நீங்கள் ஜெபிக்கையில் கடவுள் செவிகொடுக்கிறாரா?
ஒரு செயலாட்சித் தலைவர் தான் ஒரு காரியத்தை ஒப்படைப்பாரா அல்லது தனிப்பட்டவிதமாக கையாளுவாரா என்பதைத் தீர்மானிக்கிறார். அதேவிதமாகவே, சர்வலோகத்தின் பேரரசர் எந்த ஒரு காரியத்தின் பேரிலும் தம்முடைய தனிப்பட்ட ஈடுபாட்டின் அளவை தீர்மானிக்கும் உரிமையுடையவராய் இருக்கிறார். நம்முடைய ஜெபங்களில் தனிப்பட்டவிதமாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள கடவுள் தெரிந்து கொண்டிருப்பதையும், ஆகவே இவைகளை அவரை நோக்கி செய்யும்படியும் வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது.—சங்கீதம் 66:19; 69:13.
இந்தக் காரியத்தில் கடவுளுடைய தெரிவு, அவருடைய மானிட ஊழியர்களின் ஜெபங்களில் அவருடைய தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்துகிறது. அவருடைய மக்கள் ஒவ்வொரு சிந்தையோடும் கவலையோடும் அவரை அணுகுவதை தடைசெய்வதற்குப் பதிலாக அவர் அவர்களுக்குச் சொல்வதாவது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்,” “ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்,” “யெகோவா மேல் உன் பாரத்தை வைத்துவிடு,” “உங்கள் கவலைகளையெல்லாம் அவர் [கடவுள்] மேல் வைத்துவிடுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:17; ரோமர் 12:12; சங்கீதம் 55:22, NW; 1 பேதுரு 5:7.
கடவுள், தம்முடைய ஊழியர்களின் ஜெபங்களுக்கு கவனம் செலுத்த விரும்பாதிருந்தால், அவரை அவ்விதமாக அணுகுவதற்கு ஒருபோதும் ஏற்பாடு செய்திருக்கவும், அதை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு உற்சாகப்படுத்தியிருக்கவும் மாட்டார். அப்படியென்றால், தம்முடைய ஜனங்களுக்கு அணுகப்பட முடிகிறவராகத் தம்மை வைத்துக் கொள்ள கடவுள் தெரிந்து கொண்டிருப்பது அவர் உண்மையில் செவிகொடுத்து கேட்கிறார் என்று நம்புவதற்கு ஒரு காரணமாகும். ஆம், தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரின் ஜெபத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
கடவுள் ஜெபத்தை செவிகொடுத்து கேட்கிறார் என்பதாக பைபிள் நேரடியாகச் சொல்வது புறக்கணிக்கப்பட முடியாத உண்மையாகும். உதாரணமாக அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதுகிறார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14) தாவீது ராஜா யெகோவா தேவனை “ஜெபத்தைக் கேட்கிறவர்” என்பதாக குறிப்பிட்டு நம்பிக்கையோடு, “அவர் என் சத்தத்தைக் கேட்பார்” என்று உறுதியாகச் சொன்னார்.—சங்கீதம் 55:17; 65:2.
ஜெபிக்கின்ற அந்தச் செயல்தானே, நன்மை செய்வதாக இருக்கையில், ஒரு நீதிமான் ஜெபிக்கையில் மிக அதிகம் உட்பட்டிருப்பதை வேதாகமம் காண்பிக்கிறது. எவரோ ஒருவர் செவிகொடுத்துக் கொண்டிருக்கிறார். செவிகொடுத்து கேட்பவர் கடவுளே.—யாக்கோபு 5:16-18.
கேட்கப்பட்ட ஜெபங்கள்
உண்மையில் கடவுளால் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்ட ஜெபங்களைச் செய்த மக்களைப் பற்றிய பதிவுகள் பைபிளில் ஏராளமாக இருக்கின்றன. அவர்களுடைய அனுபவங்கள், ஒருவருடைய எண்ணங்களை தெளிவுபடுத்தி, வெளிப்படுத்துகின்றபோது ஏற்படும் குணப்படுத்தும் பாதிப்புகளுக்கும் அப்பால் ஜெபத்தின் நன்மைகள் செல்வதை தெளிவாக உறுதி செய்கின்றன. அவை தன்னுடைய ஜெபங்களுக்கு இசைவாக ஒரு நபர் எடுக்கும் தனிப்பட்ட முயற்சிகளுக்கும் அப்பால் செல்கின்றன.
உதாரணமாக, இஸ்ரவேலின் அரச பதவியை கைப்பற்ற அப்சலோம் செய்த சதித்திட்டத்தை எதிர்ப்படுகையில், தாவீது ராஜா இவ்விதமாக ஜெபித்தார்: “கர்த்தாவே, [யெகோவாவே, NW] அகித்தோப்பேலின் [அப்சலோமின் ஆலோசனைக்காரன்] ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக.” “அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப் போல இருந்தது, அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் . . . இருந்த”படியால் இது சிறிய ஒரு வேண்டுகோளாக இருக்கவில்லை. அதன்பிறகு, தாவீது ராஜாவை கவிழ்த்துவிட அகித்தோப்பேல் சொன்ன சூழ்ச்சியை அப்சலோம் நிராகரித்துவிட்டான். ஏன்? “கர்த்தர் [யெகோவா, NW] அப்சலோமின் மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்கு கர்த்தர் கட்டளையிட்டார்.” தாவீதின் ஜெபம் கேட்கப்பட்டது தெளிவாக இருக்கிறது.—2 சாமுவேல் 15:31; 16:23; 17:14.
அதேவிதமாக எசேக்கியா தன்னுடைய சாவுக்கேதுவான நோயிலிருந்து விடுவிக்கப்பட கடவுளிடம் விண்ணப்பம் பண்ணினபிறகு, அவர் குணமடைந்தார். இது எசேக்கியா ஜெபித்திருந்த காரணத்தால் கிடைத்த உளவியல் நன்மைகளின் காரணமாக இருந்ததா? நிச்சயமாகவே இல்லை! ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக எசேக்கியாவுக்குச் சொல்லப்பட்ட யெகோவாவின் செய்தி இவ்வாறு இருந்தது: “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்.”—2 இராஜாக்கள் 20:1-6.
தன் ஜெபத்துக்கு எதிர்பார்த்ததைவிட தாமதமாகவே பதிலைப் பெற்றுக்கொண்ட தானியேல் யெகோவாவின் தூதனால் இவ்விதமாக உறுதியளிக்கப்பட்டார்: “உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது.” அன்னாள், இயேசுவின் சீஷர்கள், நூற்றுக்கு அதிபதி கொர்நேலியு போன்ற மற்றவர்களுடைய ஜெபங்கள் மனித திறமையினால் மாத்திரமே நிகழ்ந்ததாக ஒப்புக்கொள்ளப்பட முடியாத வழிகளில் பதிலளிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தெய்வீக சித்தத்திற்கிசைவான ஜெபங்களை கடவுள் வரவேற்கிறார், கேட்கிறார், பதிலளிக்கிறார் என்று பைபிள் தெளிவாக போதிக்கிறது.—தானியேல் 10:2-14; 1 சாமுவேல் 1:1-20; அப்போஸ்தலர் 4:24-31; 10:1-7.
ஆனால் கடவுள் எவ்விதமாக இன்று தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களின் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார்?
ஜெபங்களுக்குப் பதில்கள்
மேற்கூறப்பட்ட ஜெபங்கள் வியப்பூட்டும், அற்புதமான முறைகளில் பதிலளிக்கப்பட்டன. ஆனால், பைபிள் காலங்களிலும்கூட, ஜெபங்களுக்குப் பெரும்பாலும் அடிக்கடி கிடைத்த பதில்கள் அத்தனை எளிதாக உணரும்படி இருக்கவில்லை என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள். இது ஏனென்றால், அவை தார்மீக வலிமையைக் கொடுப்பதோடும், அறிவொளியூட்டப்படுவதோடும் சம்பந்தப்பட்டவையாக நீதியான பாதையை பற்றிக்கொண்டிருக்க கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவி செய்வதாக இருந்தன. விசேஷமாக கிறிஸ்தவர்களுக்கு, ஜெபங்களுக்குப் பதில்கள், பகட்டு மிகுந்த அல்லது வல்லமையான செயல்களை அல்ல, ஆனால் முக்கியமாக ஆவிக்குரிய காரியங்களை உட்படுத்தியிருக்கின்றன.—கொலோசெயர் 1:9.
ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கிற அல்லது விரும்புகிற முறையில் உங்கள் ஜெபங்கள் எப்போதும் பதிலளிக்கப்படாமல் இருந்தால் ஏமாற்றமடைந்து விடாதீர்கள். உதாரணமாக ஒரு சோதனையை நீக்குவதற்குப் பதிலாக, கடவுள் அதை சகித்துக்கொள்ள “மகத்துவமுள்ள வல்லமையை” உங்களுக்குக் கொடுப்பதை தெரிந்து கொள்ளக்கூடும். (2 கொரிந்தியர் 4:7; 2 தீமோத்தேயு 4:17) இப்படிப்பட்ட வல்லமையின் மதிப்பை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிடவோ அல்லது யெகோவா உண்மையில் நம்முடைய ஜெபத்துக்கு பதிலளிக்கவே இல்லை என்ற முடிவுக்கோ வரக்கூடாது.
கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே எடுத்துக்கொள்ளுங்கள். மேலீடாகத் தோன்றுகிறபடி தேவதூஷணம் சொன்னவராக மரிக்காமல் இருப்பது குறித்து அக்கறையுடையவராய், இயேசு, “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்” என்று ஜெபித்தார். இந்த ஜெபத்தைக் கடவுள் கேட்டாரா? ஆம், எபிரெயர் 5:7 உறுதிசெய்கிறது. கழுமரத்தில் மரிக்க வேண்டிய அவசியத்திலிருந்து யெகோவா தம்முடைய குமாரனை விடுவிக்கவில்லை. மாறாக, “அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.”—லூக்கா 22:42, 43.
ஒரு வியப்பூட்டும் அற்புதமான பதிலா? நம்மில் எவருக்கும் அது அப்படி இருக்கும்! ஆனால் இப்படிப்பட்ட வல்லமையின் ஊற்றுமூலரான யெகோவா தேவனுக்கு இது ஓர் அற்புதமாக இருக்கவில்லை. இயேசுவும்கூட பரலோகத்தில் அவருடைய முந்தைய வாழ்க்கையிலிருந்து, தேவதூதர்கள் மனிதர்களுக்குத் தோன்றியிருந்த கடந்தக் கால நிகழ்ச்சிகளோடு பழக்கப்பட்டவராக இருந்தார். ஆகவே ஒரு தேவதூதனின் தோற்றம் நம்மீது ஏற்படுத்தக்கூடிய அந்த வியப்பூட்டும் பாதிப்பை அது அவர் மீது கொண்டு வந்திருக்காது. இருந்தபோதிலும், மனிதனாவதற்கு முன்பிருந்த வாழ்க்கையில் இயேசுவுக்கு ஒருவேளை தனிப்பட்டவிதமாக அறியப்பட்டிருந்த இந்தத் தூதன், அவருக்கு முன்னாலிருந்த சோதனைகளுக்காக அவரைப் பலப்படுத்த உதவினான்.
இன்று தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களின் ஜெபங்களுக்குப் பதிலளிக்கையில், யெகோவா அடிக்கடி சகித்திருப்பதற்கு தேவையான பலத்தைக் கொடுக்கிறார். இந்த ஆதரவு, நாம் தனிப்பட்ட விதமாக கூட்டுறவுக்கொள்ளும் உடன் வணக்கத்தாரிடமிருந்து வரும் ஊக்குவிப்பின் வடிவில் கிடைக்கலாம். நம்முடைய உடன் ஊழியர்கள் நம்முடையதைப் போன்ற சோதனைகளை அனுபவித்தில்லாத காரணத்தால் அவர்கள் நம்மை பலப்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்பதாக ஒருவேளை முடிவுசெய்து அந்த ஊக்குவிப்பை நிராகரித்துவிட நம்மில் எவரேனும் விரும்புவோமா? அவருக்கு முன் தோன்றிய தேவதூதனிடமாக இயேசு இப்படிப்பட்ட ஒரு நோக்குநிலையை எடுத்திருக்கலாம். மாறாக, அவர் தம்முடைய ஜெபத்துக்கு யெகோவாவின் பதிலாக ஊக்குவிப்பை ஏற்றுகொண்டதால், தம்முடைய தகப்பனின் சித்தத்தை உண்மையுடன் நிறைவேற்ற அவரால் முடிந்தது. நாமும்கூட நம்முடைய ஜெபங்களுக்கு பதிலாக கடவுள் கொடுக்கும் பெலத்தை அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பொறுமையோடு சகித்துக்கொள்ளப்பட்ட காலங்களைத் தொடர்ந்து அடிக்கடி சொல்லமுடியாத ஆசீர்வாதங்கள் கிடைப்பதையும்கூட நினைவில் வையுங்கள்.—பிரசங்கி 11:6; யாக்கோபு 5:11.
கடவுள் கவனித்துகேட்கிறார் என்பதில் நம்பிக்கையாயிருங்கள்
உடனடியாக பதில் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், ஜெபத்தின் வல்லமையில் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். இக்கட்டிலிருந்து தனிப்பட்ட விடுதலை அல்லது கடவுளுக்கு ஒருவருடைய சேவையில் கூடுதலான பொறுப்புகள் போன்றவற்றிற்கான சில ஜெபங்களுக்கு பதில்கள், கடவுள் அறிந்திருக்கும் அந்தச் சரியான மற்றும் மிகச் சிறந்த நேரத்துக்காக காத்திருக்க வேண்டியதாக இருக்கலாம். (லூக்கா 18:7, 8; 1 பேதுரு 5:6) ஆழ்ந்த தனிப்பட்ட கவலைக்குரிய ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தால், உங்கள் ஆசை தீவிரமானதும் உங்கள் உள்நோக்கம் சுத்தமும் உண்மையுமானதென்பதை விடாப்பிடியாக இருப்பதன் மூலம் கடவுளுக்குக் காண்பியுங்கள். யாக்கோபு இந்த ஆவியை வெளிப்படுத்தினான், தேவதூதனோடு நீண்ட நேரம் போராடிய பின்பு அவன் சொன்னான்: “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.” (ஆதியாகமம் 32:24-32) நாம் கேட்டுக்கொண்டே இருந்தால், சரியான நேரத்தில் நாம் ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வோம் என்ற அதே போன்ற நம்பிக்கை நமக்கிருக்க வேண்டும்.—லூக்கா 11:9.
கடைசியாக ஒரு குறிப்பு. சர்வலோகத்தின் பேரரசரால் செவிகொடுத்து கேட்கப்படுவது விலைமதிப்புள்ள ஒரு சிலாக்கியமாகும். இதன் காரணமாக, யெகோவா தேவன் அவருடைய வார்த்தையின் மூலமாக அவர் கேட்கும் காரியங்களைக் குறித்து நம்மிடம் பேசும் போது நாம் கவனித்துக் கேட்கிறோமா? நம்முடைய ஜெபங்கள் நம்மை நம்முடைய சிருஷ்டிகரிடமாக மிகவும் நெருங்கி வரச் செய்வதால், அவர் நமக்குச் சொல்லவிருக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் நாம் கருத்தூன்றி கவனம் செலுத்த விரும்ப வேண்டும். (w92 4/15)
[பக்கம் 6-ன் படம்]
கடவுள் ஜெபங்களை செவிகொடுத்துக் கேட்கிறார். அவருடைய வார்த்தையின் மூலமாக அவர் பேசுவதை நாம் கவனித்துக் கேட்கிறோமா?