பரிசுத்த சேவையில் மகிழ்ச்சி காணுங்கள்
1 “சந்தோஷத்தோடே” திரும்பி வந்தனர். அவர்கள் இயேசுவின் 70 சீஷர்கள். நீண்ட பிரசங்க பயணத்திற்கு பின், இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டனர். அப்போது அவர்கள் அடைந்த சந்தோஷத்தை பைபிள் பதிவு விளக்குகிறது. கடவுளுடைய சித்தத்தை செய்வதில் மனநிறைவை அடைந்தனர். (லூக். 10:17) அவர்களைப் போலவே பரிசுத்த சேவையில் சந்தோஷத்தைக் காண எது உங்களுக்கு உதவும்?
2 சாதகமான மனநிலை: யெகோவாவின் மகத்தான நோக்கங்களை மக்களுக்கு சொல்லும் மகத்தான சிலாக்கியம் உங்களுக்கும் இருக்கிறது. இது கடவுள் கொடுத்தது. உங்களுடைய பிரசங்கத்தால், பொய் மதத்தின் பிடியிலிருந்தும் சீர்கேடான இந்த உலகத்தின் பழக்கங்களிலிருந்தும் ஒருவர் விடுதலையாவதற்கு நீங்கள் உதவலாம். சச்சரவுகள் நிறைந்த இந்த உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட உலகில் வாழும் நம்பிக்கையை ஜனங்களிடம் சொல்லலாம். ஏற்றுக்கொள்வோரின் இருதயத்தில் சத்தியத்தின் விதையை நீங்கள் வெற்றிகரமாக நடும்போது யெகோவா அடையும் சந்தோஷத்தை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! முழு மனதோடு ஊழியத்தை தொடருகையில் சந்தோஷம் நமதே. இந்த ஆவியின் கனி நம்மில் நிலைக்க கடவுளுடைய ஆவிக்காக ஜெபியுங்கள்.
3 நடைமுறை பயிற்சி: அன்று இயேசு தம்முடைய 70 சீஷர்களுக்குக் கொடுத்த நடைமுறையான அறிவுரையை இன்றைய ஊழியக் கூட்டத்திற்கு ஒப்பிடலாம். ஊழியத்தை திறம்பட செய்ய தேவையான பயிற்சியை அவர்களுக்கு கொடுத்தார். (லூக். 10:1-16) ஜனங்களை எப்படி அணுகுவது, பேச்சை எப்படி ஆரம்பிப்பது, வீட்டு பைபிள் படிப்புகளை எப்படி துவக்குவது, எப்படி நடத்துவது போன்றவற்றில் ஊழியக்கூட்டம் இன்று நமக்குப் பயிற்சி அளிக்கிறது. இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி, உங்கள் திறமைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். அப்போது, சரியாக செய்யவில்லையே என்ற மன உறுத்தலோ, தகுதியற்றவன் என்ற உணர்வோ உங்களுக்கு இருக்காது. அதற்கு பதிலாக நம்பிக்கையும் சந்தோஷமும் பெருகும்.
4 எதிர்காலத்தை நோக்கி: பரிசுத்த சேவையில் இயேசுவுக்கு அநேக இன்னல்கள் வந்தன. இருந்தாலும், அவை எல்லாவற்றையும் சந்தோஷத்தோடே சகித்தார். ஏன்? ஏனெனில், அவருக்கு கிடைக்கவிருந்த ஆசீர்வாதங்களையும் நன்மைகளையுமே அவர் பெரிதாக நினைத்தார். (எபி. 12:2) நீங்களும் அப்படியே செய்யலாம். யெகோவாவின் பெயர், கடவுளுடைய புதிய உலகில் வர இருக்கும் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றின்மேல் உங்கள் மனதையும் இருதயத்தையும் பதிய வையுங்கள். உங்கள் சந்தோஷத்தை இது அதிகரிக்கும். ஊழியத்தையும் பலன் மிகுந்ததாக்கும்.
5 யெகோவாவுக்கு பரிசுத்த சேவை செய்வதே இன்று நீங்கள் பெற்றிருக்கும் மிகச் சிறந்த சிலாக்கியம். எனவே, “என் தேவனே, உமக்கு பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” என நீங்களும் சொல்லுங்கள்.—சங். 40:8.