மனச்சோர்வை சமாளிக்க ஹாஸ்பிட்டலில் வேலை செய்கிறவர்களுக்கு கிடைத்த உதவி
அமெரிக்காவில் இருக்கிற வடக்கு கரோலினாவில் வாழ்கிற ப்ரின், மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுவில் (HLC) சேவை செய்கிறார். யெகோவாவின் சாட்சிகள் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உதவியை இந்த குழுவில் இருப்பவர்கள் செய்கிறார்கள்.
கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் நிறைய மருத்துவமனைகள் நோயாளிகளை பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளாக இருந்த நோயாளிகளை பார்ப்பதற்கு ஏதாவது வழி இருக்குமா என்று கேட்பதற்கு ப்ரின் அங்கே இருந்த ஒரு மருத்துவமனையை தொடர்புகொண்டார். நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தில் இருந்தவர்களுக்கும் மன அமைதி கிடைக்க ஆன்மீக உதவிகளை ஏற்பாடு செய்ய ஒரு இலாக்கா அந்த மருத்துவமனையில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதன் இயக்குனரை ப்ரின் தொடர்புகொள்ள முயற்சி செய்தார்.
அந்த இயக்குனரின் உதவியாளரிடம் ப்ரினால் பேச முடிந்தது. நோயாளிகளை யாரும் வந்து பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்ததால், அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளிடம் பேசுவதற்காக தன்னுடைய ஃபோன் நம்பரை அவர்களிடம் கொடுக்க முடியுமா என்று ப்ரின் கேட்டார். அவரும் சரி என்று சொன்னார்.
பிறகு, மருத்துவமனையில் வேலை செய்கிறவர்களை பற்றி ப்ரின் யோசித்தார். மருத்துவமனையில் இருக்கிறவர்கள் செய்கிற வேலையை தான் ரொம்ப பாராட்டுவதாக அந்த உதவியாளரிடம் ப்ரின் சொன்னார். அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா என்றும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றும் விசாரித்தார். “இந்த பெருந்தொற்றினால் நிறைய மக்கள், முக்கியமாக மருத்துவமனையில் வேலை செய்கிறவர்கள், பயங்கரமான மனச்சோர்வால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன்” என்று அவரிடம் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் மருத்துவமனையில் இருக்கிற எல்லாருமே நொந்துபோய் இருக்கிறார்கள் என்று அந்த உதவியாளரும் ஒத்துக்கொண்டார்.
மனச்சோர்வை சமாளிப்பதற்கு தேவையான நிறைய டிப்ஸ் எங்களுடைய வெப்சைட்டில் இருக்கிறது என்று ப்ரின் அவரிடம் சொன்னார். “வெப்சைட்டில் இருக்கிற தேடவும் என்ற பெட்டியில் ‘மனச்சோர்வு’ என்று டைப் பண்ணினால், நிறைய நல்ல கட்டுரைகளை கண்டுபிடிக்க முடியும். அது உங்கள் மருத்துவமனையில் வேலை செய்கிறவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார் ப்ரின்.
பேசிக்கொண்டு இருந்தபோதே, அந்த உதவியாளர் வெப்சைட்டில் ‘மனச்சோர்வு’ என்று டைப் செய்து தேடியிருக்கிறார். அதில் வந்த கட்டுரைகளை பார்த்து, ”ஓ! சூப்பராக இருக்கிறதே!” என்று சொன்னார். “நான் கண்டிப்பாக இதை இயக்குனரிடம் காட்டுகிறேன். இந்த கட்டுரைகள் எங்களுடைய மருத்துவமனையில் வேலை செய்கிறவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ரொம்பவே பிரயோஜனமாக இருக்கும். இதை பிரிண்ட் எடுத்து கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கிறேன்” என்று சொன்னார்.
கொஞ்சம் வாரங்கள் கழிந்து, ப்ரின் மறுபடியும் அந்த இயக்குனரிடம் ஃபோன் செய்து பேசினார். அப்போது, அவர் அந்த வெப்சைட்டை பார்த்ததாகவும் அதில் மனசோர்வை பற்றி இருந்த கட்டுரைகளை பிரிண்ட் எடுத்து நர்ஸ்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்ததாகவும் சொன்னார்.
ப்ரின் இப்படி சொல்கிறார்: “நாம் செய்யும் இந்த வேலைக்காக அந்த இயக்குனர் என்னிடம் நன்றி சொன்னார். அந்த கட்டுரைகளில் இருந்த தகவல்கள் மிகவும் நன்றாக இருந்ததாகவும், ரொம்பவே உதவியாக இருந்ததாகவும் சொன்னார்.”