தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்திருக்கும் பெற்றோர்கள்
தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்யும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உண்மையில் தேவைப்படும் காரியங்களை அளிக்கிறவர்களாக இருக்கிறார்கள். நிச்சயமாக இது வெறுமென அவர்களுக்காகும் செலவுகளுக்காக பணத்தைச் செலுத்துவதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. இப்படிப்பட்ட பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் சரியான மதிப்பீடுகளையும் இலக்குகளையும் வளர்த்துக் கொள்ளவும் உதவி செய்து, அதிகமாக நேரத்தையும் அன்புள்ள கவனிப்பையும் கொடுக்கிறார்கள்.
“பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது, வரலாற்று புகழ்ப் பெற்ற சம்பவங்களில் வரும் பைபிள் கதாபாத்திரங்களை நடித்துக் காட்டுவதற்கு நாங்கள் அவர்களோடு தரையில் தவழ்ந்து சென்றோம், பானைகளை வைத்து ஓசை எழுப்பினோம், தலைகவசமாக உலோக தட்டை பயன்படுத்தினோம், சமையலறைக் கரண்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டோம்,” என்பதாக நான்கு பிள்ளைகளையுடைய தகப்பனாகிய வேய்ன் விளக்கினார். “பிள்ளைகள் அதை வெகுவாக விரும்பினார்கள்.”
பிள்ளைகள் இன்னும் வளர்ந்தபோது, வேய்னும் அவனுடைய மனைவி ஜோனும் தங்கள் போதனா முறையை அதற்கேற்ப மாற்றிக் கொண்டார்கள். இருந்தாலும் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் கற்பனையையும் கற்றுக் கொள்வதற்கான ஆசையையும் தொடர்ந்து தூண்டிவந்தார்கள். இவ்விதமாக போதிப்பதிலிருக்கும் ஒரு சில மிகச் சிறந்த நியமங்களை அவர்கள் பழகிக் கொண்டார்கள். அமெரிக்க ஐக்கிய மாகாண ஆங்கில ஆசிரியர்களின் தேசீய குழுவின் தலைவர் ஜுலி M. ஜென்சன், ஒரு நல்ல ஆசிரியர், அவர் கற்று வந்த சமயத்தில் அவருக்கிருந்த சொந்த குழந்தைத்தனமான கிளர்ச்சியை ஒருபோதும் மறந்துவிடாமல், அதைத் தன்னுடைய மாணவர்களில் ஊட்டி வளர்க்கிறார் என்பதாக குறிப்பிடுகிறார்.
புகழ்ச்சியின் முக்கியத்துவம்
வேய்னும் ஜோனும் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய பள்ளிப் பாடங்களில் உதவி செய்ய ஒரு முறையை ஏற்படுத்திக் கொண்டார்கள். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பிள்ளைகள், மார்க்குகள் கொடுக்கப்பட்ட தங்களுடைய விடைத் தாள்களைச் சமையலறையில் “உள்ளே” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு கூடையில் வைத்துவிடுவார்கள். பிள்ளைகள் விளையாடச் செல்கையில் அல்லது அவர்களுடைய வீட்டுப்பாடங்களைச் செய்கையில், ஜோன் அவைகளை பரிசீலனைச் செய்கிறாள். அவைகளை இரவு உணவு வேளையின் போது குடும்பமாக கலந்தாராய்கிறார்கள். நன்றாக செய்யப்பட்ட தாள்களை குளிர் சாதனப் பெட்டியின் மீது அல்லது சமையலறை சுவர்களில் பொருத்தி வைத்துவிடுகிறார்கள். இது தாறுமாறாக தோன்றும் ஒரு கலைகூடத்தைப் போல் காட்சியளிக்கிறது.
“இது பிள்ளைகளுக்கு புகழ்ச்சியைத் தெரிவிக்கும் எங்களுடைய முறையாக இருக்கிறது, அதில் அவர்கள் உற்சாகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்” என்று ஜோன் சொல்லுகிறாள். முன் அறையில் இந்தக் குடும்பம் “வெளியே” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கூடையைக் கொண்டிருக்கிறார்கள். இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, செய்து முடிக்கப்பட்ட வீட்டுப் பாடங்கள் அதற்குள் வைக்கப்படுகின்றன. “இந்த வகையில், பிள்ளைகள் அவசரமாக காலையில் பள்ளிக்குச் செல்லும்போது நாங்கள் அதை தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமிராது,” என்று ஜோன் விளக்குகிறாள்.
இரண்டு பெண்பிள்ளைகளின் தாயாகிய பீட்ரிஸ் கூட தன் சமையலறையை அவளுடைய பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களால் அலங்கரிக்கிறாள். அவள் சொல்கிறாள்: “இதை நான் செய்வதற்கு காரணம், நான் என் பிள்ளைகளைக் குறித்து பெருமைப்படுகிறேன். அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.”
புகழ்ச்சியின் மிக உயர்ந்த மதிப்பை உணர்ந்து, டல்லாஸ், டெக்ஸாஸ், சுயேச்சை பள்ளி மாவட்டம், அதன் ஆசிரிய தொண்டர்களை பின்வருவது போன்ற உற்சாகமூட்டும் வார்த்தைகளை தாராளமாக பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறது; அற்புதம்! எவ்வளவோ மேல். நன்றாகச் செய்தாய்! உனக்கு நல்லது. அது புத்திசாலித்தனமானது. அதுவே சரி. மிகவும் புதுமையானது. நல்ல யோசனை. நேர்த்தியான வேலை. இப்பொழுது உனக்கு புரிந்துவிட்டது. நீ முயற்சி செய்யும் முறையை நான் போற்றுகிறேன்.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் மிக அடிக்கடி உற்சாகத்தை கொடுக்கமுடியுமா?
மற்ற வழிகளில் ஆதரவு கொடுப்பது
தங்களுடைய பிள்ளைகளின் முயற்சிகளை புகழுவதோடுகூட, தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்யும் பெற்றோர், படிப்புக்கு உகந்த ஒரு சூழ்நிலையை வீட்டில் உருவாக்கி தருகிறார்கள். அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் ஆர்வத்தை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளில் ஏற்படுத்துகிறார்கள்.
“என்னுடைய படிப்பு நேரத்தைச் சுற்றி ஒரு வேலியை அமைப்பதன் மூலம் என் பெற்றோர் எனக்கு உதவி செய்தனர். என் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு வீட்டில் எனக்கு குறிப்பிட்ட ஓர் இடமிருந்தது. அது முடியும் வரையாக குடும்பத்திலுள்ள எவருடனும் நான் பேச முடியாது. என்னுடைய படிப்பு நேரத்தின் போது நான் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. இவ்விதமாக கவனத்தை ஒருமுகப்படுத்தி ஊன்றிப் படிக்கையில், இடையே தடங்கல்கள் தவிர்க்கப்பட்டன,” என்பதாக ஜுலி விளக்கினாள்.
மார்க் எவ்விதமாக தன் பெற்றோர் தன்னையும் தன் சகோதரிகளையும் ஊக்குவித்தனர் என்பதைச் சொல்கிறான்: “எங்களுடைய படிப்பில் எங்களுக்கு உதவி செய்ய, எப்பொழுதும் ஓர் அகராதியும் மற்ற புத்தகங்களும் தயாராக இருப்பதை அவர்கள் நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். தனிப்பட்ட நூலகங்களை உருவாக்கிக் கொள்ள அவர்கள் எங்களை ஊக்குவித்து, எங்களுக்கென்று கொடுக்கப்பட்ட சிறிய தொகையைச் செலவழிக்காமலேயே நாங்கள் விரும்பிய புத்தகங்களை வாங்க எங்களை அனுமதித்தார்கள்.”
“எங்களுடைய பிள்ளைகளுக்குச் சுமார் மூன்று மாதங்களாக இருக்கையில் நாங்கள் அவர்களோடு எங்கள் வாசிப்பு திட்டத்தை ஆரம்பித்தோம்” என்பதாக நான்கு பிள்ளைகளையுடைய அல்தியா விளக்குகிறாள். “அதை தொடர்ந்து செய்வது கடினமாக இருந்தது. ஏனென்றால் இன்றுள்ள அநேக பெண்களைப் போலவே வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கிருந்தது. இதைச் செய்வதற்காக, மற்ற வேலைகளிலிருந்து நான் நேரத்தை வாங்க வேண்டியதாக இருந்தது. பிள்ளைகள் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார்கள்—பாலர் பாட்டுகள், விஞ்ஞான புத்தகங்கள் என்று எல்லாவிதமான புத்தகங்களும் இருந்தன. நான் வாசித்துக் காண்பிப்பதற்கு அவர்களுக்கு மிகவும் விருப்பமான புத்தகங்களை அவர்கள் என்னிடம் கொண்டுவருவார்கள். சில நேரங்களில் சுருக்கமாக முடித்துக் கொள்வதற்காக, நான் இடையில் சிலப் பகுதிகளை விட்டுவிடுவேன். ஆனால் அதில் பயனிருக்கவில்லை. பிள்ளைகள் ஒரு சிலப் பகுதிகள் விடப்பட்டதை எப்பொழுதும் தெரிந்து கொண்டு, ஞாபகத்திலிருந்து அதை என்னிடம் சொல்லி எனக்கு அதை நினைப்பூட்டுவார்கள்!”
பின்லாந்திலிருந்து வரும் ஜோஹன் ஒவ்வொரு இரவும் படுக்கப் போவதற்கு முன்பாக தன் பெற்றோர் தனக்கு 10-லிருந்து 15 நிமிடங்கள் வாசித்துக் காண்பிப்பதாகச் சொல்கிறான். “நான் கதையைத் தெரிந்தெடுக்கலாம்,” என்பதாக ஜோஹன் விளக்குகிறான். “அம்மா கதையில் வரும் கதாபாத்திரங்களை நடித்துக் காண்பிப்பார்கள். இந்த ஏற்பாடு எனக்கும் என் சகோதரிக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், எங்கள் பெற்றோருக்கு நேரமில்லாத சமயங்களில் நாங்கள் ஒரு புத்தகத்தை எடுத்து சொந்தமாக நடிக்க முயற்சி செய்வதுண்டு. இது மிக நல்ல வாசிப்பு பழக்கங்களை வளர்த்துக் கொள்ள எங்களுக்கு உதவி செய்தது. இது எங்கள் பள்ளிப் பாடங்களை எளிதாக்கி எங்கள் உலகத்தை விரிவாக்கிவிட்டிருக்கிறது.”
இலங்கையைச் சேர்ந்த ரவீந்திரா, அவளுடைய தகப்பனின் வாசிப்பு முறையை அவ்வளவு விரும்பியதன் காரணமாக அவர் அவளை தூங்க வைப்பதை வெகுவாக விரும்பினாள். “படுக்கப் போகும் சமயத்தில் நான் மிகவும் விரும்பிய கதை ஒட்டகம் அதன் முதுகு திமிலை பெற்றுக் கொண்டது எப்படி என்ற கதையாகும். வாசிக்கையில் அப்பா முஷ்டியால் குத்துவார், காற்றடிப்பார், சிரிப்பார் மற்ற எல்லாவற்றையும் செய்வார். என்னை தூங்கச் செய்வதற்காக அவர் இவைகளைச் செய்வார். ஆனால் நன்றாக விழித்துக் கொண்டிருக்கவும் இன்னும் அதிகத்தை கேட்கும்படியாகச் செய்யவுமே இது உதவியது. இதை அறியாததாக அவர் பாவனை செய்து கொண்டிருப்பார். ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். பின்னால் நான் பெரியவளாகிய போது நூலகத்துக்குப் புத்தகங்களைத் திருப்பித்தர அவற்றை எடுத்துவர என்னை அனுமதிப்பார். இது என்னை முக்கியமானவளாக உணரச் செய்து வாசிப்பதை அனுபவிக்கக் கூடுதலாக என்னை ஊக்குவித்தது.”
தன் அப்பா தனக்கு எவ்விதமாக உதவி செய்தார் என்பதை விளக்குகையில் சூசன் சொல்வதாவது: “திறந்த வெளியில் சுற்றுலாச் செல்வது அப்பாவுக்கு மிகவும் பிடித்த விஷயம். அவர் அருங்காட்சியகங்களுக்கு, பறவை புகலிடங்களுக்கு, நூலகங்களுக்கு, காட்டில் பழங்களைப் பறிப்பதற்கு என்று எல்லா இடங்களுக்கும் என்னை அழைத்துக் கொண்டு போவார். சில சமயங்களில் நாங்கள் வெறுமென முன்பின் அறியாத காட்டுப்பகுதிகளுக்குள் சென்று பார்ப்பதுண்டு. நாங்கள் உடம்பு முழுவதிலும் கீறலுடன் வீடு திரும்புவோம். ஆனால் அது தமாஷாக இருக்கும். அந்தப் பயணங்கள் என் பள்ளிப் படிப்புக்கு நோக்கத்தைக் கொடுத்தன.”
போர்டோ ரிக்கோவைச் சேர்ந்த எமில்லோ நினைவுபடுத்திச் சொல்கிறாள்: “நாங்கள் எப்போதும் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று என் அம்மா விரும்பினாள். பள்ளியிலிருந்து நான் வீடு திரும்புகையில் அவள் ‘இன்று நீ என்ன கற்றுக் கொண்டாய்?’ என்பதாகக் கேட்பாள். நான் ‘ஒன்றுமில்லை’ என்று சொன்னால் மீண்டுமாக ‘ஒன்றுமில்லை என்றால் என்ன அர்த்தம்? நீ எதையாவது கட்டாயம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்’ என்பதாகச் சொல்வாள். நான் கற்றுக் கொண்டதைச் சொல்லும் வரையாக அவள் கேட்டுக் கொண்டே இருப்பாள். இதே காரியத்தையே அவள் என் இரண்டு சகோதரர்களிடமும் செய்தாள். நாங்கள் அவளுக்கு அதிமுக்கியமானவர்கள் என்பதையும் அவள் எங்களில் அக்கறையுடையவளாக இருப்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் விரும்பினாள். இது எங்களை நெருக்கமாக பின்னப்பட்ட ஒரு குடும்பமாக ஆக்கினது.”
குடும்ப நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்
வெற்றிகரமான குடும்பங்கள் நன்றாக அனுசரித்துச் செல்பவையாக இருக்கின்றன. ஆனால் இது முயற்சியை தேவைப்படுத்துகிறது. ஆகவே தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்யும் பெற்றோர் ஒத்துழைக்கின்ற குடும்ப ஆவியை வளர்க்க நாடுகிறார்கள்.
“பெரும்பாலும் தினந்தோறும் குடும்ப விஷயங்களை நாங்கள் ஒளிவுமறைவின்றி கலந்து பேசுகிறோம்,” என்பதாக இரண்டு பருவ வயது பெண்களையுடைய ஒற்றைப் பெற்றோரான கேரல் குறிப்பிடுகிறாள். “சில சமயங்களில் எனக்குச் சொந்தமாக பல பிரச்னைகள் இருப்பதை கருதி பெண்கள் இருவரும் அவர்களுடைய பிரச்னைகளை என்னிடம் சொல்ல தயங்குவார்கள். இதை அவர்கள் எப்போது செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எப்படியெனில், அந்தச் சமயங்களில் ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக் குறித்து அவர்கள் வாதாடிக் கொண்டிருப்பார்கள். ஒருவரோடொருவர் பிரச்னைகளை ஒளிவுமறைவின்றி நாம் பேசித் தீர்த்துக் கொள்ளும் போது மட்டுமே குடும்ப ஏற்பாடு மிகச் சிறப்பாக இயங்குகிறது என்பதை நான் அவர்களுக்கு அப்போது நினைப்பூட்ட வேண்டும்.”
பல குடும்பங்களில் பணமே பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலைமையைக் குறித்து ஒளிவுமறைவின்றி பெண்களோடு பேசிவிடுவதால், இது அவர்களுடைய ஆதரவைப் பெற்று தந்திருக்கிறது என்று கேரல் சொல்லுகிறாள். அவள் விளக்குகிறாள்: “அவர்கள் வாங்க விரும்புகின்ற ஒரு சில கூடுதலான காரியங்களுக்காக, சொந்தமாக பணம் சம்பாதிப்பதற்கு வேலைகளைத் தேடிக் கொள்ளும்படியாக நான் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன். அதை அவர்கள் சம்பாதிப்பதற்காக நான் அவர்களை மதிப்புடன் நடத்தி, அது அவர்களுடைய பணமே என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன்.”
பெற்றோர்களில் சிலர், தங்களுடைய பிள்ளைகளுக்கு வரவு செலவு திட்டத்தையும், வங்கி அமைப்பு முறையையும் கணித திறமைகளையும் கற்பிப்பதற்கு குடும்பத்தின் நிதி நிலைமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். “இந்த ஏற்பாட்டின் மூலமாக நாங்கள் கற்றுக் கொடுக்கக்கூடியவர்களாக இருந்திருக்கும் மற்றொரு பாடம், ஈடுபாட்டின் மூலமாக குடும்ப நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு அடைவதாகும்” என்கிறார் மூன்று பையன்கள் மற்றும் ஒரு பெண்ணின் தகப்பனாகிய ஹென்றி.
ஆனால் இப்படிப்பட்ட வீட்டுப்பாடத்துக்கு பெற்றோர்கள் எவ்விதமாக நேரத்தை கண்டடைய முடியும்? இரு பிள்ளைகளின் தாயாகிய ஆட்ரி, அட்டவணையில் நேர நெருக்கடியின் காரணமாக, வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில் பிள்ளைகளைச் சேர்ந்து கொள்ளும்படியாக அழைக்கிறாள். பிள்ளைகளோடு பேசுவதற்கு அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்கிறாள்.
பிரச்னைகளைக் கையாளுதல்
வீட்டுப்பாடங்களை நன்றாகச் செய்வதற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பேசுவதை கவனமாக செவி கொடுத்துக் கேட்க கற்றுக் கொள்வது அவசியமாகும். பைபிள் நீதிமொழி சொல்கிறபடியே: “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்.” (நீதிமொழிகள் 1:5) கவனமாகச் செவி கொடுத்துக் கேட்பது நம்பிக்கையை வளர்க்கிறது. இது பிரச்னைகளை வெற்றிகரமாக கையாளுவதற்கு இன்றியமையாததாகும்.
உதாரணமாக லியானும் கரோலினும் தங்கள் மூத்த மகள் நிக்கி பள்ளிக்கு மட்டம் போட்டுக் கொண்டிருந்ததையும் சில பாடங்களில் தோல்வியடைந்துவிட்டதையும் பற்றி கேள்விப்பட்ட போது நண்பர்களின் மோசமான செல்வாக்கைக் குற்றஞ்சாட்டுவதே கரோலினின் முதல் பிரதிபலிப்பாக இருந்தது. ஆனால் லியான் இதை விளக்கினான்: “எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் வரை எந்தக் கருத்தையும் வெளியிடக்கூடது என்பதாக நான் சொன்னேன்.”
“ஆனாலும்கூட, நிக்கியினுடைய பிரச்னையின் மூலகாரணத்தை சென்றெட்டுவதற்கு ஒரு வார காலமாக, பொறுமையாகவும் சாதுவாக கேள்விகளைக் கேட்கவும், சொல்வதை கவனமாக செவிகொடுத்துக் கேட்கவும் வேண்டியதாக இருந்தது. அது எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியாக எங்களுக்கு இருந்தது! நாங்கள் எங்களுடைய சொந்த வேலைகளிலேயே ஊன்றிப்போய்விட்டிருந்ததால், நாங்கள் அவளில் அக்கறையுள்ளவர்களாக இல்லை என்பதாக அவள் நினைத்தாள். கரோலினும் நானும் தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டோம். இதன் காரணமாக நிக்கி வீட்டிலும் பள்ளியிலும் தன்னுடைய உத்தரவாதங்களைக் குறித்து அதிக விழிப்புள்ளவளானாள்.”
டானுக்கும் டாரத்திக்கும் எட்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூட பேருந்தில் ஒன்றரை மணிநேரம் பிரயாணம் செய்கிறார்கள். இதில் அவர்கள் எதிர்ப்பட்ட மோசமான நிலைமைகளே அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக இருந்தது. “பெரிய பிள்ளைகள் பள்ளிக்கு சென்றபோது பேருந்தில் பிரயாணம் செய்யும் நேரத்தை வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கோ அல்லது வாசிப்பதற்கோ பயன்படுத்திக் கொள்வது எளிதாக இருந்தது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அவை அனைத்தும் மாறிவிட்டன. இப்பொழுது ஆரோக்கியமற்ற இடைஞ்சல்கள் அதிகம்—கெட்ட வார்த்தைகள், சப்தமான ராக் இசை, பொதுவாக பேருந்தின் பின்புறத்தில் சிகரெட்டிலிருந்தும் மாரியுவானாவிலிருந்தும் புகை,” என்பதாக டான் குறிப்பிடுகிறார்.
இந்தப் பிரச்னைகளைப் பற்றி பிள்ளைகளோடு சேர்ந்து தீவிரமாக யோசித்ததாக டான் விளக்கினார். “இரண்டு யோசனைகள் கிடைத்தன,” என்று அவர் குறிப்பிட்டார். “இயன்றவரை பேருந்து ஓட்டுநருக்கு அருகில் உட்கார்ந்துக் கொண்டு ஒரு காஸட் ப்ளேயரோடு இணைக்கப்பட்ட இலேசான எடையுள்ள குரல் வாங்கியை தலையில் அணிந்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பிள்ளைகள் தொந்தரவிலிருந்து தங்களை பிரித்து வைத்துக் கொள்ளவும், மெல்லிசையைக் கேட்டுக் கொண்டே வாசிக்க அல்லது சுலபமான வீட்டுப் பாடத்தைச் செய்யவும் முடியும். பரிகாரம் எளியதாக தோன்றினாலும் அது பிரயோஜனமாயிருந்திருக்கிறது!”
பள்ளி அமைப்போடு செயல்படுதல்
பள்ளி ஆண்டின் போது மாணவர்கள் ஒரு நாளில் சுமார் ஆறு மணிநேரங்களை ஆசிரியர்களின் நேரடியான செல்வாக்கின் கீழ் செலவழிக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்ற கருத்தில் இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை மதித்துணரும் பெற்றோர்கள், இந்த நேரம் பிரயோஜனமாகச் செலவிடப்படுவதைக் காண விரும்புகிறார்கள். மூன்று பிள்ளைகளின் ஒரு தாய் அவளும் அவளுடைய கணவனும் இதை எவ்விதமாக நிச்சயப்படுத்திக் கொண்டார்கள் என்பதை விளக்குகிறாள். “எங்களுடைய ஒரு பிள்ளையின் வகுப்பு எனக்கும் ஜானிற்கும் திருப்தியாக இல்லாதபோது, நாங்கள் பள்ளிக்குச் சென்று பள்ளியிலுள்ள ஆலோசகர், ஆசிரியர் அல்லது முதல்வரை சந்தித்து தகுந்த மாற்றங்களைச் செய்து கொள்வோம். எங்களுடைய பிள்ளையின் முறையான கல்வியில் ஆரம்பம் முதல் முடிவு வரையாக நாங்கள் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்களாக இருந்தோம். இப்பொழுது அது முடிந்துவிட்டது. அவர்களுக்கு கிடைக்கக்கூடியதாயிருந்ததில் மிகச் சிறந்ததை அவர்கள் பெற்றுக் கொண்டதைக் குறித்து நாங்கள் திருப்தியுள்ளவர்களாக இருக்கிறோம்.”
பிள்ளைகளுக்குப் பள்ளிப்பாடங்களில் உதவி தேவைப்படலாம். இதில் அக்கறையை காண்பிப்பது பெற்றோரின் வீட்டுப்பாடத்தின் ஒரு பாகமாக இருக்கிறது. என்றபோதிலும் பெற்றோர் ஞானமாக பள்ளி அமைப்புக்கு ஒத்துழைப்பைத் தருகிறார்கள். “என் பெற்றோரைப் பற்றி என் நினைவிலிருக்கும் ஒரு காரியமானது அவர்கள் ஆசிரியர்களின் வகுப்பறை போதனா முறைகளோடு ஒருபோதும் குறுக்கிட்டது கிடையாது. கற்பிக்கும் முறை பல்வகைப்பட்டதாக இருக்க முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்” என்று வெஸ்லி கூறுகிறான்.
“உதாரணமாக ஒரு கணக்குக்கு விடையை அடைவதற்கான வழி முறைகளைப் பார்த்து நான் மலைத்துப் போய் நிற்கையில் அப்பா எனக்கு விடையைக் கொடுத்துவிட்டு அதைக் கண்டுபிடிக்கும் வரை என்னை முயற்சி செய்து பார்க்க விடுவார். அப்பாவினுடைய விடை எனக்குக் கிடைக்கும்போது அது சரி என்பதை நான் தெரிந்துகொள்வேன்.”
எளிய ஒரு பாடம் அல்ல
வீட்டுப்பாடங்களில் சில மற்றவைகளைவிட கடினமாக இருக்கிறது என்பதை எந்தப் பிள்ளையும் உங்களுக்குச் சொல்லக்கூடும். ஆனால் பெற்றோராகிய உங்களுக்கிருக்கும் வீட்டுப்பாடமானது நீங்கள் எக்காலத்திலும் பள்ளியில் கொண்டிருந்ததைக் காட்டிலும் மிக அதிக கடினமானதாகும். ஆம், பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்ப்பது ஒரு சிக்கலான, நீண்ட கால வேலையாகும். சிலர் இதை 20 ஆண்டு கால திட்டம் என்பதாக அழைத்திருக்கின்றனர்.
வெற்றிக்கான திறவுகோல், சிரத்தையுள்ள, சிநேக உணர்வுள்ள பெற்றோராகவும் பிள்ளைகளை நன்றாக அறிந்தவராக இருந்து, தனிப்பட்டவர்களாக அவர்களுக்கு பிரதிபலிக்கின்ற புரிந்து கொள்ளும் திறமையுள்ள பெற்றோராகவும் இருப்பதை உட்படுத்துகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு உண்மையில் தேவைப்படுவது தனிப்பட்ட கவனமே. இது அவர்களுடைய நலனை முன்னிட்டு காண்பிக்கப்படும் அன்பான அக்கறையால் தெரிவிக்கப்படுகிறது. கற்றுக் கொள்வதற்கு ஆவலை அவர்களில் வளர்த்து அறிவைப் பெற்றுக் கொள்வதை ஓர் இன்பமான அனுபவமாக்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
எல்லா முயற்சியும் தகுதியுள்ளதே
உங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்யும் பெற்றோராகிய நீங்கள் கட்டுப்பாடற்ற சிற்றின்பத்தில் இழைகிறவர்களாக இல்லாமல், உங்களையே தியாகம் செய்கிறவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் அவர்களோடு ‘இருக்க வேண்டும்’ என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு உண்மையில் தேவைப்படும் நேரத்தையும் அன்பையும் அக்கறையையும் கொடுப்பதன் மூலம் நீங்கள் உங்களையே கொடுக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தவர்களாக இருக்கிறீர்கள்.
உங்கள் வீட்டுப்பாடத்தை நீங்கள் செய்கையில் மண்ணை தயார் செய்து பின்னர் பயிரிட்டு, பண்படுத்தி தன் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் விவசாயினுடைய அறுவடைக்கு ஒத்த பலன்கள் கிடைக்கக்கூடும். மகிழ்ச்சி நிறைந்த ஓர் அறுவடை உங்கள் பலனாக இருக்கும். பைபிள் சொல்கிறவிதமாகவே அது இருக்கிறது: “பிள்ளையானவன் [அல்லது பெண் பிள்ளை] நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”—நீதிமொழிகள் 22:6. (g88 9⁄8)
[பக்கம் 11-ன் பெட்டி]
பெற்றோரின் சுய-பரிசோதனைக்குக் கேள்விகள்
பெற்றோர் வேறு என்ன செய்யக்கூடும்?
நவீன சமுதாயத்தில் பிள்ளைகளின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு முக்கியமாக இருப்பது ஆசிரியர்களும் பள்ளிகளுமாகும். இது, அவர்கள் பெற்றோரின் பங்கை நிறைவேற்ற முடியும் என்பதை அர்த்தப்படுத்தாது. ஆனால் பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்த்திடுவதில் அவர்கள் இன்றியமையாத வகையில் உதவக்கூடும். ஆகவே பெற்றோராகிய உங்களுக்கிருக்கும் மற்றொரு வீட்டுப்பாடம், உங்கள் பிள்ளைகள் சேர்ந்திருக்கும் பள்ளி அமைப்புக்கு இயன்றவரை முழுமையாக ஒத்துழைப்பைக் கொடுப்பதாகும்.
அப்படியென்றால், பள்ளியில் ஒரு விசேஷித்த விழா அல்லது நிகழ்ச்சி இருந்தால் அப்பொழுது என்ன? உதாரணமாக, மாசச்சூசட்ஸிலுள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. நான்கு பையன்களின் தாயான ஜோயேன், “நான் அவர்களைக்குறித்து பெருமைப்படுகிறேன் என்பதை என் பிள்ளைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சென்றேன்,” என்று சொன்னாள். 20 மாணவர்கள் அன்று விசேஷித்தப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அங்கு வரவில்லை. அவர்கள் அவ்விதமாக வராமல் இருந்துவிட்டது, பள்ளியில் முன்பைவிட சிறப்பாக செய்வதற்கு அவர்களுடைய பிள்ளைகளை ஊக்குவித்தது என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை!
ஆசிரியர்களைப் பற்றியும்கூட சிந்தித்துப் பாருங்கள். அடிக்கடி பள்ளிகள் மாணவர்களின் வேலைபாடுகளை காட்சிக்கு வைக்கவும், அவர்களுடைய முன்னேற்றங்களை பெற்றோர்களோடு விமர்சனம் செய்யவும் மாலை நேரங்களை ஒதுக்கி வைக்கின்றன. அநேக ஆசிரியர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு தயார் செய்வதற்காக தங்கள் சொந்த நேரத்தை விட்டுக் கொடுக்கிறார்கள். ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டதாவது: “எங்களுக்கென்று சொந்த குடும்பங்களும் எங்களுக்கென்று வாழ்வதற்கு சொந்த வாழ்க்கையும்கூட உண்டு. விசேஷமான நிகழ்ச்சிகளுக்காக தயார் செய்ய இவ்வளவு நேரத்தை செலவழித்துவிட்டு மாலை முழுவதுமாக ஒன்று, இரண்டு அல்லது மூன்று பெற்றோர்களை மாத்திரமே நீங்கள் பார்க்கும்போது அது உற்சாகமிழக்கும்படிச் செய்துவிடுகிறது.”
பெற்றோர்களாக, சில சமயங்களில் உங்கள் பிள்ளைகளின் விசேஷித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பள்ளிகளும் ஆசிரியர்களும் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதேவிதமாகவே பள்ளி அமைப்பின் முயற்சிகள் விசேஷமாக உங்களுடைய பிள்ளைகள் வெற்றிகரமான மனிதர்களாக வளருவதற்காக செய்யப்படுவதன் காரணமாக அதேவிதமாக அவற்றை ஆதரிப்பதற்காக தியாகங்களைச் செய்ய நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டாமா?
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே புரிந்து கொள்ளுதலையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றுவிப்பதற்காக பிரசுரிக்கப்பட்ட “பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும்” சிற்றேடு, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோருக்கு பின்வரும் வீட்டுப்பாடத்தைக் குறிப்பிட்டிருந்தது: “பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களோடு பழக வேண்டும் என்பது முக்கியம்—அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களோடு பேச வேண்டும். . . .
“இப்படிப்பட்ட ஒரு சந்திப்பின் போது சாட்சியாக இருக்கும் தகப்பனோ அல்லது தாயோ, பெற்றோர் அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்து சரியான கிறிஸ்தவ நடத்தையை எதிர்ப்பார்ப்பதையும், அவர்கள் தவறாக நடந்து கொண்டால் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதை விரும்புவதையும் ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். நியாயமாக ஆசிரியர் வழங்கும் எந்தச் சிட்சையையும் அவர்கள் ஆதரிப்பார்கள் என்பதையும் வீட்டில் அதை செயற்படுத்துவதாகவும்கூட பெற்றோர் அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
“பெற்றோர்கள் உதவுவதற்கு மற்ற வழிகள்: “பிள்ளைகள் பள்ளிக்குப் புறப்படுவதற்கு முன்பாக நல்ல காலையுண்டியை பெற்றுக் கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும். அவர்களுடைய வீட்டுப்பாடம் முழுவதுமாக செய்யப்பட்டிருக்கிறதா, அவர்கள் எல்லாப் புத்தகங்களையும் வைத்திருக்கிறார்களா என்பதைப் பார்த்துக் கொள்ளவும். எப்பொழுதும் பள்ளியின் விதிகளுக்கு மரியாதை காண்பித்து பிள்ளைகளும்கூட இவைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும். பள்ளி நடவடிக்கைகளைப் பற்றியும் அவர்கள் அங்கு எதிர்ப்படக்கூடிய பிரச்னைகளைப் பற்றியும் வீட்டில் பேசும்படியாகச் செய்யவும்.”
இவை நேர்த்தியான ஆலோசனைகள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? பெற்றோராகிய நீங்கள் அவைகளை பின்பற்றுகிறீர்களா? அவ்விதமாகச் செய்வது உங்கள் வீட்டுப்பாடத்தின் ஒரு பாகமாகும். (g88 9⁄8)
[Box on page 12]
பெற்றோரின் சுய-பரிசோதனைக்குக் கேள்விகள்
1. என்னுடைய பிள்ளைகளின் பள்ளிப்படிப்பில் நான் உண்மையான அக்கறையை எடுத்துக் கொள்கிறேனா?
2. எனக்கு அவர்களுடைய ஆசிரியர்களைத் தெரியுமா?
3. நான் ஆசிரியர்களுடைய முயற்சிகளைப் போற்றுகிறேன் என்பதை அவர்கள் அறிவார்களா?
4. என்னுடைய பிள்ளைகள் அவர்களுடைய பள்ளி வேலைகளைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக் கொள்வதை நான் நிச்சயப்படுத்திக் கொள்கிறேனா?
5. அவர்களுடைய வீட்டுப்பாடங்கள் சரியாகவும் நேரத்திலும் செய்யப்படுவதை நான் பார்த்துக் கொள்கிறேனா?
6. அறிவினிடமாகவும் கல்வியினிடமாகவும் என்னுடைய மனநிலை நேர்நிலையான ஒன்றாக இருக்கிறதா?
7. நான் படிப்பதை என் பிள்ளைகள் பார்க்கிறார்களா?
[பக்கம் 7-ன் படம்]
வாசிப்பது, பிள்ளைகளின் தெரிந்துகொள்ளும் ஆவலையும் கற்பனைத் திறனையும் தூண்டிவிடுகிறது
[பக்கம் 8-ன் படம்]
தங்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக் காண்பிப்பதில் நேரத்தை செலவழிக்கும் பெற்றோர் குடும்ப உறவை பலப்படுத்துகிறார்கள்
[பக்கம் 9-ன் படம்]
அருங்காட்சியகங்களுக்கு அல்லது நாட்டுப்புறப் பகுதிகளுக்குக் குடும்பப் பயணங்கள், குடும்பத்துக்கு மெய்யான மகிழ்ச்சியாகவும் கற்றுக்கொள்ளும் அனுபவமாகவும் இருக்கக்கூடும்
[பக்கம் 10-ன் படம்]
உங்கள் இளைஞர்களுக்குத் தேவைப்படுவது தனிப்பட்ட கவனமாகும்