இன்னல்களை நீங்கள் எவ்வாறு சகிக்கலாம்
“சகிப்பு தன்மையினால் உங்கள் பங்கில் நீங்கள் உங்கள் ஆத்துமாக்களை காத்துக்கொள்வீர்கள்.” “முடிவு காலத்தை”ப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தை கொடுக்கையில் இயேசு இந்த வார்த்தைகளைப் பேசினார். (லூக்கா 21:19; தானியேல் 12:4) அவருடைய கூற்றில் பின்வரும் இந்த இரண்டு குறிப்புகள் மேலோங்கி நிற்கின்றன. (1) நம்முடைய ஜீவனை காத்துக்கொள்வதற்கு சகிப்பு தன்மை அத்தியாவசியம்,. மேலும் (2) சகிப்பது கூடிய காரியம்.
ஆனால் நீங்கள் எவ்வாறு சகிக்கக்கூடும்? இந்த கேள்விக்கு விடையளிக்க முதலில் தம்முடைய ஊழியர்களுக்கு வேதனைகளும் துன்புறுத்தல்களும் வருவதற்கு ஏன் யெகோவா அனுமதிக்கிறார் என்பதை அறிவது அவசியம்.
வேதனைகளும் துன்புறுத்தலும்—ஏன்?
ஒரு பிரதான காரணமானது சாத்தான் யெகோவா தேவனுடைய அரசுரிமையின் நேர்மை தன்மையையும் நீதியையும் சவால் விட்டான். (ஆதியாகமம் 3:1-19) தமது சொந்த பெயருக்காகவும் மற்றவர்களுக்காகவும் இந்த சவாலை எதிர்படுவதற்கு யெகோவா ஏற்பாடு செய்தார்.
இந்த உபத்திரவங்களை நாம் சரியான விதத்தில் நோக்குவோமானால் நம்முடைய நன்மைக்கானதாகவே அது நிரூபிக்கக்கூடும். இந்த நோக்கத்திற்காகவும்கூட கடவுள் தம்முடைய ஜனங்கள் துன்பமனுபவிக்கும்படி அனுமதிக்கிறார். ஒரு எடுத்துக்காட்டாக, நமக்கு ஏற்படும் இன்னல்களிடமாக நாம் மன கசப்பை வெளிகாட்டாமல் சகிப்போமானால், நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதை நாம் நிரூபிப்போம். கடவுளைப் பிரியப்படுத்தும் வகையான விசுவாசமாக அது இருக்கும். (1 பேதுரு 1:6, 7; எபிரெயர் 11:6) ஆனால் துன்பங்கள் நமது தனி சுபாவ பிழைகளாகிய பெருமை, பொறுமையின்மை மற்றும் கவலைப்படாத வாழ்க்கை போன்றவைகளை மேலெழுப்பிக் காட்டும். கடவுளுடைய ஆவியின் உதவியைக் கொண்டு இப்படிப்பட்ட மனச்சாய்வுகளை மேற்கொள்வதற்கு நாம் உழைக்கலாம். மேலும் இன்னுமதிக நிறைவாய் புதிய மனுஷ தன்மைகளை தரித்து கொள்ளலாம்.—கொலோசெயர் 3:9-14.
சங்கீதக்காரன் இந்தக் குறிப்பை நமக்கு வெகு நன்றாய் எடுத்துரைத்திருக்கிறான். அவன் சொல்வதாவது: “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.” (சங்கீதம் 119:71) உபத்திரவத்தை இவ்வாறு நோக்குவது என்னே ஒரு சிறப்பான முறை! குறைகூறுதலோ முறுமுறுத்தலோ இல்லை. அந்த உபத்திரவம் ஒருவேளை உண்டுபண்ணியிருக்கக்கூடிய எந்த தனிப்பட்ட இழப்பிற்காகவும் சுயநல அக்கறை இல்லை. மாறாக இங்கே ஞானமான ஒரு மெய்யுணர்வு, அதாவது சங்கீதக்காரன் மீது வருவதற்கு யெகோவா தேவன் அனுமதித்த காரியங்கள் அவன் யெகோவாவின் பிரமாணங்களை அதிக முழுமையாய் போற்றுவதற்கு உதவக்கூடும் என்பதே அந்த உணர்வு. துன்பங்கள், நம்மீதும் அதே பாதிப்பை கொண்டிருக்கும்படி நாம் அனுமதிக்கிறோமா?
ஆசியா மாகாணத்திலே அனுபவித்த உபத்திரவங்களிலிருந்து அப்போஸ்தலனாகிய பவுல் நன்மையடைந்தான். ஒரு காரியமென்னவெனில் இந்த இன்னல்கள் அவன் யெகோவா தேவன் பேரில் இன்னும் கூடுதலாக சார்ந்திருக்கும்படி செய்தன. அது அப்போஸ்தலனின் உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும்கூட பலப்படுத்தியது. ஏனெனில் “மரித்தோரை எழுப்புகிற தேவன்” பேரிலுள்ள முழு நம்பிக்கையோடு தன்னுடைய உபத்திரவங்களை சகித்தான். (2 கொரிந்தியர் 1:8-10) ஆம், துன்பங்களின் கீழ் அவனுடைய சகிப்புத் தன்மையின் காரணமாக பவுல் நன்மைகளை அனுபவித்தான்.
இன்று உபத்திரவங்களை பொறுத்ததில், சரியான நோக்கு நிலையை கொண்ட கிறிஸ்தவர்கள் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. சிம்பாப்வேயில் ஒரு காலத்தில் கொரில்லா போரினால் வாதிக்கப்பட்டு வந்த நாட்டில் யெகோவாவின் ஜனங்களடங்கிய சபை பாதுகாப்பான ஒரு கிராமத்திற்கு இடமாறி சென்றது. போர்கால சூழ்நிலைமைகளின் காரணமாக அந்த சபையிலிருந்த மூன்று நியமிக்கப்பட்ட மூப்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளையை மரணத்தில் இழந்தார்கள். கூடுதலாக, உள்ளுர் ஜனங்கள் கோபமடைந்திருப்பதாக சொல்லப்பட்ட அந்த ஆவிகளை சாந்தப்படுத்துவதன் மூலம் தங்கள் விசுவாசத்தை விட்டுகொடுத்து விடும்படியான கடும் அழுத்தங்களை அந்த கிறிஸ்தவ பெற்றோருக்கு கொண்டுவந்தார்கள். இதை குறித்து அந்த மூப்பர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள்? அந்த மூவரின் சார்பாகவும் ஒருவர் பேசுகிறவராய் சொன்னதாவது: “தேசங்கள் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் நாங்களும்கூட பொல்லாத ஆவிகளுடன் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த சத்துரு [பொல்லாத ஆவியின் சேனைகள்] மீது நாங்கள் ஒரு அனுகூலமான நிலையை கொண்டிருக்கிறோம். அதாவது எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது உயிருள்ள ஒரு நம்பிக்கை. ஆகவே, அந்த போராட்டத்தில் நாங்கள் மரித்துப்போனாலும் யெகோவாவுக்கு நாங்கள் உண்மையாக இருக்கும் வரையில் நாங்கள் உயிர்த்தெழுப்பப்படுவோம். நாங்கள் சத்துருவை வென்றவர்களாக இருப்போம்.” யெகோவாவின் மீட்கும் சக்தியில் இந்த மூன்று விசுவாசமுள்ள மனிதரும் தங்கள் பார்வையை இழந்துவிடவில்லை. அவர்களுடைய உறுதியான நிலைநிற்கையை கவனிப்பவர்களாய் நம்மால் சகிக்கமுடியும் என்ற உறுதியை நாமும்கூட கொண்டிருக்க வேண்டும்!
துன்புறுத்தல் மிருகத்தனமானதாய் இருக்கும்போது
‘ஆனால் துன்புறுத்தல் மிருகத்தனமாய் இருந்து கொடூரமான சித்திரவதைக்குரிய முறைகள் பயன்படுத்தப்பட்டால் அப்போது என்ன?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். ‘நம்முடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் அப்போதும்கூட நாம் சகிக்கக்கூடுமா?’ ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காமல் திடுக்கிடச் செய்யும் குரூரங்களை சகிக்க முடிந்தது.
அதே விதமாக, சிம்பாப்வேயில் உள்ள ஒரு தனித்த நாட்டுப்புற பகுதியில் வாழக்கூடிய ஒரு தற்கால கிறிஸ்தவனால் யெகோவாவின் பேரில் முழு விசுவாசம் காட்டப்பட்டிருக்கிறது. அவன் ஒரு சமயம் தன் மனைவி தங்களுடைய திருமணமான மகளை காண்பதற்காக சென்றுவிட்டதன் காரணமாக தனிமையிலிருக்க நேரிட்டது. அச்சமயத்தில் திடீரென்று அவர் அவருடைய கிறிஸ்தவ நிலைநிற்கையின் காரணமாக பொய் குற்றச்சாட்டுகளை சாட்டிய, ஆயுதம் தாங்கிய ஒருசில மனிதரால் கைகாட்டி அழைக்கப்பட்டார். அவரை அவர்கள் கடுமையாக அடித்தப் பின்பு செங்கற் சூளையிலிருந்த ஒரு சூடான கல்லை எடுத்து அதை அவருடைய கால்களுக்கு இடையில் வைத்து கட்டினார்கள். மேலும் அப்படிப்பட்ட கற்கள் மீது நடக்கும்படியும் செய்தார்கள். அதன் பின்பு அவர் சாகும்படி அவரை தனியே விட்டுசென்று விட்டார்கள். அந்த பிராந்தியத்தில் திடீரென்று ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம் பிரயாணம் செய்தலை கூடாத காரியமாக்கிவிட்டப்படியால், தன் கணவனுடைய இந்த அவல நிலையை மனைவி அறியாதவளாக இருந்தாள். மரண வேதனையின்போதும்கூட உதவக்கூடாது என்று அயலகத்தாருக்கு கட்டளையிடப்பட்டது. ஆகவே ஒவ்வொரு நாளும் செத்துவிடுவோம் என்று நினைத்து இந்த நிலையில் அவர் மூன்று முழு மாதம் தனிமையாக இருந்தார்.
இந்த வேதனையை அனுபவித்து கொண்டிருந்த கிறிஸ்தவ மனிதன் தன் வீட்டில் கையிருப்பிலிருந்த தண்ணீர் மற்றும் மக்கா சோளத்தின் மூலம் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு ஏற்பட்டிருந்த கொடூர செயலின் காணமாக அவன் நடக்க முடியாமலிருந்தான். எனவே அருகாமையிலிருந்த விறகு கட்டைகள் தீர்ந்துபோனதும் சமைப்பதற்காக தீ மூட்ட தன் வீட்டிலிருந்த மரசாமான்களை உடைக்க வேண்டியதாயிற்று, அந்த தண்ணீர் பழையதாகி புழுக்களால் நிறைந்துவிட்டது. அவருடைய தீப்புண்களில் தொடர்ந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது.
இறுதியில் மூன்று மாதம் கழித்து அவருடைய மனைவி வீடு திரும்பியபோது இதுவே இந்த சகோதரரின் நிலைமையாக இருந்தது. அவரை அவள் கண்டபோது, அவள் எப்படி உணர்ந்திருப்பாள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். உடனடியாக அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தாள். அருகாமையிலிருந்த பேரூந்து நிறுத்தத்திற்கும் பின்பு அங்கிருந்து பட்டணத்திலிருந்த மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும் சக்கரவண்டியை பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. மூன்று வாரங்களுக்கு பிற்பாடு மருத்துவ மனையிலிருந்து தன் மகளுடைய வீட்டுக்கு வந்தார். அங்கே அந்த பிராந்தியத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் அங்கத்தினர்களிடமிருந்து அவருக்கு ஆவிக்குரிய உதவியும் உற்சாகமூட்டுதலும் கிடைத்தது.
இந்த மிருகத்தனமான செயலை சகித்திருப்பதற்கு பற்றுமாறாத இந்த கடவுளுடைய ராஜ்ய ஆதரவாளருக்கு உதவியது எது? மூன்று மாத காலமாக அவர் முற்றிலும் தனிமையாக இருந்தார். தான் மரித்துப்போவதாகவே நினைத்தார். என்றபோதிலும் இந்த கடுஞ்சோதனை மிகுந்த காலத்தின்போது எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று கேட்கப்பட்டபோது அவருடைய பதிலானது “யெகோவா எல்லா சமயங்களிலும் என்னுடன் இருந்ததாக நான் உணர்ந்தேன்.” தன்னை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக எந்த குறை கூறுதலுமில்லை அல்லது தனக்கு என்ன நேர்ந்துவிட்டதோ அதை குறித்து புலம்பலோ இருக்கவில்லை.—யெகோவா தம்முடைய உண்மை மாறாத ஊழியர்களை ஒருபோதும் கைவிடுகிறதில்லை என்பதே அவருடைய ஒரு உறுதியான நம்பிக்கையாக இருந்தது.—சங்கீதம் 37:28.
ஆம், கிறிஸ்தவர்களால் சகிக்கமுடியும். யெகோவா உபத்திரவங்களை அனுமதிக்கிறாரென்றால் அது ஒரு நல்ல நோக்கத்திற்காகவே என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர், மேலும் சகிப்புதன்மை கூடிய காரியமே. கடவுளுடைய வார்த்தையும் மற்றவர்களின் அனுபவமும் இந்த உண்மையை நமக்கு உறுதியளிக்கிறது. (மத்தேயு 24:13) என்றபோதிலும் சோதனைகளை சகிக்கும்போது, நாம் அடிக்கடி ஆறுதல்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறதல்லவா? ஆனால் இந்த ஆறுதலுக்காக நாம் எங்கே திரும்ப வேண்டும்? (w85 9/15)