முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 11: மறுசந்திப்புகளைச் செய்ய மாணாக்கருக்கு உதவுதல்
1 பைபிள் மாணாக்கர் வெளி ஊழியத்திற்கு வர ஆரம்பிக்கும்போது, நற்செய்திக்கு ஆர்வம் காட்டுபவர்களை அவர் சந்திக்கலாம். அப்படிப்பட்டவர்களிடம் பலன் தரும் விதத்தில் மறுசந்திப்புகள் செய்யவும் அவர்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்பவும் அவருக்கு நாம் எப்படி உதவலாம்?
2 மறுசந்திப்பு செய்வதற்கான அடித்தளத்தை முதல் சந்திப்பிலேயே அமைக்க வேண்டும். அதற்கு வீட்டுக்காரர்மேல் உள்ளப்பூர்வமான அக்கறை காட்ட மாணாக்கரை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். (பிலி. 2:4) பிறகு, வீட்டுக்காரரை மனந்திறந்து பேச வைக்கவும், அவர் சொல்வதை நன்கு கவனித்துக் கேட்கவும், அவருடைய ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களை அறிந்துகொள்ளவும் மாணாக்கரைப் படிப்படியாகப் பயிற்றுவிக்க வேண்டும். ஊழியத்தில் ஒருவர் ஆர்வம் காட்டினால், அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் எழுதிக்கொள்ள புதிய பிரஸ்தாபிக்கு உதவ வேண்டும். இந்த விவரங்களைப் பயன்படுத்தி அடுத்த சந்திப்புகளுக்குத் தயார் செய்யவும் உதவ வேண்டும்.
3 மறுசந்திப்பு செய்ய தயாரித்தல்: முதல் சந்திப்பில் எழுதிய குறிப்புகளைப் புதிய பிரஸ்தாபியுடன் சேர்ந்து எடுத்துப் பாருங்கள், பிறகு ராஜ்ய நற்செய்தியின் எந்த அம்சம் வீட்டுக்காரரின் கவனத்தைக் கவருமென கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுங்கள். (1 கொ. 9:19-23) அந்த அம்சத்திற்குப் பொருத்தமான ஒரு பைபிள் வசனத்தையும், படிப்புக்கான பிரசுரத்திலிருந்து ஒரு பாராவையும் வீட்டுக்காரரிடம் காட்டி எப்படிச் சுருக்கமாகப் பேசுவதென இருவரும் சேர்ந்து தயார் செய்யுங்கள். அதோடு, அடுத்த சந்திப்பிற்காக ஒரு கேள்வியை முடிவில் கேட்டுவிட்டு வருவதற்கும் முன்கூட்டியே தயார்செய்யுங்கள். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் பைபிளின் பேரிலான வீட்டுக்காரரின் ஞானத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதைப் புதிய பிரஸ்தாபிக்குக் கற்றுக் கொடுங்கள்.
4 மறுசந்திப்பின்போது முதலில் என்ன சொல்வது என்பதைப் புதிய பிரஸ்தாபிக்குச் சொல்லித் தருவதும் உதவியாக இருக்கும். உதாரணமாக, வீட்டுக்காரருக்கு வணக்கம் சொன்ன பிறகு அவர் இவ்வாறு சொல்லலாம்: “போனமுறை உங்களைச் சந்தித்து பேசியது ரொம்ப சந்தோஷம், இந்த வாரமும் அதே விஷயத்தைப் பற்றி [விஷயத்தைக் குறிப்பிடவும்] பைபிளிலிருந்து இன்னுமதிகமாகப் பேச வந்திருக்கிறேன்.” ஒருவேளை வீட்டிலுள்ள வேறு யாராவது கதவைத் திறந்தால் அவரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதைக்கூட புதிய பிரஸ்தாபிக்கு நாம் கற்றுத்தர வேண்டும்.
5 சிரத்தையுடன் மறுசந்திப்பு செய்யுங்கள்: அக்கறை காட்டும் எல்லோரையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் சென்று சந்திப்பதில் சிறந்த முன்மாதிரியாக இருக்க புதிய பிரஸ்தாபியை உற்சாகப்படுத்துங்கள். வீட்டுக்காரரை மறுபடியும் சந்திக்க, விடாமுயற்சியுடன் பலமுறை அந்த வீட்டிற்குப் போக வேண்டியிருக்கலாம் என்று அவரிடம் சொல்லி வையுங்கள். அடுத்து எப்போது சந்திக்கலாமென பேசித் தீர்மானிப்பது எப்படி என்றும் சொல்லித் தாருங்கள்; அதோடு, தீர்மானித்தபடியே மீண்டும் சென்று சந்திப்பதன் அவசியத்தையும் உணர்த்துங்கள். (மத். 5:37) செம்மறியாடு போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கையிலும் அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்கையிலும் தயவு, கரிசனை, மரியாதை போன்ற குணங்களைக் காட்ட புதிய பிரஸ்தாபியைப் பயிற்றுவியுங்கள்.—தீத். 3:2.