கடவுளின் இரக்கத்திற்கு நன்றி தெரிவித்தல்
1 அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பு கிறிஸ்தவம் பரவுவதை கடுமையாய் எதிர்த்தார். ஆனாலும், அறியாமையினால் அவ்வாறு நடந்துகொண்டதால் அவர் இரக்கம் பெற்றார். யெகோவா தகுதியற்ற தயவை காட்டினார்; பிரசங்கிக்கும் பொறுப்பை பவுலிடம் ஒப்படைத்தார். அந்த நியமிப்பை அவர் பொக்கிஷமாக போற்றினார். (அப். 26:9-18; 1 தீ. 1:12-14) யெகோவாவின் இரக்கத்திற்கான நன்றியுணர்வே ஊழியத்தை நிறைவேற்றுவதில் சுயதியாகம் செய்ய பவுலைத் தூண்டியது.—2 கொ. 12:15.
2 கடவுளின் இரக்கத்தாலேயே நமக்கும் ஊழியம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. (2 கொ. 4:1) பவுலைப் போலவே நாமும் கடவுளின் இரக்கத்திற்கு நம் நன்றியை செயலில் காட்டலாம். எவ்வாறெனில், ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய முழுமூச்சுடன் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் காட்டலாம். இதற்கு ஒரு வழி, பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்துவதாகும்.
3 பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்: பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க ஒரு வழி, பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்துவதாகும். நம் பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவர்களை தவறாமல் போய் சந்திப்பதால், அவர்களது கவலைகளை நம்மால் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள முடிகிறது. தக்க சமயத்தில் ஒரு பத்திரிகையிலுள்ள ஏதாவது ஒரு கட்டுரை, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து பைபிள் படிப்பு நடத்தும் ஏற்பாட்டைப் பற்றி அவர்களிடம் சொல்ல வழி திறக்கலாம். பத்திரிகையை கொடுப்பதற்காக வீட்டுக்காரரை அடுத்தடுத்து சந்திக்கையில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து தொடர்ந்து கலந்துரையாட வாய்ப்பு கிடைக்கலாம்.
4 ஜெபமும் முயற்சியும் தேவை: நம் பிரசங்க வேலைக்கு ஜெபமும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். ஒரு பயனியர் சகோதரி, ஒரே ஒரு பைபிள் படிப்பு மட்டும் நடத்தி வந்தார்; தனக்கு இன்னும் நிறைய பைபிள் படிப்புகளை தந்து ஆசீர்வதிக்குமாறு யெகோவாவிடம் ஜெபித்தார். தன் ஜெபங்களுக்கு இசைவாகவும் செயல்பட்டார். தன் ஊழியத்தைப் பற்றி ஆழ்ந்து யோசித்தார்; மறுசந்திப்புகள் செய்கையில் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி சொல்லாதது அப்போதுதான் அவருக்கு உறைத்தது. பின்னர் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி மறுசந்திப்பில் சொல்ல ஆரம்பித்தார், சீக்கிரத்தில் இன்னும் இரண்டு பைபிள் படிப்புகள் அவருக்கு கிடைத்தன.
5 “தேவனுடைய கிருபையின் [“தகுதியற்ற தயவின்,” NW] சுவிசேஷத்தை” அறிவிப்பதில் பங்கு கொள்வது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமல்லவா? (அப். 20:24) யெகோவாவின் தகுதியற்ற தயவிலிருந்து மற்றவர்கள் நன்மையடைய விடாமுயற்சியுடன் உதவுவதற்கு கடவுளின் இரக்கத்திற்கான நம் நன்றியுணர்வு நம்மைத் தூண்டுவதாக!