எமது வாசகரிடமிருந்து
மாரடைப்பு எங்களை ஆவிக்குரிய வகையில் வழிநடத்தி வருவதோடு, எங்கள் உடல்நலனிலும் அக்கறை காட்டும் ஓர் அமைப்பில் இருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன். “மாரடைப்பு—என்ன செய்யலாம்?” (டிசம்பர் 8, 1996) என்ற தொடர்கட்டுரை, மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ளும் விதத்தை எங்களுக்குக் காட்டியது. என் மாமனாருக்கு இந்த அறிகுறிகள் தோன்றியபோது, அவருடைய நிலைமை மோசமானதாய் இருக்கலாம் என்று நினைத்து, அவரை ஓர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது; ஆனால், ஆஸ்பத்திரியில் 24 நாட்கள் இருந்த பிறகு, அவர் ஆபத்தான கட்டத்தைக் கடந்துவிட்டார்.
இ. எஸ்., பிரேஸில்
என் அப்பா பெருந்தமனி வீக்கத்தால் 1995-ல் காலமானார்; இந்த இதழை முதலில் நான் பார்த்தபோது, அதை வாசிக்க எனக்குத் தைரியமில்லை. என்றாலும், ஒரு மாதம் கழித்து அதை நான் வாசித்தேன்; அந்தக் கட்டுரைகள் எனக்கு ஆறுதலாய் இருந்தன. ஒரு குடும்பத்தில் இதய நோய் ஏற்படுத்தும் துக்கத்தை மற்றவர்களும் அனுபவித்திருக்கின்றனர் என்பதை அறிந்துகொண்டேன்.
எஸ். ஜே., கனடா
கடந்த ஜூலையில், வீட்டுக்குவீடு பிரசங்க வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, என் கணவர் துவண்டுவிட்டார்; அவரை உடனே ஓர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல வேண்டியதாகிவிட்டது. சந்தோஷகரமாக, ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துவிட்டார். உங்கள் கட்டுரைகள் சரியான நேரத்தில் எங்களுக்குக் கிடைத்தன. “குடும்பங்களுக்கு ஆதரவு தேவை” என்ற பகுதியைக் கண்டபோது எங்களுக்கு அழுகை அழுகையாய் வந்தது; ஏனெனில் அங்கு சொல்லப்பட்டிருந்த அதே உணர்வுதான் எங்களுக்கும் இருந்தது.
எம். ஏ., ஜப்பான்
கடந்த ஞாயிறு, என் இடது கையில் வலி இருந்துகொண்டே இருந்தது; என் கைவிரல்களின் நுனிப்பகுதி மரத்துப்போய் இருந்தன. அது சாதாரண வலியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். மாரடைப்பு பற்றிய உங்கள் கட்டுரைகளை வாசித்தேனோ இல்லையோ, அதற்கான அறிகுறிகளேதான் என்று தெளிவாய்த் தெரிந்துகொண்டேன்! ஓர் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் நான் சேர்க்கப்பட்டேன்; என் இதயத்திற்குச் செல்லும் முக்கிய தமனிகள் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டிருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அடுத்த நாள் எனக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். உங்கள் கட்டுரைகள் மட்டும் எழுதப்பட்டிராவிடில், இந்த நன்றிக் குறிப்பை உங்களுக்கு எழுத இப்பொழுது நான் இங்கு இருந்திருக்க மாட்டேன் என்பது நிச்சயம்!
என். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
“மாரடைப்பின் அறிகுறிகள்” என்ற பெட்டியில் போடப்பட்டிருந்த விஷயத்தை நான் குறிப்பாக மதித்துணர்ந்தேன். அது, எங்கள் பிரச்சினைகளில் நீங்கள் உன்னிப்பான அக்கறை எடுக்கிறீர்கள் என்றும், அவற்றை சமாளிக்க எங்களுக்குத் தேவையானவற்றை அளிக்கிறீர்கள் என்றும் என்னைப் புரிந்துகொள்ளச் செய்தது.
எம். பி., செனிகல்
என் அப்பாவுக்கு ஒரு சமயம் மாரடைப்பு ஏற்பட்டிருந்ததிலிருந்து, எங்கள் வீட்டுச் சூழலே மாறிவிட்டது. இந்தக் கடினமான சூழ்நிலைகளின்போது, இந்தக் கட்டுரைகள் எங்களுக்கு மிகவும் ஆறுதல் அளித்தன.
பி. ஜி., இத்தாலி
மனைவிக்குரிய கீழ்ப்படிதல் “பைபிளின் கருத்து: மனைவிக்குரிய கீழ்ப்படிதல்—எதை அர்த்தப்படுத்துகிறது?” (டிசம்பர் 8, 1996) என்ற கட்டுரையை உண்மையிலேயே நான் மதித்துணர்ந்தேன். என் கணவர் சத்தியத்தில் இல்லை; அதனால் சில சமயங்களில் அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பது கடினமாய் இருக்கிறது. அவரை ஆதாயப்படுத்திக் கொள்வதற்காக என்னால் முடிந்தவரை மிகச் சிறந்த முன்மாதிரி வைக்க எனக்கு விருப்பம். (1 பேதுரு 3:1, 2) ஆனாலும், யெகோவாவின் சேவையில் உறுதியாய் இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் கட்டுரை என்னை உற்சாகப்படுத்தியது; என் தேவன் என்னைக் கவனிக்கிறார் என்பதை அறிந்தபோது மகிழ்ச்சிகொள்ளச் செய்தது.
எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் அறிவொளியூட்டியது. சாத்தானிடமிருந்து அழுத்தங்கள் அளவுக்கதிகமாய் வந்துகொண்டிருப்பதால், விசுவாசத்தில் நிலைத்திருக்க இப்படிப்பட்ட தகவல் எங்களுக்குத் தேவை. குறிப்பாக, ஒரு மனைவி பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் முன்முயற்சி எடுப்பதால் குற்றவுணர்வுகொள்ளத் தேவையில்லை என்றும் காட்டுவதற்காக குறிப்பிடப்பட்டிருந்த அபிகாயிலைப் பற்றிய பைபிள் உதாரணத்தை குறிப்பாக நான் வாசித்து மகிழ்ந்தேன்.
டி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
லூயி பாஸ்டர் எனக்கு 12 வயது; “லூயி பாஸ்டர்—அவரது ஆராய்ச்சி எதை வெளிப்படுத்தியது” (டிசம்பர் 8, 1996) என்ற கட்டுரையை நான் போற்றியதை உங்களிடம் தெரிவிக்க எனக்கு விருப்பம். என் அறிவியல் வகுப்பில் அவரைப் பற்றி நாங்கள் கற்றுவருகிறோம். இந்தக் கட்டுரையை ஒரு ரிப்போர்ட் எழுத நான் பயன்படுத்தினேன்; கூடுதலாக பத்து மதிப்பெண்களை சன்மானமாகப் பெற்றேன்!
ஏ. பி., ஐக்கிய மாகாணங்கள்