ஆறு வயதில் தீர்மானித்த இலக்கை பின்தொடருதல்
சான்ட்ரா கவன் சொன்னது
அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இசை அல்லது கூட்டுநடனம் போன்ற வாழ்க்கைப் பணியை தெரிவு செய்து சிறு பிராயத்திலேயே அவர்களைப் பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறார்கள். சரியாகவே இதைத்தானே என் அம்மா எனக்குச் செய்தார்கள். நான் இரண்டு வார குழந்தையாக இருந்த சமயம் முதற்கொண்டே எல்லா கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன்.
எனக்கு நான்கு வயதான போது, நான் தனியாக பிரசங்கிக்க தயாராக இருப்பதாக அம்மா நினைத்தார்கள். நான் செய்த முதல் முயற்சி எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. நாங்கள் ஒரு பெரிய பண்ணை வீட்டுக்கு காரில் சென்றிருந்தோம். அம்மாவும் மற்றவர்களும் காரில் காத்திருக்கையில், நான் காரிலிருந்து இறங்கி கதவண்டைக்கு நடந்து சென்றேன். தயவுள்ள அந்தப் பெண்மணி செவி கொடுத்து கேட்ட போது நான் அவர்களுக்கு பத்து சிறு புத்தகங்களை அளித்தேன். அவைகளுக்குரிய பணத்துக்கு பதிலாக அவர்கள் எனக்கு ஒரு பெரிய சோப்புகட்டியைக் கொடுத்தார்கள். அதை இரண்டு கைகளாலும் நான் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. நான் கிளர்ச்சியடைந்தேன்!
அதே ஆண்டு, 1943-ல் காவற்கோபுரம் கிலியட் பைபிள் பள்ளி, மிஷனரி வேலைக்காக முழுநேர-பயனியர் ஊழியர்களை பயிற்றுவிக்க ஆரம்பித்தது. என்னுடைய வாழ்க்கையில் மிஷனரி ஊழியத்தை இலக்காக்கிக் கொள்ளும்படியாக என் அம்மா என்னை உற்சாகப்படுத்தினார்கள். அப்போது ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அம்மா அப்போது ஐரோப்பாவில் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட சாட்சி பிள்ளைகளைப் பற்றி என்னிடம் சொல்வார்கள். எவ்வகையான சோதனையையும் எதிர்த்து நிற்க போதிய பலமுள்ளவளாக நான் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.
1946 கோடையில், ஒஹாயோ, கிளிவ்லாண்டில் சர்வதேச மாநாட்டில் நான் முழுக்காட்டப்பட்டேன். எனக்கு ஆறு வயதாக மாத்திரமே இருந்தபோதிலும், யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்ற நான் தீர்மானமாயிருந்தேன். அந்தக் கோடையில் நான் முதல் முறையாக ஒரு பயனியராக சேவித்தேன். ஒரு நாள் காலை கலிஃபோர்னியா சான் டியகோவில் சந்தைக் கூடுமிடத்தில் அமர்ந்திருந்த ஆட்களிடம் 40 பத்திரிகைகள் அளித்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் சின்னஞ்சிறுமியாகவும் வாயாடியாகவும் இருந்ததே இதற்கு காரணமாயிருக்க வேண்டும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.
பெத்-சாரீம் அருகே நாங்கள் அடிக்கடி பிரசங்கித்தோம். 1942-ல் காவற்கோபுரம் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரதர்ஃபோர்டு தான் மரிப்பதற்கு முன் குளிர் காலங்களை கழித்த இடமாக இது இருக்கிறது. நாங்கள் அங்கிருந்த முழு நேர ஊழியர்களை வழக்கமாக சந்தித்து அவர்களோடு உணவு அருந்தினோம். இப்பேர்ப்பட்ட சந்தோஷமான சந்திப்புகள், இவ்வகையான வாழ்க்கையைத்தானே நான் உண்மையில் விரும்பியதை தீர்மானிக்கச் செய்தது. பின்னர் நான் கிலியட் பள்ளியையும் மிஷனரி சேவையையும் வாழ்க்கையில் என்னுடைய இலக்காக்கிக் கொண்டேன்.
அதைத் தொடர்ந்து வந்த வருடம் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர், ஆனால் மாறுபட்ட குடும்பச் சூழல் எங்களுடைய ஆவிக்குரியதன்மையை குன்றிப்போகச் செய்யவில்லை. அம்மா ஒரு பயனியராக இருந்தார்கள், நானும் என் தம்பியும் பெற்றுக்கொண்ட பயிற்றுவிப்பு குறித்து மிகுந்த அக்கறையுள்ளவர்களாக இருந்தார்கள். எங்கள் ஊர்தி மனை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் சந்திப்பால் சுறுசுறுப்பான ஓரிடமாகவே இருந்தது. அம்மா நான் கிலியட் பட்டதாரிகளைச் சந்திக்க விசேஷ ஏற்பாடுகளைச் செய்தார்கள். அயல்நாடான ஜப்பானில் வேலை செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கையில் பிரயாண ஊழியத்தில் எங்களைச் சந்தித்த லாயிட்டும் மெல்பா பேரியும் இப்படிப்பட்ட பட்டதாரிகளே. அவர்கள் என்னை—ஒரு மிஷனரியாவதற்கு ஏங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுமியை—உற்சாகப்படுத்த நேரமெடுத்துக் கொண்டது என்னை உண்மையில் கவர்ந்தது.
எனக்கு பத்து வயதாக இருக்கையில், என் அம்மா ஒரு பயனியர் ஊழியராக இருந்த மிக நேர்த்தியான ஒரு சாட்சியை திருமணம் செய்து கொண்டார்கள். அவர் தாளில் மாத்திரமல்லாமல், தன்னுடைய இருதயத்திலும்கூட என் தம்பியையும் என்னையும் ஏற்றுக்கொண்டார். யெகோவாவிடம் அவருடைய அன்பும் ஊழியத்தில் வைராக்கியமும் மிகவும் தொற்றிக்கொள்ளக்கூடிய தன்மையுடையதாய் இருந்தது.
கடினமான பருவ வயதினூடாக பிள்ளைகளாகிய எங்களை வழிநடத்துவதற்கு அம்மாவும் அப்பாவும் ஒரு குழுவாக வேலைசெய்தார்கள். எங்கள் இல்லம் நான் பிரியத்தோடு எண்ணிப்பார்க்கும் ஓர் ஆவிக்குரிய புகலிடமாக இருந்தது. இரண்டு பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு சொற்ப வருமானத்தில் பயனியர் செய்வது அவர்களுக்கு சுலபமாக இருக்கவில்லை; அது சுய தியாகத்தை கேட்பதாயிருந்தது. ஆனால் அம்மாவும் அப்பாவும் யெகோவாவின் மீது சார்ந்திருந்து ராஜ்ய அக்கறைகளை முதலில் வைத்தார்கள்.
1950-ல் நியு யார்க் நகரில் நடைபெற்ற சர்வ தேச மாநாடு எத்தனை நன்றாக எனக்கு நினைவிலிருக்கிறது! அப்பா வங்கியிலிருந்து கடன் வாங்கியிருந்தார். செலவுகளைக் குறைக்க மூன்று பிரயாணிகளை எங்கள் காரில் ஏற்றிக்கொண்டோம். சான் டியகோவிலிருந்து நியு யார்க் வரையாக அம்மாவும் அப்பாவும் என் தம்பியும் நானும் காரின் முன் இருக்கையில் ஒன்றாகவும் மற்றவர்கள் பின்புறத்திலுமாக உட்கார்ந்து கொண்டோம். அப்பாவின் முதலாளி, வேலையிலிருந்து இரண்டு வாரம் விடுப்பு கொடுக்க மறுத்த காரணத்தால், அந்த மாநாடுக்குச் சென்றது அவருடைய வேலையை இழக்கச் செய்தது. ஆனால் யெகோவா எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வார் என்று அப்பா எங்களுக்கு உறுதியளித்த வண்ணமாகவே அவர் செய்தார். வங்கி கடனை அடைக்க காரை அப்பா விற்றுவிட்டு, மேலான ஒரு வேலையை பெற்றுக்கொண்டார். இதுவும் இதுபோன்ற அனுபவங்களும் பல வருடங்களுக்குப் பின்னால் என்னுடைய கணவனும் நானும் கடினமான சூழ்நிலைமைகளை எதிர்ப்பட்ட போது மிகவும் மதிப்புள்ளவையாக நிரூபித்தன.
நியு யார்க்கிலிருந்து திரும்பி வருகையில் ராஜ்ய பண்ணையைச் சென்று பார்த்தோம். இங்கே முதல் முறையாக நான் கிலியட் பள்ளியை பார்த்தேன். வகுப்பறைகளில் ஒன்றில் நின்றுகொண்டு ‘இன்னும் எனக்கு 11 வயதுகூட ஆகவில்லை. நான் இங்கே ஒருபோதும் வரமுடியாது. அர்மகெதோன் முதலில் வந்துவிடும்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆனால் அந்த விஜயம் கிலியட்-ஐ என் இலக்காக்கிக் கொள்ள எக்காலத்திலும் இருந்ததைவிட அதிக உறுதியாக இருக்கும்படி என்னைச் செய்வித்தது.
என் இலக்கை நோக்கி வேலை செய்தல்
பள்ளி முழுவதிலும், ஒன்றாம் வகுப்பு முதற்கொண்டே ஒவ்வொரு கோடையிலும் நான் பயனியர் செய்தேன். பின்னர் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்து இரண்டு வாரங்களுக்குப் பின், 1957-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான் ஓர் ஒழுங்கான பயனியராக ஆனேன்.
1957-ல் லாஸ் ஏஞ்சலிஸ்-ல் நடைபெற்ற மாநாட்டில், கிலியட்டில் அக்கறையுள்ளவர்களுக்கான மாவட்ட மாநாடு கூட்டம் எனக்கு விசேஷித்த ஒன்றாக இருந்தது. அந்தக் கூட்டத்துக்காக நான் கூடாரத்திற்குள் நடந்து செல்லுகையில் என்னுடைய ஆறாவது வயது முதற்கொண்டே எனக்கு பரிச்சயமாயிருந்த ஓர் இளம் சகோதரர் பில்லை நான் சந்தித்தேன். கடந்த வருடம் அவர் தேவை அதிகமாயிருந்த லூயிஸியானாவில் இருந்தார். நாங்கள் இருவருமே மிஷனரி சேவையில் எவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருந்தோம் என்பதை அறிந்த போது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அதை ஒரு கூட்டுமுயற்சியாக ஆக்கிக்கொள்ள தீர்மானித்தோம். ஒரு வேலை நியமிப்பு கேட்டு சங்கத்துக்கு எழுதினோம். எங்களுடைய திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, மேற்கு வர்ஜீனியாவில் ராம்னீயில் நியமிப்பு பெற்றுகொண்டோம்.
1958-ல் நியு யார்க் மாநாட்டுக்குப் போகும் வழியில், அவ்விடத்துக்கு நாங்கள் இடம் மாறிச் சென்றோம். அந்த மாநாட்டில் கிலியட்டில் அக்கறையுள்ளவர்களுக்கு நடத்தப்படும் கூட்டத்துக்குச் சென்றோம். நூற்றுக்கணக்கானோர் ஆஜராயிருந்தனர். கூட்டத்தைப் பார்க்கையில், கிலியட்டுக்கு அழைக்கப்படும் எங்கள் வாய்ப்பு நிச்சயமாக குறைவாக இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். என்றபோதிலும், எங்களுக்கு திருமணமாகி 11 வாரங்கள் மாத்திரமே ஆனபோதிலும், எங்கள் முதனிலை விண்ணப்பத்தை கொடுத்தோம். அடுத்த வருடம் ஃபிலடெல்ஃபியாவில் நடந்த மாவட்ட மாநாட்டில் இரண்டாவது விண்ணப்பத்தைக் கொடுத்தோம்.
பில்லும் நானும் ரோம்னீயில் கடினமான நிலைமைகளில் எங்களுக்கு உதவ யெகோவாவின் மீது சார்ந்திருக்க கற்றுக்கொண்டோம். ரோம்னீ 2,000 குடிமக்களைக் கொண்ட ஒரு பட்டணமாகும். வேலை தேடுவது சாத்தியமற்றதாக இருந்தது. கலிஃபோர்னியா சீதோஷண நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஓர் எளிய ஊர்திமனையில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு எப்போதும் தண்ணீரோ, சூடுண்டாக்கும் கருவியோ, குளிர்பதனப் பெட்டியோ இருக்கவில்லை. உள்ளே அத்தனை குளிராகிவிட்டதன் காரணமாக நாங்கள் பனிக்கட்டியை பக்கெட்டில் உடைத்து தண்ணீரை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சகோதரர்கள் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து அவர்கள் வேட்டையாடின உணவை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் மானையும், கரடியையும் அணிலையும் சாப்பிட்டோம். ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நாள் முழுவதும் சாப்பிட எங்களுக்கு ஒன்றுமிராது என்று யோசித்திருக்கிறோம், நாங்கள் ஊழியத்திலிருந்து வீடு திரும்பிய போது எங்கள் கதவுக்கு முன்னால் கொஞ்சம் ஆப்பிள்கள், அல்லது பாலாடைக் கட்டிகள் விட்டுச் செல்லப்பட்டிருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஒன்பது மாதங்களாக, அவ்வப்போது எங்களிடமிருந்த சொற்ப பணமும் போதாமல் போக நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். கடைசியாக பில் வேலை ஒன்றை தேடிக்கொள்ளக்கூடிய இடத்துக்கு—மேரிலாந்தில் பால்டிமோருக்கு—இடம் மாறிச் செல்வது ஞானமாக இருக்கும் என்று தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் குறித்து சகோதரர்களிடம் சொன்ன போது அவர்கள் அழுதார்கள், நாங்கள் அழுதோம். இன்னும் கொஞ்ச காலம் சகித்திருக்க நாங்கள் தீர்மானித்தோம்.
அதற்குப் பின், சுமார் 60 கிலோமீட்டருக்கு அப்பால், மேரிலாந்து, வெஸ்டர்ன் போர்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் மேலாளராக இருந்த ஒரு சாட்சி, பில்லுக்கு ஒரு பகுதி நேர வேலையை அளித்தார். அதே மாதத்தில் எங்களுடைய பைபிள் மாணாக்கரில் ஒருவர் தட்டுமுட்டுச் சாமான்களையும் ஒரு பெரிய கரி அடுப்பையும் கொண்ட அழகான ஒரு சிறிய வீட்டை எங்களுக்கு அளித்தார்கள். அப்போது தானே மல்கியா 3:10 எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனமாகியது. யெகோவா எங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஆசீர்வாதத்தை வருஷித்தார்.
கடைசியாக கிலியட்!
எங்களுடைய வாழ்க்கையிலேயே அதிக கிளர்ச்சியூட்டுவதாக இருந்த நாள், 1959-ல் கிலியட்டுக்கு எங்கள் அழைப்பை பெற்றுக்கொண்ட அந்த நாளாகும். நாங்கள், ராஜ்ய பண்ணையில் கடைசியாக நடத்தப்பட்ட 35-வது வகுப்புக்கு அழைக்கப்பட்டோம். ஒரு சிறுமியாக நான் பார்த்த அதே வகுப்பறையில் நின்று கொண்டிருந்த போது, வார்த்தைகளால் சரியாக வருணிக்க முடியாத அனலான சந்தோஷமான உணர்ச்சிகளைக் கொண்டிருந்தேன்.
கிலியட் ஓர் ஆவிக்குரிய பாலைவனச் சோலையாக இருந்தது. ஐந்து மாதங்களாக புதிய உலகில் வாழ்வது போல இருந்தது. ஏதோ ஒரு காரியத்துக்காக பல வருடங்களாக காத்திருந்துவிட்டு பின்னர் அது எதிர்பார்த்ததைவிட மேலாக இருப்பதைக் காண்பது வாழ்க்கையில் அபூர்வமாகவே சம்பவிக்கிறது. ஆனால் கிலியட் அவ்விதமாகத்தான் இருந்தது.
நாங்கள் இந்தியாவுக்கு நியமனம் பெற்றோம், ஆனால் எங்களுக்கு இறுதியில் விசா மறுக்கப்பட்டது. ஆகவே நியு யார்க் நகரில் ஒரு வருட காலமாக காத்திருந்துவிட்ட பின்னர், காவற்கோபுரம் சங்கம் எங்களுக்கு வட ஆப்பிரிக்காவில் மொராக்கோவுக்கு மீண்டும் நியமிப்பு கொடுத்தது.
மொராக்கோவில் மிஷனரிகள்
நாங்கள் மொராக்கோவில் 24 மகிழ்ச்சியான வருடங்களைக் கழித்தோம், இங்கு வந்திறங்கியவுடனே மக்களை எங்களுக்குப் பிடித்துவிட்டது. இங்கு வாழும் அநேக தேசத்தாரோடு பேச்சு தொடர்பு கொள்ள எங்களுக்கு உதவிய ஃபிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளை நாங்கள் கற்றுக்கொண்டோம். பெரும்பாலும் மற்ற தேசங்களிலிருந்து வந்தவர்கள்தானே ராஜ்ய செய்திக்கு பிரதிபலித்தார்கள்.
நான் பைபிள் படிப்பை நடத்திய ஒரு பெண் காஸபிளாங்காவில் உணவு விடுதி ஒன்றில் ஸ்பானிய நாட்டியக்காரியாக வேலைபார்த்து வந்தவள். உணவு விடுதியின் சொந்தக்காரரோடு வாழ்ந்து வந்த அவள் பைபிள் நியமங்களைக் கற்றுக்கொண்ட பின்பு அவரைவிட்டு விட்டு ஸ்பெயினுக்கு திரும்பினாள். அங்கே அவள் தன் குடும்பத்தார் அனைவருக்கும் சாட்சி கொடுத்தாள், அவள் பகிர்ந்து கொண்ட பைபிள் சத்தியங்களை அவர்களில் சிலர் ஏற்றுக்கொண்டனர். அதற்கு பின்னர் அவர் காஸபிளாங்காவுக்குத் திரும்பினாள், அங்கே அவள் 1990-ல் அவளுடைய மரணம் வரையாக கடவுளுக்கு உண்மையுள்ளவளாக நிலைத்திருந்தாள்.
நாங்கள் மொராக்கோவில் இருந்த முதல் சில ஆண்டுகளில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்தது. என்றபோதிலும், அயல் நாட்டவருக்கு வேலை வாய்ப்பும் குடியிருப்பு அனுமதியும் பெற்றுக்கொள்வது கடினமான போது, சாட்சிகள் ஐரோப்பாவுக்கு வெளியேற ஆரம்பித்தார்கள். எங்களிடம் படித்தவர்களில் சிலர் இப்பொழுது நியூஜீலாந்து, கானடா, ஐக்கிய மாகாணங்கள், பல்கேரியா, ரஷ்யா மற்றும் ஃபிரான்சில் இருக்கின்றனர். இவர்களில் சிலர் முழு-நேர ஊழியத்தில் பங்குகொள்கிறார்கள்.
திடீரென்று, ஏப்ரல் 1973-ல் மொராக்கோவில் எங்களுடைய பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டது. என்னே ஓர் அதிர்ச்சியாக அது இருந்தது! வியாழன் மாலை, ராஜ்ய மன்றத்தில் நாங்கள் மகிழ்ச்சியான ஒரு கூட்டமாக இருந்தோம். வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டது என்பதை தெரிவிக்க விளக்குகள் அணைக்கப்படும் வரையாக பேசிக்கொண்டிருந்தோம். அந்த விளக்குகள் இப்படிப்பட்ட தடையில்லாத கிறிஸ்தவ கூட்டுறவின் மீது மறுபடியும் பிரகாசிப்பதை நாங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தடையுத்தரவு போடப்பட்ட நிலைமைகளின் கீழ், எங்கள் கூட்டங்களும் வட்டார அசெம்பளிகளும் சிறிய தொகுதிகளில் தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராக, சாட்சிகள் ஃபிரான்சுக்கோ அல்லது ஸ்பெயினுக்கோ பயணம் செய்தார்கள்.
எங்கள் எண்ணிக்கை குறைந்த போது மொராக்கோவில் மீதமிருந்த ஒரு சில சாட்சிகள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுதலுள்ளவர்களானார்கள். ஆகவே காவற்கோபுரம் சங்கம் கடைசியாக கிளைக்காரியாலயத்தை மூடிவிட்டு வேறு ஓரிடத்துக்கு எங்களை நியமிக்க தீர்மானித்த போது, நாங்கள் அனைவரும் கண்ணீர் வடித்தோம்.
மத்திய ஆப்பிரிக்காவுக்கு
எங்களுடைய புதிய நியமனம் மத்திய ஆப்பிரிக்க குடியரசாக இருந்தது. வட ஆப்பிரிக்காவிலிருந்து என்னே மிகப் பெரிய மாற்றம்! மொராக்கோவின் சீதோஷண நிலை பெரும்பாலும் தென் கலிஃபோர்னியாவைப் போன்றே இருக்கையில், நாங்கள் இப்பொழுது உஷ்ணமான ஈரக்கசிவுள்ள வெப்பமண்டலத்துக்கு வந்துவிட்டோம்.
நாங்கள் புதிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருந்தது. உதாரணமாக, ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கு எனக்கிருந்த பயத்தை இப்பொழுது நான் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று சமயங்களில், நான் கதவு வழியாக நடந்துசெல்லும் போது, பல்லி என் தலையின் மேல் விழுந்தது. சில சமயங்களில் ஒரு பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருக்கையில், ஓர் எலி எங்களைச் சேர்ந்து கொள்ள தீர்மானித்துவிடும்! நான் குதித்து ஓடிவிட விரும்பினாலும் நான் என் கண்களை திருவாளர் எலியின் மீதிருந்தது எடுக்காமல், அது போய்விட தீர்மானிக்கும் வரையில் என் புத்தகப் பையையும் காலையும் தரை மீது வைக்காமல் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள கற்றுக்கொண்டேன். முயற்சியை கைவிடாதிருந்தால், எதையும் நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நான் அறிந்தேன்.
நாங்கள் அங்கே ஆறு மாதங்களாக இருந்தப் பிற்பாடு, எங்கள் வேலை தடை செய்யப்பட்டிருப்பதாக வானொலியில் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆகவே எங்கள் ராஜ்ய மன்றங்கள் மூடப்பட்டன, மிஷனரிகள் வெளியேறும்படியாக கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். நாங்களும் மற்றொரு தம்பதியும் மட்டுமே கிளைக்காரியாலயத்தில் இன்னும் மூன்று வருடங்கள் எப்படியோ தங்கிவிட்டோம். பின்னர் ஒரு நாள் ஞாயிறு காலை, எங்களுடைய காவற்கோபுரம் படிப்பின் போது, ஆயுதந்தரித்த போலீஸார் வந்து எங்களை காவல் துறை தலைமைக் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்றார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் விடுவித்துவிட்டு என் கணவர் பில் உட்பட 23 சகோதரர்களை அவர்கள் காவலில் வைத்தார்கள். ஆறு நாட்களுக்குப் பின், வீட்டுக்குப் போய் மூட்டைக் கட்டிக்கொண்டு புறப்பட அவரை விடுவித்தார்கள்; மூன்று நாட்களுக்குப் பின் அரசாங்க உத்தரவுபடி நாங்கள் 1989 மே மாதம் தேசத்தைவிட்டு புறப்பட்டோம். எங்களுடைய அன்புள்ள சகோரர்களில் பலர் விமான நிலையத்தில் கண்ணீரோடு எங்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
கடைசியாக சியாரா லியோனுக்கு
தற்போது நாங்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் சியாரா லியோனில் நியமனம் பெற்றிருக்கிறோம். இது வெள்ளை-மணல் கடற்கரைகளைக் கொண்ட அழகிய தேசமாகும். மக்கள் மிகவும் அன்பாக பழகுகிறார்கள், வெளி ஊழியம் மகிழ்ச்சி தருவதாக உள்ளது, ஒவ்வொரு வீட்டிலும் அநேகமாக ஒரு மாமரம் அல்லது தென்னை மர நிழலில் உட்காருவதற்கு அழைக்கப்படுகிறோம். மக்கள் கடவுளைப் பற்றி பேச விரும்புகின்றனர், கூடவே பின்பற்றுவதற்கு பைபிளின் சொந்த பிரதியை பெற்றுக்கொள்கிறார்கள்.
பில்லும் நானும் ஃப்ரீடவுன் பெத்தேல் வீட்டில் வேலை செய்கிறோம். நான் வரவேற்பாளராக வேலை செய்கிறேன். சந்தாக்களையும் சபை கணக்குகளையும்கூட பார்க்கிறேன். நம்முடைய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டுள்ள தேசங்களில் 16 வருடங்கள் ஊழியஞ் செய்த பிறகு, வேலை தடையின்றி செழித்தோங்கி கொண்டிருக்கும் தேசத்தில் இருப்பது அற்புதமாக இருக்கிறது.
ஜூன் 1991-ல் நான் 30 ஆண்டுகள் மிஷனரி சேவையை முடித்தேன். உண்மையாகவே அம்மா பயனுடையதான ஓர் இலக்கை எனக்கு முன்னால் வைத்தார்கள். அவர்கள் இன்னும் உயிரோடிருந்தால், ‘நன்றி அம்மா!’ என்று நான் அவர்களிடம் மறுபடியுமாக சொல்ல விரும்புவேன். சந்தோஷகரமாக இன்னும் என்னால் ‘நன்றி அப்பா!’ என்று சொல்ல முடிகிறது. (w92 3/1)
[பக்கம் 26-ன் படம்]
[பக்கம் 27-ன் படம்]
[பக்கம் 28-ன் படம்]
நியு யார்க் மாநாடு, 1958
[பக்கம் 29-ன் படம்]
35th class—July, 1960
[பக்கம் 30-ன் படம்]
பில் மற்றும் சான்ட்ரா கவன், 1991