அந்த அடையாளம்—வெறும் கடந்தகால சரித்திரம் அல்ல
மத்திய கிழக்கிலுள்ள எருசலேமில், இன்றுள்ள சிந்திக்கும் திறம்படைத்த ஆட்களின் கவனத்தை ஈர்க்கும் கவர்ச்சியான வரலாறு புகழ் பெற்ற ஓர் இடமிருக்கிறது. முதல் நூற்றாண்டு ரோம சரித்திராசிரியரான டாஸிட்டஸின் பிரகாரம், அது “அளவிடமுடியாத செல்வ வளம்” மிக்க ஓர் ஆலயமிருந்த மேடான வெற்றிடமாகும். ஆலய கட்டடத்தின் அழியாதப் பகுதியின் ஒரு தடமும் அங்கில்லை, ஆனால் மேடையின் தடம் இருக்கிறது. அது உங்களைப் பாதிக்கும் ஒரு தீர்க்கதரிசன அடையாளத்தின் உண்மைத்தன்மைக்கு அத்தாட்சியைத் தாங்கி நிற்கிறது.
ஆலய மேடைக்குத் தெற்கே புதைப் பொருள் ஆய்வாளர்கள் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள். “மிகவும் அக்கறைக்குரிய ஒரு கண்டுபிடிப்பு, பொ.ச.70-ல் எருசலேம் அழிக்கப்பட்ட சமயத்தில் ஆலய மதிலுக்கு மேலேயிருந்து வீசியெறிப்பட்ட ஏரோதின் காலத்துக்குரிய கட்டுமான வேலையின் பெரிய செங்கற் பாளங்களாகும்,” என்பதாக பைபிளும் புதைப்பொருள் ஆய்வும் (The Bible and Archaeology) என்ற புத்தகத்தில் J. A. தாம்ஸன் குறிப்பிடுகிறார்.
இது சம்பவிப்பதற்கு 37 ஆண்டுகளுக்கு முன்பாகவே எருசலேமும் அதன் ஆலயமும் அழிக்கப்படும் என்பது முன்னறிவிக்கப்பட்டிருந்தது. “ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும்” என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மூன்றுக்கும் குறையாத சரித்திராசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (லூக்கா 21:6; மத்தேயு 24:1, 2; மாற்கு 13:1, 2) இதைத் தொடர்ந்து, உங்களை உட்பட இன்றுள்ள ஒவ்வொருவரையும் பாதிக்கும் ஒரு சம்பாஷணை நிகழ்ந்தது.
“போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன?” என்று அவருடைய சீஷர்கள் அவரைக் கேட்டார்கள். இயேசுவின் பிரகாரம், ஆலயத்தின் அழிவுக்கு வழிநடத்திச் செல்லும் காலம், யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள், உணவு பற்றாக்குறை மற்றும் கொள்ளை நோயினால் தனிப்பட குறித்துக் காட்டப்படுவதாக இருக்கும். மேலுமாக அவர், “இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்து போகாது,” என்று குறிப்பிட்டார்.—லூக்கா 21:7, 10, 11, 32.
அந்தச் சந்ததி “அடையாளத்தின்” நிறைவேற்றத்தைக் கண்கூடாகக் கண்டதா? ஆம், பைபிள் “கொடிய பஞ்சம்” பற்றியும் மூன்று பூமியதிர்ச்சிகளைப் பற்றியும் அவற்றில் இரண்டு ‘பெரிய பூமியதிர்ச்சி’களாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 11:28; 16:26; மத்தேயு 27:51; 28:1, 2) உலக சரித்திரத்தின்படி, மற்ற பூமியதிர்ச்சிகளும் உணவுப் பற்றாக்குறைகளும் அந்தச் சமயத்தில் ஏற்பட்டிருக்கின்றன. அது யுத்தங்களின் காலமாகவும்கூட இருந்தது. இவற்றில் இரண்டு போர்கள், ரோம சேனைகளால் எருசலேமின் குடிமக்களுக்கு எதிராகச் செய்யப்பட்டன. எருசலேம் இரண்டாம் முறை முற்றுகையிடப்பட்டது பயங்கரமான பஞ்சத்திலும் கொள்ளைநோயிலும் பொ.ச. 70-ம் ஆண்டில் நகரமும் அதன் ஆலயமும் அழிக்கப்படுவதிலும் விளைவடைந்தது. எருசலேமில் ஒரு சமயம் ஆலயம் இருந்த இடம் அந்த முதல் நூற்றாண்டு பயங்கர சம்பவங்களுக்கு மெளனமான சாட்சியாக நிற்கிறது.
‘இது அக்கறைக்குரியதாக இருக்கிறது,’ என்பதாக ஒருவர் சொல்லக்கூடும். ஆனால், ‘இது என்னை எவ்விதமாகப் பாதிக்கிறது?’ அடையாளம் வெறும் கடந்த கால சரித்திரம் அல்ல. முதல் நூற்றாண்டில் அது வெறும் பகுதியளவிலான ஒரு நிறைவேற்றமாகவே இருந்தது. உதாரணமாக, மனிதவர்க்கம், “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும்” காணும் “அடையாளங்களினால்” “சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருப்பதால்” மிகவும் பயந்திருக்கக்கூடிய காலத்தைப் பற்றியும்கூட இயேசு முன்னறிவித்தார். அடையாளத்தின் இந்த அம்சம் “தேவனுடைய ராஜ்யம்”—உலக வேதனைகளிலிருந்து நிரந்தரமான விடுதலையைக் கொண்டுவரும் ஓர் அரசாங்கம் சமீபமாயிருப்பதைக் குறிப்பதாக இருக்கும்.—லூக்கா 21:25–31.
இப்படிப்பட்ட காரியங்கள் முதல் நூற்றாண்டில் சம்பவிக்கவில்லை. இன்று 1,900 ஆண்டுகளுக்குப் பின்னால், போர்கள், பூமியதிர்ச்சிகள், உணவு பற்றாக்குறைகள் மற்றும் கொள்ளை நோய்களிலிருந்து விடுவிக்கப்படுவதற்காக மனிதவர்க்கம் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அடையாளம், இரண்டாவது முழுமையான நிறைவேற்றத்தை அடையவேண்டும். இதை நிரூபிப்பதாய், வெளிப்படுத்துதல் புத்தகம், அந்த அடையாளத்துக்கு ஒப்பாயிருக்கின்ற, ஆனாலும் எருசலேமின் அழிவுக்குப் பின்னால் எழுதப்பட்டதுமான தீர்க்கதரிசனப் படங்களைக் கொண்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 6:1–8) இதன் காரணமாகவே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: அந்த அடையாளம் நம்முடைய நாளில் காணப்பட்டிருக்கிறதா? (w88 10⁄1)