தேவராஜ்ய ஊழியப் பள்ளி நமக்கு எவ்வாறு பயனளிக்கிறது
1 யெகோவா தேவனால் போதிக்கப்படுகிற பிரத்தியேக சிலாக்கியத்தை அவருடைய ஜனங்களாகிய நாம் பெற்றிருக்கிறோம். (ஏசா. 54:13; யோவா. 6:45) அதிலிருந்து நாம் எந்தளவு பயனடைகிறோம் என்பது நம்முடைய முயற்சியையே பெருமளவு சார்ந்திருக்கிறது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி உங்கள் ஆவிக்குரிய தன்மையைப் பலப்படுத்தியிருப்பதை உங்களால் பகுத்துணர முடிகிறதா?
2 போற்றுதல் தெரிவிக்கப்படுகிறது: பேச்சுப் பண்புகளைக் குறித்து ஆழமாக படிப்பது, தங்களுடைய சபையாரை வெளி ஊழியத்தில் திறம்பட்டவர்களாக்கியிருக்கிறது என பள்ளி கண்காணிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர். அதோடு, பைபிள் சிறப்பு குறிப்புகள் பகுதியில் சபையார் பங்கெடுக்கும் ஓர் ஏற்பாடு இருப்பதன் காரணமாக, பைபிள் வாசிப்பிற்கான அட்டவணையை இப்போது அநேகர் பின்பற்றுகிறார்கள் என்பதாக ஒரு பள்ளி கண்காணி கூறுகிறார். பேச்சு நியமிப்பு எண் 2-ல் முன்னுரையோ, முடிவுரையோ தயாரிக்காமல் வாசிப்புப் பகுதிக்கு மட்டும் கவனம் செலுத்துவதால் வரும் நல்ல பலன்களைக் குறித்து அநேக சகோதரர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த நியமிப்பைப் பெற்றவர்கள் தங்களுடைய வாசிக்கும் திறமைகளை முன்னேற்றுவிக்க தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.—1 தீ. 4:13.
3 எல்லோரும் பயனடையலாம்: கூட்டங்களில் பதிலளிப்பது மகிழ்ச்சி அளிக்கும். (நீதி. 15:23) வாய்மொழி மறுபார்வைக்கான கேள்விகள் முன்கூட்டியே கிடைப்பதால் தயாரிப்பதும், பங்கெடுப்பதும் நமக்கு எளிதாயிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஜனவரி 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர இதழ் முதற்கொண்டு தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நியமிக்கப்பட்ட வாசிப்புக்கு இணையான பைபிள் சிறப்பு குறிப்புகளைக் காணலாம். இந்தக் கட்டுரைகள், பைபிள் சிறப்பு குறிப்புகள் பகுதியின்போது உற்சாகமூட்டுகிற குறிப்புகளைச் சொல்ல அநேகருக்கு உதவியிருக்கிறது.
4 தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கராக இருக்கும் அனைவரும் நியமிப்புகளைத் தயாரித்து அளிக்கும் விசேஷித்த சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். பள்ளி கண்காணி மேடையிலிருந்து மாணாக்கரைப் பாராட்டிப் பேசும் வார்த்தைகள் நம் எல்லோருக்குமே பயனளிக்கலாம். கூட்டத்திற்குப் பிறகு, தனிப்பட்ட விதமாக அவர் கொடுக்கும் ஆலோசனையின் மூலம் மாணாக்கர் கூடுதல் நன்மையைப் பெறுவார். தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு பேச்சுப் பண்பு பற்றிய அதிகாரத்தின் முடிவிலும் காணப்படுகிற பயிற்சிகள் கூடுதலான உதவியளிக்கும்.
5 நடைமுறையான, வேதப்பூர்வ கருத்துகள் ஊழியப் பள்ளியின் போதோ, அதற்குப் பிறகோ உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகையில் உங்களுடைய ஊழியப் பள்ளி பாட புத்தகத்தில் அவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்டதைத் தியானியுங்கள், அதோடு, தெய்வீக கல்வியின் இந்த அம்சம் உங்கள் ஆவிக்குரிய தன்மையை எவ்விதத்தில் முன்னேற்றுவிக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.