2004-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி
1 உலகளாவிய முக்கியத்துவமுடைய வேலையை செய்து முடிக்க சாதாரண ஆட்களை யெகோவா தயார்படுத்துகிறார். ஒவ்வொரு வாரமும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலம் பயிற்சி அளிப்பதை அதற்கான ஒரு வழியாக பயன்படுத்துகிறார். உங்கள் சூழ்நிலை அனுமதிக்குமளவுக்கு அதில் நீங்கள் முழுமையாக பங்கெடுக்கிறீர்களா? இந்த ஏற்பாடுகளிலிருந்து மாணாக்கர்கள் பெரிதும் பயனடைவதற்கு வசதியாக அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; இவை ஜனவரி முதல் அமலுக்கு வரும்.
2 சுற்றுமுறையில் துணை ஆலோசகர்: போதனா பேச்சையும் பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்கள், துணை ஆலோசகர் கொடுக்கும் ஆலோசனைகளைப் பெரிதும் போற்றுகிறார்கள். தகுதி வாய்ந்த மூப்பர்கள் அநேகர் இருக்கையில் வருடாவருடம் சுற்றுமுறையில் துணை ஆலோசகரை நியமிக்கலாம். இந்த விதத்தில் வேலைப் பளுவை அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்; ஆனால் அதைவிட முக்கியமாக, திறம்பட்ட பேச்சாளர்களாகவும் போதகர்களாகவும் இருக்கும் பல்வேறு நபர்களுடைய அனுபவங்களிலிருந்து மூப்பர்களும் தகுதி வாய்ந்த உதவி ஊழியர்களும் பயனடைவார்கள்.
3 வாய்முறை மறுபார்வை நடத்துவது சம்பந்தமாக: வாய்முறை மறுபார்வை நடத்தப்படும் வாரத்தில் உங்கள் சபைக்கு வட்டார மாநாடு நடைபெற்றால் வாய்முறை மறுபார்வை (மற்றும் அந்த வாரத்திற்குரிய பகுதியை) அடுத்த வாரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்; அடுத்த வார பகுதியை மாநாட்டு வாரத்தில் நடத்த வேண்டும். எனினும், வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது வாய்முறை மறுபார்வை செய்ய வேண்டியிருந்தால் அந்த வார அட்டவணையை முழுமையாக அடுத்த வாரத்திற்கு மாற்ற அவசியமில்லை. மாறாக, பாட்டு, பேச்சு பண்பு, பைபிள் சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றை அட்டவணைப்படி நடத்த வேண்டும். (பேச்சு பண்புக்குப் பிறகு கொடுக்கப்படும்) போதனா பேச்சு அடுத்த வார அட்டவணைப்படி இருக்க வேண்டும். பைபிள் சிறப்புக் குறிப்புகளுக்குப் பிறகு 30 நிமிட ஊழியக் கூட்டம் நடைபெறும்; அதை மூன்று 10 நிமிட பகுதிகள் அல்லது இரண்டு 15 நிமிட பகுதிகள் இடம் பெறும் விதத்தில் மாற்றியமைக்கலாம். (ஆரம்ப அறிவிப்புகளை ரத்துசெய்துவிட வேண்டும்.) ஊழியக் கூட்டத்தின் முடிவாக பாட்டு பாடிய பிறகு 30 நிமிட நிகழ்ச்சியை வட்டாரக் கண்காணி கையாளுவார். அடுத்த வார தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், அட்டவணைப்படி பேச்சு பண்பு, பைபிள் சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றிற்குப் பிறகு வாய்முறை மறுபார்வை நடைபெறும்.
4 ஆவிக்குரிய விதத்தில் வளருவதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் போதனையிலிருந்து பயனடைகையில் உங்கள் சபையிலுள்ளவர்களை உற்சாகப்படுத்துகிறீர்கள், பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் பங்குகொள்கிறீர்கள், நாம் பிரசங்கிக்கும் அருமையான செய்தியின் ஊற்றுமூலருக்குப் புகழ் சேர்க்கிறீர்கள்.—ஏசா. 32:3, 4; வெளி. 9:19.