என்றைக்காவது எல்லாரும் அன்புடன் இருக்க முடியுமா?
‘நித்திய ஜீவனை’ பெற்றுக்கொள்ள, தேவனிடத்தில் முழு இருதயத்தோடு அன்புகூர்ந்து, நம்மிடத்தில் அன்புகூருவதுபோல நம் அயலாரிடத்திலும் அன்புகூர வேண்டும் என்பதாக அப்போதுதான் அந்த நியாயசாஸ்திரி சொல்லிமுடித்தார். அதற்காக அவரை இயேசு இவ்வாறு பாராட்டினார்: “சரியாக சொன்னாய்; ‘அப்படியே செய், அப்பொழுது ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்.’” (லூக்கா 10:25-28, NW; லேவியராகமம் 19:18; உபாகமம் 6:5) ஆனால், அவர் தன்னை நீதிமான் என்று காண்பிக்க விரும்பி, “என் அயலான் யார்?” என்று கேட்டார்.
‘உன் இனத்தாரான யூதர்கள்’ என்றுதான் இயேசு சொல்வார் என்றே அவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால் ஒரு நல்ல சமாரியனைப் பற்றிய கதையை இயேசு சொன்னார். அந்தக் கதை, மற்ற நாட்டவரும் நம் அயலார்தான் என்பதைப் புரியவைத்தது. (லூக்கா 10:29-37; யோவான் 4:7-9) கடவுளையும் அயலாரையும் நேசிப்பது நம் சிருஷ்டிகர் நமக்குக் கொடுத்த கட்டளைகளிலேயே முக்கியமானது என்பதை இயேசு தம்முடைய ஊழியத்தின்போது வலியுறுத்தினார்.—மத்தேயு 22:34-40.
இருந்தாலும், எந்தப் பிரிவினராவது உண்மையிலேயே தங்கள் அயலாரிடம் அன்பு காட்டுகிறார்களா? எல்லாருமே ஒருவரையொருவர் நேசிக்க முடியுமா?
முதல் நூற்றாண்டில் நடந்த அதிசயம்
தம்மைப் பின்பற்றுபவர்கள், இன்ன இனத்தினர், இன்ன தேசத்தினர் என்ற பாகுபாடு இன்றி எல்லா வரம்புகளையும் கடந்து ஒருவரையொருவர் நேசிப்பார்கள் என்றும், அதை வைத்தே, அவர்களை இன்னார் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம் என்றும் இயேசு கூறினார். அவர் சொன்னதாவது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” அவர் இவ்வாறும் கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:34, 35; 15:12, 13.
அன்பைப் பற்றி இயேசு போதித்ததும் அவரது வாழ்க்கையின் மூலம் காட்டிய முன்னுதாரணமும் முதல் நூற்றாண்டில் ஓர் அதிசயம் நடக்கக் காரணமாக இருந்தது. அவரது சீஷர்களும் தங்கள் தலைவரையே பின்பற்றினர்; யார் பார்த்தாலும் பளிச்சென்று தெரிவதுபோல் எல்லாரும் ஆச்சரியப்படும் வகையிலும், போற்றும் வகையிலும் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொண்டனர். பொ.ச. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளரான டெர்ட்டுல்லியன், கிறிஸ்தவர்களல்லாதவர்கள் இயேசுவின் சீஷர்களை வியந்து பாராட்டியதை இவ்வாறு எழுதினார்: ‘அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள், ஒருவருக்காக ஒருவர் சாகவுங்கூட தயாராக இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.’
உண்மையில், அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.” (1 யோவான் 3:16) தங்கள் பகைவர்களையும் நேசிக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். (மத்தேயு 5:43-45) இயேசு கற்பித்த விதத்தில் மற்றவர்களை உண்மையிலேயே நேசிப்பதால் என்ன லாபம்?
அரசியல் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர் அதே கேள்வியை ஆழ்ந்து சிந்தித்ததற்கு அத்தாட்சி இருக்கிறது. த கிறிஸ்டியன் செஞ்ச்சுரி என்ற பத்திரிகையில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தது: “இயேசு தம் எதிரிகளின் மேல் வெடிகுண்டுகளை வீசுவதாகவோ, ‘மெஷின் கன்’களைப் பயன்படுத்துவதாகவோ, நெருப்பைக் கக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதாகவோ, ஆயிரக்கணக்கான தாய்மார்களையும் பிள்ளைகளையும் கொல்லவோ முடமாக்கவோ கூடிய அணுகுண்டுகளை அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை எறிவதாகவோ எவராவது கற்பனை செய்துபார்க்க முடியுமா?”
அதற்கு அந்தப் பேராசிரியரே, “இந்தக் கேள்விக்கு பதில் வேண்டுமா என்ன?” என சொல்லிவிட்டு, பின்வரும் கேள்வியைக் கேட்டார்: “இயேசு இப்படிப்பட்ட செயல்களைச் செய்யாமல் இருப்பதன் மூலம் தம்முடைய தனித்தன்மையைக் காத்துக்கொண்டார் என்றால், நாம் இப்படிப்பட்ட செயல்களையும் செய்து அதே சமயத்தில் அவருக்கும் எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?” ஆகவே, இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள் வகித்த நடுநிலையைப் பற்றி நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இது அநேக வரலாற்று புத்தகங்களில் தெளிவாக பதிவாகியுள்ளது. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போமா?
என். பிளாட் மற்றும் எம். ஜே. டிரம்மாண்ட் எழுதிய அவர் உவர்ல்ட் த்ரூ தி ஏஜஸ் என்ற புத்தகம் கூறுவதாவது: “கிறிஸ்தவர்களுடைய போக்கு ரோமர்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது. . . . கிறிஸ்து சமாதானத்தைப் பிரசங்கித்ததால், அவர்கள் படைவீரர்களாவதற்கு மறுத்தனர்.” த டிக்லைன் அண்ட் ஃபால் ஆஃப் த ரோமன் எம்ப்பையர் என்ற புத்தகத்தில் எட்வர்ட் கிப்பன் குறிப்பிடுவதாவது: “[ஆரம்ப கால கிறிஸ்தவர்கள்] பேரரசின் பொதுத்துறை நிர்வாகத்திலோ, ராணுவத்திலோ முக்கிய பதவிகளை ஏற்க மறுத்துவிட்டனர். . . . ராணுவத்தில் வேலை பார்க்க வேண்டுமென்றால், மிக பரிசுத்தமான கடமையொன்றை ஒதுக்கி தள்ளிவிட வேண்டும்; அது கிறிஸ்தவர்களால் எவ்வகையிலும் செய்ய முடியாத செயல்.”
இன்றைய நிலை என்ன?
கிறிஸ்துவைப் போன்றே இன்று யாராவது அன்பு காட்டுகிறார்களா? என்ஸைக்ளோப்பீடியா கனடியானா இவ்வாறு குறிப்பிடுகிறது: “யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் கடைப்பிடித்து வந்த அந்த ஆரம்பக் கிறிஸ்தவத்தின் மறுமலர்ச்சியே; அது மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. . . . எல்லாரும் சகோதரர்களே.”
அதன் அர்த்தமென்ன? யெகோவாவின் சாட்சிகள், ஜாதி, தேசம், இனம் என்ற பாகுபாட்டைக் காட்டுவதில்லை; பகைப்பதற்கு அவர்களுக்கு வேறெந்தக் காரணமும் இல்லை. யாரையும் அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; ஏனென்றால், அவர்கள் அடையாள அர்த்தத்தில் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்திருக்கிறார்கள்.—ஏசாயா 2:4.
கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ யூனியன் என்ற செய்தித்தாளின் தலையங்கம் குறிப்பிட்டதாவது: “உலகமுழுவதிலும் வாழும் மக்கள் யெகோவா சாட்சிகளின் மதக்கொள்கையையே கடைப்பிடித்தால், கொலைக்கும் பகைமைக்கும் முடிவு வரும். எங்கும் அன்பே செழித்தோங்கும் என்பது உறுதி”!
அதைப் போலவே, ஹங்கேரியின் ரிங் பத்திரிகையில் ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டதாவது: “இந்தப் பூமியில் யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் இருந்தால், போர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்; போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதும் பாஸ்போர்ட்டைக் கொடுப்பது மட்டுமே போலீஸ்காரர்களின் வேலையாகும் என்பது நிச்சயம்.”
அந்தாரே ஆலே ஜென்ட்டி என்ற இத்தாலிய சர்ச் பத்திரிகையில், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரீ ஒருவர் சாட்சிகளைப் பற்றி இவ்வாறு வியந்து குறிப்பிட்டார்: “அவர்கள் எந்தவிதமான வன்முறையையும் ஏற்றுக்கொள்வதில்லை; கலகம் செய்வதற்குப் பதில், அவர்களுடைய நம்பிக்கைகளின் காரணமாக தங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் பொறுமையுடன் சகித்துக் கொள்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளைப் போன்று, . . . மீண்டும் போரில் ஈடுபடமாட்டோம் என்ற தீர்மானத்துடன் நாம் விழித்தெழும் நாள் வந்ததென்றால், இந்த உலகம் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கும்!”
வலியச்சென்று தங்கள் அயலாருக்கு உதவிசெய்வதற்கு சாட்சிகள் பெயர்பெற்றவர்கள். (கலாத்தியர் 6:10) லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி, சோவியத் சிறைகளில் பெண்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில், 1965-ல், பாட்மா குற்றவாளிகள் முகாமில் தான் இருந்தபோது மிகவும் நோய்ப்பட்டுவிட்டதாக கூறினார். “எனக்கு உடம்பு முடியாத போதெல்லாம் [சாட்சிகளே] என்னை கவனித்துக்கொண்டார்கள். அந்த மாதிரி வேறு யாரும் கவனிக்கமாட்டார்கள். அதுவும் அப்படிப்பட்ட முகாம் சூழ்நிலையில் யார் அத்தனை கரிசனை காட்டுவார்கள்?” அவர் மேலும் கூறியதாவது: “ஜாதி மத பேதமின்றி யெகோவாவின் சாட்சிகள் எல்லாருக்கும் உதவுவதைத் தங்கள் தலையாய கடமையாக எண்ணுகின்றனர்.”
செக் குடியரசில் சமீபத்திய பிரஸ் அறிக்கையொன்று, கான்சன்ட்ரேஷன் முகாம்களில் சாட்சிகள் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி குறிப்பிட்டது. ப்ரனோ நகரில் தயாரிக்கப்பட்ட “இழந்த வீடு” என்ற டாக்குமென்டரியைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், செவரோசெஸ்கி டெனீக் என்ற செய்தித்தாள் இவ்வாறு குறிப்பிட்டது: “யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து சிறைவாசம் சென்றிருந்த [செக் மற்றும் ஸ்லோவாகிய யூதர்களில் உயிர்ப்பிழைத்த] நம்பகமானவர்களில் அநேகர் கைதிகளாக இருந்த சாட்சிகள் நடந்துகொண்ட விதத்தைக் கண்டு மூக்கில் விரலை வைத்தார்கள். அவர்கள் அளித்த சான்று இதோ: ‘அவர்கள் ரொம்ப தைரியசாலிகள், தங்கள் உயிரைப் பணையம் வைத்து தங்களால் முடிந்தளவு எங்களுக்கு உதவிசெய்துகொண்டே இருந்தனர். எங்களை அவர்களது குடும்ப அங்கத்தினர்களைப் போல் பாவித்து எங்களுக்காகவும் ஜெபித்தார்கள்; நாங்கள் தைரியம் இழந்து விடாமலிருக்க எங்களையும் தேற்றினார்கள்.’”
அப்படியானால், உங்களை உண்மையிலேயே பகைப்பவர்களை நீங்கள் நேசிக்க முடியுமா?
அன்பு பகைமையின்மீது வெற்றி வாகை சூடுகிறது
பகைவர்களை நேசிப்பது பற்றிய இயேசுவின் போதனை பின்வரும் பைபிளின் நீதிமொழிக்கு இசைவாக இருக்கிறது: “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.” (நீதிமொழிகள் 25:21; மத்தேயு 5:44) கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சமீபத்தில் யெகோவாவின் சாட்சியானார்; பகைவர்களாக தான் கருதிய வெள்ளை இனத்தைச் சேர்ந்த சாட்சிகளிடமிருந்து தான் பெற்ற அன்பான கரிசனையைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு சமயம், வெள்ளைக்கார சாட்சிகள் காட்டிய உண்மையான அன்பினால் என் உள்ளம் உருகியது. என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை. ஏனென்றால் அரசியல் மாற்றம் காரணமாக கொஞ்ச காலத்துக்கு முன்பு ஏற்பட்ட புரட்சிக்கு என் முழு ஆதரவு இருந்ததால், இவர்களை எந்தத் தயக்கமும் இன்றி நானே கொன்றுபோட்டிருப்பேன்!”
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் தன் அம்மாவை பக்கத்து வீட்டுக்காரப் பெண் கெஸ்டப்போ படையைச் சேர்ந்த வீரர்களிடம் காட்டிக்கொடுத்தார். அதைப் பற்றி ஃபிரெஞ்சு சாட்சியாயிருந்த அவரது மகள் இவ்வாறு விவரித்தார்: “அதனால், என் அம்மா ஜெர்மன் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் இரண்டு வருஷம் கஷ்டப்பட்டார்கள்; கிட்டத்தட்ட சாகும் நிலைக்கே போய்விட்டார்கள். போருக்குப் பின் ஃபிரெஞ்சு போலீஸார் அம்மாவைக் காட்டிக்கொடுத்த அந்தப் பெண் ஜெர்மன் விரோதிகளுடன் ஒத்துழைப்பவர் என்ற குற்றச்சாட்டில் கையெழுத்து போட சொன்னார்கள். ஆனால் என் அம்மா கையெழுத்து போட மறுத்துவிட்டார்.” பின்னர், அந்தப் பெண்ணுக்கு புற்றுநோய் வந்து சாகக் கிடக்கையில் சம்பவித்ததைப் பற்றி அந்த மகள் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “அந்த பெண்ணின் வாழ்க்கை முடியும் சமயம் வந்துவிட்டது. அப்போது அம்மா தன்னால் இயன்ற அளவிற்கு அதிக நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு ஆறுதலளிக்க முயன்றார்கள். பகைமையின் மீது அன்பு வெற்றி வாகை சூடிய இந்நிகழ்ச்சி என் நெஞ்சத்தை விட்டு ஒருபோதும் அகலாது.”
ஜனங்கள் மற்றவர்களிடம் அன்பு காட்டக் கற்றுக்கொள்ளலாம்; அதில் சந்தேகமே இல்லை. முன்னாள் பகைவர்களான டூட்ஸியும் ஹூட்டுவும், யூதரும் அராபியரும், ஆர்மீனியரும் துருக்கியரும், ஜப்பானியரும் அமெரிக்கரும், ஜெர்மானியரும் ரஷ்யரும், புராட்டஸ்டண்டினரும் கத்தோலிக்கரும் பைபிள் சத்தியத்தின் காரணமாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்!
முன்பு பகைமையில் உழன்ற லட்சக்கணக்கானோர் இன்று அன்புக்கு உதாரணமாக வாழ்கின்றனரென்றால், உலகிலுள்ளோர் அனைவரும் நிச்சயமாகவே அவ்விதம் மாற முடியும். என்றாலும், எல்லா ஜனங்களும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டுமானால், உலகளாவிய மாற்றம் தேவை. அந்த மாற்றம் எப்படி வரும்?
[பக்கம் 7-ன் படங்கள்]
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களும் கறுப்பர்களும்
யூதர்களும் அராபியர்களும்
ஹூட்டுக்களும் டூட்ஸிக்களும்
அடையாள அர்த்தத்தில், சாட்சிகள் தங்கள் பட்டயங்களை அரிவாள்களாக அடித்திருக்கின்றனர்