உலகத்தைக் கவனித்தல்
பெண் பாதிரிகள் கூடாது
பேட்டி காணப்பட்ட கத்தோலிக்க சர்ச் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலானவர்கள் பெண்கள் பாதிரிகளாவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதாக நினைத்ததைச் சுற்றாய்வு ஒன்று வெளிப்படுத்திய போதிலும், போப் ஜான் பால் II அந்த எண்ணத்தைக் கைவிடும்படியாக கத்தோலிக்கர்களுக்கு உறுதியாக சொல்லியிருக்கிறார். பிஷப்புகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் போப் இவ்விதமாகச் சொன்னார்: “பெண்களுக்குப் பாதிரி பதவியை அளிப்பதற்கு சர்ச்சுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையும் இந்தக் கருத்தை கத்தோலிக்க சர்ச்சில் விசுவாசமுள்ள அனைவரும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் அறிக்கையிடுகிறேன்.” “ஆண்களுக்கு மட்டுமே பாதிரி பதவியளிப்பை ஒதுக்கிவைத்தல்,” என்று தலைப்பிடப்பட்ட போப்பின் கடிதத்தோடு பின்வருமாறு கூடுதலாக சொன்ன அதிகாரப்பூர்வமான அறிக்கை சேர்ந்துவந்தது: “இது வெளிப்படையாக சர்ச்சை செய்வதற்குப் பொருத்தமான ஒரு பொருளாக இல்லாத காரணத்தால், விசுவாசமுள்ளவர்களின் முழுமையான நிபந்தனையற்ற சம்மதத்தை எப்பொழுதும் தேவைப்படுத்துகிறது, இதற்கு மாறாக போதிப்பது மனச்சாட்சியை தவறுக்குள் வழிநடத்துவதற்குச் சமமாக இருக்கிறது.” இரண்டு மாதங்களுக்கு முன்னால், சர்ச் ஆஃப் இங்லண்டில் 32 பெண்களுக்குப் பாதிரி பதவி அளிக்கப்பட்டிருந்தது, இவர்கள் அந்தச் சர்ச்சின் வரலாற்றில் முதல் பெண் பாதிரிகளாக இருந்தனர். அதன் விளைவாக, 35 பேர் மாத்திரமே ராஜினாமா செய்தபோதிலும் ஆங்கலிக்கன் மதகுரு உறுப்பினர்களில் சுமார் 700 பேர் ரோமன் கத்தோலிக்க சமயத்துக்கு மதம் மாறப்போகும் தங்கள் எண்ணத்தை வெளியிட்டனர். அபிப்பிராய பேதமுள்ள ஆங்கலிக்கன் பாதிரிகள் ரோமன் கத்தோலிக்க சர்ச்சினுள் வரவேற்கப்படுவதைச் சொல்வதே போப்பினுடைய கடிதத்தின் ஓரளவான நோக்கம் என்பதாக சில வாடிகன் அதிகாரிகள் நம்புகின்றனர்.
“மேசையில் மரணம்”
“பெரிய நகரங்களில், வீட்டில் ஒரு ஆயுதத்தை வைத்திருப்பதற்கான ஆசை அதிகரித்துவருகிறது,” என்பதாக “மேசையில் மரணம்” என்ற தலைப்பின்கீழ் வீஜா குறிப்பிடுகிறது. ஆனால் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த, குறி தவறாது சுடும் ஒருவர் பின்வருமாறு உறுதியாகச் சொல்கிறார்: “வெடிக்கும் போர்க் கருவிகளால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து எவரும் விதிவிலக்களிக்கப்பட்டில்லை, துப்பாக்கி ஒன்றை வாங்காமல் இருப்பதே அவற்றைத் தவிர்ப்பதற்கு ஒரே வழியாகும்.” குற்றவாளிகள் துப்பாக்கிகளோடு அதிக பரிச்சயமானவர்களாக எதிர்பாரா அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய விளைவைப் பயன்படுத்திக் கொள்ளும் காரணத்தால், “மோதலில் தற்காப்பு எண்ணமுள்ள ஒருவருக்கு விளைவு சாதகமாக இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவே.” காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்: “ஆயுதம் இல்லாதபோது, ஒரு நபர் வலியத் தாக்குவதற்குப் பதிலாக புத்திக்கூர்மையினால் மோதலில் வெற்றிபெற முயற்சிசெய்வார்.”
விலங்குகள் எண்ணிக்கை சரிதல்
ஜிம்பாப்வி உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் கறுப்பு காண்டாமிருகங்களைக் கொண்டிருப்பதாக ஒருசமயம் பெருமையடித்துக்கொண்டது. ஆனால் 1980-ல் சுமார் 3,000-ஆக இருந்தது, இப்பொழுது சுமார் 300 என்ற எண்ணிக்கைக்குக் குறைந்துவிட்டதாக ஜோஹகன்ஸ்பர்க் செய்தித்தாளாகிய தி ஸ்டார் அறிக்கை செய்கிறது. வேட்டையாடுபவர்கள் அவற்றின் விலைமதிப்புள்ள கொம்புகளுக்காக தொடர்ந்து வேட்டையாடுகிறார்கள். சமீப ஆண்டுகளில், வேட்டையாடுபவர்களைக் கொல்வதற்கான அதிகாரத்தைப் பூங்காவின் இலாக்கா அதிகாரிகளுக்கு வழங்கிய கண்டிப்பான சட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. காண்டாமிருகங்கள் வாழும் பகுதிகளைத் திறம்பட காவல் காப்பதற்கு தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு இலாக்காக்களுக்குப் போதிய நிதியை அரசாங்கம் அளிக்க இயலாதிருப்பதே பிரச்சினையாகும். வேட்டையாடுவதன் காரணமாக, “ஜிம்பாப்வியில் யானைகளின் எண்ணிக்கை 80,000-லிருந்து கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 60,000-ஆக [குறைந்துவிட்டிருக்கிறது]” என்பதாக தி ஸ்டார் அறிவிப்பு செய்கிறது.
பாரவண்டி ஓட்டுபவர்களால் எய்ட்ஸ் பரவுகிறது
இந்தியாவில் பாரவண்டி ஓட்டுபவர்கள் எய்ட்ஸ் நச்சுக்கிருமிகளால் (HIV) சுலபமாக பாதிக்கப்படும் உயர் அபாயத் தொகுதியினராக கருதப்படுகின்றனர். தங்கள் குடும்பங்களை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் பம்பாயின் விலைமாதர் இல்லங்களுக்கு வழக்கமாகச் செல்லுகின்றனர், அங்கு வேலைசெய்யும் 80,000 விலைமாதர்களில் 50 முதல் 60 சதவீதத்தினர் HIV கிருமிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதாக மதிப்பீடுகள் காண்பிக்கின்றன. பம்பாயிலிருந்து பாரவண்டி ஓட்டுபவர்கள் நாடு முழுவதும் செல்கின்றனர். நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள சில கிராமங்களில், கிராமப் பெண்கள் பாரவண்டி ஓட்டுபவர்களோடு பாலுறவுகொள்வதன் மூலம் பணம் சம்பாதிக்க வரிசையாக குடிசைகளை அமைத்திருக்கின்றனர். அருகாமையிலுள்ள நகரங்களிலிருந்து வரும் பணக்கார வாலிபர்களும் இதே பகுதிகளுக்கு வழக்கமாகச் செல்கின்றனர், தி டைம்ஸ் ஆஃப் இண்டியா குறிப்பிட்டவிதமாகவே இது “நச்சுக்கிருமிக்குச் சிக்கலான மற்றும் தடம் கண்டறியமுடியாத சங்கிலியை ஏற்படுத்திவிடுகிறது.” உயர்ந்த வெப்பத்தில் நீண்ட மணிநேரங்கள் ஓட்டும்போது தங்கள் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு பாலுறவு இன்றியமையாதது என்ற பாரவண்டி ஓட்டுபவர்களின் மூடநம்பிக்கை பிரச்சினையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது.
சமாதான இலாபப் பங்கு என்ன?
“எதிர்பார்க்கப்பட்ட ‘சமாதான இலாபப் பங்குக்கு’ என்ன ஆனது?” என்பதாக பிரெஞ்சு பத்திரிகை வேலர் அக்டியூல் கேட்டது. பனிப்போர் பதற்றம் தணிந்து இதற்கு இணையாக அநேக அரசாங்கங்களின் இராணுவ செலவுகளும் குறைந்துவிட்டிருக்க, குறைந்தபட்சம் முன்னர் படைக்கலங்களுக்குச் செலவிடப்பட்ட பேரளவான பணத்தில் ஒரு பகுதியாவது வறுமையையும் நோயையும் ஒழிக்க உதவும் நோக்குடன் மனிதாபிமானத் திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படும் என்ற நம்பிக்கைகள் எழுப்பப்பட்டன. சமீபத்திய ஐநா மனித வளர்ச்சி அறிக்கையை (ஆங்கிலம்) குறிப்பிட்டு, கடந்த ஏழு ஆண்டுகளின்போது இராணுவச் செலவின் குறைப்பு சுமார் 93,500 கோடி டாலர் மொத்த “சேமிப்பை” குறித்தபோதிலும், மனிதாபிமான திட்டங்களுக்குச் செலவழிப்பதில் அதற்கிணையான அதிகரிப்பு எதுவுமில்லை என்பதாக பத்திரிகை குறிப்பிடுகிறது. அநேக நாடுகள் இன்னும் தங்கள் கல்விக்கும் ஆரோக்கிய நலனுக்கும் சேர்ந்து செலவிடுவதைக்காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான பணத்தைத் தொடர்ந்து படைக்கலங்களுக்காக செலவழித்துக்கொண்டிருப்பதையும்கூட அறிக்கை குறிப்பிட்டது.
மதத்தில் அக்கறை குறைந்துவருகிறது
அதிகதிகமான ஜப்பானியர்கள் மதத்தைக் குறித்து அக்கறையற்றவர்களாகி வருகின்றனர் என்பதாக யோமியூரி ஷிம்பன் செய்தித்தாள் நடத்திய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது. 1979 முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் “மதத்தின் பேரிலான தேசிய விழிப்புணர்ச்சி ஆய்வு” பிரகாரம், குறிப்பிட்ட ஒரு மதத்தில் நம்பிக்கையுடைய ஆட்களின் விகிதப் பொருத்தம் 4 பேருக்கு 1 என்ற மிகக் குறைவான அளவினை அண்மையில் எட்டியிருக்கிறது. மதத்தில் ஏன் இந்த அக்கறை குறைவு? ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர் மதங்கள் “பணம் பண்ணுவதைக் குறித்து அளவுக்கு அதிகமாக ஆர்வமுள்ளதாக” இருப்பதாக குறைகூறியது ஆச்சரியமாயிருக்கிறது. மற்றவர்கள் “பிறரைத் தாக்கும் மனப்பான்மையுள்ள பிரசங்கிப்பு,” “அரசியலில் அளவுக்கு அதிகமான ஈடுபாடு,” மற்றும் “மரியாதைக்குத் தகுதியுள்ள மதத் தலைவர்களைக் கொண்டில்லாமல் இருப்பது,” என்பதாக மதங்களைப்பற்றி குறைகூறினர். என்றபோதிலும், “44 சதவீதத்தினர் கடவுள் அல்லது புத்தர் ‘இருப்பதாக’ நினைத்தனர்.”
ஆசீர்வாதங்கள் விற்பனைக்கு
கடும் பணத்தட்டுப்பாட்டை எதிர்ப்படுவதால், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அநேக பாதிரிமார் ஆசீர்வாதங்களை விற்பதில் இறங்கிவிட்டார்கள். ஆனால் எல்லா பாதிரிகளும் இந்த வியாபாரத்தைக் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை. ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவர் பின்வருமாறு சொன்னதாக தி மாஸ்கோ டைம்ஸ் மேற்கோள் காண்பிக்கிறது: “அநேக சர்ச்சுகளுக்குப் புதுப்பிக்கும் பணிக்கு அதிகமான பணம் தேவைப்படுகிறது.” ஆகவே பாதிரிமார் கடைகள், குடியிருப்பிடங்கள், மதுக்கடைகள், மற்றும் கேளிக்கைக் கூடங்களை ஆசீர்வதிக்க பணம் கேட்கின்றனர். கார்களும்கூட ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கின்றன. காரின் தரத்தைப் பொருத்து, பழைய கார் சந்தையின் அருகில் வேலைசெய்யும் ஒரு பாதிரி ஆசீர்வதிப்பதற்காக 30,000 முதல் 50,000 ரூபிளை ($15 முதல் $25 வரை) வசூலிக்கிறார். இதில் ஜெபங்கள், தூபவர்க்கம் மற்றும் “பரிசுத்த நீர்” தெளித்தல் ஆகியவை அடங்கும்.
சிநேகப்பான்மையற்ற ஓட்டுநர்களைக் கையாளுவது
ஓட்டுநர் ஒருவர் உங்களை முந்திக்கொண்டு வேகமாகச் சென்று உங்களுக்கு முன்னால் வலியவந்து வளைந்து போகிறார், அல்லது உங்களைப் பாதையிலிருந்து விலகிப்போகச் செய்வதற்காக தன்னுடைய முன்விளக்கை திடீரென பிரகாசிக்கச் செய்கிறார் மற்றும் கடந்துசெல்லும்போது வெறுப்பூட்டும் சைகைகளைச் செய்கிறார். தவறாக நீங்கள் பிரதிபலித்தால், உங்கள் உயிர் இழக்கப்படுவதில் முடிவடையலாம் என்பதாக நிபுணர்கள் சொல்கின்றனர். ரீடர்ஸ் டைஜஸ்டின் தென் ஆப்பிரிக்க பதிப்பின்படி அவர்கள் பின்வருபவற்றை சிபாரிசு செய்கின்றனர்: அமைதியான, போட்டி மனப்பான்மையற்ற மனநிலையைக் காட்டுங்கள். நீங்கள் ஓட்டிச்செல்வதில் கவனத்தை ஒருமுகப்படுத்தி மற்ற ஓட்டுநரை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்திடுங்கள். ஒவ்வொரு மூன்றிலிருந்து பத்து விநாடிகளுக்கும் ஒருமுறை பின்னால் வரும் வண்டிகளை உங்கள் கண்ணாடியில் சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஆபத்துவரும் முன்னரே அதை உணர்ந்துகொண்டு அவர் விரும்புகிற இடத்தை அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஒரு ஓட்டுநர் உங்களுக்கு முன்னால் ஓட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்கும்வகையில் வேகத்தைக் குறைத்துவிடுங்கள் அல்லது திரும்புவதற்குக் கைகாட்டிவிட்டு திறந்த வெளிக்குச் சென்றுவிடுங்கள். “அடுத்த சிநேகப்பான்மையற்ற ஓட்டுநருக்கு நீங்கள் பிரதிபலிக்கும் விதமானது, உங்கள் பாதுகாப்புக்கு, நீங்கள் உயிரோடிருப்பதற்குக்கூட இன்றியமையாததாக இருக்கலாம்,” என்பதாக கட்டுரை முடிகிறது.
உலகக் கோப்பையும் கடவுளும்
“[பிரேஸிலின்] நான்காவது [சாக்கர்] உலக கோப்பையை வெல்லும் முயற்சியில், எல்லா வகையான மத சம்பந்தமான நடவடிக்கைகளும் நியாயமானவை,” என்பதாக ஜோர்னல் டா டார்டீ அறிக்கை செய்கிறது. “விளையாட்டுக்கு முன்னும், விளையாட்டின் போதும் விளையாட்டுக்குப் பின்னும் சடங்குகள் செய்யப்படுகின்றன.” பிரேஸிலைச் சேர்ந்த பேபீட்டோ இவ்வாறு சொன்னார்: “இந்த உலகக் கோப்பையில் [கடவுள்] பிரேஸில் நாட்டு அணியின் பக்கமிருப்பார் என்று நான் நிச்சயமாய் இருக்கிறேன்.” ஆட்டத்துக்குப் பின்னர், ஆட்டக்காரர்கள் வெற்றிக்குக் கடவுளைப் போற்றுவதைக் கவனித்தபோது கார்டினல் டாம் லூக்காஸ் மோராரி நெவிஸ் பின்வருமாறு எழுதினார்: “அநேக ஆட்களுக்கு, உலகக் கோப்பையை வென்றது தனிப்பட்ட, குடும்ப அல்லது சமுதாய மதிப்புடையதாக இருக்கலாம் . . . சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் மீண்டும் உயிர்பெற்றிருக்கலாம்; அநேக வேதனைகளின் மத்தியில் ஆறுதலாக இருக்கலாம்; பாழ்ப்பட்ட ஒரு நாட்டுக்கு கத்தார்சிஸ் [சுத்திகரிப்பு] ஆகக்கூட இருக்கலாம்.” ஆனால் அக்கறையூட்டும் விதமாக சாக்கர் நட்சத்திரம் மாரோ சில்வா இவ்வாறு சொன்னார்: “பிரேஸில் அணியிலுள்ள ஒரு சில ஆட்டக்காரர்களிலிருந்து வித்தியாசப்பட்டவனாய், உலக சாம்பியன்ஷிப்பை வெல்ல கடவுள் நமக்கு உதவிசெய்தார் என்று நான் நம்புவதில்லை. கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல, சாக்கரைப் பற்றி அவர் அக்கறையுள்ளவராகவும்கூட இல்லை.”
குள்ளமானோருக்குத் தடங்கல் தாண்டு பயிற்சி
ஜெர்மனியில் ஐந்து அடிகளுக்கு மேலாக இல்லாத தனிநபர்கள் குள்ளமான ஆட்களுக்கான சங்கத்தில் உறுப்பினராவதற்குத் தகுதிபெறுகிறார்கள் என்பதாக சுடுட்ஷி ஸீட்டங் அறிவிப்புசெய்கிறது. இப்படிப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரான சபீன் பாப், குள்ளச்சி என்றோ லிலிபுட் என்றோ அழைக்கப்படுவதை விரும்புவதில்லை. “நாங்கள் நிஜமான ஆட்கள், கட்டுக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல,” என்று அவள் சொல்கிறாள். எலிவேட்டர் பட்டன்கள், விளக்கு சுவிட்சுகள், டிக்கட் மிஷின்கள் மற்றும் கதவுக் கைப்பிடிகள் அநேகமாக எட்டாத உயரத்தில் பொருத்தப்பட்டிருப்பதால் குள்ளமான ஆட்களுக்குத் தினசரி வாழ்க்கை தடங்கல் தாண்டு பயிற்சியாக ஆகிவிடலாம். மேலுமாக, குள்ளமான ஆட்கள் எதிர்ப்படும் பிரச்சினைகள் வெறுமனே சரீர சம்பந்தமானவை மட்டுமல்ல. சங்கத்தின் அக்கிராசினர் ஹேரால்ட் பெர்ன்ட், பொதுவாக சமுதாயம் அவர்களுடைய திறமைகளை உணர்ந்துகொள்வதில்லை என்பதாக வருத்தப்படுகிறார். “குள்ளமான ஆட்கள் அவர்களுடைய உருவத்தின் மத்தியிலும் நல்ல வேலையைச் செய்யமுடியும்,” என்பதாக அவர் விளக்குகிறார்.