இளைஞர்களே! பயனுள்ள இலக்குகள் வையுங்கள்
1 இளைஞர்களே, என்னென்ன இலக்குகளை வைத்திருக்கிறீர்கள்? அநேக இளைஞர்களுக்கு எந்த ஆன்மீக இலக்குகளும் இல்லை. ஆனால், ஆன்மீக இலக்குகளை வைத்து அவற்றை எட்டும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான்!
2 அதிக பணம் சம்பாதிக்கவும், மெத்த படிக்கவும் இலக்கு வைத்து அதை அடைவது வீண் என்பதை இளைஞர்கள் பலர் உணர்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இலக்குகளால் ஆன்மீக நிலை ஆட்டங்காணலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், தெய்வீக கல்வியைப் பெற்று அதன் அடிப்படையில் ஆன்மீக இலக்குகளை வைத்தால், இப்போது திருப்தியான வாழ்க்கையும் எதிர்காலத்தில் முடிவில்லா வாழ்க்கையும் கிடைக்கும்.—பிர. 12:1, 13.
3 ஆன்மீக இலக்குகள்: இளைஞர்களே, வாழ்க்கைக்கு கைகொடுக்கும் அறிவைப் பெற முயற்சி செய்கிறீர்களா? நீதிமொழிகள் 2:1-5 ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடையும்படி’ ஆலோசனை கொடுக்கிறது. அவருடைய வார்த்தையைப் படிக்காமல் கடவுளைப் பற்றிய அறிவைப் பெற முடியுமா? தனிப்பட்ட விதமாக பைபிளைத் தவறாமல் படிக்கும்போது, யெகோவாவிடம் நெருங்கி வர உதவும் விஷயங்கள் மனதிலும் இருதயத்திலும் ஆழமாகப் பதிந்துவிடும். அதோடு, நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியும். முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில் நன்கு யோசித்து முடிவெடுக்க உங்களுக்கு உதவும்.
4 இதெல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது. ஆன்மீக முதிர்ச்சி அடைய காலம் எடுக்கும், பொறுமையும் தேவை. இலக்குகள் வைத்து படிப்படியாக முன்னேறும்போது ஆன்மீக முதிர்ச்சி அடைவீர்கள்.
5 கடவுளுடைய சேவையில் விசேஷ வாய்ப்புகளைப் பெற இலக்கு வைக்கிறீர்களா? ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நேரம் ஊழியம் செய்ய இலக்கு வைக்கிறீர்களா? மறுசந்திப்பிலும் பைபிள் படிப்பிலும் திறம்பட கற்றுக்கொடுக்க வேண்டுமென்பது உங்கள் இலக்கா? பள்ளி செல்லும் இளைஞர்கள் சிலர் விடுமுறை மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய இலக்கு வைக்கிறார்கள். அடுத்து ஓரிரு வருடங்களுக்கு அல்லது அதற்குப் பிறகும் என்ன செய்ய இலக்கு வைத்திருக்கிறீர்கள்? ஒழுங்கான பயனியர் சேவையா? பெத்தேல் சேவையா? நீங்கள் ஒரு இளம் சகோதரர் என்றால், ஊழியக் கண்காணியாக சேவை செய்ய, மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியில் கலந்துகொள்ள, பிற்பாடு ஒரு மூப்பராக இலக்கு வைத்திருக்கிறீர்களா? திட்டவட்டமான இலக்குகளை வைத்து அவற்றை எட்ட ஊக்கமாக முயற்சித்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
6 உங்களால் எட்ட முடிந்த ஆன்மீக இலக்குகளை வையுங்கள். அவற்றை எட்டும்போது, உங்களைப் பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷப்படுவார். இலக்குகளை எட்ட உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்படிச் செய்தால், அளவில்லா ஆசீர்வாதங்கள், இன்றும் என்றென்றும்!—பிலி. 4:13.