“நியூ மிலனியம் —உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?”
1 உலகிலுள்ள எல்லோருடைய மனங்களிலும் இருக்கும் கேள்வி இதுதான். நூற்றாண்டுகளினூடே மனிதகுலம் அநேகத்தை சாதித்திருக்கிறபோதிலும், காலங்காலமாக மனிதர்களை ஆட்டிப் படைத்துவரும் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன என்பதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். (யோபு 14:1; சங். 90:10) மனிதகுலத்திற்கு நிம்மதி எங்கிருந்து கிடைக்கும்?
2 அந்த கேள்விக்கான பதிலை மற்றவர்களுக்கு தெரிவிக்க, வரும் நவம்பர் மாதம் விசேஷ வாய்ப்புகளை அளிக்கும். எப்படி? ராஜ்ய செய்தி எண் 36-ஐ எல்லோருக்கும் விநியோகிப்பதன் மூலமாக. அதன் தலைப்பு “நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?” நவம்பர் 1, புதன்கிழமை முதற்கொண்டு இந்த ராஜ்ய செய்தி எண். 36-ஐ விநியோகிப்பதில் மும்முரமாக ஈடுபடுவோம். வார நாட்களில் ராஜ்ய செய்தி எண் 36-ஐ அளிப்பதில் கவனம் செலுத்துவோம். வாரயிறுதி நாட்களில் சமீபத்திய பத்திரிகைகளுடன் இதை அளிப்போம்.
3 நீங்கள் முழுமையாக பங்குகொள்வீர்களா? மூப்பர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் பயனியர்கள் பிரசங்க வேலையில் எப்போதும் முன்னணியில் இருப்பதால், அவர்கள் இந்த விசேஷ அளிப்பில் முன்மாதிரிகளாக இருப்பர். அநேக பிரஸ்தாபிகள் நவம்பர் மாதத்தின்போது துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்காக தங்கள் அட்டவணையில் மாற்றங்களை செய்துள்ளனர். மற்றவர்கள் ஊழியத்தில் முன்பைவிட அதிக நேரத்தை செலவிட திட்டமிடுகின்றனர்.
4 சபை புத்தகப் படிப்பு நடத்துனர்கள், தங்கள் புத்தகப் படிப்பிலுள்ள ஒவ்வொருவரையும் இந்த ராஜ்ய செய்தி எண் 36-ஐ விநியோகிக்கும் வேலையில் முழுமையாக பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்தலாம். சில பிரஸ்தாபிகள் செயலற்றுப் போயிருக்கலாம். அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதை கண்டறிய மூப்பர்கள் அவர்களை சென்று சந்திக்கலாம். அந்த மாத ஊழியத்தின்போது ஒவ்வொரு செயலற்ற பிரஸ்தாபியுடனும் ஒரு அனுபவமிக்க பிரஸ்தாபி சேர்ந்து வேலை செய்யும்படி ஏற்பாடு செய்யலாம். ராஜ்ய செய்தி எண் 36-ஐ அளிப்பதற்கான எளிய அறிமுகங்களே அவரைத் தூண்டி மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட வழிநடத்தும்.
5 உங்கள் பைபிள் மாணாக்கர் அறிவு புத்தகத்தை படித்து முடிக்கும் தறுவாயிலிருக்கலாம். அவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆகும் தகுதிகளை பெற்றிருந்தால், ஊழியத்தில் அடியெடுத்து வைக்க இதுவே அருமையான சந்தர்ப்பம். இளம் பிள்ளைகளும் இந்த வேலையில் நன்றாக பங்கெடுக்கலாம்.
6 தேவையானதெல்லாம் ஒரு எளிய அறிமுகமே. நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இந்த [இடத்தின் பெயர்]-ல் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் இந்த முக்கியமான செய்தியை விநியோகிப்பதற்காக, நான் என் நேரத்தை மனமுவந்து செலவிடுகிறேன். இதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து வாசியுங்கள்.” ராஜ்ய செய்தி எண் 36-ஐ விநியோகிக்கும்போது பையையோ ப்ரீஃப்கேஸையோ எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
7 நன்கு திட்டமிட்ட வெளி ஊழியக் கூட்டங்கள்: ஊழிய ஏற்பாடுகள் எல்லாம் வசதியாகவும் நடைமுறையானதாகவும் இருக்கும்படி மூப்பர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த அளிப்பு வேலையில் எல்லோரும் முழுமையாக கலந்துகொள்ளும் விதத்தில் தேவையான அளவு வீட்டுக்கு வீடு மற்றும் வியாபார பிராந்தியங்கள் இருக்கின்றனவா என்பதை ஊழியக் கண்காணி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். முடிந்தபோதெல்லாம், எல்லா நாட்களும், மாலை நேரங்களில்கூட வெளி ஊழியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகள், ஷிப்ட் டியூட்டி செய்பவர்கள் போன்ற மற்றவர்களும் பலனடைய சாயங்கால வேளையிலும் ஏற்பாடுகள் செய்யலாம்.
8 வீட்டில் இல்லாதவர்கள்: எத்தனை வீட்டுக்காரரை சந்தித்து சாட்சி கொடுக்க முடியுமோ அத்தனை பேரையும் சந்திப்பதுதான் நம் இலக்கு. நீங்கள் போகும்போது வீட்டில் யாரும் இல்லையென்றால், அதைக் குறித்துக்கொண்டு, வேறு நேரத்தில் சென்று சந்திக்கவும். விசேஷ அளிப்பின் கடைசி வாரம் வரையிலும் உங்களால் அந்த வீட்டில் யாரையும் சந்திக்க முடியவில்லை என்றால் அப்போது அவர்களுக்காக ராஜ்ய செய்தி எண். 36-ஐ அந்த வீட்டில் வைத்துவிட்டு வரலாம்; ஆனால் அவ்வாறு வைக்கப்பட்ட டிராக்ட், ரோட்டில் போவோர் வருவோர் கண்ணில் படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். ஊழியம் செய்வது கிராமப்புறங்களாய் இருந்தாலோ, விசேஷ அளிப்பின்போது மீண்டும் செல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரிய பிராந்தியமாய் இருந்தாலோ, நீங்கள் சந்திக்கும் வீட்டில் யாரும் இல்லையென்றால், அப்போது முதல் சந்திப்பிலேயே ராஜ்ய செய்தி எண் 36-ஐ அங்கு வைத்துவிட்டு வரும்படி சபை மூப்பர்கள் சொல்லலாம்.
9 சுறுசுறுப்பாக செயல்படுவோம்: விசேஷ அளிப்பு முடிவதற்குள்ளாகவே தங்கள் பிராந்தியத்தை முடிக்க சபை கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் பிராந்தியம் பெரியதாக இருந்தால், எங்கு நடைமுறையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமோ அங்கு சில பிரஸ்தாபிகள் தனியாக வேலை செய்யலாம். எவ்வளவு ஆர்வமுள்ளோரை நம்மால் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்திக்க இந்த ஏற்பாடு நமக்கு உதவும். ஆர்வம் காட்டிய அனைவரைப் பற்றிய முழு விவரத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ள நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.
10 இந்த விசேஷ அளிப்பின்போது சபைக்கு கூடுதலாக எவ்வளவு பத்திரிகைகள் தேவைப்படும் என்பதை மூப்பர்கள் முன்னதாகவே கணக்கிட்டு அதற்கேற்ப ஆர்டர் செய்ய வேண்டும். ஒவ்வொரு சபைக்கும் தேவையான அளவு ராஜ்ய செய்தி எண் 36-ஐ சங்கமே அனுப்பி வைக்கும் என்பதால் அதை ஆர்டர் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. விசேஷ, ஒழுங்கான மற்றும் துணைப் பயனியர்களுக்கு தலா 300 பிரதிகளும் மற்ற சபை பிரஸ்தாபிகளுக்கு தலா 100 பிரதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விசேஷ அளிப்பில் மும்முரமாக ஈடுபட தயாராகவும் ஆவலாகவும் இருக்கிறீர்களா? எதிர்காலத்தில் கடவுள் என்ன வைத்திருக்கிறார் என்பதை நம் அயலகத்தாருக்கு அறிவிக்கும் என்னே அருமையான சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்!