பூமியின் மறைவான பெயர்ச்சிப்பிளவுகள்
ஆகஸ்ட் 18, 1994 அன்று, ஒரு பலமான நிலநடுக்கத்தின் விளைவாக அல்ஜீரியாவில் குறைந்தது 171 பேராவது மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாய் விடப்பட்டனர். பல வாரங்களுக்கு முன்னர், பொலிவியா, கொலம்பியா, இந்தோனீஷியா ஆகிய இடங்களும் பெரிய நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டன; அங்கும் மொத்தமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த மகா பேரழிவுகளைக் குறித்து நீங்கள் அறிந்திருந்தீர்களா? தனிப்பட்ட விதத்தில் நீங்கள் அவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதற்கு பக்கத்து நாடொன்றில் வாழ்ந்திருந்தாலொழிய பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டீர்கள். மறுபட்சத்தில், அ.ஐ.மா.-லுள்ள கலிபோர்னியா பகுதியை பெரிய நிலநடுக்கங்கள் தாக்கியபோது, அந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவுவதாகத் தோன்றுகிறது; மேலும், அந்த நடுக்கங்களைக் குறித்து ஏறக்குறைய உடனடியாக அறிவியல்பூர்வ விவரங்கள் கிடைத்துவிடுகின்றன.
காரணம் என்னவென்றால், தென் கலிபோர்னியாவைப் போல் வேறெந்த பகுதியும் அவ்வளவு முழுமையாக அறிவியலாளர்களால் ஆய்வு செய்யப்படவில்லை; அங்கு 700-க்கும் அதிகமான நில அதிர்வுமானிகள் 1.5 வரையாக சிறியளவிலான நிலநடுக்கங்களையும் பதிவுசெய்கின்றன. அந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையான நிலநடுக்க ஆய்வாளர்கள் இருப்பதுதானே, அந்தப் பகுதியிலிருந்து நிலநடுக்கத்தைப் பற்றி ஏராளமான தகவல் வருவதற்குரிய காரணத்தை விளக்குகிறது.
சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று
நிலநடுக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், உயிர் சேதங்களைத் தவிர்ப்பதற்கேதுவாக குறித்த நேரத்தில் முன்கூட்டியே அவற்றை முன்னறிவிக்க முயற்சி எடுப்பதற்கும்கூட இந்த விரிவான ஆராய்ச்சி அநேக நாடுகளிலுள்ள அறிவியலாளர்களுக்கு சந்தேகமின்றி உதவியிருக்கிறது. அப்பேர்ப்பட்ட தொழில்நுட்பம் அத்தியாவசியமானது, ஏனென்றால், குறிப்பிடத்தக்க அளவிலான சுமார் 40 நிலநடுக்கங்கள் ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு பாகங்களை அழிக்கின்றன. மெய்யளவில் கேடுவிளைவிக்காதவையும் ஆனால் அவற்றை உணரக்கூடிய வண்ணம் போதுமானளவுக்கு பெரியவையாயும் இருக்கிற சிறிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. இவை வருடந்தோறும் 40,000 முதல் 50,000 தடவைகள் வரை தாக்குகின்றன!
அழுத்தத்தின் கீழிருக்கையில் நிலத்தடி பாறை திடீரென்று உடைந்து, விட்டகன்று புதிய இடநிலைகளுக்கு நகர்ந்து செல்வதன் விளைவாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் ஏற்படுவதாகத் தெரிகிறது. பூமியின் மேலோட்டிலுள்ள முறிவுகளின் நெடுகவே இந்தக் குலைவுகள் வழக்கமாக ஏற்படுகின்றன. இந்த முறிவுகள் பெயர்ச்சிப்பிளவுகள் எனப்படுகின்றன.
பெரும்பாலும், இந்தப் பிளவுகள் ஏற்படும் இடங்களை அறிவியலாளர்களால் வரைபடத்தில் வரைய முடிகிறது; இவ்வாறு செய்வதால், நிலநடுக்கம் ஏற்பட சாத்தியமான பகுதிகளைக் குறித்துக்காட்டுகிறார்கள். “பெரும்பாலும்” என்று ஏன் சொல்லுகிறோம்? ஏனென்றால், அவர்கள் ஒருகாலத்தில் நினைத்ததுபோல அவர்களுடைய வரைபடங்கள் அவ்வளவு விளக்கமானவையாய் இல்லை என்பதாக அறிவியலாளர்கள் சமீபத்தில் அறிந்திருக்கின்றனர். உதாரணமாக, கலிபோர்னியாவில் ஏற்படும் அளவிடக்கூடிய நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை மறைவான பெயர்ச்சிப்பிளவுகளின் நெடுகே—அநேக சந்தர்ப்பங்களில், ஓரளவுக்கு நிலநடுக்க அபாயமற்ற பகுதிகள் என்று முன்னர் புவியியலாளர்களால் கருதப்பட்ட பகுதிகளில்—ஏற்படுகின்றன என்ற சமீபத்திய வெளிப்படுத்தலால் அறிவியலாளர்கள் கலக்கமடைந்திருக்கின்றனர்.
ஐ.மா. நில இயல் அளக்கைத் துறையைச் சேர்ந்த ராஸ் ஸ்டீன் மற்றும் ஆரிகான் ஸ்டேட் யுனிவெர்ஸிட்டியைச் சேர்ந்த ராபர்ட் ஈட்ஸ் என்னும் பூமி அறிவியலாளர்களின்படி, “அலைபோன்ற நேர்த்தியான மலைச்சரிவு அல்லது மடிப்புகளுள்ள மலைப்பாங்கான பகுதி, அபாய அறிகுறிகளுக்கு மாறாக அமைதலான சூழலை மனதிற்குக் கொண்டுவருவதாக இருக்கிறது.” என்றபோதிலும், பாறைகளின் மடிப்புள்ள வளைவுகளின் கீழே, செயல்படும் நிலையிலுள்ள நிலநடுக்க பிளவுகள் இருப்பதாக அவர்களுடைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றில் அநேக பாறை மடிப்புகள் எண்ணெய் படிவுகளைக் கொண்டிருப்பதற்காக சுரண்டப்பட்டிருக்கின்றன. இந்த நிலத்தடி பிளவுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பிடிகொடுக்காமல் ஏய்க்க முடிந்தது ஏன், மேலும் அவை எந்தளவுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கின்றன?
அசட்டை செய்யப்பட முடியாத ஓர் அச்சுறுத்தல்
மடக்கிச் சுருட்டக்கூடிய கம்பள விரிப்பைப் போல பாறைகள் கசக்கி, மடிக்கப்படக் கூடியவை என்பதாக புவியியலாளர்கள் நெடுங்காலமாக அறிந்திருக்கிறார்கள். ஆனால் இது படிப்படியாக, நிலையாக நடக்கிற ஒரு செயல்முறை என்பதாக பொதுவாக எண்ணப்பட்டது. என்றபோதிலும், அவை திடீர் வேகத்தில் மேலெழும்புகின்றன என்பதாக, செயல்படும் நிலையில் இருக்கும் பாறை மடிப்புகளைப் பற்றிய சமீபத்திய ஆய்வுகள் காண்பிக்கின்றன—வெறும் ஒருசில வினாடிகளில் ஐந்து மீட்டர் என்ற அளவுக்கு! இந்த மடிப்புறும் அசைவு, அடியில் இருக்கும் பாறை பொருளை அழுத்துகிறது. அதனால் விளைவடையும் அழுத்தவிசை, அந்த மடிப்புக்கு அடியில் ஆழத்தில் இருக்கும் பாறையில் கீறல் விழச் செய்து, அந்தப் பாறையின் ஒரு துண்டு மற்றொன்றின் மீது நகர ஆரம்பிக்கிறது. செயல்படக்கூடிய பிளவுகளைத் தங்களுக்கடியில் புதைக்கப்பட்டதாகக் கொண்டிருக்கும் கேடுவிளைவிக்காததாகத் தோன்றும் இந்த மடிப்புகள், நிலநடுக்க ஆய்வாளர்கள் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை அடையும் முன்னரே வளர்ச்சியடைந்துவரும் நிலநடுக்கங்களாகின்றன. பூமியின் மேற்பரப்பில் காணப்படுகிற மிகவும் முனைப்பாகத் தென்படுகிற பிளவுகளைப் போலவே அப்படிப்பட்ட நிலத்தடி பிளவு செயல்பாடும், பலமான நிலநடுக்கங்களை உண்டுபண்ண முடியும்.
மறைவான பிளவு ஒன்று என்ன செய்யலாம் என்பதற்கு ஜனவரி 17, 1994 அன்று, லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நார்த்ரிஜ்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒரு சமீபத்திய உதாரணமாகும். நிலத்தடியில் 8-லிருந்து 19 கிலோமீட்டர் வரையான ஆழத்திற்கு இடையில் மிக ஆழத்திலுள்ள பிளவு செயல்பாட்டின் காரணமாக அந்த நிலநடுக்கம் ஏற்படுத்தப்பட்டது. அந்த நிலநடுக்கத்திற்கு முன்னர், அந்த பிளவு இருந்ததைக் குறித்து அறிவியலாளர்கள் அறிந்திருக்கவே இல்லை. இந்த மறைவான பிளவு, மகத்தான சொத்து அழிவையும், 9,000-க்கும் அதிகம்பேருக்கு காயங்களையும், 61 பேருக்கு மரணத்தையும் ஏற்படுத்தியது.
கலிபோர்னியாவில் மட்டுமல்ல, ஆனால் அர்ஜன்டினா, அல்ஜீரியா, ஆர்மீனியா, இந்தியா, ஈரான், கனடா, நியூ ஜீலாந்து, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய இடங்களிலும் ஏற்படும் பெரிய நிலநடுக்கங்கள் பலவற்றிற்கு மறைவான பிளவுகளே காரணமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த ஒருசில பத்தாண்டுகளாக, மறைவான பிளவுகளால் தூண்டுவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலநடுக்கங்களின் விளைவாக இந்த நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கின்றனர்.
செயல்படக்கூடிய இந்த மடிப்புகள் எங்கு தோன்றுகின்றன என்று கண்டுபிடித்து, அவற்றின் நிலநடுக்க அச்சுறுத்தலின் சாத்தியத்தை முன்னறிவிக்கும் சவாலையும் அறிவியலாளர்கள் தற்போது எதிர்ப்படுகின்றனர். அதேநேரத்தில், கேடுவிளைவிக்காததாகத் தோன்றும் மலைச்சரிவின் அழிக்கும் சக்தியை அவர்கள் இனிமேலும் குறைவாக மதிப்பிடுவதில்லை.
[பக்கம் 22-ன் பெட்டி]
லாஸ் ஏஞ்சலிஸ் சுருங்குகிறதா?
கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலிஸிற்கு அடியில் இடம்கொண்டிருக்கும் பிளவுகள் மற்றும் மடிப்புகளின் விரிவான வலைப் பின்னல், இந்தப் பகுதியை மிகவும் நிலையற்றதாக்குகிறது. லாஸ் ஏஞ்சலிஸ் பள்ளத்தாக்கானது, சான் ஆண்ரேயஸ் பிளவில், அருகாமையிலுள்ள ஒரு வளைவால் ஏற்படுத்தப்படும் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்பதாகத் தோன்றுகிறது. (ஜூலை 22, 1994, விழித்தெழு!-வில் பக்கங்கள் 15-18-ஐப் பார்க்க.) இந்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் மடிப்பு, லாஸ் ஏஞ்சலிஸ் பள்ளத்தாக்கின் நிலப்பரப்பை ஒரு வருடத்திற்கு கால் ஏக்கர் என்ற அளவில் குறைத்துக்கொண்டிருக்கக்கூடும் என்பதாக உள்ளூர் புவியியலாளர்கள் கணக்கிடுகின்றனர்.
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
Globe: Mountain High Maps™ copyright © 1993 Digital Wisdom, Inc.