“யெகோவா எங்கள் உயிரைக் காப்பாற்றினார்”
இந்தியாவில் சௌபாக்யா என்ற ஒரு பெண் இருந்தார். அவருக்கு மூன்று வயதில், மேகனா என்று ஒரு பெண் குழந்தை. 2005-ல் அவருடைய அன்பான கணவர் இறந்துவிட்டார். கணவர் இருந்தவரை குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொண்டார். ஆனால் அவர் இறந்த பிறகு வாழ்க்கையை ஓட்டுவதே சௌபாக்யாவுக்கு கஷ்டமாக இருந்தது.
இது போதாதென்று சுற்றி இருந்தவர்கள் சௌபாக்யாவை ஒதுக்கி தள்ளினார்கள். சொந்தக்காரர்களும், அவரையும் மேகனாவையும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தினார்கள். இவர்கள் அவர்களுக்கு பாரமாக இருப்பதாக எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். சௌபாக்யா ஆறுதலைத் தேடி பக்கத்தில் இருந்த ஒரு சர்ச்சுக்கு போனார். அங்கே இருந்தவர்களும் ஏழையாக இருந்த சௌபாக்யாவை கேவலமாக பார்த்தார்கள். வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு வேலையை தேடினார். எவ்வளவு முயற்சி செய்தும் அதுவும் கிடைக்கவில்லை.
சௌபாக்யா இப்படி சொல்கிறார்: “இனி எதற்காக வாழ வேண்டும் என்று தோன்றியது. தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் இல்லை என்றால் என் மகள் ரொம்ப கஷ்டப்படுவாள். அதனால். இரண்டு பேருமே செத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.” யாருக்கும் எங்கள்மேல் அன்பு இல்லை, இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று நினைத்த சௌபாக்யா, விஷம் வாங்க போனார்.
சௌபாக்யா, ரயிலில் வீட்டுக்கு திரும்ப போய்க் கொண்டிருந்தார். அப்போது எலிசபெத் என்ற யெகோவாவின் சாட்சி அவரிடம் பேசினார். தனக்கு வேலை இல்லை என்று சௌபாக்யா அவரிடம் சொன்னார். அப்போது எலிசபெத், ஒரு வேலையை கண்டுபிடிக்க உதவி செய்வதாக சொன்னார். அதோடு, அவர் ஒரு பைபிள் படிப்புக்கு போய்க் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அதைக் கேட்டதும் சௌபாக்யாவுக்கு ஒரே ஆச்சரியம்! இதுவரை அவர் போன எந்த சர்ச்சிலும் பைபிள் படிப்பைப் பற்றி அவர் கேள்விப்பட்டதே இல்லை. பைபிள் படிப்பைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள தன்னை வந்து பார்க்கும்படி சௌபாக்யாவிடம் எலிசபெத் சொன்னார்.
சௌபாக்யா வீட்டுக்கு திரும்பிப்போன பிறகும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில்தான் இருந்தார். ஆனால், அவருடைய மகள் மேகனா, சொந்தக்காரர்களோடு ஊருக்கு போயிருந்ததால், அவள் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார்.
அந்த சமயத்தில் சௌபாக்யா எலிசபெத்தை போய் பார்த்தார். எலிசபெத் அவரை அன்பாக வரவேற்றார். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை அவருக்கு காட்டினார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கணவரை இழந்த சௌபாக்யாவுக்கு, “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்ற பாடம் ரொம்ப பிடித்துப் போனது. அன்றைக்கே அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.
அடுத்த வாரம் நடந்த மாநாட்டுக்கு சௌபாக்யாவை எலிசபெத் கூப்பிட்டார். சௌபாக்யா மாநாட்டுக்கு போனார். அது அவருக்கு ரொம்ப பிடித்துப்போனது. அதனால் அவரும் ஒரு யெகோவாவின் சாட்சி ஆகவேண்டும் என்று முடிவெடுத்தார். மாநாடு முடிந்து வீட்டுக்கு திரும்பி போனதும், அவருக்கு வேலையும் கிடைத்தது.
சௌபாக்யா தொடர்ந்து பைபிள் படித்தார். வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த அவருக்கு வாழ்வதற்கு ஒரு காரணம் கிடைத்தது. அவர் ஞானஸ்நானம் எடுத்தார். பிறகு மேகனாவும் ஞானஸ்நானம் எடுத்தார். அவர்கள் இருவரும் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்கிறார்கள். மேகனா, இந்தியாவில் இருக்கும் நம் மொழிபெயர்ப்பு அலுவலகம் ஒன்றில் சேவை செய்கிறார்.
சௌபாக்யாவும் மேகனாவும்
அன்று, ரயிலில் சௌபாக்யாவை பார்த்து எலிசபெத் பேசியதற்காகவும். அவர்மேல் அக்கறை காட்டியதற்காகவும், சத்தியத்தைப் பற்றி சொன்னதற்காகவும், சௌபாக்யாவும் மேகனாவும் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். யெகோவாவுக்கும் அவர்கள் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள்! மேகனா இப்படிச் சொல்கிறார்: “அன்று மட்டும் எங்களுக்கு சத்தியம் கிடைத்திருக்காவிட்டால், இன்று நாங்கள் மண்ணோடு மண்ணாகி இருப்போம். இப்போது நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். மறுபடியும் என் அப்பாவை உயிரோடு பார்க்க போகும் நாளுக்காக ஆசை ஆசையாக காத்திருக்கிறோம். அப்போது அவரை கட்டி அணைப்போம், யெகோவாவை பற்றியும், எங்களுடைய உயிரை யெகோவா காப்பாற்றியதைப் பற்றியும் அவரிடம் சொல்வோம்.”