குறைந்த நேரத்தில் நிறைய செய்வது எப்படி
‘நேரம் எங்கே போனது?’
அந்தக் கேள்வியை நீங்கள் அடிக்கடி எத்தனை முறை கேட்டிருக்கிறீர்கள்? அநேகரைப் போல நீங்கள் இருப்பீர்களானால், உங்களுக்கே ஞாபகத்திலில்லாத அளவுக்கு அநேக சமயங்களில் கேட்டிருப்பீர்கள்.
பின்வரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் நோக்குநிலையிலிருந்து கொடுக்கப்படுகிறது, ஆனால் பெண், ஆண் ஆகிய இருவருக்குமே ஒரு வாரத்திற்கு ஒரே அளவான நேரம் இருப்பதால், ‘எனக்கு இருக்கும் நேரத்தில் நான் அதிகத்தை எவ்விதம் பெற்றுக்கொள்ள முடியும்?’ என்ற கேள்விக்கு ஆணும் பெண்ணுமாகிய இருவருமே விடை பெற விரும்புவர்.
முதன்மைகளை வகைப்படுத்திக் கொள்ளுங்கள்
வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையும் நேரம் எடுப்பதால், சில காரியங்கள் இயல்பாகவே பிறவற்றைக் காட்டிலும் முதன்மை இடத்தை எடுத்துக்கொள்கின்றன. உதாரணமாக, குளிர்காலத்தில் காலை வேளையில், தாய் தன்னுடைய அனல் காணும் படுக்கையில் அதிக நேரம் இருப்பதைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்கக்கூடும். ஆனால் காலை பதார்த்தம் தயாரிப்பதற்கும், கணவரை அலுவலகத்திற்கும் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கும் அனுப்புவதற்கும் நேரமாகிவிட்டது என்று கடிகாரம் டிக் டிக் என்கிறது.
உங்களுடைய குடும்பம் சரியாக செயல்படவேண்டுமானால் முதன்மையான காரியங்களை அட்டவணைப்படுத்த வேண்டும். உணவுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, அதைச் சமைக்க ஒரு நேரம் இருக்கிறது; வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு ஒரு நேரம், துணிமணிகளைத் துவைப்பதற்கு ஒரு நேரம்; ஓய்வெடுப்பதற்கு ஒரு நேரம், படிப்பதற்கு ஒரு நேரம்; பிள்ளைகளின் வீட்டுப் பாடத்தையும் மற்ற அனுதின காரியங்களையும் கண்காணிப்பதற்கு ஒரு நேரம்—இப்படியாக அந்தப் பட்டியல் தொடருகிறது. நீங்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறீர்களா? அப்படியென்றால், செய்வதற்குக் கூடுதல் பொறுப்புகள் இருக்க, நேரம் இன்னும் அதிக மதிப்புள்ளதாகிறது. அதை வீணாக்குவதற்கு முடியாது, அல்லது காரியங்களை இன்னொரு சமயம் செய்துகொள்ளலாம் என்று அதை நீங்கள் தள்ளிப்போடுவதற்கில்லை. எனவேதான் தங்களுடைய வேலையைச் செய்து முடிக்க விரும்பினால் கண்டிப்பாக ஓர் அட்டவணை தேவை என்று அநேக பெண்கள் உணருகிறார்கள்.
“அனுதின அட்டவணையின்றி ஒவ்வொரு நாளுக்குமுரிய என்னுடைய இலக்குகளை நான் எட்டிட முடியவில்லை,” என்றாள் 2 முதல் 15 வயது வரம்புக்குள் இருக்கும் ஆறு பிள்ளைகளையுடைய தாய், ஜோசிஃபீன். மூன்று பிள்ளைகளுடைய சான்டிரா வீட்டுக்கு வெளியே சென்று வாரத்துக்கு 25 மணிநேரம் வேலை செய்கிறாள். மற்றும் அவள் ஒப்புக்கொள்வதாவது: “ஏன், நான் ஓர் அட்டவணையைக் கொண்டிராவிட்டால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் உணருகிறேன்.”
மேலும் உங்களுடைய முதன்மை காரியங்கள் நேரத்துக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பீட்டால் அமைக்கப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. லோலாவுக்கு அப்படித்தான் இருக்கிறது. கவனிப்பதற்குத் தனக்கு ஒரு கணவர் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, ஆனால் தான் செய்யும் பைபிள் கல்வி புகட்டும் வேலையில் மாதத்துக்கு 90 முதல் 100 மணி நேரம் செலவழிக்கிறாள். அவள் சொல்லுகிறாள்: “நேரம் என்பது எனக்கு மிகவும் முக்கியமான காரியம். ஆட்களைக் காத்துக்கொண்டிருக்கச் செய்யக்கூடாது என்பது சரியே. கடமையில் தவறக்கூடியவர்கள் நான் நேரத்தை உயர்வாக மதிக்கிறேன் என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் என்னுடைய நேரத்தை அதிகமாக மதிக்க ஆரம்பிக்கிறார்கள்.”
வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்
சில பெண்கள் எப்பொழுதுமே தங்களுடைய வேலையைச் செய்துமுடிக்காதவர்களாகக் காணப்படுவது ஏன்? ஆனால் தங்களுக்கு நேரம் போதமல் இருக்கிறது என்று சிலர் ஏன் எப்பொழுதுமே குறைகூறுகிறார்கள்? தங்களுடைய வேலையை ஒழுங்குபடுத்தத் தவறுவது ஒரு காரணமாக இருக்கக்கூடுமா? கடந்த தலைமுறைகளில், பெண்களுக்குத் துவைப்பதற்கு ஒரு முழு நாளும், ஸ்திரி போடுவதற்கு இன்னொரு முழு நாளும் எடுத்தது, அதே சமயத்தில் அவர்கள் தினந்தோறும் கடைக்குச் சென்றும் சமைத்தும் கொண்டிருந்தார்கள். என்றபோதிலும் அநேக நாடுகளில் இன்று ஒரு பெண் காரியங்களை ஒழுங்கமைத்துச் செயல்படுவாளானால், வீட்டைச் சுத்தம் செய்யவும், துணிமணிகளைத் துவைத்துக் காயப்போடவும், அதேசமயத்தில் உணவு சமைக்கவும் முடியும். நவீன வசதிகளின் காரணமாக அநேகரால் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்யவும், அதே சமயத்தில் குடும்பத்தின் தேவைகளை கவனித்துக்கொள்ளவும் முடிகிறது.
ஆனால் வீட்டுக்கு வெளியே செலவழிக்கப்படும் நேரத்தைப் பற்றியது என்ன? உண்மையில் வேலை செய்வதற்கு செலவழிக்கப்படும் நேரத்தைத் தவிர பெரும்பகுதி வேலைக்குச் சென்றுவருவதிலும், மருத்துவர் மற்றும் பல்வைத்தியர் அலுவலகத்திலும் மற்ற இடங்களிலும் செலவழிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பெரும்பகுதியை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தக்கூடுமா? உதாரணமாக, நீங்கள் பின்னல்வேலை, தையல் வேலை அல்லது பூ வேலை செய்கிறீர்களா? இப்படிப்பட்ட சில திறமையான வேலைகளை அப்படிப்பட்டச் சமயத்திலும் இடங்களிலும் செய்ய முடியுமா? அநேக பெண்கள் அந்தச் சமயங்களில் வாசிக்கிறார்கள், வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்குவதற்கான பட்டியலைத் தயாரிக்கிறார்கள், அல்லது கடிதம் எழுதுகிறார்கள். உண்மையில், அடுத்தமுறை நீங்கள் தொலைக்காட்சி பார்க்க உட்காரும்போது, சில தையல் வேலையையோ, அல்லது குடும்பத்துக்கு வேண்டிய சில காரியங்களையோ ஏன் செய்யக்கூடாது. கடையில் வாங்குபவற்றைவிட அவர்கள் இதனை அதிகமாகப் போற்றுவார்கள், அதே சமயத்தில் நேரத்தை வீணாக்குவதில்லை என்பதற்கு வெளிப்படையான அத்தாட்சியைக் கொண்டிருக்கிறீர்கள்!
என்றபோதிலும், காரியத்திற்கு மறுபக்கம் இருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் பறிப்பதற்கு முற்படுவதில் அதிகக் கண்டிப்பாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் நேரத்துக்கு அடிமையாகிவிடலாம், அது உங்களுடைய மகிழ்ச்சியைக் கெடுத்துப்போடும். ஒருவர் அமைதலாக இருந்து தான் செய்த காரியத்தின் பேரில் சிந்தனை செய்ய விரும்பும் நேரங்களும் உண்டு. அப்படிப்பட்ட சமயங்கள் உண்மையிலேயே அதிக மதிப்புவாய்ந்ததாக இருக்கக்கூடும்!
பணத்தைச் சேமிக்கும் விஷயத்திலும் இதே நியமம் பொருந்துகிறது. சமநிலை தேவை. ஒருசில பைசாக்களை மிச்சப்படுத்துவதற்காக உங்கள் காரில் பட்டணம் முழுவதும் தேடக்கூடும், அப்படிச் செய்வதில் நீங்கள் அதிக நேரத்தையும் பெட்ரோலுக்குப் பணத்தையுமே செலவுசெய்திருப்பீர்கள். உண்மைதான், நீங்கள் ஓர் இறுக்கமான வரவு செலவு திட்டத்தைக் கொண்டிருக்கும்போது, சிக்கனம் அவசியம். எனவே, ஒரே மையத்தில் பொருட்களை வாங்குவது உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். (உங்களுக்கு நேரத்தைச் சிக்கனப்படுத்தும்) பொருள்கள் எங்கே கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், (உங்களுக்குப் பணத்தை மிச்சப்படுத்தும்) விசேஷ விற்பனைகள் எங்கே இருக்கின்றன என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மிகச் சிறந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தல்
ஒவ்வொரு பெண்ணும் தனக்கென்ற உள் கடிகாரத்தைக் கொண்டிருக்கிறாள். சிலர் காலையில் நன்றாக வேலை செய்கிறார்கள். இன்னும் சிலர் பிற்பகல் வரை அவ்வளவு நன்றாக வேலை செய்வதில்லை. நீங்கள் ஒரு காலை வேளை நபராக இருப்பீர்களானால், உங்களுடைய கடினமான வேலைகளை அப்பொழுதைக்கு அட்டவணைப்படுத்துங்கள். உங்களுடைய செயல்வளத்தை நீங்கள் அதிகத்தைச் செய்யும் உச்சநேரங்களுக்காக ஒதுக்கிடுங்கள். உங்கள் வீட்டுக்கு வெளியில் வேலைசெய்கிறவர்களாய் இருந்தால், ஏன் உங்களை வேலைக்கு அமர்த்தியவரிடம் அதைப் பற்றிப் பேசக்கூடாது? உங்கள் வேலைகளை அதற்கேற்ப பிரித்துக் கொடுப்பது உங்களுக்கும் அவருடைய நலனுக்குமாக இருக்கும். மறுபட்சத்தில், நீங்கள் காலை வேளையில் வேலையை இழுத்துக்கொண்டிருந்தால், உங்களுடைய மிக முக்கியமான வேலையை நீங்கள் நன்றாகச் செயல்படும் அந்தப் பிற்பகுதிக்காக வைத்துக்கொள்ளுங்கள்.
மேரி ஒரு காலை நேரப் பெண். அவள் ஊழியத்தில் செலவழிக்கும் நேரத்தை ஒரு நாளின் மிக முக்கியமான பாகமாயிருப்பதாக நோக்குகிறாள். எனவே அவள் பிற்பகல் பகுதி நேர வேலையைத் தெரிந்துகொண்டாள். இது அவளுடைய மிகச் சிறந்த மணிநேரங்களைத் தன்னுடைய பைபிள் போதனை வேலையில் செலவழிக்க உதவுகிறது. உங்களுடைய அட்டவணையில் இதுபோன்ற ஒரு காரியத்தை நீங்கள் செய்யக்கூடுமா?
நடைமுறையானவர்களாய் இருங்கள்
ஓர் அட்டவணை நடைமுறையானதாய் இருப்பதற்கு, அது அளவுக்கு அதிகமான செயல்களைக் கொண்டிருக்கக் கூடாது. சூப்பர் தாயாக, மனைவியாக, அல்லது பணியாற்றுபவளாக இருக்க முயலுவது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடும். இது விசேஷமாக, உங்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் இருக்குமானால் உண்மையாக இருக்கிறது. உங்களுடைய செயல்திறன் எல்லைக்குள் வேலைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து வியாதியாயிருக்கும் டாலி இப்படியாக விளக்குகிறாள்: “என்னுடைய நேரம் என் கணவரின் நடவடிக்கைகளை மையமாய்க் கொண்டிருக்கிறது. அவர் ஒரு பயணக் கண்காணி. நாங்கள் ஒரு சிறிய ‘நடமாடும் வீட்டில்’ வாழ்வதால், அவருடைய வேலையை அவர் முடித்தப் பிறகே என்னுடைய வேலையை நான் செய்கிறேன். என்னுடைய நோய், நான் செய்ய விரும்பும் எல்லாவற்றையும் செய்யத் தடையாக இருக்கிறது. ஆனால், என்னால் முடியும்போதெல்லாம் என்னுடைய ஊழியத்திற்கே முதலிடம். அந்த நாளில் வீட்டில் செய்யப்படவேண்டிய வேலைகள் செய்யப்படுவதில்லை.”
வளைந்துகொடுக்கிறவர்களாய் இருங்கள்
ஒரு பெண்ணின் மனஉறுதிக்குப் பரிசோதனை, அவள் அழுத்தத்தின் கீழ் எவ்விதம் காரியங்களைக் கையாளுகிறாள் என்பதில் இருக்கிறது. ஒரு நெருக்கடியின் கீழ் அவள் அமைதியாக இருக்க முடிந்தால், அவள் உணர்ச்சி சம்பந்தமாய்ச் சின்னாபின்னமாக ஆவதற்குப் பதிலாக அதிகத்தை நிறைவேற்றுவாள்.
சான்டிரா அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதின் இரகசியத்தைக் கண்டுபிடித்தாள். அவள் சொல்கிறாள்: “அவசர நிலைமைகள் எழும்புகையில், நான் எல்லா பக்கமும் நெருக்கப்படுவதாக உணரும்போது, வெறுமென என்னைத் தளர்த்திக்கொள்கிறேன். அது விநோதமாகத் தொனிக்கலாம், ஆனால் அது செயல்படுகிறது. என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் நான் இருப்பதைக் காணும்போது, முதலாவது என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடிகிறது. என்னைத் தளர்த்தாமல் இருந்தால், முதன்மையான காரியங்களைச் சரியாக அமைத்திட முடியாதவளாகிறேன். இவை அமைக்கப்படுகையில், அவசர நிலைகளைக் கையாளுவதற்காக என் செயல்களைத் துரிதப்படுத்துகிறேன், காரியங்கள் செய்துமுடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒருமுறை விருந்துக்கு வந்த சில விருந்தினர் சீக்கிரமாக வந்துவிட்டார்கள். நான் குழப்பமடைவதற்குப் பதிலாக, என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சந்தோஷப்படுத்திக்கொண்டு, சமையல் செய்துகொண்டு இருந்தேன். எல்லாருமே தங்களைத் தளர்த்திய நிலையில் சந்தோஷமாய் வைத்துக்கொண்டார்கள்.”
உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
தன்னைச் சுற்றி திறமையான உதவியைக் கொண்டிருப்பவரே மிகச் சிறந்த அலுவலகர் என்று ஒருவர் ஒருமுறை சொன்னார். மற்றவர்களுடைய உதவியை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்களா? உடன் பணி செய்பவர்கள், அவர்களுடைய உதவி போற்றப்படுகிறது என்பதை அறிய வரும்போது, அதை விரும்பி செய்வதற்கு அவர்கள் முன்வருகிறார்கள். வீட்டிலும் அது உண்மையாக இருக்கிறது. ஆனால் சில பெண்கள் அவ்வளவு கண்டிப்பான இல்லத்தரசிகளாகவும் சமையல் செய்பவர்களாகவும் இருப்பதால் உதவி பெறுவதை ஊக்குவிப்பதில்லை. அந்த மனநிலைதானே, சில மனைவிமார்களும் தாய்மார்களும் எப்பொழுதுமே வேலைப்பளு மிகுந்தவர்களாகவும், அவர்களுடைய குடும்ப அங்கத்தினர் சுற்றி அக்கறையற்றவர்களாக அமர்ந்திருப்பவர்களாகக் காணப்படுவதற்கும் காரணமாயிருக்கக்கூடும்.
இப்பொழுது, உங்களைப் பற்றியதென்ன? உங்களுக்கு உதவி தேவைப்படும்போது, அதைப் பெற்றுக்கொள்வதை உற்சாகப்படுத்துகிறீர்களா? நீங்கள் உதவிக்காகக் கேட்கிறீர்களா, அல்லது அதை வற்புறுத்துகிறீர்களா? உங்கள் பிள்ளைகளிடமோ அல்லது உங்கள் கணவரிடமோ பேசும்போது, “இதைச் செய்துவிடுங்கள்” என்று சொல்வதைவிட “தயவுசெய்து நீங்கள்” என்று சொல்வது அதிக விரும்பப்படும் ஒன்றாயிருக்கும்.
ஒரு பெண், தன்னுடைய கணவர் தனக்கு செய்யும் உதவிக்கு அவரைப் போற்றுகிறவளாய், இப்படியாகச் சொல்கிறாள்: “அவர் உண்மையிலேயே அதில் சிறந்தவர். நான் வியாதியாயிருந்தால், அவர் என்னை ஓய்வெடுக்கச் சொல்லி, அவர் உணவைச் சமைக்கிறார்; அவரும் பிள்ளைகளுமாக எல்லாருமே சேர்ந்து வேலையை முடித்துவிடுகிறார்கள். அதை நான் உண்மையிலேயே போற்றுகிறேன்!”
ஒரு குடும்பத்திற்கு இருக்கவேண்டிய மிகச் சிறந்த மனப்பான்மை! ஆனால் இந்தச் சூழ்நிலையில் முக்கிய நபர் அந்தத் தாயே. நேரத்தை மதிக்கவும் வேலையினிடமாக ஒரு நேர்நிலையான மனப்பான்மையைக் கொண்டிருப்பதை உணரச் செய்வதற்கும் தன்னுடைய பிள்ளைகளை பயிற்றுவிக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளைகள் பொதுவாக உதவி செய்ய விரும்புவார்கள், ஏனென்றால், பொதுவாயுள்ள ஒரு குடும்ப இலக்கை அடைந்திடுவதற்கு உதவுவதன் மகிழ்ச்சியை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
மற்றவர்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் சரி, சிலர் தங்களுடைய நேரத்தை வீணாக்கப்போகிறார்கள் என்பதை சொல்லவேண்டிய அவசியமில்லை. நாம் அவர்களை மாற்ற முடியாது; நம்மை முன்னேற்றுவிக்கத்தான் முடியும். நேரத்தைப் பற்றி நடைமுறையாய் இருக்க தீர்மானம் செய்யலாம், மேன்மையான விதத்தில் காரியங்களை ஒழுங்குபடுத்தலாம், சரியான காரியங்களை முதன்மையாக வைக்கலாம், தேவைப்படும்போது உதவி பெற்றுக்கொள்ளலாம். (g90 6/8)
[பக்கம் 21-ன் படங்கள்]
உங்கள் குடும்பம் சரியாக செயல்பட வேண்டுமென்றால் முதன்மையான காரியங்களை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்