மாதவிடாய் முடிவுறும் பருவத்தை சமாளித்தல்
மாதவிடாய் முடிவுறும் பருவமானது, “பிரத்தியேகமாய் தனிப்பட்டவரின் அனுபவம், புதிய மற்றும் உங்கள் வாழ்க்கையின் விடுதலையாக்கும் அத்தியாயத்தின் துவக்கம்,” என்று இயல்பான மாதவிடாய் முடிவுறும் பருவம்—பெண்ணால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பருவத்துக்கு முழுமையான வழிகாட்டி என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் சொல்கின்றனர். உங்களைப்பற்றியும் உங்கள் வாழ்க்கையைப்பற்றியும்—உங்கள் சொந்த தன்மதிப்பு, தனித்தன்மை—இவற்றைக்குறித்தும் எவ்வளவு மேன்மையாக உணருகிறீர்களோ அவ்வளவு எளிதாக இந்த மாற்றமுறுதலும் இருக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
உண்மைதான், சில பெண்களுக்கு வாழ்க்கையின் இந்தக் காலப்பகுதி மற்றவர்களைக்காட்டிலும் அதிக கடினமாய் உள்ளது. உங்களுக்குக் கஷ்டங்கள் இருக்குமானால், தன்மதிப்பு பிரச்சினைகள் உங்களுக்கு உள்ளது அல்லது தன்னிலையையோ உங்கள் பெண்மையையோ, உங்கள் அறிவுக்கூர்மையையோ, பாலுறவில் உங்கள் ஆர்வத்தையோ இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்றோ அர்த்தப்படுத்துவதல்ல. அதற்கு மாறாகப் பிரச்சினையானது பொதுவாகவே உடல்கூறு சம்பந்தமானது.
“மாதவிடாய் முடிவுறும் பருவத்தின்போது பெண்கள் பயங்கரமான அறிகுறிகளால் துன்பம் அனுபவித்தபோதிலும், நோக்கத்தின் புதிய உணர்வோடும் சக்தியோடும் அவர்கள் கரைசேருகிறார்கள்,” என்று நியூஸ்வீக் அறிக்கையிடுகிறது. 42-வயது பெண்மணி கூறுகிறார்: “நான் நீண்ட அமைதியையும் என் உடல் என்னைக் குழப்புவதை விட்டுவிடவும் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன்.”
பெண்கள் எப்பொழுது சிறப்பாகச் சமாளிக்கலாம்
மாதவிடாய் முடிவுறும் பருவத்தை நன்றாகச் சமாளிப்பதற்கு, முதிர்வயது பெண்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பது முக்கிய அம்சமாகும். அவர்களுடைய முதிர்ச்சி, ஞானம், அனுபவம் மதிக்கப்படும் இடங்களில் மாதவிடாய் முடிவுறும் பருவம் மிகக் குறைவான உடல்சம்பந்தமான மற்றும் உணர்ச்சிசம்பந்தமான கோளாறுகளோடு சேர்ந்து வருகிறது.
உதாரணமாக ஆப்பிரிக்கப் பழங்குடியினரைப்பற்றி, தி உமென்ஸ் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஹெல்த் அண்ட் நேச்ரல் ஹீலிங், “அங்கு மாதவிடாய் முடிவுறும் பருவத்தை வரவேற்கத்தக்க வாழ்க்கைப்பகுதியாக உடனடியாக ஏற்றுக்கொள்கின்றனர்; மாதவிடாய் முடிவுறும் பருவத்தைக் கடந்துவந்தப் பெண்கள் தங்களுடைய அனுபவத்திற்காக, ஞானத்திற்காக மரியாதை கொடுக்கப்படுகின்றனர்; பெண்கள் அரிதாகவே மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் அறிகுறிகளைப்பற்றி குறைகூறுகின்றனர்,” என்று அறிக்கையிடுகிறது. அவ்விதமாகவே மாதவிடாய் முடிவுறும் பருவத்தின்போது: “இந்திய இராஜப்புத்திர குலப் பெண்கள் மனக்கவலை பற்றியோ மனோநிலை அறிகுறிகள் பற்றியோ குறைகூறுவதில்லை,” என்று மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதன் தெரிவித்திராதப் பருவம் கூறுகிறது.
ஜப்பானிலும்கூட வயதானப் பெண்கள் உயர்வாக மதிக்கப்படுவதினால், மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்கு அளிக்கப்படும் ஹார்மோன் சிகிச்சை நடைமுறையில் அறியப்படாமலிருக்கிறது. மேலுமாகக் குறிப்பிடத்தக்கவிதத்தில் ஆசியப் பெண்கள் மேற்கத்தியப் பெண்களைக்காட்டிலும் மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் குறைந்த, சிறிதே கடினமுடையதாயுள்ள அறிகுறிகளை கொண்டுள்ளனர். இதற்கு அவர்களின் உணவுமுறைதான் வழிவகுக்கும் கூறாகத் தோன்றுகிறது.
ஒரு மனித இயல் வல்லுநரின் ஆராய்ச்சியின்படி மாயா இனப் பெண்கள் மாதவிடாய் முடிவுறும் பருவத்தை உண்மையிலேயே எதிர்நோக்கினர். அத்தகையப் பெண்களுக்கு மாதவிடாய் முடிவுறும் பருவமானது தொடர்ந்து பிள்ளைப்பெறுவதிலிருந்து விடுதலையைக் குறிக்கிறது. சந்தேகமின்றி வாழ்க்கையில் மற்றக் காரியங்களை நாடுவதற்கும்கூட இது சுதந்திரத்தைக் கொடுத்தது.
அதேசமயத்தில் மாதவிடாய் முடிவுறும் பருவத்தோடு இணைந்துள்ள பயங்களை லேசிலே தள்ளிவிடக்கூடாது. இளமைக்கும் இளமையானத் தோற்றத்திற்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலாச்சாரங்களில், இதுவரை மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அனுபவிக்காதப் பெண்கள் அடிக்கடி அஞ்சுகின்றனர். அத்தகைய தனிநபர்களின் மாற்றமுறுதலின் பிரச்சினைகளை மட்டுப்படுத்த என்ன செய்யப்படலாம்?
பெண்களுக்கு என்ன தேவை
மாதவிடாய் முடிவுறும் பருவக் கல்வியின் ஆசிரியையும் முன்னோடியுமான ஜனின் ஓலிரி காப் விளக்குகிறார்: “அநேகப் பெண்களுக்கு என்ன தேவையெனில், அவர்கள் உணரும் விதத்திற்கு ஒருவித மதிப்பு—அவர்கள் மட்டுமே அவ்விதம் உணருவதில்லை என்ற உணர்வு.”
புரிந்துகொள்ளுதலும் எழுச்சிதரும் உள்ளப்பாங்கும் மிக முக்கியம். மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் 51-வயது தாயார் ஒருவர் கூறுகிறார்: “நான் உண்மையில் நம்புவதாவது, வாழ்க்கையைப்பற்றிய உங்களுடைய பொதுவான மனநிலைதான் மாதவிடாய் முடிவுறும் பருவத்தை நீங்கள் எவ்வாறு கடந்து செல்கிறீர்கள் என்பதற்கு உதவுகிறது. . . . வயதாகிக்கொண்டு போகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நடந்தேறும். . . . இது [மாதவிடாய் முடிவுறும் பருவம்] வியாதியல்ல என்பதைத் தீர்மானித்து விட்டேன். இது எந்தன் வாழ்க்கையாகும்.”
ஆகவே உங்கள் வாழ்க்கையில் இந்தப் புதிய அத்தியாயம் அணுகும்போது, புதிய சவாலெழுப்பும் காரியங்களுக்குக் கவனம்செலுத்த நேரத்தை ஒதுக்குங்கள். மாதவிடாய் முடிவுறும் பருவம் உடலுக்குக் கொண்டுவரும் உடல்சம்பந்தமான பாதிப்புகளை அசட்டை செய்யக்கூடாது. டாக்டர்களும் மற்ற நிபுணர்களும் மாற்றமுறுதலின்போது நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான பின்வரும் விதிமுறைகளைக் கூறுகின்றனர்—சத்தான உணவு, போதுமான ஓய்வு மற்றும் மிதமான உடற்பயிற்சி ஆகியவை.
உணவுத்திட்டமும் உடற்பயிற்சியும்
ஒரு பெண்ணுக்கு வயதாகிக்கொண்டே செல்லும்போது ஊட்டச்சத்துக்களின் (புரோட்டீன், மாவுச்சத்துக்கள், கொழுப்புச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப்பொருட்கள்) தேவை குறைந்து விடுவதில்லை, ஆனால் அவளுக்குக் கலோரிகளின் தேவைதான் குறைகிறது. ஆகவே உயர்ந்தளவில் ஊட்டச்சத்து அடங்கியுள்ள உணவுப்பொருட்களை உட்கொண்டு, “வெற்றுக் கலோரிகளுள்ள” சர்க்கரைப்பொருட்கள், கொழுப்பான உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்ப்பது முக்கியமாகும்.
ஒழுங்கான உடற்பயிற்சி அழுத்தத்தையும் மனக்கவலையையும் சமாளிப்பதற்கான ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அது சக்தியை அதிகரித்து சதைப்போடுவதைத் தவிர்க்க உதவுகிறது. அடிப்படையான வளர்சிதை வினையின் அளவு வயதாகும்போது மெல்ல மெல்ல குறைந்துவிடுகிறது, இதை உடற்பயிற்சியின் மூலம் அதிகரிக்காவிட்டால், அதன் போக்கானது மெல்ல மெல்ல எடைகூடுவதில் விளைவடையும்.
உடற்பயிற்சியுடன்கூடிய கால்சியம் ஈடுசெய்தல், நுண்துளைகளையும் எளிதில் உடையும் நிலையையும் உருவாக்கும் எலும்பின் நிலைமை, அதாவது முதிர்வயது எலும்பு மெலிவுறும் நோய் வளர்ச்சியைத் தாமதமாக்கும் என்று பெண்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியம். விமென் கம்மிங் ஆஃப் ஏஜ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது, “வீட்டிற்குள்ளேயே செய்யப்படும் கட்டுடல் உடற்பயிற்சி (aerobics), நடத்தல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் மற்ற கட்டுடல் உடற்பயிற்சிகளோடே பளு-பயிற்சி,” விசேஷமாக நல்லவை என்று கருதப்படுகின்றன. அக்கறைத்தூண்டும் விதத்தில் முதுமை எலும்பு மெலிவுறுதல் நோய், வயோதிபத்திலும் உடல் செயல்திறனோடு செயல்படுகிறவர்கள் இருக்கிற சில ஒதுக்கமாயுள்ள சமுதாயங்களில் காணப்படுவதில்லை. அத்தகைய இடங்களில் பெண்கள் இயல்பாகவே தங்களுடைய வயதில் 80-களிலும் 90-களிலும் வாழ்கிறார்கள். என்றபோதிலும் எந்த உடற்பயிற்சி முறையையும் துவங்குவதற்கு முன் உங்கள் டாக்டரை கலந்தாலோசிப்பது ஞானமானக் காரியமாகும்.
திடீர் உஷ்ண வெளியேறுதல்களைச் சமாளித்தல்
அநேகப் பெண்களுக்குத் திடீர் உஷ்ண வெளியேறுதல்கள் தொல்லையாக உள்ளன. சிலருக்கோ இவை உண்மையானப் பிரச்சினையாக உள்ளன, ஏனெனில் ஒருவேளை அவை அடிக்கடி வருகின்றன அல்லது தொடர்ந்து தூக்கத்தைக் களைக்கின்றன. என்ன செய்யப்படலாம்?
முதலாவதாக பீதியடையாதீர்கள். அச்சுறுதல் நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும். ஒழுங்காகச் செய்யப்படும் விறுவிறுப்பான உடற்பயிற்சி பயனுள்ளது, ஏனென்றால் இது உடலானது அதிகமான வெப்பத்தைச் சமாளிப்பதற்கும் உடனடியாகக் குளிர்ச்சியடைவதற்கும் உதவுகிறது. மேலுமாக, ஒரு தம்ளர் குளிர்ந்த நீரைப்பருகுதல் அல்லது உங்கள் கைகளைக் குளிர்ந்த தண்ணீரினுள் வைத்தல் போன்ற எளியமுறைகளை முயற்சிக்கலாம்.
அதோடுகூட, தொளதொள ஆடைகளை அடுக்காக அணிந்துகொள்வதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள், அப்பொழுது அவற்றைக் களைவதற்கோ சேர்த்துக்கொள்வதற்கோ எளிதாக இருக்கும். பருத்தியும் நாரிழைகளும் செயற்கை இழைகளைக்காட்டிலும் நன்றாக வியர்வை காய்ந்து போவதற்கு உதவுகின்றன. தேவைக்கு ஏற்ப பல கம்பளங்களைத் தனித்தனியாகச் சேர்த்துக்கொள்ளும் அல்லது நீக்கிவிடும் பன்னடுக்கு முறையை இரவில் முயற்சிசெய்யலாம். இரவு மாற்றுடை ஒன்றை கைக்கு எட்டும்படி வைத்துக்கொள்ளுங்கள்.
திடீர் உஷ்ண வெளியேறுதலை விரைவில் நிகழச்செய்வதாகத் தோன்றுவது எது என்பதைத் தீர்மானிக்க முயலுங்கள். புகைபிடித்தல் போலவே, மதுபானம், காஃபீன், சர்க்கரை, காரமான அல்லது மசாலா சேர்த்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடுதல் அவற்றை விரைவுபடுத்தச்செய்யலாம். எப்பொழுது எங்குத் திடீர் உஷ்ண வெளியேறுதல் நிகழ்ந்தது என்பதை டைரியில் குறித்துக்கொள்வது, எத்தகைய உணவு மற்றும் நடவடிக்கைகள் அவற்றை விரைவில் நிகழச்செய்தன என்பதைக் கண்டுகொள்ள உங்களுக்கு உதவும். அப்பொழுது இவற்றையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்.
வைட்டமின்-ஈ, ஈவினிங் பிரைம் ரோஸ் ஆயில், மூலிகை மருந்துவேர் (ginseng), டாங் குவே, பிளாக் கோஹாஷ் போன்ற அநேக நிவாரணிகளை ஊட்ட உணவுநிலை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் திடீர் உஷ்ண வெளியேறுதலைத் தணிப்பதற்கு சிபாரிசுசெய்கிறார்கள். சில மருத்துவர்களின் பரிந்துரைகளான பெல்லர்கால் மற்றும் கிளானடின் சிகிச்சைமுறைகள் நிவாரணம் கொடுக்கின்றன. ஆனால் எஸ்ட்ரஜன் மாத்திரைகள் அல்லது பத்தைப் போடுதல் அதிக பயனுள்ளதாகச் சொல்லப்படுகிறது.a
யோனி வறட்சியடைதலை நீக்குவதற்கு தாவர அல்லது பழத்தின் எண்ணெய், வைட்டமின்-ஈ எண்ணெய், லூபிரிகன்ட் ஜெல்ஸ் போன்றவற்றைத் தடவலாம். இவை போதுமானவையாக இல்லாவிடின் எஸ்ட்ரஜன் கிரீம் யோனியின் வெளி இதழ்களைத் தடிக்கச்செய்து வழவழப்பாக்க உதவும். எந்தச் சிகிச்சை முறையையும் ஆரம்பிப்பதற்கு முன்பு, ஒரு மருத்துவரிடம் ஆலோசனையை நாடுவது ஞானமானது.
அழுத்தத்தைப் பற்றியதென்ன?
ஒரு பெண் மாதவிடாய் முடிவுறும் பருவத்தோடு நிகழக்கூடிய ஹார்மோன் மற்றும் உடல் சம்பந்தமான மாற்றங்களை சமாளித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் அவள் அடிக்கடி, முந்திய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அநேக அழுத்தங்களையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது. மறுபட்சத்தில் உடன்பாடான காரியங்களான பேரப்பிள்ளையின் பிறப்பு அல்லது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டிருந்தால் மற்ற புதிய காரியங்களை செய்யத்துவங்குதல் போன்றவை எதிர்மறையான அழுத்தங்களை சமநிலைப்படுத்தக்கூடும்.
இயல்பான மாதவிடாய் முடிவுறும் பருவம் என்ற புத்தகக்தின் ஆசிரியர்களான சூசன் பெரி, டாக்டர் கேத்தரன், ஏ. ஓஹன்லன் ஆகியோர் அழுத்தத்தைத் திறம்பட சமாளிப்பதற்கு சில நடைமுறை ஆலோசனைகளைக் கொடுக்கின்றனர். அழுத்தத்திற்கான காரணிகளைக் கண்டுபிடித்து, இடையிடையே அவற்றை நிறுத்தி வைப்பதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது ஒருவேளை நீடித்த நோயுடைய குடும்ப நபரை கவனித்துக்கொள்வதற்கு உதவியை நாடுவதை அர்த்தப்படுத்தலாம். “நீங்கள் செல்லக்கூடிய வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுங்கள், அதிகப்படியாக அட்டவணையிடுதலைத் தவிர்த்திடுங்கள் . . . உங்கள் உடலின் சமிக்ஞைகளுக்குக் கவனமாயிருங்கள்,” என்று அவர்கள் உத்வேகப்படுத்துகிறார்கள். அவர்கள் மேலும் கூறுகின்றனர்: “மற்றவர்களுக்குக் காரியங்களைச் செய்துகொடுப்பது. . . . பெரும் அழுத்தம்-நீக்கியாகும். . . . ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள். . . . அழுத்தத்தை உங்களால் சமாளிக்க முடியாமல் போகுமாயின், நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.”
குடும்ப அங்கத்தினர்கள் உதவலாம்
மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு உணர்ச்சி சம்பந்தமானப் புரிந்துகொள்ளுதல் மற்றும் நடைமுறையான ஆதரவுதேவை. மனவருத்தமான காலங்கள் எழும்போது தான் என்ன செய்வார் என்பதை ஒரு மனைவி விவரிக்கிறார்: “நான் காரியங்களை என் கணவரிடத்தில் பேசுவேன், அவரின் கரிசனையானப் புரிந்துகொள்ளுதலுக்குப் பின்னர், என்னுடைய கவலையுற்ற மனம் உண்டுபண்ணியதைப்போல் காரியங்கள் ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல என்பதை நான் கண்டுகொள்வேன்.”
கூரியவுணர்வுத்திறம் கொண்ட கணவன் தன்னுடைய மனைவி எப்பொழுதும் அதே செயல்வேகத்தோடு, மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் சமயத்திலும் ஈடுகொடுக்க முடியாது என்பதை அறிந்துகொள்ளுவார். எனவே அவர் ஒருவேளை துணிமணிகளைத் துவைத்தல், உணவுகளை வாங்குவதற்குக் கடைக்குச் செல்லுதல் இன்னும் இப்படிப்பட்ட குடும்பப் பொறுப்புகளைச் செய்வதற்குத் தானாகவே முன்வந்து உதவுவார். கனிவோடு அவர் தன்னைக் காட்டிலும் தன் மனைவியின் தேவைகளுக்கு முதலிடம் கொடுப்பார். (பிலிப்பியர் 2:4) எப்பொழுதாவது சாப்பாட்டிற்காக வெளியே போவதைப்பற்றி அல்லது அன்றாட வேலைக்கிரமத்திலிருந்து விடுப்பை அளிக்கக்கூடிய வேறு ஏதேனும் புத்துணர்வளிக்கும் வழியைப்பற்றி யோசனை கூறலாம். அவர் கூடுமானவரை அவளோடு கருத்துவேறுபாட்டைத் தவிர்ப்பார் மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்கும் அவளின் முயற்சிகளுக்கு ஆதரவுகொடுப்பார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கணவன் தன் மனைவிமீது வைத்துள்ள, தன்னுடைய இடைவிடாத அன்பை தொடர்ந்து உறுதிசெய்துகொண்டே இருக்கவேண்டும் என்னும் அவளின் தேவையை நிறைவேற்றுவார். தன் மனைவியின் அந்தரங்கக் காரியங்களை கேலிசெய்வதற்கு அது சமயமல்ல என்பதை அவர் பகுத்தறியவும் புரிந்து கொள்ளவும் வேண்டும். தன் மனைவியை அன்பான விதத்தில் நடத்தும் கணவன், “விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, . . . அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்,” என்னும் வேதாகம அறிவுரையைக் கடைப்பிடிக்கிறார்.—1 பேதுரு 3:7.
அவ்விதமாகவே, பிள்ளைகளும் தங்களுடைய அம்மாவின் உணர்ச்சி ஏற்ற இறக்கங்களுக்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு உண்மையான முயற்சி எடுக்கவேண்டும். அவருக்கென்று சொந்த நேரம் தேவை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தங்கள் அம்மாவுடைய மனோநிலைக்கு கூரிய உணர்வுத்திறனை வெளிக்காட்டுவதானது, அவர்கள் உண்மையிலேயே அவர் மீது அக்கறைகொண்டுள்ளனர் என்ற உறுதியளிக்கும் எண்ணத்தைக் கொடுக்கிறது. மறுபட்சத்தில், முன்னறிந்து கூறமுடியாத அவரின் சுபாவத்தைக் கேலிசெய்வார்களாயின் நிலைமையை அது இன்னும் மோசமாக்கக்கூடும். என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவைக்கும் பொருத்தமான கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் வீட்டு வேலைகளில் கேட்கப்படாமலே உதவி செய்யுங்கள். ஆனால் அம்மாவிற்கு அவருடைய வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் ஆதரவு கொடுப்பதற்கான இவை அனைத்தும் ஒருசில வழிகளே ஆகும்.
மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்குப்பின் வாழ்க்கை
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்த அத்தியாயம் முடிந்தப்பின்னர், அநேக ஆண்டுகள் அவருக்கு முன்னே இருக்கின்றன. அவர் அடைந்த ஞானமும் அனுபவமும் மதிப்பிட முடியாதவை. “பெண்கள் தங்களுடைய ஐம்பதுகளில் நன்றாக உணரக்கூடிய உணர்வு, தங்களுடைய வாழ்க்கையில் முன்னோருபோதும் இருந்ததைவிட அதிகமாக இருப்பதைத் தாங்களாகவே கண்டுகொண்டதாக உறுதிசெய்யும்” என்பதை “வயதுவந்த அறுபதாயிரம் அமெரிக்கர்களைக்” கொண்டு செய்யப்பட்ட ஆசிரியர் கேயல் ஷீயின் ஆராய்ச்சி காட்டுகிறது.
ஆம், மாற்றமுறும் வருடங்களைக் கடந்து வந்த அநேகப் பெண்கள் புதுப்பிக்கப்பட்ட தெம்பைக் கண்டுகொள்கின்றனர். அவர்களின் ஆக்கத்திறன் புத்துயிரளிக்கப்படுகிறது. தங்களை பயன்தரும் காரியங்களில் ஈடுபடுத்திக் கொண்டு, தொடர்ந்து அவர்கள் வாழ்கிறார்கள். மாதவிடாய் முடிவுறும் பருவத்தைக் கடந்து வந்த பெண்மணி ஒருவர் கூறுகிறார், “நான் என் மனதை விழிப்போடு வைக்கிறேன். நான் புதிய காரியங்களை அறிந்துகொள்ள நாடுகிறேன், மேலும் தொடர்ந்து படிக்கிறேன்.” அவர் மேலும் கூறியதாவது: “ஒருவேளை நான் மெதுவாகச் செய்யக்கூடும், ஆனால் இது தான் என் வாழ்க்கைக்கு முடிவு என்று நான் நினைப்பதில்லை. நான் அநேக ஆண்டுகளை எதிர்நோக்கி உள்ளேன்.”
குறிப்பிடத்தக்க விதத்தில், ஷீயி பெண்களைப் பேட்டி கண்டபோது, “மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்குப்பின் என்னும் உயர்த்தப்பட்ட தகுதியையும் தன்-மதிப்பையும் அனுபவிக்கிறவர்கள், புத்திக்கூர்மையோ சரியாகக் கணித்தலோ ஆக்கத்திறமோ ஆன்மீக பலமோ முதன்மையாக மதிக்கப்படும் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறவர்களே.” அத்தகைய பெண்களின் பேரணியினர் மகிழ்ச்சியாக பைபிளைப் பற்றிய அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் விரிவாக்குகிறார்கள் மற்றும் மற்றவர்களுக்கு அதன் பயன்மிக்க மதிப்பீடுகளைப் போதிக்கிறார்கள்.—சங்கீதம் 68:11.
வாழ்க்கையில் உடன்பாடான நோக்குநிலையை வைத்துக்கொள்ளுதல் மற்றும் அர்த்தமுள்ள காரியங்களைச் செய்தலைத் தவிர, வித்தியாசப்பட்ட வயதையுடைய பெண்கள் அனைவரும் நம்முடைய சிருஷ்டிகர் நம் உணர்வுகளை அறிவார் மற்றும் உண்மையில் நம்மைப் பராமரிக்கிறார் என்று ஞானத்தோடு நினைவுபடுத்திக் கொள்கின்றனர். (1 பேதுரு 5:7) நிச்சயமாகவே, யெகோவா தேவன் தம்மை சேவிக்கும் யாவரும் இறுதியாக, இனியும் வியாதியே இல்லாமலும் துன்பமும் மரணமும்கூட இல்லாத நீதியான புதிய உலகத்தில் வாழ்க்கையை அனுபவிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.
ஆகவே, மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே, இது வாழ்க்கையின் ஒரு காலகட்டம் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய அன்பான சிருஷ்டிகரைச் சேவிப்பதில் பயனுள்ள விதத்தில் செலவிடப்படுமாயின் வாழ்க்கையில் நன்றாகப் பலன் கொடுக்கத்தக்க வருடங்களை விட்டு, இது கடந்துவிடும்.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! எந்தத் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சையையும் பரிந்துரை செய்வதில்லை.
[பக்கம் 8-ன் பெட்டி]
எஸ்ட்ரஜன் ஈடுசெய்யும் சிகிச்சை முறையைப் பற்றியென்ன?
மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்குப்பின் பெண்கள் எதிர்ப்படும் இரண்டு முக்கிய வியாதிகளான இருதய நோய் மற்றும் முதிர்வயது எலும்பு மெலிவுறுதலுக்கு எதிராக ஒருவேளை எஸ்ட்ரஜன் பாதுகாப்பளிக்கக்கூடும். எஸ்ட்ரஜன் குறைய ஆரம்பிக்கும்போது, இவ்வியாதிகள் உருவாகத் துவங்கி ஐந்து அல்லது பத்து வருடங்களில் வெளித்தோன்றுகின்றன. எஸ்ட்ரஜன் ஈடுசெய்யும் சிகிச்சை முறை அல்லது ஹார்மோன் (எஸ்ட்ரஜன் மற்றும் ப்ரோஜெஸ்டரோன்) ஈடுசெய்யும் சிகிச்சை முறை இவ்வியாதிகளைத் தவிர்ப்பதற்குப் பரிந்துரைச் செய்யப்பட்டிருக்கிறது.
எஸ்ட்ரஜன் ஈடுசெய்தல் எலும்பு தேய்வின் அளவைக் குறைக்கிறது, இருதய நோயின் ஆரம்பத்தைத் தடுத்துநிறுத்துகிறது. ஹார்மோன் ஈடுசெய்யும் சிகிச்சை முறையில் ப்ரோஜெஸ்டரோனையும் உடன் சேர்ப்பது மார்பக மற்றும் கருப்பைசார்ந்த புற்றுநோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஆனால் இருதய நோய் சம்பந்தமான எஸ்ட்ரஜனின் நன்மையான விளைவுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.
ஹார்மோன் ஈடுசெய்யும் சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட வேண்டுமா வேண்டாமா என்பது ஒவ்வொரு பெண்ணின் சூழ்நிலைமைகள், ஆரோக்கியம், குடும்ப வரலாறு ஆகியவற்றின் மதிப்பீடுகளை ஆதாரமாகக்கொண்டு தீர்மானிக்கப்படவேண்டும்.*
[அடிக்குறிப்புகள்]
*ஆங்கில விழித்தெழு!, செப்டம்பர் 22, 1991, பக்கங்கள் 14-16-ஐக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி]
எது சிறந்த உணவுமுறை?
பின்வரும் ஆலோசனைகள், சூசன் பெரி, டாக்டர் கேத்தரன், ஏ. ஓஹன்லன் எழுதிய இயல்பான மாதவிடாய் முடிவுறும் பருவம்—பெண்ணால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பருவத்துக்கு முழுமையான வழிகாட்டி என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் பெண்கள் நன்றாகச் சாப்பிடுவதற்காகக் கொடுக்கப்பட்டவை.
புரோட்டீன்
•உங்களுடைய புரோட்டீன் உட்கொள்ளுதல் மொத்த கலோரியில் 15 சதவீதத்திற்கு மேல் இல்லாதபடி குறைத்திடுக.
•உங்களுக்குத் தேவையான புரோட்டீனை தாவர வஸ்த்துக்களிலிருந்து அதிகமாகவும் இறைச்சியிலிருந்து குறைவாகவும் பெற்றுக்கொள்க.
மாவுச்சத்துக்கள்
•முழுமையான தானியம், ரொட்டிகள், வேர்க்கடலை, பீன்ஸ், கொட்டைப் பருப்புக்கள், அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்ற பல்கூட்டான மாவுச்சத்துக்களை அதிகமாக உட்கொள்க.
•சர்க்கரையையும், சர்க்கரைப் பொருள் அதிகச் செறிந்துள்ள உணவுப்பொருட்களையும் குறைவாக உட்கொள்க.
•நார்ச்சத்து செறிந்துள்ள உணவை அதிகம் உட்கொள்க.
கொழுப்புக்கள்
•உங்களுடைய மொத்த கலோரி உட்கொள்ளுதலில், கொழுப்பை உட்கொள்ளுதல் 25-லிருந்து 30 சதவீதத்துக்கு அதிகம் ஆகாதபடி குறைத்திடுக.
•நீங்கள் மொத்தக் கொழுப்பு உட்கொள்ளுதலைக் குறைத்துக்கொண்டே செல்கையில், ‘கெட்ட கொழுப்புக்கள்’ (செறிவுநிலை நிறைந்த)-தில் இருந்து ‘நல்ல கொழுப்புக்கள்’ (பல்கூறுசெறிவுநிலை அகற்றப்பட்ட)-வற்றின் உட்கொள்ளுதலின் அளவை அதிகரித்திடுக.
தண்ணீர்
•எட்டு அவுன்ஸ் தம்ளரில், தினமும் ஆறிலிருந்து எட்டு தம்ளர்கள் வரை தண்ணீர் குடித்திடுக.
வைட்டமின்களும் தாதுப்பொருட்களும்
•தினமும் பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்க.
•பால், பால்பொருட்கள், திண்ணிய பூக்கோசு (broccli), கீரைகள் போன்றவை கால்சியத்துக்கு நல்ல மூலங்களாகும்.
[பக்கம் 10-ன் படம்]
உதவி செய்ய குடும்ப அங்கத்தினர் என்ன செய்யலாம்: பாசத்தைக் காட்டுங்கள், வீட்டுவேலையில் உதவுங்கள், கூர்ந்து கேட்பவராயிருங்கள், எப்பொழுதாவது வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் செய்யுங்கள்