சில புகழ்மிக்க தோட்டங்களிடமாக ஒரு நோட்டம்
ஏதேன் என்ற இடத்தில் அமைந்திருந்த தோட்டத்தில்தான் மனிதனுக்கு முதன்முதலில் பரதீஸை பற்றிய அனுபவம் ஏற்பட்டது. அநேகமாக தற்கால துருக்கியின் வான் ஏரிக்கு பக்கத்தில்தான் அந்த இடம் இருந்திருக்க வேண்டும். ஒரு நதி, நான்கு கிளை ஆறுகளாகப் பிரிந்து ஆதாம் ஏவாளின் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சின. அந்தத் தோட்டத்தை அவர்கள், ‘பண்படுத்தவும் காக்கவும்’ வேண்டும். ‘பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும்’ ஏராளமாக கிடைத்த அந்தத் தோட்டதை பராமரிப்பது எவ்வளவு ஆனந்தமாய் இருந்திருக்கும்!—ஆதியாகமம் 2:8-15.
எந்தக் குறையும் இல்லாத ஓர் இன்ப வீடாக ஏதேன் தோட்டம் திகழ்ந்தது. ஆதாம், ஏவாள், அவர்களுடைய பிள்ளைகள் அந்தத் தோட்டத்தின் எல்லைகளை விரிவாக்க வேண்டியிருந்தது. அந்தத் தோட்டத்தை வடிவமைக்க கடவுள் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்து கொடுத்த டிஸைனை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காலம் கடந்து செல்கையில், இந்த முழு பூமியும் பரதீஸாக ஆகிவிடும். வசதியாக இடம் கொள்ளும்மட்டும் ஆட்களால் நிறைந்திருக்கும். ஆனால், நம் முதல் பெற்றோர் வேண்டுமென்றே கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனதால், அந்தப் புகலிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். விசனகரமாக, மனித குடும்பத்தின் மற்றவர்கள் எல்லாரும் ஏதேனுக்கு வெளியே பிறந்தார்கள்.
இருப்பினும், பரதீஸில் வாழ்வதற்காகவே கடவுள் மனிதர்களை உருவாக்கியிருந்தார். ஆகவே, பிறகு வந்த மக்கள் சந்ததியினர் தங்களைச் சுற்றி போலியான பரதீஸையாவது அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முயன்றது இயற்கையே.
ஆரம்பகால தோட்டங்கள்
பண்டைய உலக அதிசயங்களுள் பாபிலோன் தொங்கும் தோட்டமும் ஒன்று என்று புகழப்படுகிறது. சுமார் 2,500 வருடங்களுக்கு முன், தன் தாய்நாட்டில் இருந்த காடுகளையும் குன்றுகளையும் விட்டுவந்ததால் தவித்துப்போன தன்னுடைய மேதிய தேசத்து மனைவிக்காக நேபுக்காத்நேசர் என்ற மன்னர் இந்தத் தோட்டத்தை அமைத்தார். படிக்கட்டு முறையில் அமைந்த இத்தோட்டம் 22 மீட்டர் உயரம் இருந்தது. வளைவு வளைவாக அமைக்கப்பட்ட கட்டடம் முழுவதிலும் எல்லா விதமான செடி கொடிகளும் ஏராளமாக நடப்பட்டன. பெரிய மரங்களை வளர்க்க தேவையான மண்ணும்கூட அதில் போடப்பட்டிருந்தது. ஏதேனை படம்பிடித்துக்காட்டிய இந்தத் தோட்டத்தில் காலாற நடக்கையில், அந்த அரசிக்கு வீட்டு ஞாபகம் கொஞ்சம் தணிந்திருக்கும்.
எகிப்தில், நைல் நதியின் வளமிக்க ஆற்றுப்படுகை இயற்கை எழில் கொஞ்சும் பெரிய தோட்டங்கள் அமைக்கப்பட்டதற்கு புகழ்பெற்று விளங்கியது. “உலகத்தின் மிக பழமையான தோட்டத்தின் சித்திரம் எப்படி இருக்கும் என்பதற்கு எகிப்து ஒரு மூலமாக இருக்கிறது. நீண்டகாலத்து தோட்டக்கலையின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது” என்பதாக தி ஆக்ஸ்ஃபோர்டு கம்பானியன் டு கார்டன்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. தீப்ஸில் இருந்த ஒரு எகிப்திய அதிகாரி இயற்கை காட்சிகளுடன்கூடிய தோட்டத்தை அமைப்பதற்கான ஒரு வரைபடத்தை வைத்திருந்தார். அந்த வரைபடம் பொது சகாப்தத்திற்கு முன் சுமார் 1400 வருடங்கள் பழமையானது. குளங்களையும், வரிசையாக மரங்கள் நடப்பட்ட பாதைகளையும், மண்டபங்களையும் அந்த வரைபடம் காட்டுகிறது. அரண்மனைத் தோட்டங்களுக்கு அடுத்தபடியாக கோயில் தோட்டங்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்தன. தோப்புகளும் மலர்களும் மூலிகைச் செடிகளும் நிறைந்து காணப்பட்ட அத்தோட்டங்களுக்கு நீந்தி மகிழும் நீர்பறவைகளும், துள்ளித்திரியும் மீன்களும், அழகிய தாமரை மலர்களும் குழுமியிருந்த குளங்களிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் வாய்கால்களை வெட்டி நீர்விட்டனர்.—யாத்திராகமம் 7:19-ஐ ஒப்பிடுக.
வெகுகாலத்திற்கு முன்பே பாரசீகர்களும் தோட்டக்கலையில் தங்கள் முத்திரையைப் பதித்தார்கள். பாரசீகத்தின் தோட்டங்களும் எகிப்தின் தோட்டங்களும் உள்ளத்தை வெகுவாய் கொள்ளைக் கொண்டதால், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் மாவீரன் அலெக்சாண்டரின் வெற்றி படைகள் தங்கள் தாயகமாகிய கிரீஸுக்கு திரும்பிவந்தபோது தங்களோடு ஏராளமான விதைகளையும் செடிகளையும் தோட்டம் அமைப்பதற்கான திட்டங்களையும் கொண்டுவந்தன. ஆதன்ஸில் அரிஸ்டாட்டிலும் அவரது சீடர் தியாபிரெஸ்டஸும் ஏராளமான செடி கொடிகளை சேகரித்து, அவற்றை ஆய்வு செய்யவும் செடிகளை வகை வகையாக பிரிக்கவும் ஒரு தாவரவியல் தோட்டத்தை நிறுவினார்கள். தங்களுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியர், பாரசீகர் ஆகியோரைப் போலவே பல கிரேக்க செல்வந்தர்களும் ஆடம்பர தோட்டங்களை வைத்திருந்தார்கள்.
ரோமாபுரியில் இருந்த நகரவாசிகள் நகரத்தில் தங்களுக்கு கிடைத்த கொஞ்சநஞ்ச இடத்திலேயே வீடுகளையும் தோட்டங்களையும் அமைத்துக்கொண்டார்கள். பணக்காரர்கள் தங்களுடைய கிராம மாளிகைகளை சுற்றி பிரமிப்பூட்டும் உல்லாச பூங்காக்களை அமைத்தனர். தனக்கென்று ஒரு ஏதேன் தோட்டத்தை நிறுவ கொடூங்கோலன் நீரோவும் விரும்பினான். அதற்காக அவன் நூற்றுக்கணக்கான குடும்பங்களை அரக்கத்தனமாக அடித்துவிரட்டி, அவர்களது வீடுகளையெல்லாம் தரைமட்டமாக்கி, தன் அரண்மனையைச் சுற்றி 125 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இடத்தில் தனி பூங்காவை அமைத்தான். பிறகு பேரரசர் ஹார்டியன் சுமார் பொ.ச. 138-ல் ரோமாபுரியில் திவலி என்னுமிடத்தில் இருந்த தன்னுடைய மாளிகையில் நிறுவிய இயற்கை எழில் கொஞ்சும் பிரமாண்டமான தோட்டம் அழகின் சிகரத்தை எட்டிவிட்டது. அந்த மாளிகை 600 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்காக்களையும், நீர் நிலைகளையும், ஏரிகளையும், நீரூற்றுகளையும் கொண்டிருந்தது.
பண்டைய இஸ்ரவேலரும்கூட தோட்டங்களையும் பூங்காக்களையும் வைத்திருந்தார்கள். ஜெரூசலமிலிருந்து சுமார் 13-லிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடாம் என்னும் இடத்தில் ஓடைகள் சூழ்ந்திருந்த உவகையூட்டும் பூங்காக்களைப் பற்றி யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிபஸ் எழுதுகிறார். சாலொமோன் ‘தனக்காக . . . உண்டாக்கியதாக’ பைபிள் கூறும் ‘தோட்டங்கள், பூங்காக்கள், குளங்கள், காடுகள்’ முதலியவற்றில் இடாமின் பூங்காக்களும் உள்ளடங்கி இருக்கலாம். (பிரசங்கி 2:5, 6, NW) ஜெரூசலமுக்கு சற்று வெளியே ஒலிவ மலையில் இருந்த கெத்செமனே தோட்டம், இயேசுவால் புகழைப்பெற்றது. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அமைதியாக போதிக்க இவ்விடத்தை நாடினார்.—மத்தேயு 26:36; யோவான் 18:1, 2.
அரேபியர் தோட்டம் முதல் ஆங்கிலேயர் தோட்டம் வரை
பொ.ச. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய படைகளும் அலெக்சாண்டரைப்போலவே கிழக்கிலும் மேற்கிலும் படையெடுத்து சென்றன, அப்போது அவை பாரசீக தோட்டங்களையும் காண நேர்ந்தது. (எஸ்தர் 1:5-ஐ ஒப்பிடுக.) “உண்மைத்தன்மையோடு இருப்போருக்கு குர்ஆனில் வாக்களிக்கப்பட்டிருக்கும் பரதீஸுக்கு இணையான தோட்டங்களை பாரசீகத்தில் அரேபியர்கள் கண்டனர்” என்று எழுதுகிறார் ஹவார்டு லாக்ஸ்டன். பாரசீகரின் தோட்டங்களை முன்மாதிரியாக வைத்து அமைக்கப்பட்ட அரேபியரின் தோட்டம், ஸ்பெய்னின் பொட்டல் நிலம் துவங்கி காஷ்மீர் வரை பரந்து விரிந்து இருந்தது. ஏதேன் தோட்டத்தின் நான்கு ஆறுகளை நினைவுகூரும்வகையில், அப்பகுதி நான்கு பிரிவுகளாக நான்கு நீர் ஓடைகளால் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்ட அந்த நான்கு ஓடைகளும் நடுவில் இருந்த ஒரு குளத்திலோ செயற்கை நீர் ஊற்றிலோ சங்கமம் ஆயின.
17-ம் நூற்றாண்டு மொகலாய அரசர்கள் வட இந்தியாவில், அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் டால் ஏரியின் பக்கத்தில் 700-க்கும் அதிகமான பரதீஸை ஒத்த தோட்டங்களை அமைத்தார்கள். நூற்றுக்கணக்கான செயற்கை நீர் ஊற்றுகளும் படிக்கட்டு முறையில் அமைந்த குன்றுகளும் அருவிகளும் இடை இடையே சென்று பளிச்சிடும் வண்ணக்கலவையைக் கொண்டு போடப்பட்ட ஓர் அழகிய கோலத்தைப்போல் அவை காட்சியளித்தன. தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான் டால் ஏரிக்கரையில் கறுப்பு சலவைக்கல் மண்டம் ஒன்றை எழுப்பினார். அதில் பொறிக்கப்பட்ட பின்வரும் வாசகம் இன்றும் காணப்படுகிறது: “பூமியில் ஒரு பரதீஸ் இருக்கிறது என்றால் அது இதோ, இதோ, இங்கே.”
ஷாஜஹான் வாழ்ந்த காலத்திற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஐரோப்பா இடைக்காலத்திலிருந்து 14-ம் நூற்றாண்டு மறுமலர்ச்சி காலத்தில் அடியெடுத்து வைத்தது. பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பமான இடைக்காலத்தில் நலிந்துபோன ரோமானியரின் பாரம்பரிய கலைநயம்மிக்க தோட்டக்கலை, சர்ச்சு ஆதிக்கம் நடத்திய மறுமலர்ச்சி காலத்தில் மறுபடியும் தழைத்தோங்க தொடங்கியது. கிறிஸ்தவமண்டலம், தோட்டத்தை ஒரு ‘தற்காலிக பரதீஸாக’ கருதியது. ஒன்பதாம் நூற்றாண்டின் குருக்குல அமைவிடத்தைப் பற்றிய வரைபடம் ஒன்றில் “பரதீஸ்” என்று இரண்டு தோட்டங்கள் குறிக்கப்பட்டிருந்தன. விரைவில் கிறிஸ்தவமண்டலத்தின் தோட்டங்கள் பிரமாண்டமாகவும் பேரழகோடும் திகழ்ந்தன. ஆனால், பல தோட்டங்கள் ஆன்மீக நெறிகளை பிரதிபலிப்பதற்கு பதிலாக, செல்வாக்குக்கும் செல்வத்துக்கும் சின்னங்களாக மாறின.
1495-ல் இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் என்ற இடத்தை பிரான்ஸின் எட்டாம் சார்ல்ஸ் கைப்பற்றியபோது, தன் தாயகத்திற்கு இவ்வாறு எழுதினார்: “இந்த நகரத்தில் எனக்கிருக்கும் தோட்டங்களைப் பற்றி நான் சொன்னால்கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள். . . . இதை ஒரு பூளோக பரதீஸாக மாற்றிட ஆதாமும் ஏவாளும் இல்லையே என்ற ஒரே குறைதான்.” ஆனால், ஒருவேளை சார்ல்ஸ் 17-ம் நூற்றாண்டு வரை உயிரோடு இருந்திருந்தால், தன்னுடைய பிரெஞ்சு மண்ணிலேயே அரசர் பதினான்காம் லூயிஸ் அமைத்த பெரும் தோட்டங்களைக் கண்ணாற கண்டுகளித்திருப்பார். வெர்சாய் அரண்மனையில் உள்ள தோட்டங்கள் “உலகிலேயே மிகப் பெரியதும் பேரழகு வாய்ந்ததுமாய் இன்றும் இருக்கின்றன என்று அறுதியிட்டு சொல்கிறது” த கார்டன் என்ற புத்தகம்.
இருப்பினும், மறுமலர்ச்சி காலத்தில் பரதீஸை பற்றி ஒரு புதிய கருத்து நிலவியது: இயற்கை, அறிவொளி பெற்ற மனிதனின் மகிழ்ச்சிக்கு அடிபணிந்து இருக்கவேண்டும், இயற்கையின் முரட்டுத்தன்மையை நீக்குவதன் மூலம் மனிதனே அதற்கு ஆணையிடுபவன். மரங்களும் மலர்களும் ஜியாமெட்ரி அளவுகளின்படி துல்லியமாக வடிவமைக்கப்பட்டன. இவ்வாறாக முற்கால ரோமானியர்களின் தோட்டக்கலை—மரங்களையும் செடிகளையும் கத்தரித்து வளைத்து வளர்த்து வடிவமைக்கும் கலை—மறுபடியும் பேராதரவோடு வரவேற்பை பெற்றது.
பிறகு, 18-ம், 19-ம் நூற்றாண்டுகளில், கடல்சார்ந்த ஆய்வுகளும் வாணிபமும் புதிய செடிகள், தோட்டக்கலைகள் பற்றிய விவரங்களை மேற்கத்திய உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தன. தோட்டத்தை வடிவமைப்பதில் இங்கிலாந்தும் தன் பங்கை செய்தது. “18-ம் நூற்றாண்டு இங்கிலாந்தில், மனிதன் தான் ஒரு பாகமாக இருக்கும் இயற்கை உலகைப்பற்றி மேலும் மேலும் உணர ஆரம்பித்தான். மனிதன் தான் உருவாக்கிய ஜியாமெட்ரி அளவுகளின் மூலம் ஆணையை இயற்கை உலகின்மீது திணிப்பதற்கு மாறாக, அதற்கு இசைவாக தன் வாழ்க்கையை மாற்றியமைப்பதைப் பற்றி சிந்திக்க துவங்கினான்” என்பதாக த நியூ என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் பிரிட்டானிக்கா சொல்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் பிரமாண்டமான தோட்டங்கள் அமைப்பதில் வில்லியம் கென்ட் என்பவரும், லான்சிலாட் பிரௌன் என்பவரும் பெயர் பெற்று விளங்கினார்கள். இங்கிலாந்தில் இருநூறுக்கும் அதிகமான பெரிய வீடுகளோடுகூடிய எஸ்டேட்டுகளை பிரெளன் வடிவமைத்தார். ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதிகளாக ஆன தாமஸ் ஜெஃபர்சன், ஜான் ஆடம்ஸ் என்ற இருவருமே இங்கிலாந்தின் தோட்டங்களை ஆய்வுசெய்வதற்காக 1786-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள்.
இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கத்திய தோட்டங்கள்
எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற இடங்களின் தோட்டக்கலை பாரம்பரியம் எப்படி மேற்கத்திய நாட்டு தோட்டங்களுக்கு முன்னோடியாக அமைந்ததோ, அதேபோல் சீனாவின் தோட்டக்கலை பாரம்பரியமும் கிழக்கத்திய நாகரிகங்களின் தோட்டங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. அடிப்படையில் சீன மக்கள் இயற்கையை வழிபடும் மதத்தை பின்பற்றுபவர்கள், அதில் ஆறுகள், பாறைகள், மலைகள் என எல்லாமே ஆவிகளின் உருவங்களாக நோக்கப்பட்டதால், அவை மதிக்கப்படவேண்டியவை. ஆகவேதான் இந்நாட்டில் டாவோயிசம், கன்பூஷியஸ் மதம், புத்த மதம் முதலியவை இருகரம் கொண்டு வரவேற்கப்பட்டன, அவையும் தம் பங்கில் அவற்றிற்கே உரிய பாணியில் தோட்டங்களை அமைத்தன.
ஜப்பான் கடலுக்கு அந்தப் பக்கத்தில் ஜப்பானியர்களின் தோட்டங்கள் அவர்களது ரசனைக்கு ஏற்ற வடிவங்களோடு திகழ்ந்தன. அத்தகைய தோட்டங்களில் வண்ணங்களுக்குப் பதிலாக வடிவங்களுக்கு முதலிடம் அளிக்கப்பட்டு, ஒவ்வொன்றையும் அதற்கே உரிய இடங்களில் வைக்கப்பட்டன. இருந்த கொஞ்ச இடத்திலேயே இயற்கையின் அழகும், பல்வேறு வித்தியாசங்களும் உருகுலையாமல் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக தோட்டக்காரர் பாறைகளை கவனத்தோடு வைத்துவிட்டு, செடிகளை நட்டு, தன் தோட்டத்தை கடும் உழைப்போடு கண்ணுங்கருத்துமாய் வளர்த்து வருகிறார். இது போன்சாய் (“தொட்டி செடி” என்ற அர்த்தம்) தோட்டக்கலை, அதாவது மரத்தைச் சிறிய வடிவத்தில் அல்லது மரங்களின் தோப்பை குறிப்பிட்ட வடிவிலும் அளவிலும் உருவாக்கும் கலையாகும்.
மேற்கத்திய தோட்டத்தின் பாணி கிழக்கத்திய தோட்டத்தின் பாணியிலிருந்து வேறுபட்டாலும், பரதீஸுக்காக ஏங்கும் ஏக்கம் கிழக்கத்திய தோட்டக்கலையிலும் தொனிக்கிறது. உதாரணத்திற்கு ஜப்பானில் ஹடியான் காலத்தில் (794-1185) “பூமியில் பரதீஸ்” இருப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கவேண்டும் என்று தோட்டக்காரர்கள் முயன்றார்கள் என்று ஜப்பானிய தோட்டக்கலை வரலாற்று ஆசிரியர் விபெ குயுடர்ட் எழுதுகிறார்.
எல்லாருக்கும் கொள்ளை ஆசை
தோட்டம் என்றால் எல்லாருக்கும் கொள்ளை ஆசைதான். குறுங்காடுகள், பெருங்காடுகள், புல்வெளிகள் என்று “இயற்கையோடு” வாழ்க்கை நடத்திய தென் ஆப்பிரிக்க நாடோடி வேடுவ இனத்தவரும் இதற்கு விதிவிலக்கல்ல. “மெக்ஸிகோ நாட்டு அசுதெக்குகள், பெரு நாட்டின் இன்காக்கள்” பற்றி பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “படிக்கட்டு படிக்கட்டுகளாக அமைந்த குன்றுகளோடும், தோப்புகளோடும், செயற்கை நீர் ஊற்றுகளோடும், சிங்கார குளங்களோடும் (ornamental ponds) விளங்கிய [இவர்களது] தோட்டங்கள், சமகாலத்து மேற்கத்திய உலக தோட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருந்தன.”
ஆம், பண்டைய காலத்தில் நைல் நதியின் தீரங்களில் அமைந்திருந்த தோப்புகள், கிழக்கத்திய எழில் கொஞ்சும் பெரிய தோட்டங்கள், நவீன காலத்தில் நகரப் பூங்காக்கள், தாவரவியல் தோட்டங்கள், அலுவலக கட்டடத்திற்குள் அமைந்த தோட்டங்கள் என இவை எவற்றை வெளிப்படுத்துகின்றன? பரதீஸுக்கான மனிதனின் ஏக்கமே. மனிதவர்க்கம் இடைவிடாமல் “பரதீஸுக்காக ஏங்கும் ஏக்கத்தை” கவனித்து, டிரி காமிடோ இவ்வாறு எழுதுகிறார்: “மனிதன் தன்னுடைய சொந்த இல்லமாக நினைக்கும் இடங்கள் தோட்டங்களே.” ‘என்னுடைய வீடு ஏதேன் தோட்டம்போல் உள்ளது’ என்று சொல்லிக்கொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? ஆனால் உலகமே ஏதேன் ஆவது—வெறும் பணக்காரர்களுக்கு மாத்திரம் இன்றி எல்லாருக்கும்—வெறும் கனவுதானா? அல்லது எதிர்கால நனவா?
[பக்கம் 7-ன் படம்]
பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய ஓவியரின் கற்பனை
[பக்கம் 7-ன் படம்]
வெர்சாய், பிரான்ஸ்
[பக்கம் 7-ன் படம்]
ஜப்பானில் பாரம்பரிய நயமிக்க ஒரு தோட்டம்
வரலாறு முழுவதிலும் மனிதர் பரதீஸுக்காக ஏங்கியுள்ளனர்
[படத்திற்கான நன்றி]
French Government Tourist Office/Rosine Mazin