உலகப் புகழும் இதற்கு நிகராகாது
ஐரோப்பாவில் நான் ஒரு சிற்பியாக பெயரெடுத்து பல வருடங்கள் கழித்து, “உங்கள் கலைத்திறத்தையே வீணாக்கிவிட்டீர்களே!” என இன்னொரு கலைஞர் என்னை குற்றஞ்சாட்டினார். ஏன் என்று சொல்வதற்கு முன்பு, முதலில் நான் எப்படி ஒரு சிற்பியாக ஆனேன் என்று சொல்கிறேன்.
என்னுடைய பிறப்பிடமான ஔரிசினா கிராமத்தில், பெரும்பாலானவர்கள் ஒரு பழங்கால கற்சுரங்கத்தில் வேலைசெய்தனர். ஔரிசினா, இத்தாலியின் வடக்குப்பகுதியில், ட்ரியஸ்டவுக்கு பக்கத்திலும் முன்னாள் யுகோஸ்லாவியா அருகேயும் இருக்கிறது. 15 வயதாயிருக்கையில் நானும் அந்தக் கிராமத்திலுள்ள கற்சுரங்கத்தில் வேலைசெய்ய ஆரம்பித்தேன். அது 1939-ம் வருடம்; அப்போதுதான் இரண்டாவது உலகப் போர் ஆரம்பமானது. என் வேலையே கற்கள் சம்பந்தமானதாய் இருந்ததால், ஒரு புகழ்பெற்ற சிற்பியாக வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் தோன்றியது. எப்போதுமே சாகாமல் இருக்க வேண்டுமென்றுகூட நான் ஆசைப்பட்டேன். இந்த இரண்டு ஆசைகளுமே எட்டாத கனிகளாய் தோன்றின.
போர் 1945-ல் முடிவடைந்தபோது, என் அக்காவுடன் தங்குவதற்காக நான் ரோமில் குடியேறினேன். அங்கே கலைக் கல்லூரியில் சேர விரும்பினேன். மூன்று வருட படிப்பிற்கு கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தபோது, கனவு நனவான சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை! என் படிப்பிற்கு அநேக தரும ஸ்தாபனங்கள் நிதியுதவி அளித்தன.
ஆன்மீக பசி
நான் மதக் கூட்டங்களுக்கு செல்வதன் மூலம் என் ஆன்மீக பசியைத் தீர்த்துக்கொள்ள முற்பட்டேன்; சால்வேஷன் ஆர்மி, வால்டென்ஸஸ் போன்ற கூட்டங்களுக்கும் சென்றேன். ஜெஸூட் யூனிவர்ஸிட்டி ஒன்றிலும் நான் பாடங்கள் பயின்றேன்; ஒருமுறை ஒரு பிஷப் நடத்திய மூன்றுநாள் கருத்தரங்கிற்கும் சென்றிருந்தேன். அங்கே, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதற்கு அனுமதியில்லை; ஜெபம் செய்வதற்கும் தியானிப்பதற்கும் பாவமன்னிப்பு செய்வதற்கும் பிஷப்பின் பேச்சுக்களைக் கேட்பதற்குமே எங்களை அர்ப்பணித்தோம்.
என் விசுவாசம் உறுதியாகவில்லை என்பதை அதன் பிற்பாடு நான் உணர்ந்தேன். “ஏன் பலமான விசுவாசம் எனக்கில்லை?” என்று பிஷப்பிடம் கேட்டேன்.
“விசுவாசம் என்பது கடவுள் தரும் பரிசு; அவருக்கு விருப்பமானவர்களுக்குத்தான் அதைக் கொடுப்பார்” என பிஷப் சொன்னார். அவர் சொன்ன பதில் எனக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்ததால் நான் கடவுளைத் தேடுவதையே விட்டுவிட்டு, எல்லா நேரத்தையும் கலைப் படிப்புக்கே செலவழிக்க ஆரம்பித்தேன்.
உலகப் புகழ்பெறுதல்
1948-ல் ரோமில் பள்ளிப் படிப்பை முடித்த பிற்பாடு, ஆஸ்திரியாவின் வியன்னாவிலுள்ள கலைக் கல்லூரியில் படிப்பதற்கு எனக்கு ஒரு-வருட ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அடுத்த வருடம் அங்கே எனக்கு பட்டம் கிடைத்தது; (முன்பு யுகோஸ்லாவியாவின் பாகமாயிருந்த) ஸ்லோவினியாவிலுள்ள லியூப்ளியானாவில் என் படிப்பைத் தொடர ஒரு-வருட ஸ்காலர்ஷிப்பை பெற்றேன். கலைக்கு மையமாக திகழும் பிரான்ஸிலுள்ள பாரிஸுக்குச் செல்வதே அப்போது என் லட்சியமாக இருந்தது.
எனினும், 1951-ல், ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் வேலை செய்வதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பாரிஸில் என் கலைப்பயிற்சியைத் தொடர்வதற்காக பணத்தை சேமிக்கும் நோக்கில் நான் அங்கே குடியேறினேன். ஆனால் அங்கு நான் மிக்கியை சந்தித்தேன்; 1952-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டு, ஸ்டாக்ஹோமில் செட்டில் ஆனோம். ஒரு சின்ன பட்டறையில் எனக்கு வேலை கிடைத்தது; அங்கு கல், பளிங்கு, கிரானைட் போன்றவற்றைக்கொண்டு நான் சிற்பங்கள் செய்தேன். அவற்றில் சில, ஸ்டாக்ஹோமிற்கு அருகே, லிடிங்கர் பட்டணத்திலுள்ள பூங்காவும் அருங்காட்சியகமுமான மில்லஸ்கார்டனில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
வெண்கல வார்ப்பின் பழைய முறையான மெழுகு-உருகும் முறையை ரோமில் கற்றிருந்தேன்; ஸ்டாக்ஹோமிலுள்ள கலைத்தொழில் பயிற்சிப் பள்ளியிலும் கலைக் கல்லூரியிலும் வெண்கல வார்ப்பைக் கற்றுக்கொடுத்தேன். பின்னர், ஸ்டாக்ஹோமிலுள்ள ஸ்கான்ஸன் திறந்தவெளி மியூஸியத்திலுள்ள வெண்கல வார்ப்பாலையைப் பயன்படுத்த எனக்கு அனுமதி கிடைத்தது. அங்கு, அடிக்கடி பார்வையாளர்களுக்கு முன்பாக, நான் வெண்கலத்திலும் ஈயத்திலும் சிற்பங்கள் செய்தேன். ஸ்வீடன் நாட்டின் அப்போதைய ராஜாவான குஸ்தாவ் VI என்பவருக்கு சொந்தமான பழங்காலத்திய சிற்பங்களைப் புதுப்பிக்க நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். இவை ஸ்டாக்ஹோமிலுள்ள ராயல் பாலஸிலும், ட்ராட்னிங்ஹோமைச் சேர்ந்த கோட்டையிலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
1954-க்கும் 1960-க்கும் இடையே, என் படைப்புகளுக்கு செய்தியாளர்களிடமிருந்தும் கலை விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டு கிடைத்தது. ஸ்டாக்ஹோம், ரோம், லியூப்ளியானா, வியன்னா, ஜாக்ரெப், பெல்கிரேட் ஆகியவை உட்பட, ஐரோப்பாவிலுள்ள முக்கிய நகரங்களில் என்னுடைய அநேக சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பெல்கிரேட்டில், மார்ஷல் டிட்டோ தனது சொந்த சேகரிப்பிற்காக என்னுடைய சில சிற்பங்களை வாங்கினார். ரோமிலுள்ள மாடர்ன் காலரியில் கருங்கல்லில் நான் செதுக்கிய தலையில்லாத பெரிய பெண் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது; வியன்னாவிலுள்ள ஆல்பர்டினா மியூஸியத்தில் என் கலைப்படைப்பு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாக்ஹோமிலுள்ள மாடர்ன் மியூஸியத்தில் என்னுடைய வெண்கல மற்றும் ஈய சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது; லியூப்ளியானாவிலுள்ள மாடர்ன் காலரியில் எனது வெண்கல சிற்பம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் மதத்தில் ஆர்வம்
திருமணமாகி ஒருசில வருடங்களுக்குப் பிற்பாடு, எனக்கு மீண்டும் மதத்தில் ஆர்வம் உண்டாவதை மிக்கி கவனித்தாள். ‘ஆரம்ப கிறிஸ்தவர்கள் எதற்காக சாக தயாராயிருந்தார்களோ அந்த விசுவாசம் எங்கே?’ என சிந்தித்துக்கொண்டே இருந்தேன். பெந்தெகொஸ்தே, அட்வென்ட்டிஸ்ட் போன்ற மதக் கூட்டங்களுக்கு மறுபடியும் போக ஆரம்பித்தேன். இஸ்லாம் மதத்தையும் புத்த மதத்தையும்கூட நான் ஆராய்ந்தேன்.
1959-ல், இத்தாலியிலுள்ள மிலானில் ஒரு கலைக் கண்காட்சிக்கு செல்வதற்கு முன், ஒருசில நாட்களுக்கு என் சொந்த கிராமமான ஆரிசினாவிற்கு சென்றேன். பைபிளை கரைத்துக்குடித்த ஒரு நபர் அங்கிருப்பதாக அந்தக் கிராமத்துவாசிகள் என்னிடம் சொன்னார்கள். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவரிடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, பைபிளிலிருந்து, நான் அதற்குமுன் பார்த்திராத காரியங்களை அவர் என்னிடம் காண்பித்தார். மனிதனே ஒரு ஆத்துமா, அவனது உடலிலிருந்து பிரிந்த ஒரு ஆத்துமா அவனுக்குள் இல்லை என்பதையும், மனித ஆத்துமா சாகும் என்பதையும், மற்ற மதங்கள் கற்பிப்பதுபோல அது என்றும் வாழும் ஒன்றல்ல என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.—ஆதியாகமம் 2:7; எசேக்கியல் 18:4.
அதுமட்டுமல்ல, கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, அவர்கள் சாக வேண்டுமென்பதல்ல, ஆனால் பூமியில் சந்தோஷமாக என்றென்றும் வாழ வேண்டுமென்பதே அவரது நோக்கமாயிருந்தது என்றும் அவர் என்னிடம் சொன்னார். முதல் மனிதத் தம்பதி, கீழ்ப்படியாமையினால் இறந்தனர். (ஆதியாகமம் 1:28; 2:15-17) தமது குமாரனை, மீட்கும் கிரய பலியாக கொடுப்பதன் மூலம், கீழ்ப்படியாமையால் ஆதாம் இழந்த நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்பை மனிதர்களுக்கு கடவுள் ஏற்பாடு செய்தார் என்று நான் கற்றுக்கொண்டேன். (யோவான் 3:16) இந்த விஷயங்களையெல்லாம் கற்றுக்கொண்டதில் எனக்கு அளவில்லா சந்தோஷம்.—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.
ஒரு திருப்புக்கட்டம்
கொஞ்ச காலத்துக்குள்ளாகவே, நான் ஸ்வீடனுக்குத் திரும்பினேன்; நானும் மிக்கியும் அங்கு யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர்களது விலாசத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், ஒருசில நாட்கள் கழித்து, எங்கள் வீட்டில் அழைப்புமணி அடித்தது; வந்திருந்தது அவர்களேதான்! என்னிடம் அவர்கள் விட்டுச்சென்ற புத்தகத்தை நான் படிக்க ஆரம்பித்தேன். விரைவிலேயே, அதில் சத்தியம் அடங்கியிருந்தது என்று எனக்குத் தெளிவாய் தெரிந்தது. ஆனாலும், என் அபிப்பிராயம் சரிதானா என்பதை தெரிந்துகொள்ள எனது நீண்டகால நண்பர் ஒருவரிடம் பேச விரும்பினேன். அவர் ஒரு கத்தோலிக்க ஆர்ச்பிஷப்; 1940-களின் பிற்பகுதியில் ரோமில் நான் படித்துக்கொண்டிருந்தபோது அவரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆகவே ஜனவரி 1961-ல் நான் அவரைப் பார்க்க சென்றேன்.
அப்போது அவர் உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்க மிஷனரி நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்தார். எனக்கு என்னே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது! ஆர்ச்பிஷப்பிற்கு சாதாரண பைபிள் அறிவுகூட இல்லை என்பதை அறிந்து வியந்துபோனேன். மரணத்தில் என்ன ஏற்படுகிறது என்பதைப் பற்றி பேசியபோது அவர் சொன்னார்: “இப்போது நாம் நம்புவது ஒருவேளை முற்றிலும் தலைகீழாக மாறிவிடலாம்.” “புதிய வானங்களும் புதிய பூமியும்” பற்றிய பைபிளின் வாக்குறுதியை அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிட்டது பற்றி நாங்கள் பேசியபோது, அந்த வாக்குறுதியின் அர்த்தம் என்ன என்பது அவருக்கு தெரியவில்லை.—2 பேதுரு 3:13; ஏசாயா 65:17-25.
ஸ்டாக்ஹோமிற்கு நான் திரும்பிச்சென்றபோது, என் மனைவிக்கும் எனக்கும் பழக்கப்பட்டிருந்த ஒரு யெகோவாவின் சாட்சியுடன் நான் பைபிளைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மிக்கிக்கு படிப்பில் ஆர்வம் அதிகமானதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். இறுதியில், பிப்ரவரி 26, 1961-ல், யெகோவாவிற்கான ஒப்புக்கொடுத்தலை நான் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தினேன்; அதற்கடுத்த வருடம் மிக்கி முழுக்காட்டுதல் பெற்றாள்.
வேலையில் மாற்றங்கள் செய்தல்
1956-ல் ஒரு மகளும் 1961-ல் ஒரு மகனும் எங்களுக்குப் பிறந்தார்கள். இப்போது ஒரு குடும்பத்தை பராமரிக்க வேண்டியிருந்ததால், நிலையான வருமானம் எனக்குத் தேவைப்பட்டது. நான் பிறந்த கிராமத்தில் ஒரு பெரிய நினைவுச்சின்னத்தைக் கட்டுமாறு என்னிடம் கேட்கப்பட்டபோது நான் சந்தோஷமடைந்தேன். அது இரண்டாம் உலகப் போரில் இறந்த கொரில்லா வீரர்களின் நினைவாக கட்டப்படவிருந்தது. அந்த நினைவுச்சின்னம் எனக்கு அதிக வருமானம் தந்திருக்கும். ஆனால், என் குடும்பத்தைவிட்டும் கிறிஸ்தவ சபையைவிட்டும் மாதக்கணக்கில் பிரிந்திருக்க வேண்டும், கம்யூனிஸம் செழித்தோங்கும் ஒரு இடத்தில் வாழவேண்டியிருக்கும், அங்கு ஆவிக்குரிய காரியங்களை நாடுவது சுலபமாக இருக்காது போன்ற மற்ற அநேக விஷயங்களை சிந்தித்த பிறகு அந்த அளிப்பை நான் நிராகரித்துவிட்டேன்.
மற்றொரு வேலை, மனசாட்சியை உறுத்துவதாய் இருந்தது. ஸ்வீடனிலுள்ள ஒரு புதிய சவ எரிப்பு கட்டிடத்திற்கு பெரியளவில் அலங்கார வேலைப்பாடு செய்யும்படியாக நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அதை முடித்துக்கொடுத்த பிற்பாடு, திறப்புவிழாவிற்காக என்னை அழைத்தார்கள். ஆனால் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த பிஷப் என் வேலைப்பாட்டை திறந்துவைக்கப்போகிறார் என்பது எனக்கு தெரியவந்தபோது, கடவுளுடைய வார்த்தைக்கு நேரெதிரான போதனைகளையும் பழக்கவழக்கங்களையும்கொண்ட ஜனங்களோடு சேர்ந்து சடங்கில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்தேன்.—2 கொரிந்தியர் 6:14-18.
ஒரு சிற்பியாக நிலையான வருமானம் கிடைக்காதென்பதால், என் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை சரியாக கவனித்துக்கொள்வதை நான் கடினமாக காண ஆரம்பித்தேன். (1 தீமோத்தேயு 5:8) வயிற்றுப்பிழைப்புக்கு நான் என்ன செய்யலாமென்பதைக் குறித்து ஜெபசிந்தையோடு சிந்தித்தேன். அதன்பின், ஒரு கட்டிடக் கலைஞர், தான் வடிவமைத்திருந்த ஒரு கட்டிடத்தின் மாடலை எடுத்துக்கொண்டு என்னை வந்து சந்தித்தார். அதை ஃபோட்டோ பிடித்துத் தருமாறு என்னிடம் கேட்டார். என் சிற்பங்களை ஃபோட்டோ பிடித்து பழக்கப்பட்டிருந்ததால் எனக்கு அதில் நல்ல அனுபவம் இருந்தது; ஆகவே அந்த வேலையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். அந்த வருடங்களின்போது, ஸ்வீடனில் அதிக கட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன; அதற்கான மாடல்களை ஃபோட்டோ பிடிப்பது அவசியமாயிருந்தது. இப்படியாக, அநேக கட்டிட கலைஞர்களிடமிருந்து எனக்கு வேலை கிடைத்தது; என் குடும்பத்தையும் என்னால் நன்றாக பராமரிக்க முடிந்தது.
இந்தச் சமயத்தில்தான் ஸ்டாக்ஹோமிலுள்ள இத்தாலிய கல்ச்சுரல் இன்ஸ்டிட்யூட்டிற்கு, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்காக நான் சென்றேன். (மத்தேயு 24:14) அந்த இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநரை எனக்கு ஏற்கெனவே தெரியும்; அவரிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்தேன். நான் இனியும் சிற்பியாக வேலை செய்வதில்லை என்பதை தெரிந்துகொண்ட பின்புதான், “உங்கள் கலைத்திறத்தையே வீணாக்கிவிட்டீர்களே!” என அவர் சொன்னார். கடவுளுக்கும் என் குடும்பத்துக்குமே நான் முதலில் கடமைப்பட்டிருக்கிறேன் என நான் அவரிடம் விளக்கினேன்.
கொஞ்ச காலத்திற்கு கலைதான் என் உயிர் மூச்சாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும், என் தொழில்மீதே நான் தொடர்ந்து நாட்டங்கொண்டிருந்தால், இரு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முயற்சி செய்வதற்கு ஒப்பாயிருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். (மத்தேயு 6:24) எனக்கிருக்கும் மிக முக்கிய வேலை, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதே என்பது தெளிவாய் புரிந்தது. ஆகவே சிற்ப வேலையை விட்டுவிடுவதென்ற தனிப்பட்ட தீர்மானத்தை நான் எடுத்தேன்; யெகோவா தேவனும் அதிகளவில் என் தீர்மானத்தை ஆசீர்வதித்திருக்கிறார்.—மல்கியா 3:10.
கிறிஸ்தவ சேவை சிலாக்கியங்கள்
1970-களின் ஆரம்பப் பகுதியில், தென் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஸ்வீடனில் குடியேறியவர்களில் அநேகர் பைபிள் சத்தியத்தினிடமாக ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தனர். இவ்வாறு, 1973-லிருந்து, அவ்வாறு குடியேறியவர்களில், இத்தாலியன், ஸ்பானிஷ், செர்போ-குரோஷியன் ஆகிய மொழிகள் பேசியோருடன் பைபிளைப் படிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன்; இந்தப் பாஷைக்காரர்களுக்கு புதிய சபைகளையும் புத்தகப் படிப்பு தொகுதிகளையும் ஏற்பாடு செய்வதிலும் நான் உதவியாய் இருந்தேன். இத்தாலிய மொழியில் கிறிஸ்தவ மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கும் அவற்றில் பைபிள் நாடகங்களை இயக்குவதற்கும் நான் நியமிக்கப்பட்டேன். சிலசமயங்களில், ஸ்வீடனிலுள்ள சபைகளில் பயணக் கண்காணியாக சேவிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றிருந்தேன்.
ஸ்வீடனில் இத்தாலிய மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் உதவி புரிந்ததால், ரோமிலுள்ள உவாட்ச் டவர் கிளை அலுவலகத்தோடு எனக்குத் தொடர்பு இருந்தது. இத்தாலியில், பிரசங்க வேலை அந்தளவுக்கு அதிகரித்திருந்ததன் காரணமாக சபை மூப்பர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதென அங்கிருந்த சகோதரர்கள் என்னிடம் சொன்னார்கள். ஆகவே 1987-ல், மிக்கியும் நானும் இத்தாலியிலுள்ள ஜினோவாவிற்கு அருகேயுள்ள லிகுரியாவிற்கு குடியேறினோம். அப்போது எங்கள் பிள்ளைகள் பெரியவர்களாகி தனிக்குடித்தனம் நடத்திவந்தார்கள். இரண்டு அருமையான வருடங்களை இத்தாலியில் கழித்தோம், லிகுரியாவில் ஒரு புதிய சபையை உருவாக்குவதிலும் நாங்கள் உதவினோம். “யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வம் வருவிக்கும்” என நீதிமொழிகள் 10:22-ல் (தி.மொ.) சொல்லப்பட்டுள்ள உண்மையை நாங்கள் முழுமையாக ருசிபார்த்தோம்.
மிக்கியும் நானும் யெகோவாவிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் சிலசமயங்களில் நினைத்துப்பார்க்க முயற்சி செய்வோம்; ஆனால் அது நினைக்க நினைக்க தீராது. புதிய சபைகளை ஏற்படுத்துவதில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்று முதிர்ச்சிபெற்ற கிறிஸ்தவர்களாக ஆவதற்கு, எங்களது சொந்த பிள்ளைகள் உட்பட அநேகருக்கு எங்களால் உதவ முடிந்திருக்கிறது. புகழ்பெற்ற ஒரு சிற்பியாக வாழ்ந்த வாழ்க்கையைத் துறந்துவிட்டதை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை; ஏனென்றால் அதைவிட அதிக பலனளிக்கும், நமது அன்பான கடவுளாகிய யெகோவாவை சேவிக்கும் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இப்படியாக, என் நேசமான குடும்பத்தினரும் நானும் நித்திய ஜீவனுக்கான உறுதியான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம்; அதற்காக யெகோவாவிற்கு நன்றி.—ச்செலோ பெர்ட்டோ என்பவரால் சொல்லப்பட்டது.
[பக்கம் 13-ன் படம்]
1955-ல் ஒரு சிற்பத்தை செதுக்குகையில்
[பக்கம் 15-ன் படம்]
என் மனைவியோடு