“என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்”
வீட்டைவிட்டு வெளியே சென்று காட்டுப்பகுதியில் ஒரு குடும்பம் இன்பமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது எல்லாரையும்விட இளையவனாகிய பீட்டர் ஒரு குன்றின் இறக்கத்தில் ஓர் அணிலைத் துரத்திக்கொண்டே போய் வழிதவறி சென்றுவிட்டான். திடீரென்று, மேகங்கள் வானில் திரண்டுவர, மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் லேசான தூறலாக இருந்து, பின்னர் படிப்படியாக அடைமழையாக அது மாறினது. குடும்பத்தினர் அவசரமாகத் தங்கள் உடைமைகளைச் சேர்த்துக்கொண்டு தங்கள் வாகனத்துக்கு ஓடினார்கள். அனைவரும் பீட்டர் எங்கே இருக்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
பீட்டர், இதற்கிடையில் குடும்பத்தினரைச் சேர்ந்துகொள்ள பாடுபட்டுக் கொண்டிருந்தான். முன்னால் பார்ப்பது கடினமாக இருந்தது. குன்றுக்கு மேலே செல்லும் பாதை மழையில் வழுவழுப்பாக இருந்தது. எதிர்பாராத வகையில், அவன் தடுமாறி ஓர் ஆழமான மறை குழிக்குள் விழுந்த போது காலுக்குக் கீழிருந்த நிலம் மறைந்துவிட்டது போல இருந்தது. வெளியே ஏறிவர அவன் முயன்றான், ஆனால் பக்கச்சுவர்கள் மிகவும் வழுவழுப்பாக இருந்தன.
மழைத்தண்ணீர் குன்றின் மீது பொழிந்து குழியில் சேறு நிரம்பிக்கொண்டிருந்தது. பீட்டர் மூழ்கிவிடும் உண்மையான ஆபத்தில் இருந்தான். ஆனால் அப்போது அவனுடைய தந்தை அவனைக் கண்டுபிடித்து ஒரு கயிற்றின் துணைகொண்டு அவனை வெளியே இழுத்தார். பின்னர், பீட்டர் வழிதவறி சென்றதற்காக கடுமையாக கடிந்துகொள்ளப்பட்டான். என்றபோதிலும், போர்வையில் சுற்றப்பட்டு தன்னுடைய தாயின் கரங்களில் இருந்தபோது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிதாக இருந்தது.
இந்த அனுபவம், ஒரு காலத்தில் கடவுளுடைய மக்கள் மத்தியில் இருந்த சிலருக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை நன்றாக விளக்குகிறது. அவர்கள் இந்தக் காரிய ஒழுங்கின் ஆழமான குழிக்குள் விழுந்துவிட்டிருக்கிறார்கள்; அவர்கள் மெதுவாக வெளியே வந்து யெகோவாவின் அமைப்பின் புகலிடத்திற்குள் திரும்பி வர மிகவும் ஆவலோடு முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். யெகோவா இரக்கமுள்ளவராக இருந்து பாதுகாப்பிடத்துக்கு திரும்பிவர அவர்களுக்கு உதவிசெய்ய ‘கயிற்றை இறக்குவதற்கு’ தயாராக இருப்பதை அறிந்துகொள்வது எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது!
யெகோவாவின் இரக்கமுள்ள செயல்தொடர்புகள்
பண்டைய இஸ்ரவேலரின் நாட்களில், ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட போது, சாலொமோன் ஏறெடுத்த பிரதிஷ்டை ஜெபத்தில் ஆலயத்தை நோக்கி செய்யப்படும் வேண்டுதல்களுக்கு செவிசாய்க்கும்படியாக அவர் யெகோவாவை மன்றாடிக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அவர் சொன்னார்: “அவர்கள் [இஸ்ரவேலர்] உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து (பாவஞ்செய்யாத மனுஷன் இல்லை) தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, . . . அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: . . . தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி . . . விண்ணப்பம்பண்ணும்போது உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்”பீராக.—1 இராஜாக்கள் 8:46-49.
இஸ்ரவேலரின் வரலாற்றில் சாலொமோனுடைய வேண்டுதல் பல சமயங்களில் நிறைவேறியது. மறுபடியும் மறுபடியுமாக, கடவுளுடைய ஜனங்கள் அவரைவிட்டு விலகி அவரை உதறித்தள்ளினார்கள். பின்னர் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து மனந்திரும்பி அவரைத் தேடினார்கள். யெகோவா அவர்களை மன்னித்தார். (உபாகமம் 4:31; ஏசாயா 44:21, 22; 2 கொரிந்தியர் 1:3; யாக்கோபு 5:11) யெகோவா மல்கியாவின் மூலம் தம்முடைய ஜனத்தோடு ஆயிரவருட காலமாகக் கொண்டிருந்த செயல்தொடர்பை இவ்வாறு தொகுத்துரைத்தார்: “நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்.”—மல்கியா 3:7.
இடறுவதற்குக் காரணங்கள்
இஸ்ரவேலரின் விஷயத்தில் இருந்தது போலவே, கடவுளுடைய ஜனங்களில் அநேகர் யெகோவாவின் அமைப்பை விட்டு விலகி தங்களை பிரித்து வைத்துக்கொள்கிறார்கள். ஏன்? சிலர், அணிலைத் துரத்திக்கொண்டு போன பீட்டரைப் போன்று முதலில் தீங்கற்றதாகத் தோன்றும் ஏதோவொன்றின் பின்செல்கிறார்கள். இதுவே அடாவுக்கு சம்பவித்தது. அவள் சொல்கிறாள்: “மதிய வேளையில் வேலைசெய்யும் நாங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஏதாவது ஒரு சிற்றுண்டிச்சாலைக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. ஆகவே நாளின் முடிவில் அவர்கள் என்னை காப்பி அருந்த அழைத்தபோது, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாக இருக்கவில்லை. கூட்டங்களுக்கு அல்லது பிரசங்கவேலைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டில்லை என்பதாக நான் எண்ணினேன். இது 1 கொரிந்தியர் 15:33-லுள்ள நியமத்தை கடைப்பிடிக்கத் தவறுவதாக இருக்கும் என்று நான் உணரவில்லை.
“விரைவில், சனிக்கிழமைகளில் அவர்களோடு நான் குதிரைசவாரிக்குப் போய்கொண்டிருந்தேன். பின்னர் அவர்களோடு திரைப்படங்களுக்கும் திரைஅரங்குகளுக்கும் சென்றுகொண்டிருந்தேன். அது நான் சில கூட்டங்களைத் தவறவிடுவதற்கு வழிநடத்தியது. கடைசியாக, நான் எந்தக் கூட்டங்களுக்கும் போகாமலும், பிரசங்க வேலையில் பங்குகொள்ளாமலும் இருந்தேன். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்தபோது, அமைப்போடு இனிமேலும் தொடர்புகொள்ளாமல் இருந்தேன்.”
மற்றவர்களின் விஷயத்தில் கடவுளை சேவிப்பதற்கு தகுதியற்றவராக ஒருவரை உணரச்செய்யும் மறைத்து வைக்கப்பட்ட ஒரு வினைமையான பாவம் காரணமாக இருக்கலாம். (சங்கீதம் 32:3-5) அல்லது ஒரு நபர், சாலொமோன் சொன்னவிதமாக “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லை,” என்பதை புரிந்துகொள்ளாமல் கிறிஸ்தவ தோழர்கள் சொன்ன அல்லது செய்த ஏதோவொன்றைக் குறித்து இடறலடையக்கூடும்.—1 இராஜாக்கள் 8:46; யாக்கோபு 3:2.
இன்றும் மற்றவர்கள் சிட்சையைப் பெறும்போது சோர்வடைந்துவிடுகிறார்கள். (எபிரெயர் 12:7, 11) பொருள்பற்றுள்ள வாழ்க்கை-பாணிகளின் கவர்ச்சி அநேகரை கடவுளை சேவிப்பதை நிறுத்திவிட வழிநடத்தியிருக்கிறது. அடிக்கடி, உலகப்பிரகாரமான வெற்றியை தேடி, அவர்கள் அத்தனை முழுமையாக உலகப்பிரகாரமான வேலையில் மூழ்கிவிடுவதன் காரணமாக அவர்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய சேவைக்கு இடமில்லாமல் போய்விட்டிருக்கிறது. (மத்தேயு 13:4-9; 1 தீமோத்தேயு 6:9, 10) இப்படிப்பட்டவர்களின் நிலைமை நம்பிக்கைக்கு இடமற்றதாக இருக்கிறதா?
யெகோவாவின் அழைப்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா?
ஒரு சமயம் இயேசு புரிந்துகொள்ள கடினமாக இருந்த ஏதோவொன்றை சொன்னபோது சிலர் இடறலடைந்தார்கள். பதிவு சொல்கிறது: “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்.” ஆனால் எல்லாரும் இடறலடைந்துவிடவில்லை. பைபிள் பதிவு தொடர்ந்து சொல்வதாவது: “அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” (யோவான் 6:66-68) இயேசுவின் அப்போஸ்தலர்கள் இயேசுவை விட்டு போய்விடுவது பேராபத்தாக இருக்கும் என்பதை ஞானமாக உணர்ந்துகொண்டிருந்தார்கள்.
வீழ்ந்துபோகும் சிலர் கடைசியாக இந்த ஒரு முடிவுக்கே வந்திருக்கிறார்கள். கடவுளுடைய அமைப்பைவிட்டு போனது பேராபத்தான ஒரு படியாக இருந்ததையும் யெகோவா மற்றும் கிறிஸ்துவிடம் மாத்திரமே ஜீவனுக்கு வழிநடத்தும் வசனங்களைக் காணமுடியும் என்பதையும் உணர்ந்துகொள்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் உணர்வு அவர்களுக்கு ஏற்படும்போது, அவர்கள் மறுபடியுமாக எண்ணிப்பார்த்து, யெகோவாவிடம் மன்னிப்புக் கேட்டு அவரிடமாக திரும்பி வருவதற்கு ஒருபோதும் பிந்திவிடவில்லை என்பதையும்கூட உணரவேண்டும். யெகோவாதாமே இந்த அழைப்பைக் கொடுத்திருக்கிறார்: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்.”—மல்கியா 3:7.
மெய்யாகவே, உண்மையான ஒரு கிறிஸ்தவன் யெகோவாவைச் சேவிப்பதில் மகிழ்ச்சியைக் காணவில்லையென்றால் அவன் வேறு எங்கே காணமுடியும்? கொஞ்ச காலத்துக்கு கடவுளுடைய அமைப்பின் ஒரு பாகமாக இருந்துவிட்டு ஒரு நபர் விலகிப் போவாரேயானால், வெளி உலகத்தில் அவருக்கு என்ன காத்துக்கொண்டிருக்கிறது? தான் இப்பொழுது அதிகமதிகமாக வன்முறையானதாக மாறிக்கொண்டுவரும் ஓர் உலகின் பாகமாக இருப்பதை அவர் விரைவில் உணர்ந்துகொள்வார். மாய்மாலம், பொய், மோசடி மற்றும் ஒழுக்கக்கேடு நிறைந்த காரிய ஒழுங்கில், இளம் பீட்டரின் உயிரை அச்சுறுத்திய சேற்றுக்குழியைப் போன்று ஆபத்தும் அருவருப்புமாக இருக்கும் ஓர் உலகில், தான் சிக்குண்டிருப்பதை அவர் காண்பார். அவர் தன் உணர்வுக்கு வந்து தன்னுடைய நித்திய ஜீவன் ஆபத்திலிருப்பதை உணரும்போது, அந்தச் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வருவதற்கு உடனடியாக உதவியை நாடவேண்டும். இருந்தபோதிலும் திரும்பிவருதல் எளிதாக ஒருவேளை இருக்காது.
நீங்கள் யெகோவாவிடம் திரும்பிவருவதற்கு முயற்சி செய்து ஆனால் அது கடினமாக இருப்பதை உணர்ந்த ஒருவரா? அப்பொழுது உங்களுக்கு உதவி தேவை என்பதை அறிந்தவராயிருங்கள். கடவுளுடைய அமைப்பிலுள்ள உங்கள் சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவிசெய்ய மனமுள்ளவர்களாய் இருப்பதை நம்புங்கள். ஆனால் உங்கள் ஆசையை யெகோவாவுக்குக் காண்பிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ‘நீங்கள் உணர்வடைந்து’ மேலும் ‘உண்மையில் யெகோவாவிடம் திரும்புவதற்கு’ இது காலமாயிருக்கிறது.—1 இராஜாக்கள் 8:47.
திரும்புவதற்கு உதவப்பட்டார்கள்
யெகோவாவிடம் திரும்புவதற்கு எது அடாவுக்கு உதவிசெய்தது என்பதை அவள் விளக்குகிறாள்: “சரியான நேரத்தில், என்னோடு பைபிளை படித்த சகோதரி தன்னோடு வட்டார அசெம்பிளிக்கு வரும்படியாக என்னை அழைத்தாள். அவள் அத்தனை இனியவளாக இருந்தாள்! அவள் என்னை குற்றஞ்சாட்டவே இல்லை! அவள் மிகுதியான அன்பை எனக்குக் காண்பித்தாள். நான் கடைசியாக கூட்டத்துக்குச் சென்று ஒரு வருடமாகியிருந்தது, ஆனால் உலகின் வெறுமை உணர்வு குறித்தும், மேலோட்டமான கவர்ச்சிக்குப் பின்னால் துயரமும், ஏமாற்றமும் ஒழுக்கக்கேடுமே இருக்கும் உண்மையைக் குறித்தும் நான் ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஆகவே நான் அசெம்பிளிக்குச் செல்ல தீர்மானித்தேன். அது நடைபெற்ற அரங்கிற்குள் நான் சென்றபோது, கடைசி வரிசைக்குச் சென்று இருட்டான ஒரு மூலையில் மறைவாக உட்கார்ந்துகொண்டேன். சகோதரர்கள் என்னைப் பார்த்து கேள்விகள் கேட்பதை நான் விரும்பவில்லை.
“என்றபோதிலும், நிகழ்ச்சிநிரல் எனக்கு மிகவும் அவசியமாயிருந்த புத்திமதியை அளித்தது. அது முடிந்தபோது, யெகோவாவின் ஜனங்களிடமாக திரும்பிவருவதற்கு மட்டுமல்லாமல், ஆனால் என் முழு இருதயத்தோடும் அவருக்கு என்னை அர்ப்பணம் செய்யவும்கூட நான் தீர்மானமாயிருந்தேன். சகோதரர்கள் என்னை அனலோடு வரவேற்றார்கள், ‘கெட்ட குமாரத்தி’ திரும்பினாள்.” (லூக்கா15:11-24) அவை அனைத்தும் கொஞ்சம் காலத்துக்கு முன் சம்பவித்தன, அடா இப்பொழுது 25 ஆண்டுகளுக்கும் மேலாக முழு-நேர ஊழியத்தை செய்துவருகிறாள்.
வழிதவறிவிட்டிருந்த மற்றொருவரின் விஷயத்திலும் இதேப் போன்ற மகிழ்ச்சியான பலன் கிடைத்தது. ஒருசில மூப்பர்கள், பைபிள் நியமங்களைவிட அதிகமாக அவர்களுடைய சொந்த எண்ணத்தை பிரதிபலித்த புத்திமதியை ஜோஸுக்கு கொடுத்தார்கள். உற்சாகமிழந்து மனக்கசப்புற்ற ஜோஸ் கடைசியாக செயலற்றவராக ஆனார். எட்டு வருடங்கள் அவர் கடவுளுடைய ஜனங்களைவிட்டு பிரிந்திருந்தார், அந்தச் சமயத்தில் ஓர் அவிசுவாசியை மணந்து பிள்ளைகளுக்குத் தந்தையானார். இவர்களில் ஒருவரை கத்தோலிக்க சர்ச்சில் ஞானஸ்நானம் பெற அனுமதித்திருந்தார்.
கடைசியாக, அவரிடமாக மேய்க்கும் சந்திப்புகளைச் செய்து மூப்பர்களையும் அதையே செய்யும்படியாக உற்சாகப்படுத்திய ஒரு வட்டார கண்காணி அவருக்கு உதவினார். அவர் பழைய இடத்துக்குத் திரும்ப வந்தார், அவருடைய மனைவி சத்தியத்தில் அக்கறைக்காட்டுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். ஜோஸ் தற்போது சபையில் ஒரு மூப்பராக சேவித்துவருகிறார். இந்த இரண்டு அனுபவங்கள் காண்பிக்கிற விதமாகவே, யெகோவா திரும்பும்படியான அவருடைய அன்புள்ள அழைப்புக்கு பிரதிபலிக்கிறவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களை நிறுத்தி வைப்பதில்லை.
ஆனால் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ, ஒருவர் முதலில் அளிக்கப்படும் உதவியை மதித்துணர்ந்து அதற்குப் பிரதிபலிக்க வேண்டும். பெரும்பாலான சபைகளில் சகோதரர்கள் செயலற்றவர்களாகிவிட்டவர்களை மனதில் கொண்டு அவர்களை அவ்வப்போது சந்தித்து உதவிசெய்ய முயற்சிசெய்கிறார்கள். இப்படிப்பட்ட உதவிக்குப் பிரதிபலிப்பது யெகோவாவின் இரக்கத்துக்குப் போற்றுதலைக் காண்பிப்பதாக இருக்கிறது.—யாக்கோபு 5:19, 20.
உண்மையில், “என்னிடத்திற்குத் திரும்புங்கள்,” என்ற யெகோவாவின் அழைப்புக்குப் பிரதிபலிப்பதற்கு இதுவே சமயமாக இருக்கிறது. (மல்கியா 3:7; ஏசாயா 1:18) இனிமேலும் காத்திராதேயுங்கள். உலகச் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க வேகத்தில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றன. முன்னாலிருக்கும் கொந்தளிப்பான காலங்களின் போது நாம் தங்கியிருக்கக்கூடிய மிகச்சிறந்த இடம் அவருடைய பாதுகாப்பின் கீழ் பத்திரமாக யெகோவாவின் அமைப்புக்குள் இருப்பதே ஆகும். யெகோவாவை அடைக்கலமாக கொள்கிறவர்கள் மாத்திரமே அவருடைய கோபாக்கினையின் மகா நாளில் அவருடைய கோபத்திலிருந்து மறைக்கப்படும் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்க முடியும்.—செப்பனியா 2:2, 3.
[பக்கம் 30-ன் படம்]
“என்னிடத்திற்குத் திரும்புங்கள்,” என்ற யெகோவாவின் அழைப்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா?