‘சரியான மனச்சாய்வுள்ளவர்களுக்கு’ உதவுங்கள்
1 அடையாள அர்த்தமுள்ள இருதயத்தில் ஆழமாக வேரூன்றிய சுபாவம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. (மத். 12:35) சிலருடைய ‘இருதயம் சண்டையிடும் மனச்சாய்வுடன்’ இருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (சங். 55:21, NW) ஆனால் ‘நித்திய ஜீவனிடமாக சரியான மனச்சாய்வு உடைய’ ஆட்களும்கூட இருக்கிறார்கள். (அப். 13:48, NW) நம் நாளில் அத்தகைய சரியான மனச்சாய்வுள்ளவர்களை யெகோவா தமக்காக கூட்டிச் சேர்க்கிறார். (ஆகா. 2:7) அவர்கள் யெகோவாவின் வணக்கத்தாராவதற்கு நாம் எப்படி உதவலாம்?
2 மறக்காமல் மறுசந்திப்பு செய்யுங்கள்: சீஷராக்கும்படி நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதற்கு மறுசந்திப்புகள் செய்வதைப் பற்றிய சரியான நோக்குநிலை நமக்கு அவசியம். (மத். 28:19, 20) அக்கறை காட்டியவர்களின் ஆர்வத்தை ஊக்கத்துடன் வளர்க்கிறோமா? பிரசுரத்தைப் பெற்றுக்கொள்கிற அல்லது நற்செய்தியிடம் ஆர்வம் காட்டுகிற அனைவரையும் நாம் மீண்டும் போய் சந்திக்கிறோமா? ஆவிக்குரிய விதத்தில் அவர்கள் வளரும்படி உதவ நாம் ஊக்கமாய் உழைக்கிறோமா? உயிர்கள் உட்பட்டிருப்பதால் ஆர்வம் தென்படுகையில் அதை வளர்ப்பதற்கு நாம் முயல வேண்டும்.
3 ஆர்வம் காட்டியவருடன் நடத்திய உரையாடல் மனதில் பசுமையாக இருக்கும்போதே அவருடைய பெயரையும் விலாசத்தையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தைக் கலந்து பேசினீர்கள், எந்த வசனங்களை வாசித்துக் காட்டினீர்கள், என்ன பிரசுரத்தைக் கொடுத்தீர்கள் என்பவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு முடிந்த மட்டும் சீக்கிரத்தில் மீண்டும் போய் சந்தியுங்கள்.
4 மறுசந்திப்பு செய்தல்: மறுசந்திப்பு செய்கையில் வீட்டுக்காரரிடம் தனிப்பட்ட விதத்தில் கனிவையும் நட்புறவையும் உள்ளான அக்கறையையும் காட்டுவது பிரயோஜனமாக இருக்கும். உரையாடல் எளிமையானதாகவும் வேதப்பூர்வமானதாகவும் இருக்கட்டும். உரையாடலுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடும் பைபிள் பொருளை தயாரியுங்கள், அந்த சந்திப்பின் முடிவில் அடுத்த முறை பதிலளிப்பதற்கு வசதியாக ஒரு கேள்வியை கேளுங்கள். வீட்டுக்காரர் சொல்லும் வேதப்பூர்வமற்ற கருத்துக்களைக் குறித்து அநாவசியமாக தர்க்கிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் இருவரும் ஒத்துப்போகும் காரியங்களை உரையாடலுக்கு அஸ்திவாரமாக்கிக் கொள்ளுங்கள்.—கொலோ. 4:6.
5 மறுசந்திப்புகள் செய்வதற்கு முயற்சி தேவை, கிடைக்கும் பலன்களோ திருப்தியளிப்பவை. ஜப்பானிலுள்ள ஒரு பயனியர் ஒவ்வொரு மாதமும் அநேக மறுசந்திப்புகள் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்தார். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்த அனைவரது பெயரையும் எழுதி வைத்துக்கொண்டார், பிறகு, ஏழு நாட்களுக்குள் அவர்களை மீண்டும் போய் சந்தித்தார். என்ன பேசுவது என்பதை நன்கு தயார் செய்துகொண்டு, தான் சொல்லும் செய்தியில் முழு நம்பிக்கையோடு மறுசந்திப்புகளை செய்து வந்தார். அப்படி ஒருமுறை மறுசந்திப்பு செய்கையில், “உங்க மாதிரி யார் வந்தாலும் அவங்கள திருப்பி அனுப்புவதுதான் என் வழக்கம், முதன் முதலா இன்னைக்குத்தான் நீங்க சொல்றத கேட்கிறேன்” என்று சொன்ன ஒருவரிடம் பைபிள் படிப்பை அவரால் ஆரம்பிக்க முடிந்தது. அந்த பயனியர் அன்போடு விடாது முயன்றதால் பலன் கிடைத்தது. அந்த மாத இறுதியில் அவர் பத்து பைபிள் படிப்புகளை அறிக்கை செய்தார்.
6 மக்களின் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. (1 கொ. 7:31) ஆர்வம் காட்டும் ஒருவரை வீட்டில் கண்டுபிடிக்க பெரும்பாலும் பல முறை செல்ல வேண்டியிருக்கலாம். தவறாமல் மறுசந்திப்புகள் செய்கையில் சரியான மனச்சாய்வுள்ளவர்கள் நித்திய ஜீவனுக்குரிய பாதையில் நடக்க நம்மால் உதவ முடியும்.—மத். 7:13, 14.
[கேள்விகள்]
1. நம் நாளில் யாரை யெகோவா தமக்காக கூட்டிச் சேர்க்கிறார்?
2. சீஷராக்கும் நம் பொறுப்பை நிறைவேற்றுவதில் என்ன உட்பட்டுள்ளது?
3. ஊழியத்தில் ஒருவரிடம் உரையாடிய பிறகு என்ன செய்ய வேண்டும்?
4. பலன்தரும் மறுசந்திப்புகளை நாம் எப்படி செய்யலாம்?
5. ஒரு பயனியர் என்ன முயற்சி எடுத்தார், அதனால் கிடைத்த பலன்கள் யாவை?
6. மறுசந்திப்புகள் செய்வதில் ஏன் விடாமுயற்சி நமக்குத் தேவை?