“உங்கள் முயற்சிகள் வீணாவதில்லை”
1 புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகள் அல்லவா இவை! யெகோவாவின் சேவையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒன்றும் வீண்போவதில்லை. (1 கொ. 15:58) இன்றைய உலகத்தாரோ எதிர்மாறாக இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்பதற்காக எந்தளவுக்கு கடுமையாக உழைக்கின்றனர் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் வருடக்கணக்கில் உயர் கல்வி படிக்கலாம் அல்லது அதிக பணம் சம்பாதித்து பிரபலமாவதற்கு வேலை வேலை என ஓடாய் தேயலாம். இருப்பினும், “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” அவர்களை தாக்கும்போது, எந்த மதிப்புக்கும் புகழுக்கும் இவ்வளவு கஷ்டப்பட்டார்களோ, அதை பார்க்காமலேயே கண் மூடிவிடலாம். சொகுசான ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்த்தவர்கள் கனவிலும் நினைக்காத தாழ்வான நிலைக்கு தள்ளப்படலாம். அவர்களுடைய முயற்சிகளெல்லாம் “காற்றோடு சண்டைபோடுவது போன்று” இருக்கின்றன, அவை பலனேதுமின்றி மறைந்துவிடுகின்றன. (பிர. 1:14; 9:11, NW) அப்படியானால், ஈடிணையற்ற, நித்திய நன்மைகளை அள்ளி வழங்கும் வேலையில் நம்மால் முடிந்தளவுக்கு ஈடுபடுவது எவ்வளவு முக்கியம்!
2 உண்மையில் பலனளிக்கும் வேலை: இந்த பூமியில், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதே மிக முக்கியமான வேலை. மக்கள் கேட்டாலும்சரி கேட்காவிட்டாலும்சரி, செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலை இது. அதைச் செய்தால் பவுலைப் போல நம்மாலும் சொல்ல முடியும்: “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்.”—அப். 20:26, 27.
3 மக்கள் அந்த ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்கையில் கிடைக்கும் சந்தோஷத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! ஒரு இளம் பெண்ணின் பெரியம்மா இறந்துவிட்டார். அப்போது அவளுடைய மனதில் சில கேள்விகள் எழுந்தன: ‘என் பெரியம்மா எங்க போயிருக்கிறாங்க—பரலோகத்துக்கா நரகத்துக்கா?’ தன் சகோதரி ஏற்கெனவே தனக்குக் கற்றுக்கொடுத்திருந்த யெகோவா என்ற கடவுளுடைய பெயரை பயன்படுத்தி, தனக்கு உதவும்படி அவரிடம் ஜெபித்தாள். விரைவாகவே, பைபிளை படிக்க ஆரம்பித்தாள்; கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் வர துவங்கினாள். இது அவளுடைய வாழ்க்கைக்குப் புது அர்த்தத்தைக் கொடுத்தது. பிறகு தெரு கும்பல்களுடன் தனக்கிருந்த தொடர்பை அவள் முற்றிலும் துண்டித்துக்கொண்டாள். அதன் பின் அந்த இளம் பெண் புகைபிடிப்பது, போதைப் பொருள் உட்கொள்வது, திருடுவது போன்ற பழக்கங்களையெல்லாம் அடியோடு ஒழித்துவிட்டாள். “யெகோவாவிடம் எனக்கிருந்த அன்பே, அப்பேர்ப்பட்ட கீழ்த்தரமான வாழ்க்கையை விட்டு வெளிவர எனக்கு உதவியது. யெகோவா ஒருவரால் மட்டுமே எனக்கு கருணை காட்டவும் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையை தரவும் முடியும்” என ஒப்புக்கொண்டாள். இப்போது அவள் தன் வாழ்க்கையை, அற்ப விஷயங்களில் வீணாக்குவதில்லை.
4 மக்கள் உங்களுக்கு செவிசாய்க்காவிட்டாலும், நீங்கள் செய்யும் வேலை வீணாவதில்லை. யெகோவாவின் சாட்சிகள் தங்களை சந்தித்தார்கள் என்ற ஞாபகமாவது அவர்களுக்கு இருக்கும். அதுமட்டுமா, உங்களுடைய உத்தமம், உண்மைத்தன்மை, அன்பு ஆகியவை வெளிப்படையாக தெரிகிறது. இப்போது சொல்லுங்கள், கர்த்தருடைய வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணானவையா? இல்லவே இல்லை!