யெகோவாவின் சேவையில் மும்முரமாக ஈடுபடுவதில் நமக்கு எத்தனை மகிழ்ச்சி!
1 கிறிஸ்தவ ஊழியத்தை நிறைவேற்ற அப்போஸ்தலன் பவுல் [“முழுமையாக,” NW] ‘செலவுபண்ணப்படுவதில்’ மகிழ்ச்சிகண்டார். (2 கொ. 12:15) அவரைப் போலவே இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் பயனியர் சேவை மூலம் கடுமையாக உழைக்கிறார்கள். சிலர், அநேக குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு அங்கும் இங்கும் ஓடி உழைத்தாலும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஊழியத்தில் பங்குகொள்கிறார்கள். இன்னும் சிலர், மோசமான உடல் உபாதைகளால் அவதிப்பட்டாலும் தங்களுக்கிருக்கிற கொஞ்ச பலத்தையும் ராஜ்ய காரியங்களை முன்னேற்றுவிப்பதற்காகப் பயன்படுத்துகிறார்கள். எந்த வயதினராக இருந்தாலும் சரி எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யெகோவாவின் சேவையில் மும்முரமாக ஈடுபடும் அவருடைய ஊழியர்களைப் பார்க்கும்போது உற்சாகம் பொங்குகிறதல்லவா!
2 சக மனிதர்கள் மீதுள்ள அன்பு: கடவுள் மீதும் சக மனிதர்கள் மீதும் உள்ள அன்பை, யெகோவாவைச் சேவிக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதன் மூலம் காட்டும்போது அது நமக்கு சுத்தமான மனசாட்சியைத் தருகிறது. பவுல் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக தன்னாலான எல்லாவற்றையும் செய்தார்; எனவே அவரால் மகிழ்ச்சி பொங்க இவ்வாறு சொல்ல முடிந்தது: “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.” (அப். 20:24, 27; 1 தெ. 2:8) எனவே, நம்முடைய சூழ்நிலை எந்தளவுக்கு அனுமதிக்கிறதோ அந்த அளவிற்கு ஊழியத்தில் நாம் பங்குகொள்ளும்போது இரத்தப்பழிக்கு ஆளாகாமல் இருப்போம்.—எசே. 3:18-21.
3 மற்றவர்களுக்கு உதவுவதற்காக நாம் கடினமாய் உழைக்கும்போது அது நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. (அப். 20:35) ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “நாள் முழுவதும் யெகோவாவுக்கு சேவை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்புகையில் களைப்பாக இருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறேன், யாரும் என்னிடமிருந்து பறிக்க முடியாத மகிழ்ச்சியை எனக்குத் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.”
4 கடவுள் மீதுள்ள அன்பு: யெகோவாவின் சேவையில் நாம் மும்முரமாக ஈடுபடுவதற்கான மிக முக்கியமான காரணம், அது நம் பரலோக தகப்பனின் மனதைக் குளிர்விக்கிறது. கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பு அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிய நம்மைத் தூண்டுகிறது. அதில் பிரசங்கிப்பதும் சீஷராக்குவது அடங்கும். (1 யோ. 5:3) மக்கள் அலட்சியப்படுத்தினாலும் அல்லது எதிர்த்தாலும்கூட நாம் தொடர்ந்து யெகோவாவுக்காக கடினமாக உழைப்போமாக.
5 தளர்ந்துவிட இதுவல்ல காலம். நாம் அறுப்புக் காலத்தில் வாழ்கிறோம். (மத். 9:37) ஒரு விவசாயி பொதுவாக அறுப்பு காலத்தில், காலம் நேரம் பார்க்காமல் உழைப்பார். ஏனென்றால் அவர் காலம் தாழ்த்தினால் பயிர்கள் நாசமடையும். ஆன்மீக அறுப்பு வேலையைச் செய்வதற்கும் கொஞ்சம் காலமே உள்ளது. நாம் வாழும் காலத்தை மனதில் வைத்துக்கொண்டு, அனைவரும் ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவதில் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்படுவோமாக.—லூக். 13:24; 1 கொ. 7:29-31.