அறிவு புத்தகத்திடம் வழிநடத்தும் பைபிள் கலந்தாலோசிப்புகளுக்கான ஆலோசனைகள்
1. யுத்தங்களும் கடினமான உலக நிலைமைகளும்:
“[சமீபத்திய செய்தி ஒன்றை குறிப்பிடுங்கள்.] யுத்தங்களின் நோக்கம் எவ்வளவுதான் உயர்ந்ததாக இருந்தாலும் சரி அவற்றைப் பற்றி கேள்விப்பட்ட உடனே, இந்த உலகம் சமாதான பாதையில் செல்கிறதா அல்லது நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே போகுமா என்றுதான் நினைக்க தோன்றுகிறது. யுத்தமில்லாத உலகத்தையே எல்லாரும் விரும்புகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட உலகத்தை மனிதர்களால் உருவாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” வீட்டுக்காரர் சொல்வதை கவனமாக கேளுங்கள். பிறகு, சங்கீதம் 46:8, 9 அல்லது மீகா 4:2-4 வசனங்களை வாசித்து, கடவுள் தலையிடுவது அவசியம் என்று குறிப்பிடுங்கள். அறிவு புத்தகத்தை திறந்து பக்கம் 98-ல் உள்ள 1, 2 பாராக்களையும் பக்கம் 99-ல் உள்ள 5-ம் பாராவையும் கலந்தாலோசியுங்கள்.
2. குற்றச்செயலும் கோர விபத்துக்களும்:
“____________________ [குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை சொல்லி] பற்றிய செய்தி அறிக்கைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது கோரமான சம்பவம் அல்லவா? நம்மை சுற்றிலும் நடக்கிற அல்லது நாமே அனுபவிக்கிற துன்பத்தைப் பற்றி கடவுள் உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருக்கிறாரா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பது பைபிளில் உள்ளது.” சங்கீதம் 72:12-17-ல் உள்ள பொருத்தமான சில வார்த்தைகளை வாசியுங்கள். பிறகு, அறிவு புத்தகத்தில் பக்கம் 70-ஐ திறந்து, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற கேள்விக்கு இந்தப் புத்தகம் பதிலளிக்கிறது என்று கூறுங்கள். தொடர்ந்து இவ்வாறு கூறலாம்: “பைபிள் தரும் பதில் உண்மையில் ஆறுதலளிக்கிறது. ஆகவே, இந்தப் புத்தகத்தை உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்; அதற்கான பதிலை நீங்களே கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்.”
3. மரித்தவர்களின் நிலைமை:
“ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வியாதியினால் மரிக்கிறார்கள். குடும்பத்தாரை அல்லது நெருங்கிய உறவினரை இழந்த துயரம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். பல வருடங்கள் ஆகியிருந்தாலும் அன்பானவரை இழந்த சோகம் இன்னும் நம்மை வதைக்கலாம்.” (1) வீட்டுக்காரர் தனது அனுபவத்தை சொன்னால்: அதை கூர்ந்து கேட்ட பிறகு, “இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கின்றன” என கூறி, லூக்கா 20:38 அல்லது 1 தெசலோனிக்கேயர் 4:13-ஐக் காட்டலாம். பிறகு, “மனிதன் ஏன் வயதாகி மரிக்கிறான் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்கலாம். அறிவு புத்தகம், பக்கம் 53, பாராக்கள் 1-3-க்கு வீட்டுக்காரரின் கவனத்தை திருப்புங்கள். (2) வீட்டுக்காரர் தனது அனுபவத்தை சொல்லவில்லை என்றால்: “மரித்தவர்கள் பரதீஸிற்கு அல்லது பரலோகத்திற்கு போவதாக சிலர் சொல்கிறார்கள், மற்றவர்களோ அவர்கள் மண்ணோடு மண்ணாகி விடுவதாக கூறுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கலாம். பின்பு, பிரசங்கி 9:5, 10-ஐ வாசித்துவிட்டு, அறிவு புத்தகத்தில் பக்கம் 82-3, பாராக்கள் 9, 10-க்கு திருப்புங்கள்.
4. சாதகமான மனநிலையின் முக்கியத்துவம்:
“இன்று அநேகர் மனச்சோர்வால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் காரியங்களை எதிர்மறையாக நோக்கலாம். இந்த விஷயத்தில் எது அவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிளிலுள்ள இந்த வசனம் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது.” மத்தேயு 6:34-ஐ வாசித்த பிறகு, அறிவு புத்தகம், பக்கம் 16, பாரா 13-ல் காணப்படும் கல்வியாளர் ஒருவரின் கூற்றை வாசியுங்கள். மலைப் பிரசங்கத்தின் சில போதகங்களைப் பற்றியும் நீங்கள் கலந்து பேசலாம்.
5. குடும்ப வட்டாரத்தில் நல்ல பேச்சுத்தொடர்பு:
“வேலை செய்யுமிடத்திலும் பள்ளியிலும் அழுத்தம் தரும் சூழ்நிலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் குடும்ப அங்கத்தினர்களுக்கு உற்சாகம் தேவைப்படலாம். என்றாலும், நாமே அநேக அழுத்தங்களை சந்திப்பதால் அப்படி உற்சாகப்படுத்த சில சமயங்களில் விசேஷ முயற்சி எடுக்க வேண்டியிருக்கலாம். நம் குடும்பத்தாரிடம் சொல்லும் காரியங்கள் முக்கியமே என்றாலும், நாம் மனதில் வைக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. [நீதிமொழிகள் 16:23, 24-ஐ வாசிக்கவும்.] பலன் தரும் பேச்சுத்தொடர்புக்கு நம் வாய் அல்ல, நம் இருதயமே முக்கியம் என இந்த வசனம் கூறுகிறது.” அறிவு புத்தகம், பக்கம் 143, பாரா 9-க்கு திருப்பி ஒருவருக்கொருவர் அக்கறை காண்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். பாரா 7-ல் உள்ளபடி, நல்ல விதத்தில் பேச்சுத்தொடர்பு கொள்வது ஏன் கடினம் என்பதற்கான காரணத்தையும் கலந்தாலோசிக்கலாம்.
6. நம் பிள்ளைகளை நியாயமாக நடத்துவது:
“பிள்ளைகள் ஏராளமான அழுத்தங்களை சந்திக்கிறார்கள் என்பது சமீபத்தில் நாம் அறிந்த செய்தி. அநேக பிள்ளைகள் நல்ல சூழ்நிலையில்தான் வளர்க்கப்படுகிறார்கள் என்பதால் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இங்கே சொல்லப்பட்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? [கொலோசெயர் 3:21-ஐ வாசித்து, பதில் சொல்ல அனுமதிக்கவும்.] இதைக் கேட்கையில், செய்வது சுலபம் போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில், நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு புரிய வைப்பது கடினமே என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.” அறிவு புத்தகத்தில் பக்கம் 136-க்கு திருப்பி பாரா 17-ன் முதல் வாக்கியத்தை வாசியுங்கள். பாராக்கள் 17, 18-ல் உள்ள குறிப்புகளை சிந்தியுங்கள்.