யெகோவாவின் நீதி நியாயத்தைப் பின்பற்றுங்கள்
1 ‘யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்.’ (சங். 37:28) ஆகையால், இந்த அநீதியான உலகிற்கு அவர் அழிவை நிச்சயத்திருக்கிற போதிலும், அந்த அழிவுக்கு முன் எச்சரிப்பு மணி ஒலிக்க ஏற்பாடு செய்துள்ளார். (மாற். 13:10) மக்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்படுவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. (2 பே. 3:9) யெகோவாவின் நீதியை நாம் பின்பற்ற முயலுகிறோமா? மனித குடும்பத்தின் துயரத்தையும் துன்பத்தையும் காணும்போது ராஜ்ய நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நாம் தூண்டப்படுகிறோமா? (நீதி. 3:27) நீதியை நேசிப்பது ஊழியத்தில் சுறுசுறுப்பாக பங்குகொள்ள நம்மை உந்துவிக்கும்.
2 பட்சபாதமின்றி பிரசங்கியுங்கள்: கடவுளுடைய நோக்கத்தை குறித்து பட்சபாதமின்றி அனைவருக்கும் அறிவிப்பதன் மூலம், நாம் “நியாயஞ்செய்”கிறோம். (மீகா 6:8) வெளித் தோற்றத்தை வைத்து மற்றவர்களை முன்னதாகவே நியாயந்தீர்க்கும் அபூரண மனச்சாய்வை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். (யாக். 2:1-4, 9) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பது யெகோவாவுடைய சித்தமாக இருக்கிறது. (1 தீ. 2:4) கடவுளுடைய சத்திய வார்த்தை ஜனங்களுடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். (எபி. 4:12) இந்த உண்மையை புரிந்துகொள்கையில், முன்பு சத்தியத்தை கேட்க விருப்பமில்லாமல் இருந்த நபர்களையும்கூட நம்பிக்கையோடு அணுகுவதற்கு நாம் தூண்டப்படுவோம்.
3 கடையில் பணிபுரியும் ஒரு சகோதரி அங்கு வழக்கமாக வந்த ஒரு வாடிக்கையாளரின் வெளித் தோற்றத்தைக் கண்டு சற்றே பயந்தார். இருந்தபோதிலும், தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தபோது, கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் பரதீஸைக் குறித்து சாட்சி கொடுக்க முற்பட்டார். அந்நபரோ ‘நான் கட்டுக்கதைகளை நம்புவதில்லை’ என்று பட்டென்று சொல்லிவிட்டு, தான் ஒரு ஹிப்பி என்றும் போதை மருந்துக்கு அடிமை என்றும் சொன்னார். ஆனால் சகோதரி தன் முயற்சியை கைவிடவில்லை. ஒரு நாள் அந்த நபர் தன் நீண்ட முடியைப் பற்றி அந்த சகோதரி என்ன நினைக்கிறாரென கேட்டபோது, இந்த விஷயத்தின் பேரில் பைபிளிலுள்ள கருத்தை அவர் சாதுரியமாக விளக்கினார். (1 கொ. 11:14) மறுநாள் அந்நபர் தன் முகத்தை சுத்தமாக ஷேவ் செய்து, தலைமுடியை குட்டையாக வெட்டிவிட்டு வந்திருந்தார், அதை பார்த்த சகோதரிக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்! தனக்கு ஒரு பைபிள் படிப்பு நடத்துமாறு அந்நபர் கேட்டார், சகோதரர் ஒருவர் அவருக்கு படிப்பு நடத்த சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் ஒப்புக்கொடுக்கப்பட்டு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக ஆனார். அந்த நபரைப் போலவே, யெகோவாவை இன்று சேவித்துக் கொண்டிருக்கும் அநேகர், தங்களிடம் ராஜ்ய செய்தியை அறிவித்தவர்களுடைய பட்சபாதமற்ற, ஊக்கமான முயற்சிகளுக்கு நன்றியுள்ளவர்களாக உள்ளனர்.
4 யெகோவா வெகு விரைவில் இந்த முழு பூமியிலிருந்தே அநீதியை துடைத்துவிடப் போகிறார். (2 பே. 3:10, 13) எஞ்சியிருக்கும் குறுகிய காலத்தில், சாத்தானின் அநீதியான உலகின் மீது வரவிருக்கும் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதன் மூலம் யெகோவாவின் நீதியை நாம் பின்பற்றுவோமாக.—1 யோ. 2:17.