வாய் துர்நாற்றம் பற்றி நீங்கள் என்ன செய்யலாம்?
உலகத்தின் மிக சகஜமான பிரச்சினைகளில் அது ஒன்றாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேறுபட்ட சமயங்களில் வயதுவந்தோரில் 80 சதவிகிதத்துக்கும் மேலானோரைப் பாதிக்கிறது. அது தர்மசங்கடம், ஏமாற்றம், மனவேதனை ஆகியவற்றை உண்டாக்கக்கூடும்.
மருத்துவத் துறையினர் மத்தியில் அது துர்நாற்றமுள்ள மூச்சு (ஹெலட்டோசஸ்) என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறது. இது “மூச்சு” என்று பொருள்படும் லத்தீன் வார்த்தையாகிய ஹெலட்டுஸ்-லிருந்தும் இயல்பு மாறிய நிலைமையைக் குறிக்கிற ஈற்றசையாகிய -ஓசஸ்ஸிலிருந்தும் வருகிறது. சிலர் அதை கெட்ட வாய்மணம் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் பலர் இதை வெறும் வாய் துர்நாற்றம் என்று அறிந்திருக்கிறார்கள்!
வாய் துர்நாற்றம், உங்களுக்கு இருக்கிறதா? மற்றவர்களிடமுள்ள வாய் துர்நாற்றத்தைக் கண்டுணர்ந்துகொள்வதில் உங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்லாதிருந்தபோதிலும், உங்களுடைய சொந்த துர்நாற்றத்தை நீங்களே கண்டுபிடிக்க முடியாதிருக்கலாம். நாம் நம்முடைய சொந்த வாய் துர்நாற்றத்துடன் இயல்பாகவே பழகிப்போய்விடுவதால், “கடும் துர்நாற்றமுள்ள” ஜனங்களும்கூட “ஒருவேளை பிரச்சினையைத் தனிப்பட்டவிதமாக அறியாமல் இருக்கக்கூடும்,” என்று ஜர்னல் ஃபார் தி அமெரிக்கன் டென்டல் அஸோஸியேஷன், JADA, விளக்குகிறது. எனவே, நம்மில் பலர் வேறு யாரேனும் நம்மிடம் சொல்லும்போது மட்டுமே நம் சொந்த வாய் துர்நாற்றத்தை அறிய வருகிறோம். என்னே ஒரு தர்ம சங்கடமான நிலை!
இது எங்குமுள்ள பிரச்சினையாக இருக்கிறது என்பது தானே ஆறுதலளிப்பதாய் இல்லை. வாய் துர்நாற்றம் பொதுவாகவே அருவருப்பானதாகவும் ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. சிலருடைய விஷயங்களில் இது ஒருவேளை கடுமையான உணர்ச்சிக் கோளாறுகளையும்கூட கொடுக்கக்கூடும். இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் வாய் நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் தலைவராகிய டாக்டர் மெல் ரோஸன்பர்க் விளக்குகிறார்: “வாய் துர்நாற்றம், உண்மையோ ஊகிப்போ, சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவதற்கு, மணவிலக்கு நடவடிக்கைகளுக்கு, ஏன் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கும் வழிநடத்தலாம்.”
வாய் துர்நாற்றத்தைப் பற்றி என்ன அறியப்பட்டிருக்கிறது?
வாய் துர்நாற்றத்தை மோசமான உடல் ஆரோக்கியத்தின் அகநிலை அறிகுறியாக சுகாதார அதிகாரிகள் வெகுகாலமாகக் கருதுகிறார்கள். இந்தக் காரணத்திற்காகப் பழங்காலத்திலிருந்தே மருத்துவர்கள், மனிதருடைய வாயின் துர்நாற்றங்கள் பற்றி ஆராய்ந்திருக்கின்றனர்.
கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த பிரபலமான வேதியலார் ஆண்ட்வான்-லாரான் லவ்வாஸியயே, மனிதனின் வாய்மூச்சில் உள்ளடங்கியுள்ளவற்றை ஆராய்வதற்காக ஒரு வாய் துர்நாற்ற சோதனைக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். அப்போதிருந்து அறிவியல் அறிஞர்கள் மேம்பட்ட மாதிரிகளை உருவாக்கியிருக்கின்றனர். இன்று கனடா, இஸ்ரேல், ஜப்பான், மற்றும் நெதர்லாந்து நாடுகளிலுள்ள ஆய்வகங்கள், ஹேலிமீட்டர் பயன்படுத்துகிறார்கள். இது வாயிலுள்ள கெட்ட நாற்றங்களின் அளவை அளக்கிறது. நியூ ஜீலாந்தில், அறிவியல் அறிஞர்கள் படல-வளர்ச்சி நிலையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவை செயற்கை வாய்கள் என்றும்கூட அறியப்படுகின்றன. இவை ஒரு மனித வாயிலுள்ள சூழலை, உமிழ்நீர், படலம், பாக்டீரியா, மேலும் வாய் துர்நாற்றம் போன்றவற்றோடுகூட மறுபடிவம் செய்கிறது.a
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், அறிவியல் அறிஞர்கள் நம் மூச்சைப் பற்றி அதிகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சயன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிக்கையின் பிரகாரம், “ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஏறக்குறைய எளிதில் ஆவியாகக்கூடிய 400 கரிம சேர்மங்களை சாதாரண மனிதமூச்சில் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள்.” இந்தச் சேர்மங்கள் அனைத்துமே அருவருப்பான நாற்றங்களைப் பிறப்பிப்பதில்லை. ஹைட்ரஜன் சல்ஃபைடு மற்றும் மித்தைல் மெர்கேப்டான், வாய் துர்நாற்றத்திற்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. இந்த வாயுக்கள் நம் மூச்சுக்கு, துர்நாற்றமுள்ள மரநாய்வகை விலங்கின் (skunk) துர்நாற்றத்திற்கு மிகவும் ஒத்த துர்நாற்றத்தைக் கொடுக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பாக்டீரியாக்களின் 300-க்கு மேற்பட்ட இனங்களுக்கு இருப்பிடமாக மனித வாய் செயல்படுகிறது. டஃப்ட்ஸ் யூனிவர்சிட்டி டயட் & நியுட்டிரிஸியன் லட்டர் சொல்கிறது: “இருண்ட, வெதுவெதுப்பான, ஈரமுள்ள இடமாக வாய், துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் செழிப்படைவதற்கு ஒரு பரிபூரண சுற்றுச்சுழலைப் போல் இருப்பதில் முதலாவதாகத் திகழ்கிறது.” ஆனால், வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாய் இருப்பவை நான்கு இனங்கள் மட்டுமே. உங்கள் வாயில் அவை வாழ்கின்றன. ஆனால் ஒருவேளை நீங்கள் இன்னும் அவற்றின் பெயர்களை அறியாதிருக்கலாம். அவை, வெய்லோனெல்லா அல்கலஸென்ஸ், ஃபியுஸோபேக்ட்டீரியம் நியூக்ளியட்டம், பாக்ட்டீராய்ட்ஸ் மெலானினாஜெனிக்கஸ், கிளப்ஸில்லா நிமோனியே. அவை வாயிலுள்ள உணவுப்பொருட்கள், மரித்த செல்கள், மற்ற பொருட்களை உணவாகக் கொள்கின்றன. பாக்டீரியாவின் இந்தச் செயல்கள் துர்நாற்றமுள்ள வாயுக்களை உருவாக்குகின்றன. இச்செயல்முறை, குப்பை அழுகும்போது நடக்கிறதைப்போல் நடக்கிறது. பொருத்தமாகவே, பல் இதழாகிய ஜே பிரியாடண்டல் விளக்குகிறது: “நுண்ணுயிரி அழுகுதலின் [கரிமப் பொருட்களின் சிதைவு] காரணமாக பெரும்பாலானவர்களுக்கு ஹெலட்டோசஸ் வாயில்தான் ஆரம்பிக்கிறது.” சோதிக்கப்படாமல் போனால், இது பல் சிதைவுக்கும் ஈறு நோய்க்கும் வழிநடத்தக்கூடும்.
“காலை வணக்கம்! உங்கள் வாயின் மணம் எப்படி இருக்கிறது?”
வாயில் இந்த அழுகுதல் செயல்முறை, தூக்கத்தின்போது முடுக்கிவிக்கப்படுகிறது. ஏன்? பகல்நேரத்தில், ஆக்ஸிஜன் அதிகமுள்ள மேலும் சிறிது அமிலமுள்ள உமிழ்நீரினால் வாய் தொடர்ந்து இலேசாகக் கழுவப்படுகிறது. இது பாக்டீரியாக்களை நீக்குகிறது. எனினும் தூங்கும்பொழுது, ஒரு மணி நேரத்திற்கு உமிழ்நீர் உற்பத்தியாகும்திறம் சாதாரணமாய் இருக்கும் அளவில் சுமார் 50-ல் 1 பாகமாகக் குறைந்துவிடுகிறது. பத்திரிகை ஒன்று சொல்கிறபிரகாரம், ஒரு உலர்ந்த வாய் “1,60,000 கோடிக்கு மேலான பாக்டீரியாக்கள் அடங்கிய ஒரு கெட்டுப்போன தேக்கமாக மாறி,” பிரபலமான “காலை துர்நாற்றத்தை” அதனுடைய கெட்ட நாச்சுவையுடன் உண்டாக்குகிறது.
நீங்கள் விழித்திருக்கையிலும் கவலையினாலும்கூட உமிழ்நீர் உற்பத்தி குறைவுபடுதல் உந்துவிக்கப்படக்கூடும். உதாரணமாகப் பயப்படும் பொதுப்பேச்சாளர் பேசும்போது உலர்ந்த வாயை உடையவராக ஆகக்கூடும். இது துர்நாற்றமுள்ள மூச்சில் (ஹெலட்டோசஸ்) விளைவடையக்கூடும். வாய் உலர்ந்திருத்தல் பல நோய்களுக்கு பக்க பாதிப்பாகவும் அல்லது அறிகுறியாகவும் இருக்கிறது.
ஆனால் வாய் துர்நாற்றம் எப்போதும் பாக்டீரியாவின் செயலால் வந்த விளைவல்ல. சொல்லப்போனால், வாய் துர்நாற்றம் பெரும்பாலும் பல்வேறுபட்ட நிலைமைகளின் மற்றும் வியாதிகளின் ஓர் அறிகுறியாக இருக்கிறது. (பக்கம் 22-ல் உள்ள பெட்டியைக் காண்க.) இந்தக் காரணத்திற்காக, விளக்கப்படாது தொடர்ந்திருக்கும் வாய் துர்நாற்றத்திற்கு, மருத்துவ சிகிச்சைக்குப் போவது மிகவும் நல்லது.
வாய் துர்நாற்றம் வயிற்றிலும் ஆரம்பிக்கக்கூடும். ஆனாலும், பிரபலமான நம்பிக்கைக்கு எதிராக, இது அரிதாகவே நடக்கிறது. பெரும்பாலும் சில அருவருப்பான துர்நாற்றங்கள் நுரையீரலிலிருந்து வாய்க்கு வருகின்றன. எப்படி? வெள்ளைப்பூண்டு அல்லது வெங்காயங்கள் போன்ற சில உணவுப்பொருட்கள் ஜீரணித்தப்பின்பு அவை ரத்த ஓட்டத்தோடு கலந்து, நுரையீரலுக்குக் கடத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட வாசனைகள் சுவாச பாதை வழியாக வாய்க்கும் மூக்குக்கும் சென்று வெளியேற்றப்படுகின்றன. ஹெல்த் பத்திரிகையின் பிரகாரம், “வெள்ளைப்பூண்டின் பருப்புகள் ஜனங்களுடைய பாதங்களின் அடிப்பாகத்தில் வெறுமனே தேய்க்கப்பட்டால்கூட அல்லது அவர்கள் சவைக்காமல் விழுங்கினால்கூட வாயில் வெள்ளைப்பூண்டின் வாசனையைப் பெறுகிறார்கள்.”
மதுபானங்கள் குடிப்பதும் உங்கள் ரத்தத்தையும், நுரையீரல்களையும் மதுபான வாசனையால் பாதிக்கும்படி செய்யக்கூடும். இது நடக்கிறபோது, நிச்சயமாகவே காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு ஏதும் நீங்கள் செய்ய முடியாது. சில உணவுப் பொருட்களின் வாசனைகள் 72 மணிநேரம்வரை உங்கள் உடம்பில் நீடிக்கக்கூடும்.
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி?
வாய் துர்நாற்றம், கற்கண்டு போன்ற வாய் துர்நாற்ற நீக்கியை சுவைப்பதால்தானே சரிசெய்யப்பட முடியாது. பெரும்பாலும் வாயில் நடைபெறும் பாக்டீரியா செயல்பாட்டின் விளைவு வாய் துர்நாற்றம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாயில் தேங்கியிருக்கும் மிகச்சிறிய உணவுப்பொருட்கள் கோடிக்கணக்கான பாக்டீரியாக்களுக்கு ஒரு விருந்தளிக்கிறது என்பதை ஒருவர் எப்போதும் மனதில் வைக்கவேண்டும். ஆகவே, வாய் துர்நாற்றத்தை மேற்கொள்வதற்கான ஒரு முக்கிய வழி, உங்கள் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதாகும். இவ்வாறு செய்வதன்மூலம் பாக்டீரியாவின் எண்ணிக்கையைக் குறைக்கமுடியும். உங்கள் பற்களிலிருந்து உணவுப்பொருட்களையும் படலத்தையும் ஒழுங்காக அகற்றுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. எப்படி? சாப்பாட்டிற்குப் பிறகும் உறங்கப் போகும் சமயத்திலும் ஒரு பல் துலக்கி (பிரஷ்) உபயோகித்து பல் துலக்குவது முக்கியம். ஆனால் இவ்விதம் பல் துலக்குதல் பல படிகளில் ஒன்றுதான்.
ஒரு துலக்கியால் (பிரஷ்ஷால்) சென்றெட்டமுடியாத பல் தளங்கள் இருக்கின்றன. முறுக்குறா மென்பட்டிழை கொண்டு பல் சுத்தப்படுத்துதல் (flossing) ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்வது அவசியம். பாக்டீரியாவின் பிரியமான மறைவிடமாகவும் இனப்பெருக்கமடையும் இடமாகவும் இருக்கிற உங்கள் நாக்கையும்கூட மென்மையாகத் துலக்கும்படி நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். பல் மருத்துவராலும் பல் சுகாதாரவியலாளராலும் ஒழுங்கான சோதனைகளும் பற்காரை நீக்குதல்களும் தேவைப்படுகின்றன. இந்தப் படிகளை வரிசைக்கிரமமாக எடுக்க தவறுவது வாய் துர்நாற்றத்தில் முடிவடையக்கூடும், காலப்போக்கில் வினைமையான பல், ஈறு வியாதிகளுக்கு வழிநடத்தக்கூடும்.
உங்களுடைய துர்நாற்றத்தை நீக்குவதற்கு சில தற்கால வழிகளும் எடுக்கப்படலாம். தண்ணீர் குடியுங்கள், சர்க்கரையில்லாத ஜவ்மிட்டாய் சவையுங்கள்—உங்கள் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கும் எதையாவது செய்யுங்கள். இயற்கை வாய்க்கழுவிப் போல் உமிழ்நீர் செயல்படுகிறது என்பதை மனதில் வையுங்கள். அது பாக்டீரியாவைக் கழுவி நீக்கிவிட்டு, அவற்றிற்கு சாதகமற்ற சூழலை உண்டாக்குகிறது.
மார்க்கெட்டிலுள்ள வாய்க்கழுவிகள் உதவக்கூடும், ஆனால் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும்போது அவற்றையே நீங்கள் நம்பி இருக்கக் கூடாது. உண்மையில், ஆல்கஹால் கலந்த வாய்க்கழுவிகளைக் கொண்டு செய்யப்படும் கொப்பளித்தல் உலர்ந்த வாயை உண்டாக்கக்கூடும். நுகர்வோர்க்கு கிடைக்கிற மிகவும் பலன்தரும் வாய்க்கழுவிகளில் சில, வெறும் 28 சதவிகிதம் மட்டுமே பாக்டீரிய படலத்தைக் குறைக்கும். எனவே உங்களுக்குப் பிரியமான வாய்க்கழுவியைக் கொண்டு, நன்றாகக் கொப்பளித்தப்பின்பு, நீங்கள் உங்கள் வாயில் ஆரம்பத்தில் கொண்டிருந்த பாக்டீரியாவின் அளவில் 70 சதவிகிதத்துக்கு மேலான அளவை இன்னும் கொண்டிருப்பீர்கள். கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் பத்திரிகை, ஒரு தொடர்ச்சியான ஆய்வுகளில் ஒரு வாய்க்கழுவியைப் பயன்படுத்தி கழுவியப் பிறகு “வாய் துர்நாற்றம் 10 நிமிடங்களிலிருந்து ஒரு மணிநேரத்திற்குள் மறுபடியும் வந்துவிடுகிறது,” என்று விளக்குகிறது. பல நாடுகளில் மருந்து சீட்டின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கக்கூடியவாய் இருக்கும் மிக சக்திமிக்க வாய்க்கழுவிகளும்கூட பாக்டீரியா படலத்தை 55 சதவிகிதமே குறைக்கமுடியும். சில மணிநேரங்களில் பாக்டீரியா தங்களுடைய முந்தின எண்ணிக்கைக்கு மீண்டும் வளர்ந்துவிடுகின்றன.
தெளிவாகவே, வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதைப் பற்றி, ஏனோதானோ என்ற மனப்பான்மை தவிர்க்கப்படவேண்டும். பதிலாக, நீங்கள் உங்களுடைய வாயையும் பற்களையும் இடைவிடா பராமரிப்பை அவசியப்படுத்தும் விலையுயர்ந்த கருவிகளாகக் கருதவேண்டும். பொறுப்புள்ள தச்சர்களும் இயந்திர வல்லுநர்களும் ஒவ்வொரு வேலையையும் முடித்தப்பின்பு பிரத்யேகமான பராமரிப்பு செயல்முறைகளைப் பின்பற்றுவதன்மூலம் தங்களுடைய கருவிகளைத் துருப்பிடித்தல், அரிக்கப்படுதல் மற்றும் பிற சேதத்திலிருந்து பாதுகாக்கிறார்கள். உங்களுடைய பற்களும் வாயும் எந்த மனிதன்-செய்த கருவிகளையும்விட மிக விலையுயர்ந்தது. ஆகவே, அவற்றிற்கு தகுந்த பராமரிப்பையும் கவனத்தையும் செலுத்துங்கள். இவ்வாறு செய்வதன்மூலம், வாய் துர்நாற்றத்தையும் அதோடு வரும் ஏமாற்றம் மற்றும் தர்மசங்கடத்தையும் குறைக்கலாம். மிக முக்கியமாக உங்கள் வாய் அதிக சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
[பக்கம் 22-ன் பெட்டி]
வாய் துர்நாற்றத்தை உருவாக்குவது எது?
பின்வருபவை வாய் துர்நாற்றத்தை உண்டாக்கக்கூடிய பல நிலைமைகள், வியாதிகள், பழக்கவழக்கங்களைச் சேர்ந்தவை:
மூச்சுக்குழாய் அழற்சி
இரைப்பை அழற்சி
நீரிழிவு
மதுபானங்களை அருந்துதல்
வாய் உலருதல்
சீழ்த்தேக்கம்
உமிழ்தல்கள் (ஏப்பங்கள்)
ஈறு நோய்கள்
இடைவாய் குடலிறக்கம்
சிறுநீரகம் செயலிழத்தல்
ஈரல் நோய்
மாதவிடாய் ஒழுக்கு
வாய்ப்புண்கள்
முட்டை வெளியிடுதல்
வாய் அசுத்தம்
எலும்புப்புழை அழற்சி
புகையிலை புகைத்தல்
சில வகை புற்றுநோய்கள்
சில வகை மருந்துகள்
பற்சொத்தை
காச நோய்
பல் அறுவை சிகிச்சையினால் வரும் காயங்கள்
[பக்கம் 24-ன் பெட்டி]
உங்கள் நாக்குக்கும் கவனம் தேவை
கண்ணாடிக்கு மிக நெருங்கிப் போய், உங்கள் நாக்கை உற்றுப்பாருங்கள். எண்ணற்ற சிறு நீள பிளவுகளால் அது மூடப்பட்டிருக்கிறதா? அது இயல்பானதுதான். ஆனால் உங்கள் நாக்கின் மேல்பரப்பிலுள்ள நீள பிளவுகள் கோடிக்கணக்கான பாக்டீரியாக்களுக்குப் புகலிடமளிக்கின்றன. தொந்தரவு செய்யப்படாதபோது, பாக்டீரியாக்கள் தொடர்ந்திருக்கும் வாய் துர்நாற்றப் பிரச்சினையையும் மற்ற ஆரோக்கியமற்ற நிலைமைகளையும் உண்டாக்கக்கூடும். எனினும் மக்கள் வாய் சுத்தத்தைக் கடைப்பிடிக்கும்போது நாக்குக்குப் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை.
துர்நாற்றமுள்ள மூச்சுக்கு (ஹெலட்டோசஸ்) பரிகாரமாகப் பல் மருத்துவர்கள் நாக்கின் மேல்பரப்பை மென்மையான முடியுள்ள பல் துலக்கி கொண்டு ஒழுங்காகத் துலக்கும்படி சிபாரிசுசெய்கிறார்கள். சில நிபுணர்கள் நாக்கு வழிப்பானைப் பயன்படுத்தும்படி சிபாரிசுசெய்கிறார்கள். இந்தியாவில், வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்கு ஒரு வழியாக நாக்கு வழிப்பான்களைப் பரம்பரையாக மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு அவை உலோகத்தினால் செய்யப்பட்டுவந்தன, ஆனால் இப்பொழுதோ பிளாஸ்டிக் வழிப்பான்கள் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் ஒரு வழிப்பானைப் பெற உங்களுடைய பல் மருத்துவரை அணுகவேண்டியதிருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a படலம் என்பது பல்லுக்குமேல் உருவாகும் பிசுபிசுப்பான ஒரு பொருள். அது உங்களுடைய பற்களையும் ஈறுகளையும் பாதிக்கக்கூடிய பாக்டீரியாக்களால் பெரும்பாலும் ஆனது.
[பக்கம் 23-ன் படங்கள்]
வாயை நன்றாகச் சுத்தமாய் வைத்திருத்தல் முறுக்குறா மென்பட்டிழை கொண்டு பல் சுத்தம்செய்தலையும் பல் மற்றும் நாக்கினை பல் துலக்கி வைத்து துலக்குதலையும் உட்படுத்துகிறது
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
Life