திருத்தமான அறிக்கைக்கு நீங்கள் உதவுகிறீர்களா?
1 அநேக பைபிள் பதிவுகளில் திட்டவட்டமான எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன, அவை நடந்த சம்பவங்களைத் தெள்ளத் தெளிவாக கண்முன் நிறுத்துவதற்கு உதவியாக உள்ளன. உதாரணமாக, கிதியோன் வெறும் 300 பேருடன் மீதியானியரின் பாளயத்தை முறியடித்தார். (நியா. 7:7) யெகோவாவின் தூதன் 1,85,000 அசீரிய வீரர்களை கொன்றார். (2 இரா. 19:35) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று சுமார் 3,000 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள், அதன்பின் மளமளவென்று விசுவாசிகளின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆக அதிகரித்தது. (அப். 2:41; 4:4) இவற்றிலிருந்து, முழுமையான, திருத்தமான பதிவை அளிப்பதற்கு கடவுளுடைய பூர்வ கால ஊழியர்கள் பெரும் முயற்சி எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது.
2 ஒவ்வொரு மாதமும் நம் வெளி ஊழியத்தை அறிக்கை செய்யும்படி யெகோவாவின் அமைப்பு நமக்கு அறிவுரை கொடுக்கிறது. இந்த ஏற்பாட்டில் உண்மையுடன் ஒத்துழைப்பது பிரசங்க வேலையை பயனுள்ள விதத்தில் மேற்பார்வை செய்ய உதவும். ஊழியத்தில் எந்த அம்சத்திற்கு கவனம் செலுத்த வேண்டும் அல்லது பிராந்தியத்தில் எந்த பாகத்திற்கு அதிக வேலையாட்கள் தேவை ஆகியவற்றை அறிக்கைகள் வெளிப்படுத்தலாம். சபையில் யாரால் இன்னும் அதிகளவு ஊழியம் செய்ய முடியும், யாருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது போன்றவற்றை கண்டறிய இந்த வெளி ஊழிய அறிக்கைகள் மூப்பர்களுக்கு உதவுகின்றன. ராஜ்ய பிரசங்க வேலையின் முன்னேற்றத்தைப் பற்றிய அறிக்கைகள் அனைவருக்கும் உற்சாகத்தை அளிக்கின்றன. திருத்தமான அறிக்கையைப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் பங்கை செவ்வனே செய்கிறீர்களா?
3 உங்கள் தனிப்பட்ட பொறுப்பு: மாத இறுதியில் ஊழியத்தில் செலவிட்ட மணிநேரம் முதலானவற்றை நினைவுபடுத்திப் பார்க்க கஷ்டமாய் இருக்கிறதா? அப்படியெனில் வெளி ஊழியத்தில் ஒவ்வொரு முறை கலந்துகொள்ளும் போதும் அவற்றை ஏன் நீங்கள் குறித்து வைக்கக்கூடாது? இதற்காக சிலர் காலண்டரை அல்லது டைரியை உபயோகிக்கிறார்கள். சிலர் வெளி ஊழிய அறிக்கை படிவம் ஒன்றை வைத்துக் கொள்கிறார்கள். மாத இறுதியில் மறக்காமல் அறிக்கையை உங்கள் புத்தகப் படிப்பு கண்காணியிடம் கொடுங்கள். அல்லது, நீங்கள் விருப்பப்பட்டால் ராஜ்ய மன்றத்திலுள்ள அறிக்கை பெட்டியில் உங்கள் அறிக்கையைப் போடலாம். அறிக்கையை சமர்ப்பிக்க மறந்துபோய்விட்டால் உங்கள் புத்தகப் படிப்பு கண்காணி வந்து கேட்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக நீங்களே அவரிடம் அதைக் கொடுங்கள். உங்கள் ஊழியத்தை தவறாமல் அறிக்கை செய்வது, யெகோவாவின் ஏற்பாட்டுக்கு மரியாதை காட்டுவதையும், அறிக்கைகளை சேகரித்து, தொகுக்கும்படி நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்களிடம் அன்புடன் கரிசனை காட்டுவதையும் சொல்லாமல் சொல்கிறது.—லூக். 16:10.
4 புத்தகப் படிப்பு கண்காணியின் பங்கு: புத்தகப் படிப்பு கண்காணி, விழிப்பும் அக்கறையுமுள்ளவராக மாதம் முழுவதும் தொகுதியினரின் ஊழியத்தில் ஆர்வம் காட்டுகிறார். (நீதி. 27:23) ஒவ்வொரு பிரஸ்தாபியும் தவறாமலும், அர்த்தமுள்ள விதத்திலும், சந்தோஷத்துடனும் ஊழியத்தில் பங்குகொள்கிறாரா என்பதை அவர் அறிந்துகொள்கிறார்; மாதம் முழுவதும் யாரேனும் ஊழியத்துக்கு வராமலிருந்தால் அவருக்கு உடனடியாக உதவியளிக்கிறார். உற்சாகப்படுத்திப் பேசுவது, நடைமுறையான ஆலோசனை அளிப்பது, தன்னுடன் சேர்ந்து ஊழியம் செய்ய வரும்படி மற்றவர்களை அழைப்பது போன்றவையே பெரும்பாலும் போதுமானதாக இருக்கிறது.
5 அடுத்த மாதம் ஆறாம் தேதியன்று கிளை அலுவலகத்துக்கு திருத்தமான சபை அறிக்கையை செயலர் சமர்ப்பிக்க வேண்டும்; அதற்கு வசதியாக தொகுதியிலுள்ள அனைவரும் பொறுப்போடு தங்கள் ஊழிய அறிக்கையை கொடுத்துவிட்டார்களா என்பதை மாத இறுதியில் புத்தகப் படிப்பு கண்காணி உறுதிப்படுத்திக் கொள்கிறார். மாத இறுதி நெருங்குகையில் தொகுதியிலுள்ளவர்களுக்கு ஞாபகப்படுத்துவதும், புத்தகப் படிப்பு மையத்தில் அறிக்கை படிவங்கள் போதியளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் அவரது வேலையை எளிதாக்கலாம். யாரேனும் அறிக்கை செய்ய மறந்துவிட்டால் அவருக்கு தேவையான நினைவூட்டுதலையும் உற்சாகமூட்டுதலையும் அவர் அளிக்கலாம்.
6 உரிய நேரத்தில் நம் வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிப்பது பிராந்தியத்தில் எந்தளவு வேலை செய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றி திருத்தமான அறிக்கையைத் தொகுக்க உதவும். ஒவ்வொரு மாதமும் உங்கள் அறிக்கையை தவறாமல் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பங்கை செவ்வனே செய்வீர்களா?