உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 6 பக். 101-பக். 104 பாரா. 4
  • தகுந்த இடங்களில் அழுத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தகுந்த இடங்களில் அழுத்துதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • வசனங்களைச் சரியான அழுத்தத்தோடு வாசித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கருத்து அழுத்தமும் குரலில் ஏற்றத்தாழ்வும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • கவலையைக் குறைக்க . . .
    விழித்தெழு!—2010
  • நல்ல கவலை, கெட்டகவலை
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 6 பக். 101-பக். 104 பாரா. 4

படிப்பு 6

தகுந்த இடங்களில் அழுத்துதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

தெரிவிக்கப்படும் கருத்துக்களை கேட்போர் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் வலியுறுத்துங்கள்.

ஏன் முக்கியம்?

தகுந்த இடங்களில் அழுத்துவது, கேட்போரின் கவனம் நழுவிவிடாமல் இருக்க உதவும்; அதுமட்டுமின்றி அவர்களை நம்ப வைக்க அல்லது உந்துவிக்க உதவும்.

நீங்கள் சத்தமாக பேசும்போது அல்லது வாசிக்கும்போது, வார்த்தைகளை சரியாக சொல்வது மட்டும் போதாது; கருத்துக்களை தெளிவாக தெரிவிக்கும் விதத்தில் முக்கிய வார்த்தைகளையும் அர்த்தம் தரும் சொற்றொடர்களையும் வலியுறுத்துவதுகூட முக்கியம்.

தகுந்த இடங்களில் அழுத்துவது என்பது, ஒருசில அல்லது பல வார்த்தைகளை வலியுறுத்துவது மட்டுமல்ல. சரியான வார்த்தைகள் வலியுறுத்தப்பட வேண்டும். தவறான வார்த்தைகளை அழுத்தினால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியாமல் போய்விடும்; ஆகவே கேட்பவர்களின் மனம் அலைபாய ஆரம்பிக்கும். பேச்சு, தகவல் நிறைந்ததாக இருந்தாலும், தகுந்த இடங்களில் அழுத்தம் கொடுக்காவிட்டால் செயல்படும்படி சபையாரை அதிகம் உந்துவிக்காது.

வலியுறுத்துவதற்கு பல முறைகள் உண்டு; சிலசமயம் இந்த முறைகளில் பலவற்றை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்: சத்தத்தை அதிகரிப்பது, உணர்ச்சியின் வலிமையை கூட்டுவது, மெதுவாக நிதானித்து சொல்வது, வாக்கியத்திற்கு முன்போ பின்போ (அல்லது இரண்டு சமயத்திலும்) நிறுத்துவது, செய்கைகளையும் முகபாவங்களையும் பயன்படுத்துவது. சில மொழிகளில், தொனியை தாழ்த்துவதன் மூலம் அல்லது குரலொலியை ஏற்றுவதன் மூலம்கூட வலியுறுத்தலாம். எது மிகப் பொருத்தமானது என்பதை தீர்மானிக்க, தகவலையும் சூழ்நிலைகளையும் கவனத்தில் வையுங்கள்.

எதை வலியுறுத்துவது என்பதை தீர்மானிக்க பின்வருபவற்றை கவனியுங்கள். (1) எந்த வாக்கியத்திலும், அழுத்த வேண்டிய வார்த்தைகள் எவை என்பதை அவ்வாக்கியத்தின் மற்ற பகுதி மட்டுமல்லாமல் சூழமைவும் தீர்மானிக்கிறது. (2) ஒரு புதிய கருத்தை​—⁠முக்கிய குறிப்பை அல்லது நியாயவிவாதத்தில் வெறுமனே புதிய கோணத்தை​—⁠அறிமுகப்படுத்தும்போது அதை வலியுறுத்துவதற்கு அழுத்தலாம். நியாயவிவாதத்தின் முடிவுக்கு கவனத்தை ஈர்க்கவும் அழுத்தத்தை பயன்படுத்தலாம். (3) ஒரு விஷயத்தின்பேரில் தன் உணர்ச்சிகளைக் காட்ட பேச்சாளர் அழுத்தத்தைப் பயன்படுத்தலாம். (4) ஒரு பேச்சின் முக்கிய குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுவதற்கும் அழுத்தத்தைப் பயன்படுத்தலாம்.

இந்த வழிகளில் அழுத்தத்தை பயன்படுத்துவதற்கு, ஒரு பேச்சாளர் அல்லது பொது வாசிப்பாளர் தன் தகவலை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்; கேட்பவர்கள் அதை கிரகிக்க வேண்டுமென மனதார விரும்ப வேண்டும். எஸ்றாவின் நாட்களில் அறிவுரை கொடுக்கப்பட்ட விதத்தைக் குறித்து நெகேமியா 8:8 இப்படி சொல்கிறது: “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப் பண்ணினார்கள்.” அச்சந்தர்ப்பத்தில் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை வாசித்து விளக்கியவர்கள், வாசிக்கப்படுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் நினைவில் வைக்கவும் கடைப்பிடிக்கவும் சபையாருக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர் என்பதில் சந்தேகமில்லை.

எது பிரச்சினையை ஏற்படுத்தலாம். பெரும்பாலானவர்கள், சாதாரணமாக பேசும்போது அர்த்தம் புரியும்படியே பேசுகிறார்கள். என்றாலும், வேறு எவரேனும் எழுதியதை வாசிக்கும்போது எந்த வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை அழுத்துவது என தீர்மானிப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கிறது. தகவலை தெளிவாக புரிந்துகொள்வதே இதற்குத் திறவுகோல். எழுதப்பட்டதை கவனமாக படிப்பதை இது தேவைப்படுத்துகிறது. ஆகவே சபைக் கூட்டத்தில் வாசிக்கும் நியமிப்பைப் பெற்றால் நீங்கள் சிரத்தையோடு தயாரிக்க வேண்டும்.

சிலர் தகுந்த இடங்களில் அழுத்துவதற்கு பதிலாக ஆங்காங்கே அழுத்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வார்த்தைகளை அழுத்துவார்கள், அது அர்த்தம் தந்தாலும்சரி தராவிட்டாலும்சரி. மற்றவர்களோ வினைச்சொற்களை அல்லது இணைச் சொற்களை அளவுக்கு அதிகமாக அழுத்துவார்கள். அழுத்துவது கருத்தை தெளிவாக்காவிட்டால் எளிதில் கவனத்தை திசைதிருப்பிவிடும்.

அழுத்த வேண்டும் என்பதற்காக சில பேச்சாளர்கள் அதிக சத்தமாக பேசுகிறார்கள்; ஆனால் அது அதட்டுவதுபோல் சபையாருக்கு தொனிக்கலாம். இதனால் சிறந்த பலன்களை நிச்சயம் பெற முடியாது. இயல்பாக அழுத்தாவிட்டால், பேச்சாளர் சபையாரை மட்டம் தட்டிப் பேசுகிறார் என்ற அபிப்பிராயம் ஏற்படலாம். அன்பின் அடிப்படையில் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, சொல்லப்படுவது எவ்வாறு வேதப்பூர்வமானதும் நியாயமானதும்கூட என்பதை புரிந்துகொள்ள உதவுவது எவ்வளவு மேலானது!

முன்னேறுவது எப்படி. தகுந்த இடங்களில் அழுத்துவதில் பிரச்சினையுள்ள நபர்கள் பெரும்பாலும் அதை உணர்வதே இல்லை. வேறு எவரேனும் அந்தப் பிரச்சினையை அவருக்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கலாம். இந்த அம்சத்தில் நீங்கள் முன்னேற வேண்டியிருந்தால் உங்கள் பள்ளிக் கண்காணி உங்களுக்கு உதவுவார். மேலும், சிறப்பாக பேச்சு கொடுக்கும் வேறு எவரிடமும் உதவி கேட்க தயங்காதீர்கள். நீங்கள் வாசிப்பதை அல்லது பேசுவதை கவனமாக கேட்டு, முன்னேறுவதற்கான ஆலோசனைகளைத் தரும்படி அவரிடம் சொல்லுங்கள்.

பயிற்சியின் ஆரம்பமாக, காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரையைப் பயன்படுத்தும்படி உங்கள் ஆலோசகர் சொல்லலாம். ஒவ்வொரு வாக்கியத்தையும் பகுத்தறிந்து, அர்த்தம் சுலபமாக விளங்குவதற்கு எந்த வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை வலியுறுத்த வேண்டும் என தீர்மானிக்கும்படி அவர் கண்டிப்பாக உங்களிடம் சொல்வார். நேரெழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் சில வார்த்தைகளுக்கு விசேஷ கவனம் செலுத்தும்படி அவர் உங்களுக்கு நினைப்பூட்டலாம். வாக்கியத்திலுள்ள வார்த்தைகள் இணைந்து செயல்படுகின்றன என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே வார்த்தைகளை தனித்தனியாக அல்ல, பெரும்பாலும் கோர்வையாக சேர்த்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

எதை வலியுறுத்துவது என்பதை கற்றுக்கொள்வதற்கு அடுத்த படியாக, வாக்கியத்தின் சூழமைவை கவனிக்கும்படி உங்கள் ஆலோசகர் சொல்லலாம். அந்த முழு பாராவின் மையக் கருத்து என்ன? ஒவ்வொரு வாக்கியத்திலும் எதை வலியுறுத்துவது என்பதை அந்த மையக் கருத்து எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? கட்டுரையின் தலைப்பையும் உங்கள் தகவல் இடம்பெற்றுள்ள உபதலைப்பையும் பாருங்கள். எந்தப் பதங்களை வலியுறுத்துவது என இவை எவ்வாறு தீர்மானிக்கும்? இந்த எல்லா அம்சங்களையும் சிந்திக்க வேண்டும். ஆனால் அளவுக்கு அதிகமான வார்த்தைகளை வலியுறுத்தாதபடிக்கு கவனமாக இருங்கள்.

நீங்கள் மனதிலிருந்து பேசினாலும் சரி தாளைப் பார்த்து வாசித்தாலும் சரி, உங்கள் நியாயவிவாதத்தைப் பொறுத்து தகுந்த இடங்களில் அழுத்தும்படியும் ஆலோசகர் உற்சாகப்படுத்தலாம். நியாயவிவாதம் முடிவடையும் இடங்களை அல்லது ஒரு முக்கிய கருத்து முடிந்து மற்றொன்று துவங்கும் இடங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் பேச்சில் இவ்விடங்களை தெளிவாக காட்டும்போது சபையார் போற்றுவார்கள். முதலாவதாக, அடுத்ததாக, இறுதியாக, இவ்வாறு, நியாயமாகவே போன்ற பதங்களை அழுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம்.

நீங்கள் விசேஷ உணர்ச்சியோடு சொல்ல விரும்பும் கருத்துக்களையும் ஆலோசகர் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவார். மிகவும், முழுமையாக, எக்காரணத்தைக் கொண்டும், நினைத்தும் பார்க்க முடியாத, முக்கியமான, எப்போதும் போன்ற பதங்களை இதற்கு வலியுறுத்த வேண்டியிருக்கலாம். அப்படி செய்வது, நீங்கள் சொல்வதைக் குறித்து சபையார் எப்படி உணருகிறார்கள் என்பதை பாதிக்கலாம். இதைக் குறித்து, “கனிவும் உணர்ச்சியும்” என்ற 11-ஆம் படிப்பு இன்னுமதிகமாக கலந்தாலோசிக்கும்.

தகுந்த இடங்களில் அழுத்துவது சம்பந்தமாக முன்னேற்றம் செய்ய, சபையார் ஞாபகம் வைக்க வேண்டுமென நீங்கள் விரும்பும் முக்கிய குறிப்புகளை மனதில் தெளிவாக வைத்திருக்குமாறும் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். பொது வாசிப்பின் கண்ணோட்டத்திலிருந்து, “முக்கிய கருத்துக்களை வலியுறுத்துதல்” என்ற 7-ஆம் படிப்பில் இன்னுமதிக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; பேச்சு கொடுப்பதன் கண்ணோட்டத்திலிருந்து, “முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுதல்” என்ற 37-ஆம் படிப்பு மேலும் கலந்தாலோசிக்கிறது.

வெளி ஊழியத்தில் முன்னேற்றம் செய்ய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றால், வசனங்களை எப்படி வாசிக்கிறீர்கள் என்பதற்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். ‘இந்த வசனத்தை ஏன் வாசிக்கிறேன்?’ என உங்களையே கேட்டுக்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதிப்பவர், வார்த்தைகளை சரியாக சொல்வது மட்டுமே போதாது. உணர்ச்சியோடு வசனத்தை வாசிப்பதும்கூட போதாது. ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கிறீர்கள் என்றால் அல்லது அடிப்படை சத்தியத்தைக் கற்பிக்கிறீர்கள் என்றால், கலந்தாலோசிக்கப்படும் குறிப்பை ஆதரிக்கும் வார்த்தைகளை அல்லது பதங்களை வசனத்தில் வலியுறுத்துவது நல்லது. இல்லையேல், கேட்பவர் குறிப்பை தவறவிட்டு விடலாம்.

அனுபவமற்ற பேச்சாளர்கள் சிலர், குறிப்பிட்ட வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் வலியுறுத்த வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாக வலியுறுத்திவிடுவார்கள். ஒரு இசைக் கருவியை புதிதாக வாசிக்க கற்றுக்கொள்பவர் ஸ்வரங்களை இசைப்பதுபோல்தான் அது இருக்கும். இருந்தாலும் பழகப் பழக, தனிப்பட்ட “ஸ்வரங்கள்” இனிமையான “இசை”யின் பாகமாகிவிடும்.

அடிப்படையான சிலவற்றை கற்றுக்கொண்ட பிறகு, அனுபவமுள்ளவர்களின் பேச்சுக்களை கேட்டு பயன்பெறும் நிலையில் இருப்பீர்கள். பல்வேறு அளவுகளில் வலியுறுத்துவதால் எதை சாதிக்கலாம் என விரைவில் உணர்ந்துகொள்வீர்கள். சொல்லப்படுவதன் அர்த்தத்தை தெளிவாக்க பல்வேறு விதங்களில் வலியுறுத்துவதன் மதிப்பையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தகுந்த இடங்களில் அழுத்துவது, வாசிப்பதற்கும் பேசுவதற்குமான உங்கள் திறனை பெரிதும் முன்னேற்றுவிக்கும்.

அழுத்துவதைக் குறித்து ஓரளவுக்கு கற்றுக்கொண்டு போதுமென திருப்தியடைந்து விடாதீர்கள். திறம்பட பேசுவதற்கு, மற்றவர்களின் காதுகளுக்கு இயல்பாக தொனிக்கும் விதத்தில் அழுத்தத்தைப் பயன்படுத்தும் திறனைப் பெற்று அதில் கரைகாணும் வரை விடாது பயிற்சி செய்யுங்கள்.

இத்திறனை பெறுவது எப்படி

  • வாக்கியங்களில் முக்கிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அடையாளம் காண பழகிக்கொள்ளுங்கள். சூழமைவின் அடிப்படையில் இதைச் செய்ய விசேஷ கவனம் செலுத்துங்கள்.

  • (1) கருத்து மாற்றத்தையும், (2) நீங்கள் சொல்வதைக் குறித்து எப்படி உணருகிறீர்கள் என்பதையும் காட்ட அழுத்தத்தைப் பயன்படுத்த முயலுங்கள்.

  • வசனங்களை வாசிக்கும்போது, அவற்றை குறிப்பிடுவதற்கான காரணத்தை நேரடியாக ஆதரிக்கும் வார்த்தைகளை வலியுறுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பயிற்சிகள்: (1) வெளி ஊழியத்தில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வசனங்களில் இரண்டை தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு வசனத்தைக் கொண்டும் எதை நிரூபிக்க முயல்கிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள். அந்தக் குறிப்புகளை ஆதரிக்கும் வார்த்தைகளை அல்லது சொற்றொடர்களை வலியுறுத்தும் விதத்தில் வசனங்களை சத்தமாக வாசியுங்கள். (2) எபிரெயர் 1:1-14-ஐ ஆராயுங்கள். இந்த அதிகாரத்திலுள்ள நியாயவிவாதத்தை தெளிவாக எடுத்துக்காட்ட, “தீர்க்கதரிசிகள்” (வச. 1), “குமாரன்” (வச. 2), ‘தேவதூதர்’ (வச. 4, 5) ஆகிய பதங்களை ஏன் விசேஷமாக வலியுறுத்த வேண்டும்? அதிகாரம் முழுவதையும் சத்தமாக வாசித்து பழகுங்கள்; நியாயவிவாதத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் விதத்தில் தகுந்த இடங்களை அழுத்தி வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்