ஒரு மனைவியாக அன்பும் மரியாதையும் காண்பித்தல்
“மனைவி புருஷனுக்கு ஆழ்ந்த மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும்.”—எபேசியர் 5:33, NW.
1. விவாகத்தின் தற்கால நிலை குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?
சுதந்திரம் மற்றும் “விடுதலையின்” இந்த நவீன சகாப்தத்தில் விவாகத்தைப் பற்றி தொன்றுதொட்டு இருந்துவந்திருக்கும் கருத்துகள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தந்தையோ அல்லது தாயோ இல்லாமலேயே இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கின்றன. சட்டப்பூர்வமான ஒரு விவாகமின்றி வாழ்வதே பலருடைய வழக்கமாக இருக்கிறது. ஆனால் இது பெண்ணுக்கும் தாய்க்கும் கூடுதல் பாதுகாப்புக்கு வழிநடத்தியிருக்கிறதா? இது பிள்ளைகளுக்கு நிலையான வாழ்க்கையை அளித்திருக்கிறதா? மதிப்பீடுகளில் சிதைவு குடும்ப ஏற்பாட்டிற்குள் கூடுதல் மரியாதையைக் காண்பிக்க வழிநடத்தியிருக்கிறதா? மாறாக, கடவுளுடைய வார்த்தை சிபாரிசு செய்வது என்ன?
2. ஆதாம் தனிமையாயிருப்பது ஏன் நல்லதாக இருக்கவில்லை?
2 முதல் மனுஷியைப் படைப்பதற்குரிய தம்முடைய எண்ணத்தை வெளிப்படுத்தியபோது “மனுஷன் தனிமையிலிருப்பது நல்லதல்ல,” என்று கடவுள் கூறினார். விலங்கினங்களின் குடும்பங்களை—ஆணும் பெண்ணுமாகத் தங்கள் பிள்ளைகளுடன் இருப்பதை—கவனித்த பின்பு, ஆதாமின் உணர்வுகள் அந்தக் கூற்றுக்கு இசைவாய் இருந்திருக்கும். திருப்தியளிக்கும் ஒரு பரதீஸில் பரிபூரணமாக இருந்த போதிலும், ஆதாமுக்குத் தன் இனத்தில் ஒரு துணை இல்லாமலிருந்தது. அவன் புத்திக்கூர்மையும், பேசும் திறமையும் கொண்டவனாயிருக்க, அந்த ஈவுகளை அவன் பகிர்ந்து கொள்வதற்கு அவனுடைய இனத்தில் வேறு எந்தச் சிருஷ்டியும் இருக்கவில்லை. என்றபோதிலும், நிலைமை சீக்கிரத்தில் வித்தியாசமாயிருக்கும், ஏனென்றால் இணைந்து உதவிசெய்யும் “ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்,” என்று கடவுள் சொன்னார்.—ஆதியாகமம் 2:18–20.
3. (எ) ஏவாள் எப்படி ஆதாமின் “வகையினளாக” இருந்தாள்? (பி) மனுஷன் தன்னுடைய மனைவியோடே “இசைந்திருப்பான்” என்பதன் பொருள் என்ன?
3 ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றை ஆதாரமாக வைத்து யெகோவா ஏவாளைப் படைத்தார். எனவே ஏவாள் ஆதாமின் அதே “வகையினளாக” இருந்தாள். அவள் ஒரு தாழ்ந்த மிருகம் அல்ல, ஆனால் அவனுடைய “எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமு”மாக இருந்தாள். எனவேதான் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட பதிவு கூறுகிறது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:23, 24) “இசைந்திருப்பான்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தையின் நேர்ப் பொருள் “பற்றியிருத்தல், முக்கியமாக பிசின் கொண்டு ஒட்டியிருப்பது போன்று உறுதியாய் ஒட்டியிருத்தல்.” (ஜெசனியஸின் பழைய ஏற்பாட்டு வேத எழுத்துக்களுக்கு எபிரெயு மற்றும் கல்தீ அகராதி) இது உண்மையில் ஒரு கணவனும் மனைவியும் பிரியா துணைவர்களாக இருக்கும் ஓர் எண்ணத்தை தெரிவிக்கிறது. “இது கணவன் மனைவியின் பாலுறவு ஐக்கியத்தைவிட அதிகத்தை உட்படுத்துகிறது, இது முழுமையான ஓர் உறவு வரை செல்கிறது” என்று மற்றொரு அறிஞர் கூறுகிறார். ஆகவே இது கடந்துப்போகிற ஒரு காதல் ஈடுபாடு அல்ல. இது நிரந்திரமான ஓர் உறவு. எங்கு பரஸ்பர மரியாதையும் மதிப்பும் இருக்கிறதோ, அந்த ஐக்கியம் சில சமயங்களில் அழுத்தத்திற்குள்ளானாலும் முறியாததாயிருக்க வேண்டும்.—மத்தேயு 19:3–9.
4. மனுஷி எந்த அர்த்தத்தில் மனுஷனுக்கு ஏற்ற துணையாகவும் இணைந்து நிறைவு செய்பவளாகவும் இருந்தாள்?
4 பெண் ஆணுக்குத் துணையாக, இணைந்து நிறைவு செய்பவளாக இருப்பாள் என்று கடவுள் சொன்னார். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டபடியால், அவருடைய தன்மைகளை—நீதி, அன்பு, ஞானம், வல்லமை—தங்களுடைய உறவுகளில் அப்பியாசிக்கும்படி அவர் எதிர்பார்ப்பார். எனவே, ஏவாள் “இணைந்து நிறைவு செய்பவளாக” இருப்பாளே தவிர, ஒரு போட்டியாளாக இருக்க மாட்டாள். குடும்பம் போட்டிப்போடும் இரண்டு கப்பற்குழு தலைவர்களையுடைய ஒரு கப்பலைப்போல இருக்காது, ஆனால் ஆதாம் தலைமை ஸ்தானம் வகிப்பான்.—1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:22–24; 1 தீமோத்தேயு 2:12, 13.
5 என்றபோதிலும், கடவுளுடைய அன்பான தலைமை ஸ்தானத்துக்கு எதிராக முதல் மானிட ஜோடியின் கலகமும் பாவமும் அவர்களுடைய குடும்பத்துக்கும், எல்லா எதிர்கால குடும்பங்களுக்கும் வித்தியாசமான ஒரு பின்னணியை அமைப்பதாயிருந்தது. அவர்களுடைய பாவத்தின் விளைவுகளும் மனிதவர்க்கத்தின் மீது அதன் பாதிப்பையும் முன்னறிந்தவராக யெகோவா ஏவாளிடம் பின்வருமாறு சொன்னார்: “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்வான்.” (ஆதியாகமம் 3:16) துரதிஷ்டவசமாக, கடந்த நூற்றாண்டுகளில் அநேக ஆண்கள் பெண்கள் மீது கொடூரமான விதத்தில் ஆதிக்கம் செலுத்திவந்திருக்கிறார்கள். உலகமுழுவதும் பெண்கள் இன்றைக்கும் தாழ்த்தப்பட்டு தரக்குறைவாக நடத்தப்பட்டுவருகிறார்கள். என்றாலும், பிப்ரவரி மாத பத்திரிகையில் தோன்றிய இதற்கு முந்தின கட்டுரையில் நாம் பார்த்த விதமாகவே பைபிள் நியமங்களைப் பொருத்திப்பிரயோகித்தல் ஆண்மகனின் ஒடுக்குதலுக்கு ஆதாரம் அளிப்பதில்லை. மறுபட்சத்தில், ஆழ்ந்த மரியாதையின் மதிப்பை அது அறிவுறுத்துகிறது.
ஆழ்ந்த மரியாதை—ஒரு சவால்
6, 7. (எ) அவிசுவாசியாயிருக்கும் கணவர்கள் எவ்விதம் சத்தியத்தினிடமாக வெல்லப்படலாம்? (பி) ஒரு மனைவி அவிசுவாசியாயிருக்கும் தன்னுடைய கணவருக்கு எப்படி “ஆழ்ந்த மரியாதைக்” காட்டத் தவறக்கூடும்?
6 அப்போஸ்தலனாகிய பேதுரு, நடத்தையில் கிறிஸ்துவின் முன்மாதிரியைக் குறிப்பிட்டு, அவர் “தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்,” என்று விளக்கினான். தொடர்ந்து பேதுரு சொன்னதாவது: “அந்தப்படி, மனைவிகளே, உங்கள் சொந்த புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.” (1 பேதுரு 2:21–3:2) கிறிஸ்தவ மனைவிகள் இந்த “ஆழ்ந்த மரியாதையை” எவ்விதம் வெளிப்படுத்தலாம்?
7 நம்முடைய கிறிஸ்தவ சகோதரிகளில் பலருக்கு அவிசுவாசியாயிருக்கும் அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும் கணவர்கள் இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலைகள், பேதுருவின் ஆலோசனை வீணானது, செயலற்றது என்பதைக் குறித்திடுமா? இல்லை, “அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தா”லும் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதும் மரியாதைக் காண்பிப்பதும் அவசியமாயிருக்கிறது. எனவே, எதிர்ப்பைத் தெரிவிக்கும் கணவனையுடைய ஒரு கிறிஸ்தவ மனைவி அவரைக் குறித்து புறங்கூறுவதும், அவர் தன்னைக் கொடுமைப்படுத்தும் எல்லாக் காரியங்களையும் சபையிலுள்ள சகோதரிகளிடம் சொல்லுவதும் ஆழ்ந்த மரியாதைக்கு அடையாளமாக இருக்குமா? சபையிலுள்ள ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் விஷயத்தில் அந்தக் காரியத்தைச் செய்வாளானால் அதற்கு என்ன பெயர்? புறங்கூறுதல், அல்லது ஒருவேளை பழிதூற்றுதலாகவும் இருக்கும். எனவே, அவிசுவாசியாயிருக்கும் தன்னுடைய கணவனைக் குறித்து அவதூறாகப் பேசுதல் ஆழ்ந்த மரியாதைக்கு அத்தாட்சியாக இருக்காது. (1 தீமோத்தேயு 3:11; 5:13) என்றபோதிலும், எதிர்ப்பைத் தெரிவிக்கும் கணவரையுடைய சில மனைவிமார்களுக்குக் கடுமையான பிரச்னை இருக்கிறது என்பது மதித்துணரப்படவேண்டும். அதற்குக் கிறிஸ்தவ பரிகாரம் என்ன? அவர்கள் மூப்பர்களை அணுகி அவர்களுடைய உதவியையும் ஆலோசனையையும் பெறலாம்.—எபிரெயர் 13:17.
8. எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரு கணவரின் யோசனை எப்படியாக இருக்கக்கூடும்?
8 எதிர்ப்பைத் தெரிவித்திடும் ஒரு கணவரிடம் மூப்பர்கள் எவ்விதத்தில் சாதுரியமாக நடந்துகொள்ளலாம்? முதலாவதாக, நிலைமையை அவருடைய நோக்குநிலையிலிருந்து பார்க்க முயலலாம். அவர் பேச்சில் அல்லது சரீரத்தில் வன்முறையாக நடந்துகொள்ளும் காரியம் மூவளைச் சங்கிலிப் பிரதிபலிப்பாக அறியாமை அச்சத்திற்கும், அது வன்மையான பிரதிபலிப்புக்கும் வழிநடத்தியிருக்கலாம். இது ஏன் ஏற்படுகிறது? சில சமயங்களில் தன்னுடன் வேலை செய்யும், யெகோவாவின் சாட்சிகளின் பேரில் தப்பெண்ணங்கொண்டவர்கள் மூலமாய்த் தான் தெரிந்திருக்கும் காரியங்களைத் தவிர அந்தக் கணவருக்கு யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். தன்னுடைய மனைவி பைபிளைப் படிக்க ஆரம்பித்ததற்கு முன்னால் அவள் முழுமையாக தன்னுடைய காரியங்களிலும் பிள்ளைகளுடைய காரியங்களிலும் ஈடுபாடுடையவளாக இருந்தாள் என்பது அவருக்குத் தெரியும். அவள் இப்பொழுது மேன்மையான ஒரு மனைவியாகவும் தாயாகவும் இருந்தாலும், அவருடைய மனநிலை: ‘கூட்டங்களுக்குச் செல்வதற்காக அவள் வாரத்திற்கு மூன்று முறை என்னைக் கவனியாமற் போய்விடுகிறாள். அந்தக் கூட்டங்களில் என்னதான் நடக்கிறதோ, எனக்குத் தெரியவில்லை, ஆனால் அந்த ராஜ்ய மன்றத்தில் நல்ல தோற்றமுடைய ஆண்கள் இருக்கிறார்கள், மற்றும் . . . ’ ஆம், அவருடைய அறியாமை அவரைப் பொறாமைக்கும் அச்சத்திற்கும் வழிநடத்தக்கூடும். அதைத் தொடருவதுதான் தற்காப்புப் பிரதிபலிப்புகள். இந்த மனநிலைகள் கணிக்கப்படும்போது மூப்பர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்?—நீதிமொழிகள் 14:30; 27:4.
9. அவிசுவாசிகளாயிருக்கும் சில கணவர்மார்களை அணுகிட என்ன சாதுரியமான ஒரு முறையைக் கையாளலாம்? இது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்?
9 ஒருவேளை மூப்பர்களில் ஒருவர் அந்தக் கணவரை தனிப்பட்ட விதத்தில் அறிய வரலாம். (1 கொரிந்தியர் 9:19–23) அந்தக் கணவர் மின்பணியில், தச்சு வேலைகளில் அல்லது வண்ணம் பூசுவதில் திறமையுடையவராக இருக்கக்கூடும். ராஜ்ய மன்றத்தில் அவ்வேலைகளை உட்படுத்தும் ஏதாவது பிரச்னைகளைச் சரிசெய்வதற்கு அவர் தன் திறமையைப் பயன்படுத்த மனமுள்ளவராக இருக்கக்கூடும். இப்படியாக ஒரு கூட்டத்திற்கு வரவேண்டும் என்ற கட்டாய உணர்வின்றி அவர் ராஜ்ய மன்றத்திற்குள் அடியெடுத்துவைக்கிறார். அவர் சகோதரர்களை அறிய வரும்போது, மனைவியிடமும் சத்தியத்திடமும் அவர் கொண்டிருக்கும் மனப்பான்மை மென்மையடைகிறது. சபையில் அன்பையும் ஒற்றுமையின் ஆவியையும் தான் காணவரும்போது, தன்னுடைய மனைவியைக்கூட கூட்டங்களுக்குக் கொண்டுவர ஆரம்பிக்கக்கூடும். அப்பொழுது, ஒன்று இன்னொன்றுக்கு வழிநடத்துவதுபோல், அவர் ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்கையில் உள்ளே வந்து சற்று கவனித்துச் சென்றுவிடக்கூடும். சீக்கிரத்திலேயே, அவர் ஒரு பைபிள் படிப்பைத் தனக்கு நடத்தும்படியாகக் கேட்கக்கூடும். இந்தக் காரியங்கள் எல்லாமே சாத்தியமாகக்கூடியது, சில சமயங்களில் அப்படி நிகழ்ந்துமிருக்கிறது. இப்படியாக ஆயிரக்கணக்கான கணவர்மார்கள் விசுவாசிகளாகியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்புக்கும், சாதுரியத்துக்கும், ஒரு மனைவியின் “ஆழ்ந்த மரியாதைக்கும்” நன்றி.—எபேசியர் 5:33.
தன்னுடைய வீட்டார் மேல் கவனமாயிருக்கிறாள்
10, 11. லேமுவேல் அரசன் ஒரு திறமைசாலியான மனைவியில் என்ன வித்தியாசமான அம்சங்களை விளக்குகிறான்? (தனித்தனியே சிந்தியுங்கள்.)
10 லேமுவேல் அரசன் தன்னுடைய தாயிடமிருந்து ஓர் அருமையான மனைவிக்கடுத்த தகுதிகளின் பேரில் நல்ல ஆலோசனையைப் பெற்றான். (நீதிமொழிகள் 31:1) நீதிமொழிகள் 31:10–31-லுள்ள கடினமாக உழைக்கும் மனைவியையும் தாயையும் பற்றிய அவளுடைய விவரிப்பைக் கவனமாக வாசிப்பது மிகுந்த பயனுடையது. கடவுளுடைய நீதியான நியமங்களைப் பொருத்துவதிலும் ஆழ்ந்த மரியாதைக் காண்பிப்பதிலும் அவளுக்கு அனுபவம் இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
11 “திறமைசாலியான மனைவி” நம்பிக்கைக்குப் பாத்திரமானவள், நம்பத்தகுந்தவள், உண்மையுள்ளவள் என்று லேமுவேல் எழுதுகிறான். (வசனங்கள் 10–12) தன்னுடைய கணவருக்கும் பிள்ளைகளுக்கும் உணவளித்து அவர்களைக் கவனித்துக்கொள்வதில் அவள் கடினமாக உழைக்கிறாள். (வசனங்கள் 13–19, 21, 24) உண்மையான தேவையிலிருப்பவர்களுக்கு இரங்கி கொடுப்பவளாகவும் இருக்கிறாள் (வசனம் 20) தான் காண்பிக்கும் மரியாதையாலும் நன்னடத்தையாலும் தன்னுடைய கணவரின் புகழைக் கூட்டுகிறாள். (வசனம் 23) அவள் வேலைசெய்யாமல் புறங்கூறிக்கொண்டிருக்கும் அல்லது குற்றங்கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண் அல்ல. மாறாக, தன்னுடைய நாவால் அவள் பிறரைக் கட்டியெழுப்பி காயத்தை ஆற்றுகிறாள். (வசனம் 26) அவள் சோம்பேறியாக இல்லாததால், அவளுடைய வீடு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது. (வசனம் 27) (உண்மையில் ஒரு கிறிஸ்தவனின் வீடு சுற்றுபுறத்திலுள்ள மிக சுத்தமான வீடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.) அவளுடைய கணவரும் பிள்ளைகளும் அவளுக்கு நன்றியைத் தெரிவிப்பவர்களாகவும், அவளைப் போற்றுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களுங்கூட அவளுடைய தன்மைகளைப் போற்றுகிறார்கள். (வசனங்கள் 28, 29, 31) அவளுடைய அழகு மேலீடானது அல்ல; அது தெய்வீகக் குணங்களடங்கிய ஒரு தேவ பக்தியுள்ள பெண்ணின் அழகு.—வசனம் 30.
சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி
12. “தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” என்ன? இந்தக் குறிப்பை ஒரு ஸ்பானிய முதுமொழி எப்படிச் சிறப்பித்துக் காட்டுகிறது?
12 கிறிஸ்தவ பெண் தன் வெளித் தோற்றத்திற்கு அளவுக்கதிகமான கவனம் செலுத்தக் கூடாது என்று அவளுக்குப் பேதுரு புத்திமதி கொடுக்கையில் அந்தக் கடைசி குறிப்பு எதிரொலிக்கிறது. அவன் கூறுவதாவது: “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது, அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.” (1 பேதுரு 3:3, 4) ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது’ என்ற குறிப்பைக் கவனியுங்கள். எனவே, இப்படிப்பட்ட ஆவியையுடைய கிறிஸ்தவ மனைவியும் தாயுமாக இருப்பவள் தன்னுடைய கணவனை மட்டும் பிரியப்படுத்துகிறவளாக இல்லை, ஆனால் அதைவிட முக்கியமாக, அவள் பூர்வத்தில் வாழ்ந்த உண்மையுள்ள பெண்களைப்போல கடவுளைப் பிரியப்படுத்துகிறவளாயும் இருக்கிறாள். இந்த உள்ளழகு ஸ்பானிய முதுமொழியிலும் பிரதிபலிக்கப்படுகிறது: “ஓர் அழகிய பெண் கண்ணுக்குப் பிரியமாயிருக்கிறாள்; ஒரு நல்ல பெண் இருதயத்துக்குப் பிரியமாயிருக்கிறாள். முதல் குறிப்பிடப்பட்டவள் ஒரு நகை என்றால், மற்றவள் ஒரு பொக்கிஷம்.”
13. ஒரு மனைவி தன்னுடைய பிள்ளைகளிடம் என்ன புத்துணர்வளிக்கும் பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்?
13 ஒரு கிறிஸ்தவ பெண் தன் வீட்டாருக்கெல்லாம் புத்துயிரளிப்பவளாக இருக்க முடியும். (மத்தேயு 11:28–30-ஐ ஒப்பிடவும்.) அவள் தன் கணவருக்குக் காட்டும் மரியாதையைப் பிள்ளைகள் கவனிக்கும்போது, அவர்கள் தங்களுடைய பெற்றோருடனும் குடும்பத்திற்கு புறம்பேயுள்ள மற்றவர்களுடனும் கொண்டிருக்கும் தொடர்பில் அதே மரியாதையைக் காண்பிப்பார்கள். இதன் பலனாக, கிறிஸ்தவ பிள்ளைகள் தயவுள்ளவர்களாகவும் கரிசனையுள்ளவர்களாகவும் இருப்பார்கள். வீட்டு வேலைகளைச் செய்வதற்குப் பிள்ளைகள் வற்புறுத்தப்படவேண்டியிருக்கும் நிலைக்கு மாறாக அவர்கள் தாங்களாகவே முன்வந்து செய்வதைப் பார்ப்பது எவ்வளவு புத்துணர்வளிப்பதாயிருக்கிறது! அவர்கள் தன்னலமற்றவர்களாக இருப்பது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது, தாயின் ஆமோதிப்பின் புன்முறுவல் அதற்குப் போதிய வெகுமானம்.
14. ஆனால் சிட்சை தேவைப்படும் சமயங்களைப் பற்றியதென்ன? தங்களுடைய பெற்றோரைப் போலவே, பிள்ளைகளும் தவறு செய்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாயிருக்கிறார்கள். தந்தை இல்லை என்றால் ஒரு கிறிஸ்தவ தாய் எவ்விதம் பிரதிபலிப்பாள்? அவர்களுடைய பிள்ளைகளுக்கு இருக்கும் கனத்தை அவள் தொடர்ந்து மதிப்பவளாக இருப்பாளா? அல்லது, அவர்களுடைய கீழ்ப்படிதலைப் பெறுவதற்காக அவள் கூச்சலிட்டு எறிந்துவிழுவாளா? சரி, பிள்ளை குரலின் சத்தத்திலிருந்து கற்றுக்கொள்ளுகிறதா? அல்லது, அமைதலான, நிதானிக்கும் குரல் அதிக பலனுடையதா?—எபேசியர் 4:31, 32.
15. பிள்ளைகளின் கீழ்ப்படிதல் சம்பந்தமாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பது என்ன?
15 பிள்ளைகளின் கீழ்ப்படிதலைக் குறித்து குறிப்பிடுமளவில், சைக்காலஜி டுடே என்ற பத்திரிகை கூறியதாவது: “ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது என்று எவ்வளவுக்கு அதிகமாக சத்தம் போட்டுச் சொல்கிறீர்களோ, அந்தளவுக்கு அவர்கள் செய்யக்கூடாது என்று நீங்கள் சொல்லும் காரியத்தைத்தான் மீண்டும் செய்யும் சாத்தியம் இருக்கிறது.” மறுபட்சத்தில், பெரியவர்கள் மெதுவாகப் பேசும்போது, பிள்ளைகள் தயக்கமின்றி கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள். உண்மைதான், ஒரு பிள்ளையை கணக்குவழக்கின்றி அதிகாரக் கட்டளைகளால் எரிச்சலடையச் செய்வதைக் காட்டிலும் அதோடு காரண காரியங்களை நிதானிப்பது அதிக முக்கியமாக இருக்கிறது.—எபேசியர் 6:4; 1 பேதுரு 4:8.
சரீர உறவில் மரியாதை
16. ஒரு மனைவி தன்னுடைய கணவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு எப்படி கரிசனையுடையவளாய் இருக்கலாம்? நன்மை என்ன?
16 மனைவி அதிக பலவீனமான உருவமைப்பையுடையவளாயிருப்பதால் கணவர் தன் மனைவியிடம் கரிசனையுடன் நடந்துகொள்வது போல, மனைவியும் தன் கணவரின் உணர்ச்சி மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட தேவைகளை மதித்துணருகிறவளாயிருக்க வேண்டும். மனுஷனும் அவனுடைய மனைவியும் ஒருவரிலொருவர் மகிழ்ச்சியைக் காண்கிறவர்களாகவும் ஒருவரையொருவர் திருப்தி செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று பைபிள் குறிப்பிடுகிறது. இது அவரவருடைய தேவைகளுக்கும் மனநிலைகளுக்கும் உணர்வுள்ளவர்களாக இருப்பதைத் தேவைப்படுத்துகிறது. இந்தப் பரஸ்பர திருப்தி, அலைகின்ற சரீரத்துக்கு வழிநடத்தும் அலைகின்ற பார்வையைக் கொண்டிராதிப்பதை உறுதிசெய்யும்.—நீதிமொழிகள் 5:15–20.
17. கணவனும் மனைவியும் விவாகக் கடமையை நிறைவேற்றுவதை எப்படி நோக்க வேண்டும்?
17 பரஸ்பர மதிப்பு மரியாதை இருக்கும் இடத்தில், இருவருமே பாலுறவுத் தேவைகளை ஓர் உற்றக்கருவியாக பயன்படுத்த மாட்டார்கள் என்பது நிச்சயம். ஒவ்வொருவரும் தங்களுடைய விவாகக் கடமைகளை அவரவருக்குக் கொடுக்க வேண்டும். ஒருவேளை இதில் தற்காலிக இடைவேளை இருக்கிறது என்றால், அது இருவரும் எடுத்திருக்கும் ஒரு பரஸ்பர முடிவின்பேரில் இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:1–5) உதாரணமாக, ஒரு கணவர் காவற்கோபுர சங்கத்தின் உள்ளூர் கிளை அலுவலகத்தில் தற்காலிக கட்டட வேலை சம்பந்தமாக அல்லது வேறு ஏதாவது தேவராஜ்ய வேலை சம்பந்தமாக குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்க நேரிடலாம். இந்தக் காரியத்தில் தன்னுடைய மனைவியின் முழுமனதான ஒப்புதல் இருப்பதை அவன் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பிரிவும்கூட குடும்பத்துக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரக்கூடும், அதாவது, கணவர் வீடு திரும்பிய பிறகு, அவர் கூறும் உற்சாகமூட்டும் அனுபவங்கள் வகையில் ஆசீர்வாதமாக இருக்கக்கூடும்.
சகோதரிகளின் முக்கியமான பங்கு
18. ஒரு மூப்பரின் மனைவி ஏன் அதிக உத்தரவாதமுள்ளவளாயிருக்கிறாள்?
18 ஒரு கிறிஸ்தவ பெண்ணின் கணவர் மூப்பராக இருக்கும் பட்சத்தில், அவளுக்கு ஒரு பெரிய உத்தரவாதம் இருக்கிறது. முதலாவதாக, அவரிடம் கேட்கப்படுவது அதிகமாக இருக்கிறது. சபையின் ஆவிக்குரிய நிலைக்காக அவர் யெகோவாவுக்குக் கணக்கு கொடுக்கவேண்டியவராயிருக்கிறார். (எபிரெயர் 13:17) ஆனால் ஒரு மூப்பரின் மனைவியாக, ஒருவேளை ஒரு மூத்த பெண்ணாக, அவளுடைய முன்மாதிரியும் அதிக முக்கியமானதாயிருக்கிறது. (1 தீமோத்தேயு 5:9, 10; தீத்து 2:3–5 ஒப்பிடவும்.) தங்களுடைய கணவருக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான மூப்பர்களின் மனைவிகள் என்னே ஓர் அருமையான முன்மாதிரியை வைக்கிறார்கள்! அநேக சமயங்களில் கணவர் சபை காரியங்களைக் கவனிப்பவராக வெளியிலிருக்க வேண்டியிருக்கிறது, காரியங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவளுடைய விருப்பம் அதிகரிக்கக்கூடும். என்றபோதிலும், தேவ பக்தியுள்ள ஒரு மனைவி, உண்மைத்தவறாதவளாய், மற்றவர்களுடைய காரியத்தில் தலையிடுகிறவளாக சபையின் விவகாரங்களை அறிந்துகொள்ள முற்படுவதில்லை.—1 பேதுரு 4:15.
19. ‘தன் வீட்டாரை விசாரித்தல்’ ஒரு மூப்பருக்கு எதை உட்படுத்தக்கூடும்?
19 என்றபோதிலும் பக்திவிருத்திக்கேதுவல்லாத மனநிலையைத் தன் மனைவி வெளிப்படுத்துகிறவளாய் இருப்பாளானால், அல்லது மற்ற சகோதரிகளுக்கு அவள் நல்ல முன்மாதிரியை வைக்கவில்லை என்றால், மூப்பர் தன் மனைவிக்குப் புத்திமதி கொடுக்கவேண்டியிருக்கும். ‘தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துதல்,’ என்பது தன்னுடைய பிள்ளைகளை மட்டுமல்ல, தன் மனைவியையும் உட்படுத்துகிறது. இந்த வேதப்பூர்வ தராதரத்தைப் பொருத்துவது, சில மனைவிமார்களின் மனத்தாழ்மையைப் பரிசோதிக்கக்கூடும்.—1 தீமோத்தேயு 3:4, 5, 11; எபிரெயர் 12:11.
20. பூர்வக் காலங்களிலும் தற்காலத்திலும் நல்ல முன்மாதிரிகளாயிருக்கிற விவாகமான அல்லது விவாகமாகாத சில சகோதரிகளின் உதாரணத்தைக் குறிப்பிடுங்கள். (காவற்கோபுர பிரசுரங்களின் இன்டெக்ஸ் 1930–1985-ல் “யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கைக் கதைகள்” பார்க்கவும்.)
20 விவாகமாகாத சகோதரிகளுங்கூட சபையில் மனைவிகளின் மரியாதைக்குரிய பங்கை எண்ணிப்பார்க்கலாம். வேத வசனங்களிலும் இன்று சபைகளிலும் அநேக அருமையான உண்மையுள்ள சகோதரிகளின் முன்மாதிரிகள் இருக்கின்றன! அநேகமாய் விவாகமாகாத சகோதரியாயிருந்திருக்கும் தொற்காள் அவளுடைய “நற்கிரியைகளுக்காக” வெகுவாய்ப் போற்றப்படுகிறாள். (அப்போஸ்தலர் 9:36–42) பிரிஸ்கில்லாளும் பெபேயாளும் கூட சத்தியத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாக இருந்தனர். (ரோமர் 16:1–4) அதுபோல இன்றும், நம்முடைய சகோதரிகளில் அநேகர், விவாகமானவர்களும் விவாகமாகாதவர்களும், மிகச் சிறந்த மிஷனரிகளாகவும், பயனியர்களாகவும், பிரஸ்தாபிகளாகவும் இருக்கின்றனர். அதே சமயத்தில் அப்படிப்பட்ட தேவபக்தியுள்ள பெண்கள் வீடுகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக்கொண்டு, தங்களுடைய குடும்பங்களை ஒருபோதும் அசட்டை செய்வதில்லை. அவர்களுடைய எண்ணிக்கையாலும், சூழ்நிலையாலும், அவர்கள் பெரும்பாலும் பிரசங்க வேலையில் பெரும் பங்கைக் கொண்டிருக்கிறார்கள்.—சங்கீதம் 68:11.
21. உண்மையுள்ள சகோதரிகள் இருப்பது எப்படி அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஓர் உற்சாகமாக இருக்கிறது?
21 சபையிலுள்ள உண்மையுள்ள சகோதரிகள் ஒரு முக்கியமான கட்டியெழுப்பும் பங்கை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய வைராக்கியமும் முன்மாதிரியும் சகோதரர்களுக்கும் பொதுவாகக் கிறிஸ்தவ சபைக்கும் உற்சாகமூட்டுவதாயிருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே இணைந்து நிறைவு செய்பவர்களாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். (ஆதியாகமம் 2:18-ஐ ஒப்பிடவும்.) உண்மையான அன்பும் மரியாதையும் அவர்களுக்குத் தகுதியானதே! விவாகமான கிறிஸ்தவ துணைவர்களுக்குப் பவுலின் இந்தப் புத்திமதி பொருத்தமானது: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்தில் அன்புகூரக்கடவன்; அப்படியே மனைவி புருஷனுக்கு ஆழ்ந்த மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும்.”—எபேசியர் 5:33, NW. (W89 5/15)
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
◻ பரிபூரண மனுஷனுக்கும் மனுஷிக்கும் கடவுள் ஆதியில் வகுத்திருந்த ஸ்தானம் என்னவாயிருந்தது?
◻ அவிசுவாசியாயிருக்கும் கணவர்மார்கள் சத்தியத்திற்குள் வர எவ்விதம் உதவப்படலாம்?
◻ திறமைசாலியான ஒரு மனைவியில் காணப்படும் மேன்மையான தன்மைகள் யாவை?
◻ கிறிஸ்தவ மனைவி எப்படி சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியை வெளிப்படுத்தலாம்?
◻ விவாகமானத் தம்பதிகளுக்கிடையே சரீர உறவுகளில் என்ன சமநிலை தேவைப்படுகிறது?
5. அநேக ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்தியிருக்கின்றனர்? இது கடவுள் அங்கீகரிக்கும் காரியமா?
14. சிட்சைக்கான தேவை என்ன சவாலுக்கு வழிநடத்தக்கூடும்?
[பக்கம் 22-ன் படம்]
குடும்பம் போட்டிப்போடும் இரண்டு கப்பற்குழு தலைவர்களையுடைய ஒரு கப்பலைப்போல இருக்கக்கூடாது
[பக்கம் 24-ன் படம்]
அவிசுவாசியாயிருக்கும் ஒரு கணவர் தன்னுடைய மனைவி கூட்டங்களுக்குப் போவது குறித்து அல்லது மற்ற கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து எரிச்சலடையக்கூடும், சற்று அச்சங்கொள்ளவுங்கூடும். அவர் எவ்விதம் உதவப்படலாம்?