தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—நன்கு தயாரித்துச் செல்வதன் மூலம்
1 ஊழியத்திற்காக நன்கு தயாரித்துச் செல்வது மற்றவர்கள்மீது தனிப்பட்ட அக்கறை காட்ட உதவுகிறது. எப்படி? நன்கு தயாரித்துச் சென்றால், நாம் சொல்லப்போகிற விஷயத்தைப் பற்றியே சதா நினைத்துக்கொண்டிராமல், வீட்டுக்காரர்மீது அதிக கவனம் செலுத்துவோம். அவ்வாறு தயாரிப்பது, நம் பயத்தைப் போக்கவும், இருதயத்திலிருந்து பேசவும் உதவும். ஆகவே, பலன்தரும் விதத்தில் பேசுவதற்கு நாம் எப்படி நன்கு தயாரித்துச் செல்லலாம்?
2 பொருத்தமான பிரசங்கத்தைத் தயாரியுங்கள்: ஜனவரி 2006 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான ஒரு பிரசங்கத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் சொந்த வார்த்தையில் அதை எப்படிச் சொல்லலாம் என யோசியுங்கள். உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு அதை மாற்றியமையுங்கள். உதாரணமாக, குறிப்பிட்ட மதத்தாரையோ இனத்தாரையோ சந்திக்க நேர்ந்தால், அவர்களைக் கவரும் விதத்தில் எப்படிப் பிரசங்கத்தை அளிக்கலாம் என்று யோசியுங்கள். இவ்வாறு, ஆட்களுக்கு ஏற்றவாறு உங்கள் அணுகுமுறையை மாற்றியமைத்துக்கொள்வது அவர்கள்மீது உங்களுக்குத் தனிப்பட்ட அக்கறை இருப்பதைக் காட்டுகிறது.—1 கொ. 9:22.
3 அந்தப் பிரசங்கத்தைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, அதை இன்னும் நன்றாகச் சொல்லுமளவிற்குத் தொடர்ந்து மாற்றியமையுங்கள். அந்தப் பிரசங்கத்தின் அறிமுக வார்த்தைகள் மிக முக்கியமாக இருப்பதால், அதற்கு ஜனங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்களா? நீங்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்களா? இல்லையெனில், பலன்தரும்வரை உங்கள் அணுகுமுறையை மாற்றியமைத்துக்கொண்டே இருங்கள்.
4 நினைவில் வைக்க உதவுகிற வழிகள்: அநேகருக்கு, வீட்டுக்காரரைப் பார்த்தவுடனே சொல்ல வந்த விஷயங்கள் எல்லாம் மறந்துபோய்விடும். உங்களுக்கும் அந்தப் பிரச்சினை இருந்தால், நீங்கள் சொல்லப்போகிற விஷயத்தை வேறொருவரிடம் பேசிக்காட்டிவிட்டுச் செல்கிறீர்களா? இவ்வாறு செய்வது, விஷயங்களைத் தெளிவாக மனதில் வைக்கவும், அவற்றைத் தடுமாறாமல் கோர்வையாகச் சொல்லவும் உதவும். அதுமட்டுமின்றி, வீட்டுக்காரருக்கு ஏற்றவாறு பேசுவதற்கு உங்களைத் தயார்படுத்தும்.
5 நினைவில் வைக்க உதவுகிற இன்னொரு வழி, ஒரு துண்டுக் காகிதத்தில் நீங்கள் சொல்லப்போகிற பிரசங்கத்தைச் சுருக்கமாக எழுதிவைத்துக்கொண்டு, ஒரு வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அதை ஒரு பார்வை பார்த்துக்கொள்வதாகும். இப்படிச் சட்டென நினைவூட்டிக்கொள்வது, பதற்றப்படாமல் நன்றாகப் பேச சிலருக்கு உதவியிருக்கிறது. இவ்வாறு நன்கு தயாரித்துச் செல்வது, மற்றவர்கள்மீது தனிப்பட்ட அக்கறை காட்ட நமக்கு உதவலாம், இதன் மூலம் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் விதத்தில் நாம் முன்னேற்றம் செய்யலாம்.