ஓநாய்களிடமிருந்து ஆடுகளை காப்பாற்றினார்கள்
ஓநாய்களே மேற்கு ஐக்கிய மாகாணங்களில் ஆட்டு மந்தை உரிமையாளர்களுக்கு பெரும் தொல்லை கொடுப்பவை. மிருகங்களை கொல்ல அரசாங்க அனுமதி பெற்றவர்கள், 1996-ல் மட்டும் 82,000-க்கும் அதிகமான ஓநாய்களைக் கொன்றார்கள். அதோடு 1990 முதற்கொண்டு 6,00,000-க்கும் அதிகமான ஓநாய்கள் கொல்லப்பட்டுள்ளன. ஆனால் ஆடு வளர்க்கும் சிலர் தங்கள் மந்தையை பாதுகாக்க வேறொரு வழியை கண்டுபிடித்துள்ளனர். அந்த வழிதான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து லாமாக்களை இறக்குமதி செய்திருப்பது.
லாமா ஒட்டக இனத்தை சேர்ந்தது. அறிக்கையின்படி, இவ்வருட துவக்கத்தில் ஆண் ஒட்டகத்தை பெண் லாமாவுடன் இனக்கலப்பு செய்தார்கள். அவற்றிற்கு ஒட்டகத் தந்தையின் ஜாடையில் ஒரு குட்டி பிறந்தது. லாமாக்களின் எடை சுமார் நூறு கிலோ இருக்கலாம். இதன் உயரம் சராசரி 120 சென்டிமீட்டர். இதற்கு வெண்ணிற நீண்ட முடி உண்டு; அது கருப்பாகவோ பிரெளன் நிறமாகவும்கூட இருக்கும். ஆடுகளை கவனமாக மேய்த்து ஓநாய்களை அண்டவிடாமல் செய்வதே ஆட்டு மந்தை உரிமையாளர்களுக்கு இவை ஆற்றும் உதவி.
“அது ஓநாய்களை எட்டி உதைத்து, தலையை ஆட்டி பயமுறுத்தும்” என்று ஆட்டு மந்தை உரிமையாளர் பெக்கி வெட் கூறுகிறார். “கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் ஒரு ஆட்டைக்கூட ஓநாய்களுக்கு பறிகொடுக்கவில்லை.” ஆனால் இப்பிரச்சினைக்கு லாமாக்கள் நிரந்தரமான தீர்வில்லை என்பதை ஒப்புக்கொள்பவராய் வெட் இவ்வாறு சொல்கிறார்: “ஒருமுறை எங்கள் மந்தையினுள் கரடி புகுந்து நான்கு ஆடுகளை கொன்றது.”
சுற்றுச்சூழலின்மீது அக்கறையுள்ள ஆட்டு மந்தை உரிமையாளர்களின் ஒரு குழுவினர் குரோவெர்ஸ் கம்பளி கூட்டுறவு என்ற சங்கத்தை அமைத்தனர். இச்சங்கத்தினர் ஓநாய் போன்ற தாக்கும் விலங்குகளைக் கொலைசெய்யாமல் அவற்றிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்கும் முறையைப் பின்பற்றுகின்றனர். மேலும் ஆடுகளிலிருந்து கம்பளி இழைகளை எடுத்து விற்பனை செய்பவர்கள். லாமாக்கள் மட்டுமன்றி காவல் நாய்களும், பர்ரோ கழுதைகளும் ஆடுகளின் காவலாளிகளாக சேவை செய்கின்றன.
குரோவெர்ஸ் கம்பளி கூட்டுறவு, கம்பளி ஆடை உற்பத்திக்கு வீட்டில் இருந்துகொண்டே நெசவு செய்பவர்களோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். இப்படி வாங்கும் கம்பளி இழைக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது. அத்துடன் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கம்பளம் போன்ற மற்ற பொருட்களின் விலையோ எக்கச்சக்கம். எனவே மக்கள் இதற்கு ஜாஸ்தி விலை கொடுப்பார்களா? “எந்த வகை ஆட்டுப் பண்ணையிலிருந்து இந்தக் கம்பளி நெய்யப்பட்டது என்று சொன்னால் தருவார்கள். மக்கள் ஏன் இதை விரும்புகிறார்களென்றால் இந்த ஸ்வெட்டருக்கு பின்னால் சிறு கதையே இருக்கிறது” என்கிறார் நியூ யார்க்கில் காத்தம் என்ற டவுனில் உள்ள கடை உரிமையாளர்.