தூதர்கள் நமக்கு உதவுகின்றனர்
1 “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” இந்த வார்த்தைகள், ‘நீங்கள் புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளைக்கு செவிகொடுக்கும் அனைவருக்கும் எவ்வளவாய் உற்சாகமளிக்கின்றன! (மத். 28:18-20) இயேசு, அவருடைய தூதர்களின் மூலமாகவே உண்மைக் கிறிஸ்தவர்களுடன் குறிப்பிடத்தக்க ஒரு விதத்தில் இருக்கிறார். (மத். 13:36-43) உண்மையாய் சேவிக்கும் இந்த ஆவி சிருஷ்டிகளுடன் ஒத்திசைந்து “நித்திய சுவிசேஷத்தை” அறிவிப்பது எவ்வளவாய் சிலிர்ப்பூட்டுகிறது!—வெளி. 14:6, 7.
2 நம் ஊழியத்தில்: “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு” தூதர்கள் அனுப்பப்படுவதாக பைபிள் தெரிவிக்கிறது. (எபி. 1:14) முதல் நூற்றாண்டில், இயேசுவின் சீஷர்களை தகுதியுள்ளவர்களிடம் வழிநடத்துவதில் தூதர்கள் உதவினர். (அப். 8:26) இன்றும் தூதர்களின் வழிநடத்துதல் இருப்பதற்கான அத்தாட்சியை கடவுளுடைய ஊழியர்கள் காண்கின்றனர். சாட்சிகள் தங்களை சந்திக்க வருவதற்கு முன் தாங்கள் உதவி கேட்டு ஜெபித்துக் கொண்டிருந்ததாக வீட்டுக்காரர்கள் அநேக சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் ராஜ்ய செய்தியைக் கேட்டு அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வதைக் காண்கையில், தூதர்களுடன் சேர்ந்து நாமும் எவ்வளவாய் அகமகிழ்கிறோம்!—லூக். 15:10.
3 எதிர்ப்புகளை சந்திக்கையில்: தானியேல், அவருடனிருந்த மூன்று இளம் நண்பர்கள், அப்போஸ்தலன் பேதுரு ஆகியோரும் பெரும் சோதனைகளை எதிர்ப்பட்ட இன்னும் அநேகரும் “பலத்த சவுரியவான்களாகிய” தூதர்களின் மூலம் யெகோவாவின் பாதுகாப்பை அனுபவித்தனர். (சங். 103:20; தானி. 3:28; 6:21, 22; அப். 12:11) சில சமயங்களில் எதிர்ப்புகளைச் சந்திக்கையில் நாம் செய்வதறியாது திகைத்து நிற்கலாம்; அப்போது, “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்பதை புரிந்துகொண்டபோது உற்சாகமடைந்த எலிசாவின் வேலைக்காரனைப் போலவே நாமும் உற்சாகமடையலாம். (2 இரா. 6:15-17) நம் கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்படுகையிலும், நாம் கலங்க வேண்டியதில்லை. ஏனெனில் கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு உறுதியளிக்கிறது: “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.”—சங். 34:7.
4 கிறிஸ்துவின் அரசதிகாரத்தை எதிர்க்கும் அனைத்தையும் அப்புறப்படுத்துவதற்கு தூதர் சேனைகள் விரைவில் படையெடுக்கும். (வெளி. 19:11, 14, 15) அந்நாளுக்காகக் காத்திருக்கும் நாம், தொடர்ந்து யெகோவாவை தைரியத்துடன் துதிப்போமாக, கிறிஸ்துவின் கட்டளைப்படி பணிவிடை செய்யும் பரலோக சேனைகளின் பலத்த ஆதரவு நமக்கு இருப்பதைக் குறித்து முழு நம்பிக்கையுடன் இருப்போமாக.—1 பே. 3:22.