பூமியில் வாழ்பவர்களிலேயே அதிக சந்தோஷமானவர்கள்
1 “யெகோவாவை கடவுளாக கொண்டிருக்கிற ஜனம் சந்தோஷமுள்ளது!” (சங். 144:15, NW) இந்த வார்த்தைகள், பூமியில் வாழ்பவர்களிலேயே அதிக சந்தோஷமானவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என காட்டுகின்றன. ஒரே உண்மையான, ஜீவனுள்ள கடவுளாகிய யெகோவாவை சேவிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி வேறில்லை. அவர் ‘நித்தியானந்த தேவன்’ என்பதால் அவரை வணங்குவோரும் அவருடைய ஆனந்தத்தை வெளிக்காட்டுகின்றனர். (1 தீ. 1:11) நம்மை இவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாக இருக்க செய்யும் நம் வணக்கத்தின் சில அம்சங்கள் யாவை?
2 சந்தோஷத்திற்கான காரணங்கள்: நம் “ஆவிக்குரிய தேவையை குறித்து உணர்வுள்ளவர்க”ளாக இருப்பது சந்தோஷத்தை தரும் என இயேசு உறுதியளித்தார். (மத். 5:3, NW) தவறாமல் பைபிளை வாசிப்பதும், எல்லா கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வதும் அந்த தேவையை பூர்த்தி செய்கின்றன. கடவுளுடைய வார்த்தை பற்றிய சத்தியத்தை கற்றுக்கொண்டதால் மத போலித்தனத்திலிருந்தும் தவறிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. (யோவா. 8:32) மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கும் பைபிள் நமக்கு கற்றுத் தந்துள்ளது. (ஏசா. 48:17) இதன் காரணமாக, சந்தோஷமான சகோதர கூட்டுறவில் அருமையான கிறிஸ்தவ நட்புறவை அனுபவிக்கிறோம்.—1 தெ. 2:19, 20; 1 பே. 2:17.
3 கடவுளுடைய உயர்ந்த ஒழுக்க தராதரங்களுக்கு கீழ்ப்படிகையில் பெரும் திருப்தி அடைகிறோம்; ஏனெனில், இது நமக்கு பாதுகாப்பளிப்பதோடு, யெகோவாவையும் சந்தோஷப்படுத்துகிறது என அறிந்திருக்கிறோம். (நீதி. 27:11) செய்தித்தாள் நிருபர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பான தராதரங்களை பின்பற்றுகிறபோதிலும் அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக தெரியவில்லை. அதற்கு நேர்மாறாக, [அவர்கள் மத்தியிலுள்ள] இளையோரும் முதியோரும் அளவுக்கதிக சந்தோஷமாகவும், சமநிலையாகவும் இருப்பதாகவே தோன்றுகிறது.” நாம் அனுபவிக்கும் சந்தோஷத்தை மற்றவர்களும் பெற நாம் எவ்வாறு அவர்களுக்கு உதவலாம்?
4 சந்தோஷத்தை காண மற்றவர்களுக்கு உதவுங்கள்: இந்த உலகில் மருந்துக்குக்கூட சந்தோஷமில்லை; பொதுவாகவே, எதிர்காலத்தை பற்றி மக்களுக்கு நம்பிக்கையற்ற மனநிலை உள்ளது. நமக்கோ ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையுள்ளது, சீக்கிரத்தில் துயரங்கள் எல்லாம் கடந்தகால கதையாகிவிடும் என்பதை அறிந்திருக்கிறோம். (வெளி. 21:3, 4) ஆகவே, ஊழியத்தில் வைராக்கியத்தோடு பங்குகொள்கிறோம்; யெகோவாவை பற்றிய நமது நம்பிக்கையை நேர்மை இருதயமுள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள முயலுகிறோம்.—எசே. 9:4.
5 பயனியர் சகோதரி ஒருவர் இவ்வாறு கூறினார்: “யெகோவாவையும் அவருடைய சத்தியத்தையும் அறியும்படி மக்களுக்கு உதவுவதைவிட அதிக திருப்திகரமானது எதுவும் இல்லை.” இன்னும் அநேகர் பைபிள் படிப்புகளை ஏற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்த நம்மாலான எல்லாவற்றையும் செய்வோமாக. யெகோவாவை சேவிப்பதும் அவரை சேவிக்க மற்றவர்களுக்கு உதவ நம்மையே அர்ப்பணிப்பதும் அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது.—அப். 20:35.