கவலை—“மெல்லக் கொல்லும் விஷம்”
“‘ரொம்ப கவலைப்படாதீங்க, உடம்புக்கு ஏதாவது ஆகப்போது’ என்று ஆட்கள் சொல்வதை நாம் எப்போதும் கேட்கிறோம். இதற்கு உண்மையில் உயிரியல் சார்ந்த அடிப்படை காரணம் இருக்கிறது என்பது அநேகமாக அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.”—டாக்டர் டேவிட் ஃபெல்டன்.
கல்யாணம் ஆகாமலே ‘தாய்’ என்ற பட்டத்தை சுமந்துகொண்டிருக்கும் ஜில் என்பவருக்கு, வாலிப வயதில் ஒரு மகன் இருக்கிறான். வங்கியில் உள்ள அவரது பணம் கரைந்துகொண்டே போகிறது. அம்மா அப்பாவுடன் அவருக்கு இருக்கும் உறவு எந்த நேரத்திலும் அறுந்துவிடலாம் என்ற அபாயநிலை வேறு. இவையெல்லாம் அவரை கவலையில் ஆழ்த்த ஏகப்பட்ட காரணங்கள். பிறகு, திடீரென்று நமைச்சலுடன் கூடிய எரிச்சல் தரும் தடிப்புகள் அவருடைய மேற்கையில் தோன்றின. அவர் ஆண்டிபையாட்டிக்ஸ் மருந்துகளையும், கார்டிசான் கிரீம்களையும், ஆண்டிஹிசுட்டமினையும் (antihistamines) போட்டுப்பார்த்தார், ஊஹூம் எதுவுமே கேட்கவில்லை. ஆனால், தடிப்புகள் ஜில்லின் உடம்பு பூராவும் பரவி, முகத்துக்கும்கூட பரவின. உண்மையில் கவலைதான் அவரை வாட்டிக்கொண்டிருந்தது.
நோயாளியின் உணர்ச்சிப்பூர்வமான நிலையை பரிசோதனை செய்யும் ஒரு தோல் மருத்துவமனைக்கு போகும்படி ஜில்லிடம் சொல்லப்பட்டது. அந்தக் கிளினிக்கை தொடங்கியவர்களில் ஒருவரான டாக்டர் தாமஸ் க்ராக் இவ்வாறு கூறினார்: “அவர்கள் [நோயாளிகள்] வாழ்க்கையில் என்ன சம்பவித்துக்கொண்டிருக்கின்றன என்பதை கண்டறிய நாங்கள் முயல்கிறோம்.” தீராத தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருந்தோடுகூட, அவர்களுடைய கவலையை சமாளிப்பதற்கான உதவியும் தேவை என்பது இவர் அடிக்கடி தெரிந்துகொண்ட உண்மை. “நீங்கள் இப்படி நினைக்கிறதாலே அல்லது நடந்துகொள்றதாலே தோல் வியாதி வந்தது என்று சொல்வது ரொம்பவும் சுலபம். ஆனால் தோல் வியாதிகள் வருவதில் ஒருவருடைய உணர்ச்சிப்பூர்வமான நிலை முக்கிய பங்கு வகிக்கிறது என்று நாங்கள் சொல்லவேண்டும். அந்த நபருக்கு அவருடைய கவலையை சமாளிக்க உதவியளிக்காமல், வெறுமனே மளமளவென்று ஸ்டிராய்ட் கிரீமை மாத்திரம் நாங்கள் எழுதிக்கொடுக்கக்கூடாது” என்பதை டாக்டர் க்ராக் ஒத்துக்கொள்கிறார்.
கவலையை சமாளிக்க கற்றுக்கொண்டதால் உண்மையில் தன் தோலை பாதுகாக்க முடிந்தது என்று ஜில் நினைக்கிறார். “அப்பப்போ அது வரத்தான் செய்கிறது, ஆனால் என் தோலின் நிலைமை முன்புபோல் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை” என்கிறார். கேட்பதற்கு வினோதமாக இருக்கிறதா? இதில் வினோதம் ஒன்றுமில்லை. அரிப்பு, தடிப்புகள், முகப்பரு, தோல்படை போன்ற பலவித சரும வியாதிகள் ஏற்பட பெரும்பாலும் கவலை ஒரு காரணமாக இருப்பதை நிறைய டாக்டர்கள் நம்புகிறார்கள். ஆனால், கவலை உங்கள் தோலை மட்டுமல்ல, இன்னும் அதிகத்தை சீரழித்துவிடும்.
கவலையும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும்
கவலையானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, எண்ணற்ற தொற்று வியாதிகளுக்கு வாசலை திறந்து வைத்து வா! வா! என்று அழைக்கலாம் என்பதை இன்றைய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. “கவலையால் நீங்கள் வியாதிவந்தவரைப்போல் உணரமாட்டீர்கள். ஆனால் அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிப்பதால், வியாதி வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது” என்கிறார் நுண்ணுயிரியல் நிபுணரான ரேனால்டு கிளேசர். குறிப்பாக, ஜலதோஷம், ஜுரம், தேமல் போன்ற வியாதிகள் கவலையோடு தொடர்புடையவை என்பதற்கு அசைக்கமுடியாத ஆதாரம் இருக்கிறது. இத்தகைய நோய்களை உண்டாக்கும் வைரஸ்களோடு நாம் இருபத்தி நான்கு மணிநேரமும் குஸ்தி போட்டுக்கொண்டிருந்தாலும் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அவற்றை அடித்து விரட்டுகின்றன. ஆனால் நாம் உணர்ச்சி ரீதியில் ரொம்ப கவலையாக இருக்கும்போது இந்த நோய் எதிர்ப்பு சக்தி தோல்வியைத் தழுவுகிறது என்பதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இவ்வாறு நிகழ்வதற்கு உடலில் என்ன உயிரியல் இயக்கம் நடைபெறுகிறது என்று இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் கவலையோடு இருக்கும்போது உங்களை செயல்பட தூண்டும் ஹார்மோன்கள் இரத்த நாளங்களின் வழியாக செல்லும்போது அநேகமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம் என்று ஒருசிலர் ஊகிக்கிறார்கள். இப்போது இதற்காக கவலைப்படவேண்டாம். ஏனென்றால் பொதுவாகவே இத்தகைய ஹார்மோன்கள் சும்மா தற்காலிகமா வந்து, தலைகாட்டிவிட்டு போய்விடுகின்றன. ஆனாலும், ஒருவருக்கு தீராத பெரும் கவலை இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்து, நோய்களுக்கு அடிபணிந்து விடுகிறது.
கனடா நாட்டிலுள்ள டாக்டர்கள் சுமார் 50 முதல் 70 சதம் நோயாளிகளுக்கு தலைவலி, தூக்கமின்மை, பயங்கர சோர்வு, வயிற்று கோளாறுகள் போன்ற கவலையோடு தொடர்புடைய வியாதிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக கணக்கு காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இப்போது புரிகிறது. அமெரிக்க மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 75-லிருந்து 90 சதம் வரை இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. எனவே, கவலையை “மெல்லக் கொல்லும் விஷம்” என்று அழைப்பது மிகை அல்ல என்று டாக்டர் ஜீன் கிங் நினைக்கிறார்.
இதுவே நோய்காரணியுமல்ல, நோய்நிவாரணியுமல்ல
மேற்சொன்ன காரணங்கள் இருந்தாலும், வெறும் கவலை மாத்திரம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதித்து, மருத்துவ சிகிச்சை பெறும் நிலைமைக்கு ஒருவரை கொண்டு செல்லுமா என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள். யாருக்கெல்லாம் கவலை இருக்கிறதோ, ஒருவேளை தீரா கவலையே இருந்தாலும்கூட அவர்கள் எல்லாருக்கும் நோய் பிடித்துக்கொள்ளும் என்று கண்மூடித்தனமாக சொல்லிவிட முடியாது. அதேசமயத்தில், கவலை இல்லையென்றால் கண்டிப்பாக நல்ல ஆரோக்கியம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. எனவே, நம்பிக்கையான மனநிலையோடு இருந்து, நல்லதே யோசித்தால் நோயை விரட்டிவிடலாம் என்று தவறாக நினைத்து, மருத்துவ சிகிச்சையே வேண்டாம் என தப்புக்கணக்கு போடக்கூடாது. டாக்டர் டானியேல் கோல்மேன் இவ்வாறு எச்சரிக்கிறார்: “மனநிலை-சர்வரோக நிவாரணி என்ற கருத்து உருவாகியுள்ளதால், எந்த அளவுக்கு மனநிலை வியாதியை பாதிக்கிறது என்பதில் எழுந்துள்ள குழப்பமும், தவறான புரிந்துகொள்ளுதலும் எல்லாவிடங்களிலும் பரவியிருக்கிறது. சில நேரங்களில் இதைவிட கொடுமை என்னவென்றால், ஏதோ ஒழுக்கம் தவறியதால் அல்லது ஆன்மீக ரீதியில் தகுதியற்று போனதால் நோய் வந்தது என்று மக்களை நினைக்கும்படி செய்து, அவர்களை குற்றவுணர்வால் வாட்டியெடுக்கிறது.”
ஆகவே, வியாதிக்குக் காரணம் இதுதான் என்று ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது என புரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், கவலைக்கும் வியாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால், கவலை என்னும் இந்த ‘மெல்லக் கொல்லும் விஷத்தை’ எப்படி முறிப்பது என்று கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், அதை எப்படி கற்றுக்கொள்வது என்று பார்ப்பதற்கு முன், கவலையின் இயல்பை சற்று உன்னிப்பாக கவனித்து, இதே கவலை சிலருக்கு எப்படி நன்மையையும் அளிக்கிறது என்பதை காண்போம்.
[பக்கம் 5-ன் பெட்டி]
கவலையோடு சொந்தம் கொண்டாடும் ஒருசில வியாதிகள்
• அலர்ஜிகள்
• மூட்டுவலி
• ஆஸ்துமா
• முதுகு, கழுத்து, தோள்பட்டை வலி
• ஜலதோஷம்
• மனச்சோர்வு
• பேதி
• ஜுரம்
• வயிற்றுக் கோளாறுகள்
• தலைவலி
• இருதய கோளாறுகள்
• தூக்கமின்மை
• ஒற்றைத்தலைவலி
• குடல் புண்
• பாலியல் குறைபாடுகள்
• தோல் வியாதிகள்
[பக்கம் 6-ன் குறிப்பு]
நிறையப் பேர் மருத்துவரிடம் வர காரணமே கவலைதான்