பண்டிகை காலத்தை யெகோவாவை கனப்படுத்த பயன்படுத்துங்கள்
1 ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையுள்ள மாதங்களின்போது, இந்திய பண்டிகை காலத்திற்கு மழைகாலம் வழிவிடுகிறது. தீபாவளி, தசரா, விநாயகர் சதுர்த்தி, ஓணம், பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களுக்கு இந்நாட்கள் அனைத்துமே இனிய நாட்களாகும்; ஆனால் இவற்றைக் கொண்டாடாதவர்களுக்கும் அவை விரும்பி வரவேற்கத்தக்க விடுமுறை நாட்களே. பண்டிகை காலத்தின்போது கிடைக்கும் கூடுதலான விடுமுறை நாட்களை எவ்வாறு கழிக்க திட்டமிடுகிறீர்கள்?
2 கூடுதல் விடுமுறை நாட்களை தேவராஜ்ய வேலைக்கு பயன்படுத்துங்கள்: இப்படிப்பட்ட காலங்களில் வேலைபார்க்கும் இடத்தில் நம்மில் அநேகருக்கு விடுமுறை விடப்படும்; அவற்றில் சில நாட்களை நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு செலவிடுவதைக் காட்டிலும் வேறென்ன சிறந்த வழி இருக்க முடியும்! குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் ஒன்றாக சேர்ந்திருப்பர்; அப்போது மகிழ்ச்சியான மனநிலையிலும் இருப்பர்; ஆகவே அப்படிப்பட்ட விடுமுறை நாட்களின்போது சாட்சி கொடுப்பது மிகவும் பலன்தரத்தக்க, மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக அமையலாம்.
3 இந்த விடுமுறை நாட்களை நன்கு பயன்படுத்திக்கொள்வதற்கு, விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளை செய்வதற்கு மூப்பர்கள் கவனம் செலுத்தலாம். அப்போது, குடும்பத் தலைவர்கள் தங்கள் முழு குடும்பத்தாரோடும் இந்த விடுமுறை ஊழிய ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடலாம். ஒருவேளை கொஞ்சம் கூடுதலாக முயற்சி எடுத்தால் நீங்கள் துணைப் பயனியராகவும்கூட சேவை செய்யலாம். களைப்பாக இருந்த சமயத்திலும், இயேசு அப்படிப்பட்ட பிரசங்க வேலையை புத்துணர்ச்சி அளிக்கும் நல்ல உணவாக கண்டார். (யோவான் 4:34) ஆகவே மற்றவர்களுக்கு உதவ நம் சொந்த நேரத்தை பயன்படுத்துகையில் நமக்கும் அதே அனுபவம் கிடைப்பது நிச்சயம்.
4 கரிசனை காட்டுங்கள், பகுத்துணர்வை பயன்படுத்துங்கள்: மற்றவர்களுக்கான அன்பு, அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் குறித்து கரிசனையுள்ளவர்களாய் இருக்க நமக்கு உதவும். அப்படிப்பட்ட பண்டிகை காலங்களில் பொதுவாக மக்கள் விருந்தினரை உபசரிப்பதிலோ விசேஷ உணவு வகைகளை தயாரிப்பதிலோ அதிக மும்முரமாய் இருப்பார்கள். இதைப் பகுத்துணர்ந்து, சுருக்கமாக பேச்சை முடித்துக்கொள்ள கிறிஸ்தவ பண்பு நம்மைத் தூண்ட வேண்டும். ஆனாலும், மற்றவர்கள் ஆற அமர பொழுதை கழிப்பதையும் ஆன்மீக விஷயங்களை பேச விரும்புவதையும் நீங்கள் காணலாம். உங்கள் பங்கில் சரியாக முடிவெடுத்தீர்களென்றால், இன்னும் பேசுவதா வேண்டாமா என்பதை நன்றாக தீர்மானிப்பீர்கள். அப்படியென்றால் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“இன்றைக்கு லீவு நாளாக இருப்பதனால், எல்லாரும் சந்தோஷமாக இருப்பதாக தெரிகிறது! சிலருக்கு பண்டிகை கொண்டாடுவதில் சந்தோஷம்; மற்றவர்களுக்கோ லீவு கிடைத்ததில் சந்தோஷம். இதுபோன்ற ஒரு நாளில் குடும்பத்தார் அனைவரும் சாவகாசமாக இருக்கிறார்கள்; ஒன்றுசேர்ந்து ஐக்கியமாக வேலை செய்கிறார்கள். இவ்வாறே வருடத்தில் எல்லா நாட்களும் கவலையில்லாமல், எங்கும் சந்தோஷம் பொங்கினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? [பதில் சொல்லட்டும்.] நீதிமான்கள் அவ்வாறு வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா?” பதில் சொல்ல விடுங்கள். அவர் சொல்வதை ஒப்புக்கொண்ட பிறகு, சங்கீதம் 37:11, 29-ஐ வாசித்துவிட்டு இவ்வாறு சொல்லுங்கள்: “இந்தப் பூமியில் அனைவரும் எந்நாளும் சந்தோஷமாய் வாழும் காலத்தைப் பற்றி அதிகமாய் சிந்திக்க எல்லாரையும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்.” அறிவு புத்தகத்தில் 4, 5 பக்கங்களில் உள்ள படத்தை காட்டுங்கள். முதல் அதிகாரத்திலுள்ள விஷயங்களை கலந்து பேச திரும்ப வரப்போவதாக சொல்லுங்கள்.
5 வீட்டுக்காரர்கள் நம்மிடம் பண்டிகை வாழ்த்துக்களை அல்லது சுபவார்த்தைகளை சொல்வது நிச்சயம். மனதில் வைக்க வேண்டிய ஒரு முக்கியமான நியமம் இதுவே: இவ்வுலகின் மத சம்பந்தமான பண்டிகைகளிலோ அவர்களது கொண்டாட்டங்களிலோ நாம் கலந்துகொள்வதில்லை; அதைப் போலவே திருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வதில்லை. (2 கொ. 6:14-18) என்றாலும், நல்லெண்ணத்தோடு அவ்வாறு சொல்பவரை அனாவசியமாக புண்படுத்த நாம் விரும்புவதில்லை. ஒருவேளை நம்மிடம் வாழ்த்து தெரிவிக்கையில், பதிலுக்கு வெறுமென “நன்றி” என்று சொல்லலாம்; அல்லது கண்ணியமாக கைகூப்பி கனிவான புன்னகையுடன், “வணக்கம்” என்றும்கூட சொல்லலாம். இச்சூழ்நிலையை வேறொரு விதத்திலும் கையாளலாம்; அதாவது, நாம் சொல்வதை செவிகொடுத்து கேட்ட அவர்களது கனிவான குணத்துக்கு நன்றி தெரிவிக்கலாம். இவ்வாறு, மத சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்பதுடன், இணங்கிச் செல்வதையும் தவிர்க்கிறோம்; அதே சமயத்தில் நம்மிடம் அவர்கள் காட்டும் சிநேகத்தையும் காத்துக்கொள்கிறோம்.
6 அவர்கள் பிரசாதம் கொடுத்தால் என்ன செய்வது? ‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை’ அவரவர் மனசாட்சிப்படி புசிப்பதாக நாம் கருத வேண்டுமா? (1 கொ. 10:25-30) அப்படியல்ல, பொதுவாக விருந்தினருக்கும் வீட்டிற்கு வருபவர்களுக்கும் பிரசாதம் தருவது அன்று செய்யப்பட்ட பூஜையின் பாகமாகவே இருக்கிறது; ஆகவே அதை வாங்கி சாப்பிடுபவர்கள் அந்த வணக்கத்தில் கலந்துகொள்வதாகவே அர்த்தம். வீட்டுக்காரர் அவ்வாறு தருவதாக நமக்குத் தெரியவந்தால், தெள்ளத்தெளிவாக சாதுரியத்துடன் பின்வருமாறு பதில் சொல்லலாம்: “ரொம்ப நன்றி. உங்கள் கரிசனையை நான் மெச்சுகிறேன்; ஆனால் நான் பிரசாதத்தை வாங்குவதில்லை.” (அப். 15:28, 29) என்றாலும் பண்டிகை நாட்களில் வீட்டுக்கு வரும் எல்லாருக்குமே வழக்கமாக தருவதுபோல் இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை வீட்டுக்காரர் உங்களுக்கும் தரலாம். இப்பழக்கங்கள், பூஜையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை அல்ல; எனவே அநேகர் சுத்தமான மனசாட்சியுடன் இப்படிப்பட்ட பொருட்களை ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொள்கிறார்கள்.
7 யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே பண்டிகை நாட்களில் வீட்டுக்கு வீடு செல்வதில்லை. வெவ்வேறு குழுவினர் நம் வீடுகளுக்கு வந்து உள்ளூர் திருநாளுக்கென அல்லது பூஜைக்கென நன்கொடை கேட்பது ரொம்ப சகஜம். அதைப் போலவே பள்ளிகளிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் கேட்கலாம். நாம் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் இணங்கிச் செல்வது, அவர்கள் வழிபடும் சாமியை நாமும் போற்றுகிறோம் என்று காட்டலாம்; ஆகவே முன்கூட்டியே இவ்விஷயத்தைப் பற்றி நாம் உறுதியாக தீர்மானிப்பது அவசியம். இச்சந்தர்ப்பத்திலும், உறுதியாக அதே சமயத்தில் சாதுரியமாக பதில் சொல்வது மிகவும் நல்லது. நம் கடவுளை மறுதலித்து, வணக்கத்தை விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்வதாக இந்த விஷயத்தை நாம் கருதுவதால், அப்படிப்பட்ட நன்கொடைகளை கொடுப்பதைப் பற்றி எண்ணிப்பார்க்கவும் முடியாது என்பதை நன்கு தெரிந்தெடுத்த வார்த்தைகளால் அழுத்தமாக தெரிவிக்கலாம்.
8 பண்டிகைகளைக் கொண்டாடும் அநேகர், அவற்றால் அந்த வருடம் முழுவதும் வளம் கொழிக்கும் என எதிர்பார்க்கின்றனர். இந்தக் காரணத்தினால், சுப வார்த்தைகள் சொல்லி, புண்ணிய செயல்கள் செய்து அந்த புதிய வருடத்தை ஆரம்பிப்பதில் குறியாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட நாட்களில் அவர்களிடம் செல்லும் நாம், “மரணம்,” “நோய்,” “வேதனை” போன்ற எதிர்மறையான வார்த்தைகளை பேசாதிருப்பது கரிசனை காட்டும் செயலாகும். அதற்குப் பதிலாக “நல்ல ஆரோக்கியம்,” “ஓர் புதிய உலகில் நிரந்தர சமாதானமும் செழுமையும்” போன்ற நல்ல விஷயங்களைப் பற்றி பேச வேண்டும். அந்நாளில் அப்படிப்பட்ட நல்ல விஷயங்களை பேசினால் அநேகர் சந்தோஷப்படுவர்.
9 யெகோவாவை கனப்படுத்த வேண்டும் என்ற நம் விருப்பம், பண்டிகை நாட்களின்போது இன்னும் அதிகம் செய்ய நம்மை தூண்டட்டும். மக்கள் செவிகொடுக்க வேண்டுமென்பதே நம் விருப்பம்; எனவே சாதுரியத்துடன் இருங்கள், அதே சமயத்தில் நம் விசுவாசத்தை விட்டுக்கொடுத்து விடாதபடி மனதிற்குள் தீர்மானத்துடன் இருங்கள். வரவிருக்கும் புதிய உலகில் நமக்காக யெகோவா ஆயத்தப்படுத்தியிருக்கும் நித்திய மகிழ்ச்சி பொங்கும் பண்டிகை காலத்திற்கு மற்றவர்களை நாம் வழிநடத்துவோமாக.—சக. 14:16.