பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் படித்து மகிழுங்கள்
1 “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் வெளியிடப்பட்டதாகும். சீக்கிரத்தில் அந்தப் புத்தகத்தை வெளி ஊழியத்தின்போது பெருமளவு பயன்படுத்தப்போகிறோம், முக்கியமாய் அதிலிருந்து பைபிள் படிப்புகளை நடத்துவதற்காக பெருமளவு பயன்படுத்தப்போகிறோம். ஆகவே, இந்தப் புதிய புத்தகத்திலுள்ள விஷயங்கள் அனைத்தையும் நாம் நன்கு தெரிந்திருக்க வேண்டும். சபை புத்தகப் படிப்பில், 2006, ஏப்ரல் 17-ல் தொடங்கும் வாரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை நாம் படிக்கப்போவதால், அதை நம்மால் நன்கு தெரிந்துகொள்ள முடியும்.
2 சபை புத்தகப் படிப்புக் கண்காணி, ஒவ்வொரு அதிகாரத்தின் ஆரம்பத்திலும் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளிடம் நம் கவனத்தைத் திருப்புவார். பின்னர் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி படிப்பை நடத்துவார். முக்கியக் கருத்துகளை ஆதரிக்கும் வசனங்கள் வாசிக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்படும். ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் காணப்படுகிற “பைபிள் கற்பிப்பவை” என்ற பெட்டி, நாம் படித்தவற்றை மீண்டும் நினைவுகூர உதவியாய் இருக்கும்; ஏனெனில் அந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான வேதப்பூர்வ பதில்கள் அந்தப் பெட்டியில் இருக்கின்றன. இந்தப் புத்தகம் விஷயங்களைத் தெளிவாக, எளிமையாக, சுவாரஸ்யமாக விவரிப்பதால் நீங்கள் பதில்களைச் சொல்லி மகிழ்வீர்கள்.
3 இந்தப் புத்தகத்திலுள்ள பிற்சேர்க்கை, வெவ்வேறு தலைப்புகளில் தகவல் அளிக்கிறது. பைபிள் மாணாக்கர் குறிப்பிட்ட விஷயத்தின்பேரில் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விரும்பினால் இதைப் பயன்படுத்தலாம். அவ்வப்போது புத்தகப் படிப்பில் இந்தப் பிற்சேர்க்கையின் சில பகுதிகள் கலந்தாலோசிக்கப்படும். புத்தகப் படிப்பின்போது பாராக்களை வாசிப்பவர், பிற்சேர்க்கையில் ஒவ்வொரு தலைப்பிலுள்ள எல்லாத் தகவலையுமே வாசிப்பார்; அந்தத் தலைப்பிலுள்ள தகவல் நிறைய பக்கங்களுக்கு இருந்தால், அதைப் பகுதி பகுதியாக வாசிப்பார். பிற்சேர்க்கைக்கென கேள்விகள் கொடுக்கப்படவில்லை என்றாலும், முக்கியக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டும் கேள்விகளைக் கண்காணி கேட்கலாம்.
4 சபை புத்தகப் படிப்பின்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகம் வேகமாய் நடத்தப்படும். ஊழியத்தின்போது, மற்றவர்களுடன் இந்தப் புத்தகத்தைப் படிக்கையில் அதே வேகம் தேவையில்லை, குறிப்பாக அவர்கள் பைபிளைப் பற்றி ஓரளவே தெரிந்திருந்தாலோ, பைபிளைப் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்தாலோ, வேகமாக நடத்த வேண்டியதில்லை. (அப். 26:28, 29) பைபிள் படிப்புகளை நடத்தும்போது, வேதவசனங்களை நன்கு கலந்தாலோசிக்க வேண்டும், படங்களையும் உதாரணங்களையும் விளக்க வேண்டும், இன்னும் இதுபோல் பிற அம்சங்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும். ஆகவே புத்தகப் படிப்பில் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் படிக்கும்போது, வாரந்தவறாமல் கலந்துகொள்வதையும், அதில் முழுமையாகப் பங்குபெறுவதையும் உங்கள் குறிக்கோளாக வையுங்கள்.