இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இயேசுவின் முழுக்காட்டுதல்
யோவான் பிரசங்கிக்க ஆரம்பித்து ஏறக்குறைய ஆறாவது மாதத்தில், 30 வயதாயிருக்கும் இயேசு யோர்தானுக்கு அவனிடம் வருகிறார். எதற்காக? வெறுமென அவனை சந்திப்பதற்காகவா? யோவானில் வேலை எவ்வாறு முன்னேறுகிறது என்பதில் மட்டுமே அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? இல்லை, தன்னை முழுக்காட்டும்படி இயேசு யோவானிடம் கேட்கிறார். அச்சமயத்திலே யோவான் மறுத்துவிடுகிறான். “நான் உம்மாலே முழுக்காட்டுதல் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வருகிறீரோ?” என்று கேட்கிறான். இயேசு கடவுளுடைய விசேஷித்த குமாரன் என்று அவருக்கு உறவினனான யோவான் அறிந்திருக்கிறான். ஏன் இயேசுவை கருப்பையில் தாங்கியவளாய் மரியாள் எலிசபெத்தை சந்தித்தபோது, எலிசபெத் வயிற்றிலிருந்த யோவான் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தானே! இதைக் குறித்து யோவானின் தாயாகிய எலிசபெத் அவனிடம் சந்தேகமில்லாமல் சொல்லியிருப்பாள். மேலும் தேவ தூதர்களின் அறிக்கையைக் குறித்தும், அவர் பிறந்த இரவின்போது தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு காட்சியளித்ததைக் குறித்தும் அவனிடம் சொல்லியிருப்பாள்.
எனவே யோவானுக்கு இயேசு ஒரு அந்நியன் அல்ல. தான் கொடுக்கும் முழுக்காட்டுதல் இயேசுவுக்கானதல்ல என்றும் யோவான் அறிந்திருந்தான். தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்புதலை காட்டும் ஆட்களுக்கு மட்டுமே அது தேவையாக இருக்கிறது. ஆனால் இயேசு பாவமில்லாதவராக இருக்கிறார். யோவான் மறுத்தப்போதிலும், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று இயேசு சொல்லுகிறார்.
இயேசு முழுக்காட்டப்படுவது ஏன் சரியாக இருக்கிறது? ஏனென்றால், இயேசுவின் முழுக்காட்டுதல் பாவங்களிலிருந்து மனந்திரும்புதலுக்கான அடையாளமாக இல்லை, ஆனால் தம்முடைய பிதாவின் சித்தத்தை செய்ய வருவதற்கு தம்மை அளிப்பதற்கே அடையாளமாக இருக்கிறது. இயேசு ஒரு தச்சனாக இருக்கிறார், ஆனால் கடவுள் தம்மை பூமிக்கு எதற்காக அனுப்பியிருக்கிறாரோ அந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கான காலம் வந்துவிட்டது. இயேசு முழுக்காட்டப்பட்டபோது ஏதாவது அசாதாரணமான காரியம் நடக்குமென்று யோவான் எதிர்பார்த்தான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
உண்மையில், யோவான் பின்பு அறிக்கை செய்ததாவது: “ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்: ஆவி இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர்.” எனவே யோவான் தான் முழுக்காட்டின ஒருவர் மீது கடவுளுடைய ஆவி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இயேசு தண்ணீரிலிருந்து மேலே வந்தபோது, ‘தேவ ஆவி புறாவைப்போல இறங்கின’ காரியம் அவனுக்கு ஒருவேளை ஆச்சரியமூட்டுவதாயிருந்திருக்காது.
ஆனால் இயேசுவின் முழுக்காட்டுதலின்போது அதைவிட அதிகம் நடந்தது. வானங்கள் அவருக்கு திறக்கப்பட்டு, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்றது ஒரு குரல். அது யாருடைய குரல்? இயேசுவின் சொந்த குரலா? நிச்சயமாகவே இல்லை! அது கடவுளுடைய குரல். உண்மையில், இயேசு கடவுளுடைய குமாரன், சிலர் உரிமைப் பாராட்டுவதுபோல், அவர்தாமே கடவுள் இல்லை. மத்தேயு 3:13-17; லூக்கா 3:21-23; 1:34-36, 44; 2:10-14; யோவான் 1:32-34; எபிரெயர் 10:5-9.
◆ யோவானுக்கு இயேசு ஏன் ஒரு அந்நியனல்ல?
◆ இயேசு பாவம் செய்யாதவராக இருப்பதால், அவர் ஏன் முழுக்காட்டப்பட்டார்?
◆ இயேசுவைப்பற்றி யோவான் அறிந்திருந்ததைக் கவனிக்கும்போது, அவர்மீது கடவுளுடைய ஆவி இறங்கினதைக் குறித்து யோவான் ஏன் ஆச்சரியப்படவில்லை? (w85 9/15)