வேலையும் இருந்தது.
உணர்ச்சி பொங்கும் நாடகங்களைத் தயாரித்து ஒலிபரப்பினோம். ஸ்பெஷல்-எஃபெக்ட்ஸ் பதிவுகள் இல்லாததால், எங்களுடைய சொந்த முறைகளை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியதாயிருந்தது. தென்றல் ஒலியையோ கடுமையாகும் புயலின் ஒலியையோ மறு உருவாக்க நாங்கள் ஒரு இயந்திரத்தை உண்டாக்கினோம். மெத்தை பலகை மோதும் பாதிக் கொட்டாங்கச்சிகளின் ஒலி கூழாங்கல் தளம்பாவப்பட்டிருக்கிற தெருக்களில் ஓடும் குதிரை குளம்புகளின் ஒலிகளாக மாறின. ஒவ்வொரு நாடகமும் அதிசயமான வேலைப்பாடாக இருந்தது. மக்களும் கேட்டனர். அவ்வளவு கவனச்சிதறல் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் அநேகர் ஆற அமரக் கேட்டனர்.
1920-களிலும் 1930-களின் ஆரம்பத்திலும் சங்கம் ரேடியோ துறையில் ஒரு சரித்திரம் படைத்தது. ஒரேவொரு நிகழ்ச்சிக்காக பெரும் எண்ணிக்கையான நிலையங்களை ரேடியோவின் மூலமும் தொலைபேசியின் மூலமும் அடிக்கடி இணைத்து ஒலிபரப்பினர். இவ்வாறு உலகமுழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான மக்களை ராஜ்ய செய்தி சென்றெட்டியது.
ஃபோனகிராஃப்
1930-களின் மத்திபத்திலும் 1940-களின் ஆரம்பத்திலும் நாங்கள் படியெடுத்தல் இயந்திரங்களையும் (transcription machine) ஃபோனகிராஃப்புகளையும் இதர ஒலிபரப்பு சாதனங்களையும் வடிவமைத்து உருவாக்கினோம். ஒரு விசேஷ கடைசல் இயந்திரத்தைக் கொண்டு, தேன்மெழுகினால் செய்யப்பட்ட கண்ணாடி-வழவழப்பான டிஸ்குகளிலிருந்து முதன்மை இசைத்தட்டுகளை நாங்கள் வெட்டியெடுத்தோம். பிறகு ஒரு நுண்ணோக்காடியைக் கொண்டு அது பழுதற்றதாயிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்த ஒவ்வொரு முதன்மைப் பதிவையும் நாங்கள் கவனமாக ஆய்வு செய்தோம். ஏதாவது பழுது இருந்ததென்றால், திரும்பவும் பதிவு செய்து கடைசல் இயந்திரத்தின் மூலம் இன்னொரு முறை பிரித்தெடுத்தோம். பிற்பாடு அந்தத் தேன்மெழுகினால் ஆன முதன்மைப் பதிவை பதிவு செய்யும் கம்பெனிக்கு அனுப்பினோம். இந்தக் கம்பெனி ஃபோனகிராஃப்பையும் படியெடுத்தல் பதிவுகளையும் உண்டுபண்ணியது.
1933-ல், “சமாதானம், செழிப்பின்பேரில் பரிசுத்த ஆண்டின் பாதிப்பு” என்ற தலைப்பைக்கொண்ட சகோதரர் ரதர்ஃபோர்டின் பேச்சு நன்கு மனதில் பதிந்திருந்த ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும். அந்த ஆண்டை “பரிசுத்த ஆண்டு” என்று போப் அறிவித்திருந்தார். ரேடியோ ஒலிபரப்பின் மூலமாகவும் ஃபோனகிராஃப் மூலமாகவும் அதை நாங்கள் அம்பலப்படுத்தி, இதிலிருந்து எந்தப் பரிசுத்தமான காரியமும் பிறக்காது என்று நாங்கள் வெளிப்படுத்தினோம். கூறியதற்கிசைய, கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவைக் கொண்டு ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தான். இதனால் சமாதானத்திற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமற்போயிற்று.
ஐக்கிய மாகாணங்களில், கேத்தலிக் ஆக்ஷன் (Catholic Action) என்ற அமைப்பு சர்ச் செய்ய விரும்பியதை சாதிக்க உருவாக்கப்பட்டது. அவர்கள் பிரபலமான செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தக பிரசுரிப்போருக்கு தங்களுடைய சொந்த ஆட்களைப் பதிப்பாசிரிய குழுவில் அமர்த்தினர். அரசியலில் பிள்ளைத்தனமாக செயல்பட்டு நம்முடைய பைபிள் பேச்சுக்களை ஒலிபரப்பும் எந்த நிலையத்தையும் மூடிப்போடுவதாக அவர்கள் மிரட்டினர். அநேக சாட்சிகள் கேத்தலிக் ஆக்ஷன் தொகுதியினரின் கும்பலால் தாக்கப்பட்டனர். முக்கியமாக அருகாமையிலிருந்த நியூ ஜெர்ஸியில் இவ்வாறு நடந்தது. பரபரப்பூட்டும் காலங்கள் அவை!
ஊழியத்தில் சந்தோஷமான வேலை
1950-களின் மத்திபத்தில், ராஜ்ய பிரஸ்தாபிகளடங்கிய பெருகிவரும் அணிகள் மக்களின் வீடுகளண்டையிலேயே நிறைய ஆட்களைச் சென்றெட்டியது. நபர்களுக்கு பைபிள் சத்தியத்தை விளங்கச்செய்ய ரேடியோவைவிட இது வெகு அதிக பலன்தருவதாக இருந்தது. ஆகவே 1957-ல் WBBR-ஐ விற்று நம்முடைய ஆதாரப்பொருட்களை ஏனைய நாடுகளில் விரிவாகிவரும் மிஷனரி வேலைக்கு பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
1955-ல் நான் புரூக்லினில் உள்ள பெட்ஃபெர்ட் சபைக்கு நியமிக்கப்பட்டேன். அங்கு நான் காவற்கோபுர படிப்பை ஒழுங்காக நடத்திவந்தேன். வடக்கத்திய நியூ யார்க், பென்ஸில்வேனியா, கனெடிகட், நியூ ஜெர்ஸி ஆகிய இடங்களுக்கு என்னைப் பயணப் பேச்சாளராகவும் சங்கம் அனுப்பியது. பெட்ஃபெர்ட் சபைக்கு நியமித்தபோது ‘எனக்கு 50 வயதுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுதே என்னால் முடிந்த மட்டும் நான் அதிகமாக வெளி ஊழியத்தில் பங்குகொள்வது நல்லது. பிற்பாடு இடுப்புவலி வந்தால் என்னால் அவ்வளவு நன்றாக செய்ய முடியாது,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ரேடியோவின் மூலம் ராஜ்ய விதையை ஒலிபரப்பும் தொழில்நுட்ப பணியில் அத்தனை ஆண்டுகளாக வேலை செய்த பிறகு, நபர்களை நேரடியாக சந்தித்து பைபிள் சத்திய விதைகளை நட்டு நீர்ப்பாய்ச்சுவதில் உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கண்டடைந்தேன். அந்தச் சபையோடு வேலைசெய்வதை உண்மையில் நான் அனுபவித்து களித்தேன். பல்வேறு ஆட்கள் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக என்னை ஏற்றுக்கொண்டனர், வீட்டிலிருப்பது போல நான் உணரும்படி செய்தனர். இப்பொழுது வளர்ந்துவிட்ட சிறு பிள்ளைகள் சிலர் இன்னும் என்னை தாத்தா என்று அழைக்கின்றனர். 30 ஆண்டுகள் வெளி ஊழியத்தில் ஒன்றாக சேர்ந்து வேலைசெய்தது எங்களுக்கு அருமையாயிருந்தது. பின்னர் என்னுடைய கால்களிலும் பாதங்களிலும் உண்டான சுகவீனங்களால் என்னால் படிக்கட்டு ஏறவோ நிலத்தடி ரயிலில் பயணஞ்செய்யவோ முடியவில்லை. 1985-ல் பெத்தேலிலேயே கூடும் புரூக்லின் ஹைட்ஸ் சபைக்கு நான் மாற்றம் செய்துகொண்டேன்.
யெகோவாவின் அமைப்பு அதிக வளர்ச்சியை அடைந்து வருகையில், தூர தேசங்களுக்குச் சென்று யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய மாநாடுகளுக்கு ஆஜராகி, வெளிநாடுகளில் அவருடைய ஆசீர்வாதத்தை தனிப்பட்ட விதத்தில் காண்பது ஒரு சிலாக்கியமாக இருந்தது. மொத்தத்தில் உலகையே என்னால் சுற்றிவர முடிந்தது! 1950-களில் தொடங்கி எங்களில் சில பெத்தேல் ஆட்கள் லண்டன், பாரிஸ், ரோம், நூரெம்பர்க், கோபன்ஹாகன் ஆகிய இடங்களைப் பார்த்தோம். முன்பு குண்டு போட உபயோகிக்கப்பட்ட விமானங்கள், படகு, மற்றும் ரயில் ஆகியவற்றில் நாங்கள் பயணம் செய்தோம். நிச்சயமாகவே, அந்தப் பயணங்கள் கண்ணைக் கவருவதாயிருந்தன. ஆனால் எல்லாவற்றிலும் அதிக கிளர்ச்சியுண்டாக்கிய காட்சியானது நம்முடைய அன்பான, வரவேற்கும் சகோதரர்களே ஆவர். பின்னர்வந்த பத்தாண்டுகளில் கீழைநாடுகளுக்கும், திரும்பவும் மேற்கு ஐரோப்பாவுக்கும் மற்றும் வெகு சமீபத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கும் பயணம் செய்தோம். போலாந்து, ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியா ஆகிய இடங்களில் நடந்த அருமையான மாநாடுகள் பெரிய மாநாடுகளாயிருந்தன. நான் முதலில் சேர்ந்துகொண்டதிலிருந்து நம்முடைய தேவராஜ்ய குடும்பம் எப்படி வளர்ந்திருக்கிறது!
கடவுளுடைய வழிநடத்துதல்
அமைப்பு எடுத்த சிறிய படிகளாக தோன்றியவை பின்னர் பெரிய அடிகளாக ஆயின. சாட்சி கொடுக்கும் வேலையில் ஈடுபட உதவும் கருவிகளாகவே இருந்த புதுமையான திட்டங்களில் நாங்கள் வேலைசெய்தபோது, இந்தப் பிரமாண்டமான வளர்ச்சியை யார் எதிர்பார்த்திருப்பார்? யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றி நாங்கள் விசுவாசத்தில் முன்னேறியிருக்கிறோம்.
உலகளாவிய ஊழியத்தை கவனிக்க இந்த முன்னேறிச்செல்லும் அமைப்பு, கிடைக்கக்கூடிய நவீன நாளைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவோ தன்னுடைய சொந்த தொழில் நுட்பத்தை உண்டுபண்ணவோ தயங்கினதே கிடையாது. வீடு வீடாய் பிரசங்கம் செய்வது, ரேடியோ நிலையக் கோவைகள், ஃபோனகிராஃப் மூலம் சாட்சிகொடுத்தல், மக்களின் வீடுகளில் பைபிள் படிப்புகள் நடத்தும் திட்டம் ஆகியவை ராஜ்ய பிரசங்கிப்பை முன்னேற்றுவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறைகளாகும். முற்காலங்களில் நம்முடைய சொந்த அச்சு வேலைகளைச் செய்வதும், இப்பொழுது கணிப்பொறியில் ஒளிப்படமுறை அச்சுக்கோப்பையும் வெவ்வேறான மொழிகளில் மறுதோன்றி அச்சுமுறையையும் பயன்படுத்துவதும் ஒரு சுலபமான சாதனையல்ல. உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஒழுங்காக நடக்கும் மாநாடுகள் ஆகிய அனைத்துமே யெகோவா தேவனுக்கும் அவருடைய குமாரனுக்கும் மகிமையைக் கொண்டுவருவதற்கு துணைபுரிந்திருக்கின்றன. இந்த எல்லா சம்பவங்களையும் தனிப்பட்ட விதமாக பார்த்து, அவற்றில் பங்குகொண்டது எனக்கு ஒரு சிலாக்கியமாக இருந்திருக்கிறது.
பூமியிலுள்ள யெகோவாவின் ஆவியால் வழிநடத்தப்படும் அமைப்பு என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதற்கு வழிநடத்துதலைப் பெற்றுவருகிறது என்பது எனக்குத் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. அவருடைய காணக்கூடிய மற்றும் காணக்கூடாத முழு சர்வலோக அமைப்புமே ஒன்றுபட்டு இயங்கிவருகிறது.
இளம் மனிதனாக இருந்தபோது கடற்பயணங்களை மேற்கொள்வதற்கான என்னுடைய திட்டங்களை விட்டுக்கொடுத்ததைப் பற்றி நான் வருத்தப்பட்டதே கிடையாது. ஏன், உலகிலேயே அதிக உணர்ச்சியூட்டும் கருத்துச் செறிவுள்ள முன்னேற்றங்கள் யெகோவாவின் அமைப்புக்குள்ளாகவே நடந்தேறி வருகின்றன! ஆக ‘பரம அழைப்பினிடமாக’ செல்லும் சாலையில் என்னுடைய பயணமானது கவலைகளால் அல்ல, பெரும் சந்தோஷங்களாலும் ஆசீர்வாதங்களாலும் குறிக்கப்பட்டிருக்கிறது.—பிலிப்பியர் 3:13, 14.
நான் எப்போதும் இளம் ஆட்களிடம், 1914-ஐ அதாவது, சங்கீதம் 19:14-ஐ நினைவிற்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அந்த வசனம் சொல்கிறது: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” நாம் எல்லாவற்றிலும் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புபவர்களாக, தாவீதைப்போல ஜெபம் செய்யவேண்டும்: “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.” (சங்கீதம் 25:4, 5) அவ்வார்த்தைகள் கருத்துச்செறிவுள்ள வார்த்தைகள். அவற்றை நினைவில் வைப்பது சரியான பாதையில் இருப்பதற்கும் சரியான திக்கில் செல்வதற்கும் யெகோவாவின் முன்னேறிச்செல்லும் அமைப்போடு சேர்ந்து நடக்கவும் உதவக்கூடும்.
[பக்கம் 23-ன் படம்]
நண்பர்களுக்கு உணவு தயாரிப்பதென்றால் சகோதரர் ரதர்ஃபோர்டுக்கு மிகவும் பிடிக்கும்
[பக்கம் 25-ன் படம்]
WBBR ரேடியோ நிலையத்திலுள்ள இயக்குமிடத்தில் ராபர்ட் ஹாட்ஸ்ஃபெல்ட்
[பக்கம் 26-ன் படம்]
சகோதரர் ஹாட்ஸ்ஃபெல்டின் சமீபத்திய ஃபோட்டோ