வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ சிலரை தன்னுடைய வீட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடாது, வாழ்த்துதல் சொல்லக்கூடாது என்று குறிப்பிடும் 2 யோவான் 10 பொய்க் கோட்பாடுகளை பரப்பிடுவோரை மட்டும் குறிப்பிடுகிறதா?
இந்த வார்த்தைகள் எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது என்பதைப் பார்க்கும்போது, இந்தப் புத்திமதி தோன்றியிருக்கும் “அநேக வஞ்சகரை,” “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாதவர்களைப்” பற்றியது. (2 யோவான் 7) இயேசு உயிரோடிருந்தார் அல்லது அவர்தான் கிறிஸ்துவும் மீட்பருமாவார் என்பதை மறுத்த ஒருவரை அப்பொழுது இருந்த கிறிஸ்தவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதன் பேரில் அப்போஸ்தலனாகிய யோவான் புத்திமதிகளை அளித்தான். யோவான் குறிப்பிட்டாதவது: “ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.”
ஒரு சமயத்திலே, கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒருவன் ஒழுக்கக்கெட்ட நடத்தையில் ஈடுபட்டு வந்தான். அப்பொழுது அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்குப் பின்வருமாறு எழுதினான்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூட புசிக்கவுங்கூடாது.” (1 கொரிந்தியர் 5:11) இப்பொழுது, இங்கு பட்டியலிடப்பட்ட வினைமையான குற்றங்களுக்கு சபை நீக்கம் செய்யப்பட்ட முந்தைய சகோதரர்களுக்கு மட்டும் அது பொருத்துவதாயிருந்ததா?
இல்லை. மனந்திரும்பாத கொலைப்பாதகர்கள் ஆவியுலகத் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் பொய்யர்கள் போன்ற ஆட்களுங்கூட இரண்டாம் மரணத்துக்குப் பாத்திரமானவர்களோடுகூட சேர்க்கப்பட்டிருக்கின்றனர். நிச்சயமாகவே 1 கொரிந்தியர் 5:11-லுள்ள புத்திமதி இந்தக் குற்றங்களைச் செய்த கிறிஸ்தவர்களாயிருந்தவர்களுக்கு பொருத்தப்பட்டிருக்கும். மேலும் சிலர் “நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்ரோரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.” (1 யோவான் 2:18, 19) வினைமையான பாவத்திற்காக அவர்கள் சபையிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்று யோவான் சொல்லவில்லை. ஏதோ ஒரு கோட்பாட்டை ஏற்க மறுத்து சபையில் தொடர்ந்து நிலைத்திருக்க விருப்பமற்றவர்களாக அவர்களில் சிலர் சபையிலிருந்து விலகிவிட்டனர் போலும். மற்றும் சிலர் இளைப்புள்ளவர்களாய் சோர்ந்துவிட்டிருக்கக்கூடும்.—1 கொரிந்தியர் 15:12; 2 தெசலோனிக்கேயர் 1-3; எபிரெயர் 12:3, 5.
ஒரு சகோதரன் பாவ வழியில் விலகிப் போகிறவனாக இருந்தால் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் அவனுக்கு உதவி செய்ய முயற்சித்திருக்க வேண்டும். (கலாத்தியர் 6:1; 1 யோவான் 5:16) அவனுக்கு சந்தேகங்கள் இருந்திருந்தால் ‘அவனை அக்கினியிலிருந்து இழுத்துவிட’ முயற்சித்திருப்பார்கள். (யூதா 23) அவன் கூட்டங்களுக்கு அல்லது வெளி ஊழியத்திற்குச் செல்லாமல் செயலற்றவனாகிவிட்டிருந்தாலும், ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவர்கள் அவனை திரும்ப நிலைநிறுத்துவதற்கும் கடினமாய் உழைத்திருப்பார்கள். அவன் சபையிலிருப்பதில் அவ்வளவு அக்கறைகொள்ளவில்லை என்று ஒருவேளை தனது எண்ணத்தை தெரிவித்திருக்கலாம், இப்படியாக தன் பலவீனமான விசுவாசத்தையும் தாழ்ந்த ஆவிக்குரிய நிலையையும் பிரதிபலித்திருக்கலாம். அவர்கள் அந்த நபரை தொந்தரவுபடுத்த மாட்டார்கள், ஆனால் அவர்கள் அவ்வப்போது சிநேகபான்மையான சந்திப்புகளை செய்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட அன்பான, பொறுமையான இரக்கமுள்ள முயற்சிகள், ஒருவரும் இழக்கப்படக்கூடாது என்ற கடவுளுடைய அக்கறையைப் பிரதிபலித்திருக்கும்.—லூக்கா 15:4-7.
இதற்கு மாறாக, சிலர் ஆவிக்குரிய பலவீனத்தையும் செயலற்ற நிலையையும் கடந்து சென்றுவிட்டார்கள் என்று யோவானின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்கள் உண்மையில் கடவுளுடைய சபையைத் துறந்தவர்களாக அல்லது மறுதலிப்பவர்களானார்கள். சிலர் வெளியரங்கமாகக் கடவுளுடைய மக்களுக்கு எதிராக வந்து, தாங்கள் இனிமேலும் கடவுளுடைய சபையில் இருக்க விரும்பவில்லை என்று அறிக்கை செய்திருக்கலாம். தனது விசுவாசத்தை ஒரு கடிதம் மூலமாகக்கூட மறுதலித்திருக்கலாம். தன்னைத் தானே சபையிலிருந்து நீக்கிக்கொள்ளும் அவனுடைய தீர்மானத்தை சபை ஏற்றுக் கொண்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அவனை எப்படி நடத்தியிருப்பார்கள்?
யோவான் சொல்லுகிறான்: “கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து, இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.” (2 யோவான் 9, 10) இந்த வார்த்தைகள் ஒரு பொய் மதத்தை சேர்ந்துகொள்வதன் மூலமாக அல்லது பொய்யான கோட்பாட்டை பரப்புவதன் மூலமாக விசுவாச துரோகியான ஒரு நபருக்கு நிச்சயமாகவே பொருந்தின. (2 தீமோத்தேயு 2:17-19) ஆனால் “நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள்” என்று யோவான் குறிப்பிட்டவர்களைப் பற்றியதென்ன? சபைநீக்கம் செய்யப்பட்ட ஒரு குற்றவாளியுடன் அல்லது விசுவாச துரோக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவனிடம் கூட்டுறவு கொள்ளக்கூடாது என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அறிந்தவர்களாயிருக்க, சபைநீக்கம் செய்யப்படாத, ஆனால் கிறிஸ்தவ பாதையை மனமாற மறுதலித்தவர்களிடமும் அப்படியே நடந்து கொண்டனரா?
“விசுவாச துரோகம்” என்ற வார்த்தை “‘பிரிந்து நிற்பது’ என்ற சொல் அர்த்தத்தையுடைய, ஆனால் ‘கைவிடுதல், விட்டுவிடுதல் அல்லது கலகத்தனம்’ என்ற கருத்தைத் தெரிவிக்கும்”a ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, என்று ஏட் டு பைபிள் அண்டர்ஸ்டான்டிங் என்ற ஆங்கில நூல் காண்பிக்கிறது. ஏட் பத்தகம் தொடர்ந்து குறிப்பிடுவதாவது: “அப்போஸ்தலர் எச்சரிப்புகளில் விசுவாச துரோகத்துக்குக் காரணமான பல காரியங்களில் பின்வரும் காரணங்களும் கொடுக்கப்பட்டிருந்தன: விசுவாசக் குறைவு (எபி. 3:12), துன்புறுத்தலை எதிர்படும்போது சகிப்புத் தன்மை இல்லாமை (எபி 10:32-39), சரியான ஒழுக்க தராதரங்களை ஒதுக்கிவிடுதல் (2 பேதுரு 2:15-22), பொய் போதகர்களின் ‘போலி வார்த்தைகளுக்கும்’ ‘வஞ்சிக்கிற ஆவியின் வார்த்தைகளுக்கும்’ செவிகொடுத்தல் ( . . . 1 தீமோ. 4:1-3) . . . இப்படிப்பட்டவர்கள் வேண்டுமென்றே கடவுளுடைய சபையை விட்டுவிட்டு ‘அந்தி கிறிஸ்துவின்’ பாகமாகிவிடுகிறார்கள். (1 யோவான் 2:18, 19)”
மனப்பூர்வமாக தன்னைத்தானே சபையிலிருந்து நீக்கிக்கொள்ளும் ஒரு நபருக்கு அந்த விளக்கம் நன்கு பொருந்தியிருக்கும். வேண்டுமென்றே கடவுளுடைய சபையிலிருந்து தன் தொடர்பை அறுத்துக்கொள்வதன் மூலமும் கிறிஸ்தவ பாதையை விட்டு விலகுவதன் மூலமும் அவன் தன்னை ஒரு விசுவாச துரோகியாக ஆக்கியிருப்பான். உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவன் ஒரு விசுவாச துரோகியுடன் தொடர்புகொள்ள விரும்பியிருக்க மாட்டான். அவர்கள் நண்பர்களாக இருந்து வந்திருந்தபோதிலும், ஒருவன் சபையை மறுதலிக்கும்போது, விசுவாச துரோகியாகும்போது, சகோதர நெருக்கத்திற்குரிய அடிப்படையையே அல்லது ஆதாரத்தையே அவன் மறுதலிக்கிறான். ‘தேவனை உடையவனாயிராதவனும்’ “நம்முடையவர்களாயிராதவனுமாய்” இருக்கும் ஒருவனை தன்னுடைய வீட்டில் கொண்டிருக்க மாட்டான் என்று யோவான் தெளிவுபடுத்தினான்.
தேவப்பூர்வமாக பார்க்கும்போது, கடவுளுடைய சபையை விட்டு விலகும் ஒருவனை உலகத்தாரிலும் அதிகமாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் இருக்கிறான். ஏன்? ரோம சமுதாயத்திலுள்ள கிறிஸ்தவர்கள் வேசி மார்க்கத்தினரையும் உதாசினரையும் விக்கிரகாரதனைக்காரரையும் தினந்தோறும் சந்தித்தார்கள். இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ‘சகோதரன் என்னப்பட்ட ஒருவனோடே கலந்திருக்கக்கூடாது.’ என்று அவன் சொன்னான். (1 கொரிந்தியர் 5:9-11) இதுபோன்று “உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பின” ஒருவன் தன்னுடைய முந்தைய வாழ்க்கை வழிக்குத் திரும்புவானானால், அவன் பன்றி சேற்றிலே புரளுவதற்கு திரும்பிப் போவதுபோன்று இருந்தது. (2 பேதுரு 2:20-22) எனவே ‘தங்களைவிட்டு மனப்பூர்வமாய் போய்விட்டவர்களைக்’ கிறிஸ்தவர்கள் ‘தங்களுடைய வீடுகளில் ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்ற யோவானின் ஆலோசனை முரண்பாடற்றது.—2 யோவான் 10.
யோவான் மேலுமாக சொன்னதாவது: “அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.” (2 யோவான் 11) இந்த இடத்தில் யோவான் 13-ம் வசனத்தில் காணப்படும் ஆஸ்பஸோமேய் என்ற வார்த்தைக்கு மாறாக கேய்ரோ என்ற கிரேக்க வாழ்த்துதல் வார்த்தையை பயன்படுத்தினான்.
கேய்ரோ மகிழ்ச்சியடைதல் என்ற அர்த்தத்தையுடையது. (லூக்கா 10:20; பிலிப்பியர் 3:1, 4:4) அது பேச்சு வழக்கிலும் எழுத்து நடையிலும் ஒரு வாழ்த்துதல் வார்த்தையாகவும் பயன்படுத்தப்பட்டது. (மத்தேயு 28:9; அப்போஸ்தலர் 15:23; 23:26) அஸ்பஸோமேய், “கைகளைக் கூப்புதலை, இப்படியாக வாழ்த்துதலை, வரவேற்றலை” அர்த்தப்படுத்தியது. (லூக்கா 11:43; அப்போஸ்தலர் 20:1, 37; 21:7, 19) இரண்டும் வாழ்த்தும் முறைகளைக் குறிப்பிடுவதாக இருக்கக்கூடும், ஆனால் ஆஸ்பஸமேய் என்ற பதம் “ஹல்லோ” அல்லது “வணக்கம்“ என்று சாதாரணமாக சொல்லப்படுவதைவிட அதிகத்தை உட்படுத்தியது. இயேசு தமது 70 சீஷர்களிடம் ஆஸ்பஸேஸ்தே செய்ய சொல்லவில்லை. இப்படியாக அவர்களுடைய அவசர வேலை, முத்தமிடுதல், தழுவுதல் மற்றும் நீண்ட சம்பாஷணையில் ஈடுபடுதல் ஆகியவற்றை உட்படுத்திய கிழக்கத்திய வாழ்த்துதல் முறைக்கு நேரமளிக்கவில்லை. (லூக்கா 10:4) பேதுருவும் பவுலும் சொன்னதாவது: ‘ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே அல்லது பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள் [ஆஸ்பஸேஸ்தே].’—1 பேதுரு 5:14; 2 கொரிந்தியர் 13:12, 13; 1 தெசலோனிக்கேயர் 5:26.
எனவே யோவான் 2 யோவான் 10, 11-ல் காரணத்தோடே ஆஸ்பஸோமேய் (வசனம் 13) என்ற வார்த்தைக்கு பதிலாக கேய்ரோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். அப்படியென்றால், பொய்யைப் போதித்த அல்லது சபையை மறுதலித்த (விசுவாச துரோகியான) ஒருவனை தழுவி, முத்தமிட்டு, சம்பாஷணையில் ஈடுபடுத்துவதன் மூலம்) அனலோடு வாழ்த்துதலை மட்டும் தவிர்க்கும்படியாக யோவான் கிறிஸ்தவர்களுக்கு வலியுறுத்தவில்லை. மாறாக, அப்படிப்பட்ட ஒரு நபரைப் பார்த்து, கேய்ரோ சொல்லி வாழ்த்துதல் அல்லது சாதாரணமாக சொல்லப்படும் “வணக்கம்”கூட செல்லக்கூடாது என்று யோவான் குறிப்பிட்டான்.b
இந்தப் புத்திமதியின் முக்கியத்துவம் யோவானின் பின்வரும் வார்த்தைகளிலிருந்து புலப்படுகிறது: “அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.” சபையிலிருந்து நீக்கப்பட்ட குற்றமிழைத்த ஒருவனோடு அல்லது அவருடைய சபையைப் புறக்கணித்த ஒருவனோடு கூட்டுறவு கொள்வதன் மூலம் அவனுடைய துர்க்கிரியைகளில் பங்குள்ளவனாகக் கடவுள் தன்னை நோக்கும் காரியத்தை எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவனும் விரும்பியிருக்க மாட்டான். அன்புள்ள கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் பங்குள்ளவர்களாக இருப்பது எவ்வளவு அருமையானது. யோவான் எழுதியதாவது: “நீங்களும் எங்களோடே ஜக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது.”—1 யோவான் 1:3. (w85 7/15)
[அடிக்குறிப்புகள்]
a Webster’s New Collegiate Dictionary என்ற ஆங்கில அகராதி குறிப்பிடுவதாவது, “விசுவாச துரோகம்” என்பது “1: மத நம்பிக்கையை மறுதலித்தல் 2: ஏற்கனவே கொண்டிருந்த உத்தமத் தன்மையைக் கைவிடுதல்.”
b 2 யோவான் 11-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேய்ரோ என்ற பதத்தைக் குறித்து R.C.H. லென்ஸ்கி குறிப்பிடுவதாவது: “சந்திப்பின்போதோ அல்லது பிரிவின்போதோ பொதுவாகப் பரிமாறிக்கொள்ளப்படும் வாழ்த்துதல். . . . இதன் கருத்து: மதம் மாறிவிட்டவனுக்கு இந்த வாழ்த்துதலைக்கூட செலுத்தாதீர்கள்! இது அவனுடைய துர்க்கிரியைகளுக்கு உங்களை பங்காளியாக்கிவிடுகிறது. எந்த வகையான வாழ்த்துதலையுமே யோவான் குறிப்பிடுகிறார்.”