பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்துகிறீர்களா?
1 பயன்படுத்தும்படி சொல்லப்பட்ட பிரசுரங்களில் ஒன்றை உபயோகித்து, ஆர்வம் காட்டுகிறவருடன் தவறாமலும், கிரமமாகவும் பைபிள் கலந்தாலோசிப்புகளை நடத்தினால், அது சுருக்கமானதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பைபிள் படிப்பை நடத்துகிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா? வாசலில் வைத்தோ, தொலைபேசியிலோ எப்படி கலந்தாலோசித்தாலும் அது பைபிள் படிப்புதான். அப்படிப்பட்ட படிப்பை தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்தி மே, ஜூன் மாதங்களில் ஆரம்பிக்க ஏன் விசேஷ முயற்சி எடுக்கக்கூடாது?
2 வெற்றி பெறுவதற்கு தயாரியுங்கள்: தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிக்கையில் எதை கலந்தாலோசிக்கப் போகிறீர்கள் என்பதை மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மறுசந்திப்பு செய்கையில் முதல் சந்திப்பில் கலந்தாலோசித்த விஷயத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ‘கலந்தாலோசிப்பு தொடருவதற்கும் அது பைபிள் படிப்பாக மாறுவதற்கும் சிற்றேட்டில் எந்த பாராக்களிடம் நான் முக்கியமாக கவனத்தை திருப்ப வேண்டும்?’ என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் இளைஞர், பெரியவர், ஆண், பெண் ஆகியோரிடம் என்ன பொருள்களைப் பற்றி பேசுவது ஆர்வத்தைத் தூண்டும் என யோசியுங்கள். சிற்றேட்டின் தலைப்புகளை கண்ணோட்டம் விட்டு ஆர்வத்தைத் தூண்டும் பொருளைத் தேர்ந்தெடுங்கள். எப்படி பேசுவது என தீர்மானித்த பின்பு அதைப் பல முறை பயிற்சி செய்து பாருங்கள். இது வெற்றிக்கு ஒரு வழியாகும்.
3 ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில், “தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிப்பதற்கான ஆலோசனைகள்” பகுதியில் எட்டு ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிற்றேட்டை உபயோகித்து படிப்புகளை ஆரம்பிக்கும் விதத்தை “நேரடி அணுகுமுறை” என்ற பெட்டி காட்டுகிறது. முதல் ஆலோசனையை நீங்கள் இவ்வாறு உபயோகிக்கலாம்:
◼ “சில நிமிடங்களுக்குள்ளாக ஒரு முக்கிய பைபிள் கேள்விக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியுமா? உதாரணமாக, கிறிஸ்தவம் என சொல்லிக் கொள்ளும் பல மதங்கள் இன்று இருப்பது ஏன்? எப்போதாவது இதைக் குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?” வீட்டுக்காரர் பதில் சொன்ன பின்பு, பாடம் 13-க்குத் திருப்பி முதல் இரண்டு பாராக்களை கலந்தாலோசியுங்கள். நேரம் இருந்தால் ஓரிரு வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் கடைசி கேள்வியை வாசித்துவிட்டு இவ்வாறு சொல்லுங்கள்: “உண்மை மதத்தை அடையாளம் கண்டுகொள்ள உதவும் ஐந்து குறிப்புகளை மீதமுள்ள பாடம் சிறப்பித்துக் காட்டுகிறது. மீண்டும் வந்து இவற்றை உங்களுடன் கலந்தாலோசிக்க விரும்புகிறேன்.”
4 விடாமுயற்சியுடன் இருங்கள்: தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு நடத்தும் முறையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து காட்ட தவறாதீர்கள். யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கு ஜெபியுங்கள். (மத். 21:22) விடாமுயற்சியுடன் ஊழியத்தில் ஈடுபடுகையில் நற்செய்திக்கு செவிசாய்க்கும் ஒருவருக்கு உதவும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்!