“ஹங்கேரியின் திராட்சை தோட்டங்களுக்கு எங்களோடு வாருங்கள்!”
ஹங்கேரியிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஸெம்ப்லேன் மலைத்தொடர்கள் அவற்றிலுள்ள எரிமலைப் பாறைகளாலான கூம்பு வடிவ குன்றுகளுக்கு பெயர்பெற்றவையாய் இருக்கின்றன. இந்த மலைத்தொடர்களின் சரிவுகளில்தான் ஹங்கேரியின் திராட்சை வளர்க்கும் பகுதியாகிய, கண்ணைக் கவரும் டாக்காய்-ஹெஜோயா அமைந்துள்ளது.
ஹங்கேரியின் வடபகுதியில், வானுயர நிற்கும் டோக்கே மலையின் அடிவாரத்தில் ஒளிந்திருக்கிறது டோக்கே நகரம். இரண்டு நதிகள் சங்கமமாகும் இவ்விடத்தில் தொடங்கி, வடமேற்குத் திசையில் 55 கிலோமீட்டர் தூரத்தில் திராட்சை வளர்க்கும் ஒரு பகுதி இருக்கிறது. செழிப்பு மிகுந்த இந்தப் பகுதியின் சரியான மையத்தில் டால்ச்வா என்ற ஒரு சிறிய கிராமத்தைக் காண்கிறோம். இங்கு திராட்சை பறிக்கும் ஒரு கூட்டம் ரெய்சினைப் போலுள்ளவற்றை ஹங்கேரியன் பர்மின்ட் திராட்சைக் கொத்துகளிலிருந்து கவனத்துடன் பறித்துக்கொண்டிருக்கிறது.
வாருங்கள், டாக்காய்-ஹெஜோயாவின் புகழ்பெற்ற டோக்கே ஆசூ இனிப்பு ஒயினை ருசி பாருங்கள்! இங்குள்ள திராட்சை வளர்ப்பவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருளை ஈடிணையற்றதாகக் கருதுகின்றனர். தாங்கள் உற்பத்தி செய்யும் ஒயினுக்கு “ஒயின்களின் ராஜா, ராஜாக்களுக்கேற்ற ஒயின்” என்று அர்த்தப்படுத்தும், வீனும் ரீகும், ரெக்ஸ் வினோரும் என்ற லத்தீன் பெயர்களை வைத்திருக்கின்றனர்.
உலர்ந்த திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினா?
“உலர்ந்த திராட்சையிலிருந்து ஒயின் தயாரிக்க திட்டமிடுகிறீர்களா?” என்று நாங்கள் ஆவலோடு கேட்கிறோம். எங்களுடைய கேள்வியானது ஆர்வத்தோடுகூடிய விவரிப்பை வெளிக்கொணர்கிறது. இவை உண்மையிலேயே உலர்ந்த திராட்சை இல்லை, ஆனால் கொடியிலேயே சுருங்கவிடப்பட்ட விசேஷித்த திராட்சைகள் என்று எங்களுக்கு சொல்கின்றனர். “அவற்றை அவ்வளவு விசேஷித்தவையாக ஆக்குவது என்ன?” என்று நாங்கள் ஆச்சரியத்தோடு கேட்கிறோம். ஆச்சரியத்துக்குரிய விதமாக, இந்தப் பகுதியில் உள்ள திராட்சைப் பழங்களின் மேல் இருக்கிற போட்ரிட்டிஸ் சினெரியா என்ற விசேஷித்த பூஞ்சணத்தை எங்களுக்குக் காண்பித்தனர்.a எங்கள் பகுதிக்குக்கீழ் உள்ள ஆறுகளில் நீர் ஆவியாதல் சுற்றுச்சூழலை இந்த விசேஷித்த பூஞ்சணம் வளர்வதற்கு சாதகமானதாக மாற்றுகிறது.
திராட்சைகளின்மீது இந்தப் பூஞ்சணம் கிரியை செய்யவேண்டுமானால், சரியான காலநிலை இன்றியமையாததாய் இருக்கிறது. திராட்சைக் கொத்துக்களின் துரிதமான வளர்ச்சிக்கு போதுமான மழையோடுகூட சூரிய வெளிச்சம் அதிகமாக உள்ள அதிக நாட்களைக் கொண்ட கோடைகாலமும் தேவைப்படுகிறது. பின்னர், செப்டம்பர் துவக்கத்தில் திராட்சைப் பழங்கள் நன்கு பழுத்ததும், அதைத் தொடர்ந்து உலர்ந்த சூரிய வெளிச்சம் மிகுந்த இலையுதிர்காலம் வருமானால், அப்போது அந்தப் பழம் ஒயின் தயாரிப்பதற்கு மிகச் சிறந்த பதத்தில் இருக்கும்.
ஆனால் ஒயின் தயாரிப்பதில் பூஞ்சணம் எவ்வாறு உதவுகிறது? பதில் ஒருவகையில் தொழில்நுணுக்கம் வாய்ந்ததாக இருக்கிறது; இருந்தபோதிலும், இவ்வாறுதான் எங்களுக்குச் சொல்கிறார்கள். திராட்சைக் கொடியில், பழுத்த திராட்சையின் தோல் வெடிக்கும்போது ஒரு வேதியியல் வினை தொடங்குகிறது. பூஞ்சணம் திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ரக்டோஸைத் தின்று அமிலங்களை உருவாக்குகிறது.
இந்த அமிலங்கள் ஒயினுக்கு புளித்தச் சுவையைக் கொடுக்கிறதா? சர்க்கரையும் ஆல்கஹாலும் சேர்ந்து மாலிக் அமிலம், மற்றும் டார்ட்டாரிக் அமிலம் ஆகியவற்றின் அமிலத்தன்மையை மறைத்துவிடுகின்றன என்பதாக எங்களுக்கு உறுதியளிக்கின்றனர். சிட்ரிக் அமிலம் மற்றும் குளுக்கோனிக் அமிலம் ஆகிய மற்ற அமிலங்கள் ஒயினின் சுவைக்கு அவசியமானவையாக இருக்கின்றன. ஒயினின் அமிலத்தன்மை மண்ணின் கூட்டமைப்பைச் சார்ந்திருக்கிறது, மேலும் ஒயினின் சுவையும், சூரியனிலிருந்து திராட்சைக் கொடிகள் எந்த நிலையில் இருந்ததோ அதனால் பாதிக்கப்படுகிறது.
இந்த விளக்கம் தொடருகையில், பிழிந்தெடுத்தப்பின், உலர்ந்த திராட்சைப் பழங்களின் கூழ், சாதாரண திராட்சையிலிருந்து தயாரிக்கப்பட்ட முந்தின வருட ஒயினோடு சேர்க்கப்படுகிறது. 72-மணிநேரத்திற்கு வடிகட்டி, இறுதியாக பிழிந்தெடுத்த பிறகு, ஒயின் தயாரிப்பாளருக்குக் கிடைப்பது சர்க்கரை அதிகமுள்ள கெட்டியான ஒரு திரவமாகும். இது குறிப்பிட்ட சமயத்திற்கு மரக்களங்களில் புளிக்கவைக்கப்படுகிறது. ஆல்கஹால் அளவு 13-15 சதவீதத்தை அடையும்போது வேதியியல்பூர்வமாக புளித்தல் நிறுத்தப்படுகிறது. ஆறு மாதங்கள் முடிந்ததும், ஒயின் வடிகட்டப்பட்டு அதன் தரம் இன்னும் கூடுதலாக மேம்படும்படி விடப்படுகிறது. நல்ல தரமான ஆசூ ஒயின் உட்கொள்ளத் தயாராகுமுன் மூன்று முதல் ஐந்து வருடங்கள் தேவைப்படுகிறது.
ஒயின் கிடங்கிற்குள் செல்லுதல்
கிராமத்துக்குத் திரும்பிப் போனபிறகு, நாங்கள் ஒரு ஒயின்காட்சி சாலைக்குள் நுழைகிறோம். அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒன்று—கவைக்கொம்பை உடைய ஒரு பழைய களைக்கொட்டு—எங்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. கடினமான நிலத்தில் இந்தக் கருவியை உபயோகித்தது மிகவும் களைப்படையச் செய்வதாய் இருந்தது. ஆகவே இந்தக் கருவி மனித கொலையாளி என்றறியப்பட்டது.
சகஜமாகப் பழகும் கிடங்குப் பணியாளர் ஒருவர் எங்களை வரவேற்று, அந்தக் காட்சி சாலையின் கிடங்குக்குள் எங்களை சந்தோஷத்தோடு வழிநடத்திச் சென்றார். ஒயின் மரப் பீப்பாய்களுக்கு சரியான தட்பவெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் பாதுகாத்துக்கொள்ள கொடுக்கும் கவனத்தைப் பற்றி அவர் பெருமையுடன் விவரித்தார். அதன் தட்பவெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக இருக்கவேண்டும், ஆகையால் அந்தக் கிடங்குகள் சுண்ணாம்புக்கல் பாறைகளில் வெட்டப்பட்டிருக்கின்றன. ஈரப்பத விகிதம் 85 முதல் 90 சதவிகிதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படுகிறது.
மீண்டும் நாங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுகிறோம், இம்முறை ஒயினின் தரம் மேம்படுவது அந்த விசேஷ பூஞ்சணம் இருப்பதையும் பொருத்து என்று அறிந்ததற்கு. இந்தப் பூஞ்சணம் கிட்டத்தட்ட கிடங்கினுள் எங்குப் பார்த்தாலும்—கான்க்ரீட் தரையைத் தவிர மரம், கண்ணாடி ஆகியவற்றிலும் செங்கல் சுவர்கள்மீதும்கூட—எல்லா இடங்களிலும் தோன்றி வளருகிறது. வெளியிலிருந்து வரும் புதிய காற்றினால் இந்தப் பூஞ்சணம் கெட்டுப்போகாமல் இருக்க, ஒயின் தயாரிப்பவர்கள் கூடியமட்டும் கிடங்குகளுக்குள் அடிக்கடி நடக்காதிருப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
எங்களுடைய வழிகாட்டி ஹங்கேரிய ஒயின் தயாரிப்பாளர் ஒருவரின் பழமொழியை மேற்கோள் காட்டுகிறார்: “சிறந்த பூஞ்சணம் எங்கேயோ நல்ல தரமான ஒயினும் அங்கே.” இந்தக் கூற்றின் உண்மையை நமக்கு உறுதிசெய்வதற்காக, உபசரிக்கக்கூடிய அந்தக் கிடங்குப் பணியாளர் வெவ்வேறு வகையான டோக்கே ஆசூ ஒயின்களை சுவைத்துப் பார்க்கும்படி எங்களுக்குத் தருகிறார். மெழுகுத்திரி வெளிச்சத்தில், கண்ணாடி கிளாஸில் ஒளியூடுருவி மிளிரும் வண்ணத்தோடு உள்ள ஒயினை எங்கள் கையில் பிடித்தவண்ணம் இருக்கையில், கிளாஸின் சுவரில் இந்த ஒயின் டோக்கே ஆசூ ஒயின்களுக்கே உரித்தான வழியில், எப்படி ஒரு வட்டமான கோடு ஒன்றை விட்டுச் செல்கிறது என்பதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
ஒயின் சுவைக்கும் ஒருவர் இனிப்பற்ற ஒயினை ருசிப்பதைப் போற்றுகிறார். காரணம் அது ஒயினின் நறுமணச்சுவை மற்றும் மதுமணம் ஆகிய பண்புகளை வெளிக்காட்டுகிறது. அவை இனிப்பு ஒயினில் மறைத்துவிடப்படுகின்றன. இனிப்புள்ள டோக்கே ஆசூ ஒயின் மர்மமானது—அதன் ரகசியங்களை வெளிக்கொண்டுவர வேண்டுமானால் சுவைப்பதில் கைதேர்ந்த ஒருவர் தேவைப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.
முடிவாக, “டோக்கே ஆசூ ஒயின் ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது என்றும், ஒவ்வொரு மருந்துக் கடைகளிலும் காணப்படுவதுண்டு என்றும் உங்களுக்குத் தெரியுமா?” என்று எங்களிடம் அவர் கேட்கிறார். இது பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த அறிவுரையை நம்முடைய ஞாபகத்திற்குக் கொண்டுவருகிறது: “உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் [“ஒயினும்,” NW] கூட்டிக்கொள்.” (1 தீமோத்தேயு 5:23) “உன் வயிற்றுக்காகவும் உனக்கு அடிக்கடி ஏற்படும் வியாதிக்காகவும், இனியும் தண்ணீர் குடிக்காமல் சிறிது ஒயினும் குடித்துக்கொள்.” இறுதியாக, பாட்டில்களில் அடைப்பதையும் காய்ச்சித் தூய்மையாக்குவதையும் பார்த்துவிட்டபிறகு, ஒயினை மிதமாக பயன்படுத்தும்போது, சங்கீதம் 104:15-ல் சொல்லப்பட்டுள்ள, ‘மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசம்,’ என்ற இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையானதாக தொனிக்கின்றன என்று யோசித்தபடியே நாங்கள் வீடு திரும்பினோம்.
[அடிக்குறிப்புகள்]
a இது “திராட்சை சர்க்கரைகளை அடர்த்தியடையச் செய்து, தேனைப் போன்று நறுமணச்சுவையைத் தருகிறது,” என்பதாக சொல்கிறது தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.
[பக்கம் 26-ன் படங்கள்]
மேலே: இந்த மரப் பீப்பாய்களில்தான் ஒயினின் தரம் மேம்படும்படி விடப்படுகிறது
வலதுபுறம்: பூஞ்சணம் பாட்டில்கள் மேலும்கூட வளர்கிறது