குற்றச்செயல் இல்லா ஓர் உலகம் விரைவில்!
இன்றைய உலக சூழ்நிலையை நாம் காண்கையில், தவறானதைச் செய்ய செல்வாக்கு செலுத்தப்படுவதைத் தவிர்ப்பது மிக சிரமம் என்பது தெளிவாயுள்ளது. உண்மையில், நாம் அனைவருமே அபூரணராக பிறந்திருக்கிறோம், ஆகவே தவறான காரியங்களைச் செய்யும் மனப்போக்கு நம்மிடம் உண்டு. (1 இராஜாக்கள் 8:46; யோபு 14:4; சங்கீதம் 51:5) மேலும் பிசாசாகிய சாத்தான் பரலோகத்தினின்று தள்ளப்பட்டதிலிருந்து, தொல்லை கொடுக்க முன்பைவிட அதிகமாக முயற்சி செய்து வருகிறான்.—வெளிப்படுத்துதல் 12:7-12.
அதன் விளைவுகளோ, பயங்கரமாய் இருந்திருக்கின்றன. உதாரணமாக, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 4,000 பிள்ளைகளிடம் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு, 11 மற்றும் 15 வயதுக்கு இடைப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்கெனவே குற்றச்செயல்களைச் செய்திருந்தனர் என காட்டியது. பிரிட்டன் முழுவதிலும் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு, கிட்டத்தட்ட மூன்றுக்கு ஒன்று என்ற விகித டீனேஜர்களுக்கு, கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருள்களைத் திருடுவதில் தயவுதாட்சண்யமே இருந்ததில்லை என காட்டியது. மேலும் பாதிக்கு மேற்பட்டோர், மீதி சில்லறையை கூடுதலாய்ப் பெற்றுக்கொண்டபோது, அதைத் தாங்களே வைத்துக்கொள்வர் என்பதை ஒத்துக்கொண்டனர்.
மக்கள் ஏன் திருடுகின்றனர் என்ற விஷயத்தில் அதிகப்படியான தகவலை அளிக்கிறது, லோக்காஸ்யோனே ஏ ஐவாமோ லாட்ரோ (சந்தர்ப்பமும் திருடனும்) என்ற இத்தாலிய புத்தகம். திருடர்களுக்கு “குறைந்தளவான சுயக்கட்டுப்பாடு” இருப்பதாகவும், அவர்களது “ஆசையை அடக்க முடியாமல்” இருப்பதாகவும் அந்தப் புத்தகம் கூறுகிறது. பெரும்பாலான திருடர்கள் இதையே தொழிலாக செய்பவர்களல்ல; ஆனால் வெறுமனே “சந்தர்ப்பங்களைத் தங்களுக்கு சாதகமாய் வசப்படுத்திக் கொள்ள விரும்பும் சந்தர்ப்பவாதிகளாகவே” இருக்கின்றனர் எனவும் அந்தப் புத்தகம் கூடுதலாக தெரிவிக்கிறது.
ஏன் அநேகர் “சட்டங்களை மீறுவதில்லை” என்பதன் பேரிலும் இந்தப் புத்தகம் குறிப்பு தெரிவிப்பது அக்கறைக்குரியது. அதற்குக் காரணம், அவர்கள் “சட்ட நடவடிக்கைகளுக்குப் பயப்படுவதால் அல்ல; ஆனால் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பவை அவர்களுடைய தார்மீக மதிப்பீடுகளே” என அது இறுதியில் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட சரியான தார்மீக மதிப்பீடுகளை மக்கள் எங்கிருந்து கற்றுக்கொள்கின்றனர்?
தேவையான கல்வி
தகவல் மூலங்கள் பல என்ன கற்றுக்கொடுக்கின்றன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, திரைப்படங்கள் மற்றும் டெலிவிஷன் மூலமாக பெறப்படும் பொதுவான செய்தியானது, வன்முறை, விபசாரம், துர்ப்பிரயோக நடத்தைகள் ஆகியவை சர்வசாதாரணமான விஷயம் என்பதே. ஆகவே, மக்களுக்கு சுயக்கட்டுப்பாடு குறைவாகவே இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. மறுபட்சத்தில், பைபிள் இவ்வாறு ஞானமாக கற்பிக்கிறது: “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.”—நீதிமொழிகள் 16:32.
இன்றைய விளம்பரங்களைக் கருத்தில் கொள்ளுகையில், அவற்றில் பல “ஆசையை அடக்க முடியாதபடி” கவர்ச்சியாக இருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை. பின்வருவனவற்றை திரும்பத்திரும்ப மக்கள் கேட்கின்றனர்: “பொருள் இப்போது பணம் பிற்பாடு.” “பொன்னான வாய்ப்பை இழந்துவிடாதீர்.” “நம்பர் ஒன் ரகம், உங்களுக்காகவே.” “உங்கள் ஆசைக்கு அணைபோட வேண்டாம்.” ஆத்மதிருப்தி எனப்படுவது சாதாரணமானதும் சரியானதாகவும் காட்டப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட சுயநல நோக்கு, “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்ற பைபிள் போதகத்துக்கு முரணாக இருக்கிறது.—பிலிப்பியர் 2:4.
நேர்மையற்றவர்களாய் இருக்கும் பெரும்பான்மையர் சந்தர்ப்பவாதிகள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? வருத்தகரமாக, சொந்த ஆதாயத்துக்காக சூழ்நிலைகளைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ளும் மனமுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட செயல் தார்மீக அடிப்படையில் சரியா என அவர்கள் கேட்பதில்லை. அவர்களுடைய ஒரே குறி, ‘அமுக்கமாக காரியத்தை முடித்துவிடலாமா?’ என்பதுதான்.
என்ன தேவை? மேலே குறிப்பிடப்பட்டபடி, தார்மீக மதிப்பீடுகளே தேவை. இவையே குற்றச்செயல் நடவடிக்கைகளிலிருந்தும், உயிரின் புனிதத்தன்மைக்கு மதிப்பு கொடாமல் இருப்பதிலிருந்தும், திருமணத்தின் பரிசுத்தத்தன்மையை மீறுவதிலிருந்தும், சரியான நடத்தைக்கான வரம்பை மீறுவதிலிருந்தும், மற்றபடி பிறரது உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்தும் மக்களைத் தடுக்கும். இப்படிப்பட்ட மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளாதவர்கள், பைபிள் சொல்வதன்படி, “எல்லாவித தார்மீக உணர்வுகளையும் . . . இழந்திருக்கிறார்கள்.” (எபேசியர் 4:19, NW) தேவபக்தி இல்லாத இப்படிப்பட்டவர்களின் குற்றச்செயல் நடத்தையே குற்றச்செயல் இல்லா ஓர் உலகில் வாழ்வை அனுபவிக்காதவாறு நம்மைத் தடுக்கிறது.
ஒரு புதிய உலகம் வருவது எப்படி
அநேகர் நேர்மையாய் இருக்கவும், தங்கள் உடன் மனிதரை மரியாதையுடனும் கரிசனையுடனும் நடத்தவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் தங்களால் ஆன மிகச்சிறந்ததை முயலுகிறார்கள். ஆனால், இந்த உலகிலுள்ள அனைவருமே இவ்வாறு முயலுகிறார்கள் என்று நினைப்பது பேதைத்தனமே. நீதிமானாயிருந்த நோவாவின் நாட்களில் வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையோர் சரியானதைச் செய்ய மனமற்றவர்களாய் இருந்ததைப் போலவே, இப்போதும் அநேகர் இருப்பார்கள். வன்முறை நிறைந்த அந்த உலகில், நோவாவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே தேவபக்தியற்ற நடத்தையிலிருந்து விலகி இருந்ததன் மூலமாக கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றனர். தேவபக்தியற்றவர்களை பூகோள ஜலப்பிரளயத்தினால் அழிப்பதன் மூலம், தற்காலிகமாக குற்றச்செயல் இல்லா ஓர் உலகை நம் சிருஷ்டிகர் ஏற்படுத்தினார்.
ஜலப்பிரளயத்தையும் தேவபக்தியற்றவர்களின் அழிவையும் பற்றிய பைபிள் பதிவு, வெறுமனே ஒரு சுவாரஸியமான கதை என்பதைக் காட்டிலும் அதிகமானது என்பதை ஞாபகத்தில் வைப்பது முக்கியம். இயேசு கிறிஸ்து பின்வருமாறு விளக்கினார்: “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.” (லூக்கா 17:26; 2 பேதுரு 2:5; 3:5-7) ஜலப்பிரளயத்துக்கு முன்பு இருந்த அந்த வன்முறையான உலகை கடவுள் அழித்ததுபோலவே, இந்தக் குற்றச்செயல் நிறைந்த உலகையும் அழிப்பார்.
இயேசுவின் அன்பான அப்போஸ்தலன் யோவானால் பின்வருமாறு தெரிவிக்கப்பட்ட உண்மையை ஒரு நம்பத்தகுந்த புத்தகத்தில் நாம் வாசிக்கிறோம்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) இந்த உலகின் முடிவு, ஒரு புதிய உலகுக்கு வழி வகுக்கும்; அங்கு, ‘அவர்களிடத்திலே [மனுஷர்களிடத்திலே] அவர் [தேவன்] வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை’ என பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
அந்தப் புதிய உலகம் எப்படி வரும் என்பதைப் பற்றி விளக்கமளிப்பதாய், பைபிள் பின்வருமாறு மேலும் சொல்கிறது: “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” (நீதிமொழிகள் 2:22) நீதிமான்கள் மட்டுமே பூமியில் மீந்திருக்கையில், பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படும்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
கடவுளுடைய புதிய உலகில், விலங்குகளும்கூட சாதுவானவையாய் ஆகிவிடும். பைபிள் முன்னறிவிப்பதாவது: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான். . . . என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:6-9; 65:17; 2 பேதுரு 3:13.
கடவுளுடைய புதிய உலகம் அருகில்
இப்படிப்பட்ட அமைதி தவழும் நிலைமைகள் விரைவில் பூமி முழுவதிலும் நிஜமாகவே ஏற்படும் என்பதே நற்செய்தி. நாம் ஏன் அவ்வளவு நிச்சயமாய் இருக்கலாம்? இந்த உலக முடிவுக்கு சற்று முன்பு என்ன நடக்கும் என்று இயேசு முன்னுரைத்தாரோ, அதை வைத்து நாம் நிச்சயமாய் இருக்கலாம். மற்ற விஷயங்களோடுகூட, அவர் முன்னுரைத்ததாவது: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” மேலும் அவர் சொன்னதாவது: “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.”—மத்தேயு 24:7, 12.
இயேசுவின் ஓர் அப்போஸ்தலனும்கூட இவ்வாறு முன்னுரைத்தார்: ‘[இந்த உலகின்] கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், . . . இருப்பார்கள்.’ (2 தீமோத்தேயு 3:1-5) நிச்சயமாகவே, நாம் இந்த உலகின் “கடைசிநாட்களில்” வாழ்ந்து வருகிறோம்! ஆகவே, விரைவில், இது கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகால் மாற்றியமைக்கப்படும்!
பைபிளைப் படித்தது, குற்றச்செயல் இல்லா ஓர் உலகம் சாத்தியம் என்று லட்சக்கணக்கானோரை நம்பச் செய்திருக்கிறது; அதோடு, நம் படைப்பாளரான யெகோவா தேவனுடைய வழிகளில் நடக்க போதிக்கப்படுவதற்கான அழைப்பின் பேரில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். (ஏசாயா 2:3) நீங்களும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறீர்களா? குற்றச்செயல் இல்லா ஒரு புதிய உலகில் ஜீவனைப் பெற முயலுவதற்கு நீங்கள் தயாரா?
முதலில் என்ன தேவை என்று இயேசு காட்டினார். அவர் விளக்கினதாவது: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” இவ்வாறு, நீங்கள் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும், கற்றுக்கொள்வதற்கு ஏற்றாற்போல் செயல்படுவதன் பேரிலுமே உங்கள் நித்திய நன்மை சார்ந்திருக்கிறது.—யோவான் 17:3.
[பக்கம் 8, 9-ன் படம்]
பைபிள், குற்றச்செயல் இல்லா ஒரு புதிய உலகைப் பற்றியும் நாம் அதை அனுபவிப்பது எப்படி என்பதைப் பற்றியும் விவரிக்கிறது