தஹித்தி தெற்கத்திய கடல்களின் ஆபரணம்
தஹித்தி—எல்லா விதமான காட்சிகளையும் நம்முடைய மனக் கண்களில் குவித்திடும் பெயர்! பிரெஞ்சு ஆய்வாளராகிய பொளகேன்வில் அதைப் புதிய கித்தேரா என்று அழைத்தார், ஏனெனில் அது கித்தேரா என்றழைக்கப்பட்ட மத்தியதிரை தீவை அவருக்கு நினைவுபடுத்தியது. தஹித்தியின் எழில் ஓவியர்களையும் கவிஞர்களையும் ஆட்கொண்டிருக்கிறது. இன்னும் சிலருக்கு அது பரதீஸின் மறுபெயராக இருக்கிறது.
என்றபோதிலும் தஹித்தியிலிருக்கும் மக்கள் தொகுதி வரப்போகும் பரதீஸைக் குறித்து பேசிக்கொண்டு வருகிறார்கள். இதே விதமான செய்தி, உலக முழுவதிலுமுள்ள குடியிருக்கப்பட்ட தேசங்களில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தச் செய்தி எல்லா இடங்களையும்விட தஹித்திக்கு அதிக அவசியமான ஒன்றா? நீங்கள் புரிந்துகொள்ளுவதற்கு, இந்தத் தீவைக் குறித்து உங்களிடம் சிறிது சொல்லுவதற்கு சற்று அனுமதியுங்கள்.
அழகான தஹித்தி
தஹித்தி தீவானது மக்கள் சொல்லும் அளவுக்கு அழகுமிகுந்ததா? இதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை! இது ஒரு பெரிய தீவு கிடையாது—இதன் பரப்பளவு 402 சதுர மைல்கள் (1,041 சதுர கி.மீ.) மட்டுமே. ஆனால் அதன் உயர்ந்த மலை 7,339 அடிகள் (2,237 கி.மீ.) உயரமுள்ளது. 75 மைல் (121 கி.மீ.) நீளமுடைய ஒரு சாலை தீவு முழுவதையும் சுற்றி வருகிறது
தஹித்தியின் மகிமைகளில் ஒன்று அதை சுற்றியிருக்கும் நீலப்பச்சை நிறமுடைய ஏரிபோன்ற கடல் நீர்த் தேக்கமும் அதற்கும் அப்புறம் ஆழ்ந்த நீல வண்ண ஆழ்கடல். இந்த ஆழ்கடலுக்கும் இளநீல வண்ணமுடைய ஏரிபோன்ற கடல்நீர்த் தேக்கத்திற்குமிடையே ஒரு பவழப் பாறைத் தொடர். இதில் மோதும் பெருத்த அலைகள் ஒரு வெள்ளி நுரை மாலையை அமைக்கிறது. எனவே உயர ஆகாயத்திலிருந்து பார்க்கும்போது தஹித்தி நீலப்பச்சை நகைப்பெட்டியில் ஜொலிக்கும் ஒரு ஆபரணம் போன்றிருக்கிறது. சிலர் இதைத் தெற்கத்திய கடல்களின் ஆபரணம் என்றும் அழைக்கின்றனர்.
அதன் சீதோஷ்ண நிலை? வெப்பமும் ஈரப்பதமும் கலந்தது. ஆனால் தடக்காற்றால் மிதப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது. நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மழை காலம். அந்த சமயத்தில் அதன் வெப்பநிலையும் ஈரப்பதமும் அதிகமாயிருக்கிறது. காய்கறி விளைச்சல் ஏராளம். கடற்கரை ஓரமாகவும், பள்ளத்தாக்குகளிலும் ஏராளமான தென்னை, மா, பலா, பேரி மற்றும் வாழை—ஒரு வெப்பமண்டல பரதீஸில் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் காணலாம்.
பூக்களைப் பற்றியதென்ன? உங்கள் கண்களை மூடிக்கொண்டு, செந்நிற மல்லிகையிலிருந்து பெறப்படும் நறுமணத்தென்றலை சுவாசிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இப்பொழுது கண்களைத் திறந்து பாருங்கள், செம்பருத்தி மற்றும் காகிதப் பூக்களின் கண்கொள்ளாக் காட்சி. அசாதாரணமான நாரைப் பூவை, விசேஷமாக தஹித்தியின் ஆண்களும் பெண்களும் தங்களுடைய தலையில் வைத்துக்கொள்ளும் ‘தயரா தஹியத்தி’ என்ற மலர் வகையை கற்பனை செய்துப் பாருங்கள். ஆம், தஹித்தி ஏராளமான மலர் வகைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.
தஹித்தியில் கடற்பறவைகள் இருக்கின்றன, ஆனால் தீவுக்கு சொந்தமான மிருகங்களோ சில. என்றபோதிலும், அதைச் சுற்றியுள்ள கடற்கரைகள் அதற்கு ஈடுசெய்கின்றன. அழகான பவழப் பாறைகள் வித்தியாச வகையான சிப்பிகளுக்கும் சிப்பி நண்டு வகைகளுக்கும் பாதுகாப்பை தருகின்றன. கடல்நீர் ஏரியிலும்சரி, ஆழ் கடலிலும்சரி, வண்ணமுடைய கிளிபோன்ற அலகுடைய மீன், பேரெலும்பு மீன், கத்திவால் மீன், துடுப்புக் கொண்ட மீன், லோச் என்ற சிறு மீன், விசப்பு நீளுருளை வடிவ மீன் ஆகியவற்றை பார்த்து நம் கண்கள் பூரிக்கிறது. பாறையின் பிளவுகளில் மறைந்துகொண்டு—அதன் அழகை ரசிக்காமல் இருந்தாலும்—காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது பசியாயிருக்கும் முரேனா சுறா.
தஹித்தி மக்கள்
பொ.ச. ஐந்தாவது நூற்றாண்டுபோல், பிரதான கப்பற்வழிப் பயணிகளாகிய பாலினேசியர்களால்தான் இந்த அழகிய தீவு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வன எழிலை அவர்கள் அனுபவிக்கவும், அந்த நீர்த்தேக்கம் கொண்ட வளமிகுந்த மண்ணில் வாழவும் கற்றுக்கொண்டனர். அவர்கள் டாரோவா என்ற தெய்வத்தை வணங்கி வந்தனர், இந்தத் தெய்வம் உப தெய்வங்களால் பணிவிடையைப் பெற்று வந்தது என்றும் சொல்லப்பட்டது. மாரே என்று அழைக்கப்பட்ட, நான்கு பக்கங்களும் மூடப்பட்ட இடத்தில் மத சடங்குகள் நடந்தன, அதன் ஒரு பக்கத்தில் டிக்கி விக்கிரகங்களுக்கு ஒரு புனித பீடம் இருந்தது, அங்கேதான் நர பலிகள் செலுத்தப்பட்டன.
ஆயிர வருடங்களுக்கு மேலாக, இந்த முதல் குடியிருப்பினர் எவ்வித இடையூறுமின்றி வாழ்ந்தனர். உண்மையில், அவர்களுடைய வம்சத்தார் இன்றும் அங்கே இருக்கின்றனர். அவர்கள் தஹித்தியர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் 18-வது நூற்றாண்டில், மறுபடியும் ஆங்கிலேய கடற்வழிப் பயணிகளால் அதாவது ஊவாலிஸ், பொளகேன்வில், மற்றும் குக் ஆகியோரால் இந்தத் ‘தீவு’ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. தஹித்தி உலகத்தில் பிரசித்திபெற்ற இடமாக ஆனது. புதிதாக வந்தவர்கள் தஹித்தியருக்கு சில நன்மைகளை அதாவது உலோகம், புதிய துணிமணிகள், மற்றும் முக்கியமாக பைபிள் உட்பட வேறு புத்தகங்கள் ஆகியவற்றை கொண்டு வந்தார்கள். அவற்றோடுகூட பிரச்னைகளையும் கொண்டு வந்தனர். தஹித்தி போராட்டங்களில் ஈடுபட்டது, முடிவில் 1880-ல் தஹித்தியின் அரசன் V, தஹித்தியை பிரான்ஸிடம் ஒப்படைத்தான். இன்று, பிரெஞ்சு பாலினேஸியா என்ற தீவுகளின் தொகுதிக்கு அது செயலக மையமாக இருக்கிறது.
தஹித்தி பெண்களின் பொன்வண்ண மேனியும், அவர்களுடைய நீண்ட தலைமயிரும் பால் காகின் போன்ற ஓவியர்களால் பிரசித்தமாக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் தஹித்தியர் சீனர், ஐரோப்பியர், இன்னும் மற்ற தேசத்தவரை விவாகம் செய்வதன் காரணமாக, அது பல இனத்தவர் கலந்த இடமாகிக் கொண்டு வருகிறது. பூர்வீக தஹித்தியர் பேசிய மொழி இன்னும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. அது ஒரு அழகிய பேச்சு மொழி, ஆனால் இன்றைய வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் அநேக வார்த்தைகள் அதில் காணப்படுவதில்லை. எனவே, தினந்தோறும் பேசும் உரையாடலில் சீனமொழி, ஆங்கிலம் இன்னும் மற்ற அந்நிய மொழியின் வார்த்தைகள் கலந்திருப்பதை நீங்கள் கேட்கலாம். தஹித்தி பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருப்பதால், பிரெஞ்சு மொழியும் இங்கு பேசப்படுகிறது.
காரியங்கள் மாறுகின்றன
ஊரும் ஊராரும் மகிழ்ச்சியுள்ளவர்கள். பவழத்தாய் சிற்பமும் மர வேலைப்பாடுகளுமான பாலினேஸிய கை வேலைப்பாடுகளுக்கு தஹித்தியர் இன்னும் கைத்தேர்ந்தவர்கள். அங்கு கிடைக்கும் சிப்பிகளைக் கொண்டு அழகிய பதக்கங்களையும், மாலைகளையும் செய்கின்றனர். தென்னை மற்றும் பாண்டனஸ் இலைகளைப் பாய்களாக, கூடைகளாக மற்றும் தொப்பிகளாக பின்னுவதற்கு அவர்களுக்குத் தெரியும். பாடுவதும், நடனமாடுவதும் அவர்களுடைய தலைச் சிறந்த திறமைகளாகும். நேர்த்தியான உணவு, அழகிய மலர்கள், இசை, பாட்டு மற்றும் நடனம் ஆகியவற்றோடு (விசனப்படத்தக்கதாக, அதிக மதுபானமும் புகையிலையுங்கூட உபயோகித்து) தங்களை மகிழ்விக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் அனுகூலப்படுத்திக் கொள்கின்றனர்.
என்றபோதிலும். 20-ம் நூற்றாண்டின் அறிகுறிகளை தஹித்தி கேள்விக்கிடமின்றி காட்டுகின்றது. அதன் அழகு வெகுவாய் கொள்ளையடிக்கப்படுகிறது. வியாபாரிகள் கடலில் சிப்பிகளை தேடுகின்றனர், சுறா மீன்களை அதன் பற்களுக்காகவும், ஆமைகளை அதன் ஓடுகளுக்காகவும் வேட்டையாடுகின்றனர். அதற்கிடையில், ஒரு காலத்தில் கடலோரத்தில் மிகுதியாகக் காணப்பட்ட கடற்பறவைகளின் இடத்தை இன்று அதிகரிக்கும் மக்கள் தொகை எடுத்துவிட்டிருக்கிறது.
தூய்மைகேடும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. தஹித்தி எழில்கொண்ட கடற்கரைகளை கொண்டிருக்கிறது. அவற்றில் பல ஆச்சரியத்தக்க விதமாக கருப்பு மண்ணை உடையதாயிருக்கிறது. ஆனால் சில கடற்கரைகளில் குப்பைக்கூளம் மிகுந்திருக்க அதை கடல் அடித்துச் செல்கிறது.
தஹித்தியர்கள், நட்பு தயாளம் மற்றும் உபசரிப்பு ஆகிய தன்மைகளுக்குக் காலாகாலமாகப் பேர் பெற்றவர்கள். வருத்தத்திற்குரிய காரியம் என்னவெனில், குடியேற்றமும் சுற்றுலா வர்த்தகமும் இந்த இயற்கைத் துடிப்பை அழித்துவிட்டிருக்கிறது. 60-ம் பத்தாண்டுகளில் தென் பசிபிக்கில் பிரெஞ்சு அணு சோதனையும் சர்வதேச விமான நிலையமும் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு சில பிரச்னைகளும் ஆரம்பித்தன. அதுமுதல், பொருள் வளம் ஊழலுக்கு வழிநடத்தியிருக்கிறது.
வரப்போகும் பரதீஸ்
என்றாலும், அந்த வார்த்தைக்கு முழுமையான அர்த்தத்தைக் கொண்டிருக்கும் விதமாக தஹித்தி உண்மையிலேயே ஒரு பரதீஸாக இருக்கவில்லை. தீவு அழகாயிருந்தபோதிலும், மனிதவர்க்கத்தை எதிர்படும் பொது பிரச்னைகளாகிய வியாதியும் மரணத்தையும் அவர்கள் எதிர்படுகின்றனர். அதோடுகூட அநேகர் முன்பு தஹித்தி இருந்ததையும், இப்போது அது என்னவாக மாறிக் கொண்டிருக்கிறதென்பதையும் கண்டு, எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை அவர்கள் கொண்டிருக்கின்றனர். சிந்திக்கும் ஆட்கள் சீரழிந்துக் கொண்டு போகுதல் தொடராது என்று நம்புகின்றனர், ஆனால் உறுதியான வாக்குக்காக அவர்கள் எங்கே நோக்கியிருக்கலாம்?
18-வது நூற்றாண்டின் கடைசியில், கிறிஸ்தவ மண்டலத்தின் முதல் மிஷனரிகள் தஹித்திக்கு வந்தனர். அவர்கள் பைபிளை தஹித்திமொழிக்கு மொழிபெயர்த்தனர், இதுவே இப்போது தீவில் அதிக பரவலாக மதிக்கப்படும் ஒரு புத்தகமாக இருக்கிறது. இன்று, தேசத்திலே கிறிஸ்தவம் என்று உரிமைப் பாராட்டும் அநேக மதங்கள் இருக்கின்றன. ஆம், அதே சமயத்தில் அதிகமான குற்றச்செயலும், வன்முறையும், இன வேறுபாடுகளும் தேச பக்தியும் இருக்கிறது. கிறிஸ்தவ மண்டலம் இந்த பிரச்னைகளுக்கான தீர்வை சுட்டிக்காட்ட முடியாத நிலையிலிருக்கிறது.
எனவேதான், யெகோவாவின் சாட்சிகள் தஹித்தியருக்கு வரப்போகும் உண்மையான பரதீஸைக் குறித்து சொல்லி வருகின்றனர். தங்களுடைய தஹித்திய பைபிளில் ஆயிரக்கணக்கான தடவைகள் இருக்கும் யெகோவா என்னும் நாமத்தையுடைய கடவுளின் நோக்கங்களை அவர்கள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள். மனித வர்க்கம் ‘பூமியைக் கெடுக்க’ ஆரம்பிக்கும் என்றும், அதன் கடைமுனை மட்டும் அதன் அழகான பகுதிகளையுங்கூட கெடுப்பார்கள் என்றும் இந்தக் கடவுள் தீர்க்கதரிசனம் உறைத்ததை அவர்கள் காட்டுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 11:18) இது கவனியாமற் போகும்படி கடவுள் அனுமதிக்க மாட்டார். மாறாக கிறிஸ்து இயேசுவின் கீழ் அவருடைய ராஜ்யம் தஹித்திக்கு மட்டுமல்லாமல், பூமியெங்கும் இருக்கும் அனைத்து தீவுகளுக்கும், கண்டங்களுக்கும் உண்மையான பரதீஸைக் கொண்டுவரும். (சங்கீதம் 98:7-9) தஹித்தியில் இயற்கை அழகு மிகுந்திருந்த நாட்களிலும் அதை பாதித்த நோய், வேதனை மற்றும் மரணம் ஆகிய பிரச்னைகளையுங்கூட கடவுளுடைய ராஜ்யம் தீர்த்து வைக்கும். (வெளிப்படுத்துதல் 21:3, 4) எனவே தஹித்தியர்கள் தங்களுடைய நித்திய ஆசீர்வாதத்திற்காக தங்களுடைய பரம்பரைத் தன்மையாகிய உபசரிப்பு தன்மையினால் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியை வரவேற்குமாறு உற்சாகப்படுத்தப்படுகின்றனர். தங்களுடைய நித்திய ஆசீர்வாதத்திற்காகவே வரப்போகும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியை தொன்றுதொட்டு உபசரிக்கும் தன்மையுடன் வரவேற்கும்படியாக உற்சாகப்படுத்தப்படுகின்றனர். (g86 4/8)