படிப்பு 31
மற்றவர்களுக்கு மரியாதை காட்டுதல்
“எல்லாரையும் கனம் பண்ணுங்கள்,” ‘ஒருவரையும் தூஷிக்காதீர்கள்’ என்று பைபிள் நமக்கு சொல்கிறது. (1 பே. 2:17; தீத். 3:2) சொல்லப்போனால், நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் “தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட[வர்கள்].” (யாக். 3:9) ஒவ்வொருவருக்காகவும் கிறிஸ்து மரித்திருக்கிறார். (யோவா. 3:16) நற்செய்தியை கேட்பதற்கும் அதற்கேற்ப செயல்பட்டு இரட்சிப்படையும் வாய்ப்பைப் பெறுவதற்கும் அனைவரும் தகுதியானவர்கள். (2 பே. 3:9) விசேஷித்த மதிப்பையும் மரியாதையையும் பெறுவதற்கு ஏற்ற குணங்கள் அல்லது அதிகாரம் சிலரிடம் இருக்கிறது.
பைபிள் சொல்வதற்கு இசைவாக மற்றவர்களுக்கு மரியாதையை காண்பிக்காமல் சிலர் ஏன் சாக்குப்போக்கு சொல்கிறார்கள்? ஜாதி, நிறம், பால் வேறுபாடு, ஆரோக்கியம், வயது, செல்வம், அல்லது சமுதாய அந்தஸ்து ஆகியவற்றிற்கு ஏற்ப மரியாதையைப் பெற தகுதியானவர் யார் என்பதை உள்ளூர் கலாச்சாரம் தீர்மானிக்கலாம். அதிகாரிகள் மத்தியில் ஊழல்கள் மலிந்து கிடப்பதால் அவர்களுக்கு மரியாதை கொடுப்பது அரிதாகிவிட்டது. சில நாடுகளில், மக்கள் தங்களுடைய வாழ்க்கையை எண்ணி மிகவும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள், ஒருவேளை அடிப்படை தேவைகளைப் பெறவே அதிக மணிநேரம் உழைக்க வேண்டியதாக இருக்கலாம், மரியாதை காட்டாத மக்கள் அவர்களை சூழ்ந்திருக்கலாம். இளைஞர்களுக்கோ விரும்பப்படாத ஆசிரியர்களையும் வேறு சில அதிகாரிகளையும் எதிர்த்து கலகம் செய்வதில் சகாக்களோடு சேர்ந்துகொள்ள வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது. பெற்றோர்களை ஆதிக்கம் செலுத்துகிற பிள்ளைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த அறிவாளிகளாக சித்தரிக்கப்படுவதால் அநேக பிள்ளைகள் இந்தப் போக்கை பின்பற்றுகின்றனர். பிறருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதையை பாதிக்கும் இப்படிப்பட்ட உலகியல் போக்குகளை ஒதுக்கித் தள்ளுவதற்கு முயற்சி தேவை. ஆட்களை நாம் கண்ணியமாக நடத்துவது, பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
மரியாதைக்குரிய அணுகுமுறை. மத சேவை செய்கிறவர் தகுந்த விதத்தில் உடை உடுத்துவதன் மூலமும் நடந்து கொள்வதன் மூலமும் மரியாதை காண்பிக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார். ஏற்கத் தகுந்த நடத்தை என்பது இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. தொப்பி போட்டுக்கொண்டு அல்லது ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மற்றொருவரை சந்திப்பதை சிலர் அவமரியாதையாக கருதுகிறார்கள். வேறு இடங்களிலோ இப்படிப்பட்ட நடத்தையை மக்கள் ஏற்றுக்கொள்ளலாம். பிறரை புண்படுத்தாதபடிக்கு உள்ளூர் மக்களுடைய உணர்ச்சிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வது நற்செய்தியை திறம்பட அறிவிப்பதற்கு வரும் தடைகளை தவிர்க்க உதவும்.
மற்றவர்களுக்கு, முக்கியமாக முதியோர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் விதத்திலும் இதுவே பொருந்துகிறது. அனுமதிக்கப்பட்டால் தவிர, வயதுவந்தவர்களை இளைஞர்கள் பெயர் சொல்லி அழைப்பது பெரும்பாலும் தவறாக கருதப்படுகிறது. சில இடங்களில் பெரியவர்களும்கூட அறிமுகமில்லாதவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவதை தவிர்க்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். வயதில் பெரியவர்களுக்கோ அதிகாரிகளுக்கோ மரியாதை காட்டுவதற்கு பல்வேறு மொழிகள் “நீங்கள்” அல்லது “உங்கள்” போன்ற வார்த்தைகளை அல்லது வேறெதாவது முறையை பயன்படுத்துகின்றன.
மரியாதைக்குரிய விதத்தில் கண்டுகொள்ளுதல். சிறு சமுதாயங்கள் சிலவற்றில், நடந்து செல்லும்போதோ அல்லது ஓர் அறைக்குள் நுழையும்போதோ யாராவது எதிரில் வந்தால் அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவது அநாகரிகமாக கருதப்படுகிறது. எளிய முறையில் வணக்கம் தெரிவிப்பது, புன்முறுவல் புரிவது, தலையை ஆட்டுவது, அல்லது புருவங்களை உயர்த்துவது போன்றவற்றின் மூலம் உரிய கவனமும் மரியாதையும் காட்டப்படுகிறது. மற்றவர்களைப் புறக்கணிப்பது அவமரியாதையாக கருதப்படுகிறது.
ஆனால் சிலரை மேற்சொன்னவாறு நீங்கள் கண்டுகொண்டாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். எப்படி? தனிப்பட்ட நபர்களாக அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீங்கள் பட்டும்படாமல் இருப்பதை அவர்கள் புரிந்துகொள்ளலாம். பொதுவாக, ஏதாவது சரீர குறைபாட்டின் அடிப்படையில் சிலரை தனி ரகமாக ஒதுக்குவது இன்று உலகில் சகஜம். ஊனங்களும் உடல்நலப் பிரச்சினைகளும் உடையவர்கள் பெரும்பாலும் அசட்டை செய்யப்படுகிறார்கள். என்றாலும், இப்படிப்பட்டவர்களை எவ்வாறு அன்போடும் மரியாதையோடும் நடத்த வேண்டும் என்பதை கடவுளுடைய வார்த்தை நமக்கு காட்டுகிறது. (மத். 8:2, 3) நாம் அனைவருமே ஆதாமின் பாவத்தை சுதந்தரித்திருப்பதால் ஏதாவதொரு விதத்தில் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பிறர் எப்பொழுது பார்த்தாலும் உங்களுடைய குறைபாடுகளை வைத்து அடையாளம் காட்டினால் நீங்கள் மதிக்கப்படுவதாக உணருவீர்களா? உங்களிடம் உள்ள அநேக நல்ல குணங்களுக்காக மதிக்கப்படவே விரும்புவீர்கள் அல்லவா?
மரியாதை காண்பிப்பதில் தலைமை ஸ்தானத்திற்கு கவனம் செலுத்துவதும் உட்படுகிறது. சில இடங்களில், வீட்டிலுள்ள பெரியவரிடம் பேசிய பிறகே வீட்டாரிடம் பேச வேண்டும். பிரசங்கிக்கும்படியும் போதிக்கும்படியும் நமக்கு கட்டளை கொடுத்திருப்பது யெகோவாதாம் என்றாலும், பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவும் கண்டிக்கவும் வழிநடத்தவும் பெற்றோர்களுக்கே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம். (எபே. 6:1-4) ஆகவே, வீட்டுக்கு வீடு செல்கையில், பிள்ளைகளுடன் விலாவாரியாக உரையாடுவதற்கு முன்பு பொதுவாக அவர்களுடைய பெற்றோர்களுடன் முதலில் பேசுவது பொருத்தமானது.
முதியவர்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கும் அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். (யோபு 32:6, 7) இலங்கையில் ஒரு முதியவரை சந்தித்த இளம் பயனியர் சகோதரி இந்த அம்சத்திற்கு கவனம் செலுத்தியதால் பயனடைந்தார். “உன்னை மாதிரி ஒரு சின்ன பிள்ளை எப்படி எனக்கு பைபிளை போதிக்க வரலாம்?” என்று சொல்லி அந்த முதியவர் முதலில் ஆட்சேபணை தெரிவித்தார். அதற்கு சகோதரி, “உண்மையில், நான் உங்களுக்கு பைபிளை போதிக்க வரவில்லை, எனக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்த ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன், அதை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, அதை உங்களிடமும் தெரிவிக்கவே வந்திருக்கிறேன்” என்றார். அந்தப் பயனியருடைய மரியாதைக்குரிய பதில் அந்த முதியவருடைய ஆர்வத்தைத் தூண்டியது. “அப்படியா, என்ன கற்றுக்கொண்டாய், எனக்கு சொல்” என அவர் கேட்டார். “எப்படி என்றென்றும் வாழ முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என சகோதரி கூறினார். அந்த முதியவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். இப்படி மரியாதையோடு நடத்த வேண்டும் என்று வயதானவர்கள் எல்லாருமே கேட்க மாட்டார்கள். ஆனால் அப்படி நடத்தினால் கண்டிப்பாக மெச்சுவார்கள்.
என்றபோதிலும், மிதமீறிய வகையில் மரியாதை காண்பிக்கும் சாத்தியமும் இருக்கிறது. பசிபிக் தீவுகளிலும் பிற இடங்களிலும், கிராமத்தின் அல்லது குலத்தின் தலைவர்களை அணுகும்போது சாட்சிகள் பாரம்பரிய முறையில் மரியாதையோடு பேசினால் அந்தத் தலைவர்கள் செவிகொடுத்து கேட்கலாம்; அவர்களுடைய அதிகார எல்லைக்குட்பட்ட மக்களிடம் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் முகஸ்துதி அவசியமில்லை, அது சரியானதும் அல்ல. (நீதி. 29:5) அதைப் போலவே, இலக்கண ரீதியில் மரியாதைக்குரிய சொற்கள் ஒரு மொழியில் இருக்கலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் மரியாதை காட்டுவதற்கு இவற்றை மிதமீறி பயன்படுத்த வேண்டியதில்லை.
மரியாதைக்குரிய விதத்தில் பேச்சு கொடுப்பது. நம்முடைய நம்பிக்கைக்குரிய காரணத்தை “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” விளக்கிக் கூறும்படி பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (1 பே. 3:15, NW) ஆகவே, ஒருவருடைய நோக்குநிலையில் உள்ள குறைபாடுகளை நாம் உடனடியாக சுட்டிக்காட்ட முடியுமென்றாலும், அவருடைய கண்ணியத்தைப் பறிக்கும் விதத்தில் சுட்டிக்காட்டுவது ஞானமாக இருக்குமா? பொறுமையாக செவிகொடுத்துக் கேட்டு, ஒருவேளை அவர் ஏன் அப்படி உணர்கிறார் என்பதையும் கேட்டு, பிறகு அவருடைய உணர்ச்சிகளை கருத்தில் கொண்டு வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவது சிறந்தது அல்லவா?
ஒருவரை நேருக்கு நேர் சந்திக்கும்போது எப்படி மரியாதையோடு பேசுகிறோமோ அதேபோல மேடையிலிருந்து சபையாரிடம் பேசும்போதும் மரியாதையோடு பேச வேண்டும். சபையாரை மதிக்கிற ஒரு பேச்சாளர் அவர்களை கடுமையாக விமர்சிக்க மாட்டார்; அல்லது “நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், இந்த அறிவுரையை பின்பற்ற முடியும்” என்பது போல மறைமுகமாக சுட்டிக்காட்டவும் மாட்டார். இப்படி பேசுவது பிறரை உற்சாகமிழக்கத்தான் செய்யும். யெகோவாவை நேசித்து அவருக்கு சேவை செய்ய விரும்பும் ஒரு கூட்டத்தாராக சபையாரை கருதுவது எவ்வளவு நல்லது! நாம் இயேசுவைப் பின்பற்றி, ஆவிக்குரிய விதத்தில் பலவீனராக இருப்பவர்களை, குறைந்த அனுபவமுள்ளவர்களை, அல்லது பைபிள் அறிவுரைகளை கடைப்பிடிப்பதில் மந்தமாக இருப்பவர்களை புரிந்துகொள்ளுதலோடு நடத்த வேண்டும்.
கடவுளுடைய வார்த்தையை அதிக முழுமையாக கடைப்பிடிக்க வேண்டியவர்களில் தானும் ஒருவர் என்பதை பேச்சாளர் காட்டுகையில், சபையார் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். ஆகவே, வேதவசனங்களைப் பொருத்தும்போது எப்பொழுதும் “நீங்கள்” அல்லது “உங்கள்” என்ற சுட்டுப்பெயரை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஞானமானது. உதாரணமாக, “உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்களா?” என்ற கேள்விக்கும், “‘என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேனா?’ என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வது நல்லது” என்ற கூற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். இந்த இரண்டிலும் உள்ள குறிப்பும் ஒன்றே; ஆனால் முதல் கேள்வி, பேச்சாளர் தன்னையும் சபையாருடைய நிலையில் வைக்கவில்லை என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறது. இரண்டாவது கூற்று, பேச்சாளர் உட்பட, ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலையையும் உள்நோக்கங்களையும் ஆராய்ந்து பார்க்கும்படி உற்சாகப்படுத்துகிறது.
சபையாரை சிரிக்க வைப்பதற்காகவே ஜோக்குகள் சொல்ல துடிக்கும் ஆசைக்கு அணைபோடுங்கள். இது பைபிள் செய்தியின் கண்ணியத்தை குறைத்து விடுகிறது. உண்மைதான், கடவுளுடைய சேவையில் நாம் இன்பம் காண வேண்டும். நமக்கு நியமிக்கப்பட்ட தகவலில் சில அம்சங்கள் ஓரளவு நகைச்சுவையோடு இருக்கலாம். ஆனால் கருத்தாழமிக்க விஷயங்களை கேலிக்குரிய விஷயங்களாக்குவது கேட்போர் மீதும் கடவுள் மீதும் மரியாதை குறைவுபடுவதை வெளிப்படுத்தலாம்.
மற்றவர்களை எவ்வாறு நோக்க வேண்டும் என யெகோவா கற்பித்திருக்கிறாரோ அப்படியே நோக்குகிறோம் என்பதை நம்முடைய அணுகுமுறை, நம்முடைய நடத்தை, நம்முடைய பேச்சு ஆகியவை எப்பொழுதும் காண்பிப்பதாக.